வலைப்பதிவில் தேட..

Monday, September 17, 2007

மாதிரிக் கேள்விகள்

முன் மாதிரிக்காக சில கேள்விகளை இதுதான் இஸ்லாம் தளத்திலிருந்து பதிக்கின்றோம். (மெயில் ஐடியில் சில மாற்றங்கள் செய்துள்ளோம்)

கேள்வி: நான் அஷ்ஹது அன்லா இலாஹ இல்லல்லாஹு அன்ன முஹம்மதன் அப்துஹூ வ ரஸுலுஹூ என்று மனதலவில் ஏற்றுக் கொண்டேன். ஆனால் எனது பெற்றோர் உற்றார் உறவினர்கள் நான் இஸ்லாத்துக்கு மாறுவதை கண்டிப்பாக ஏற்க மாட்டார்கள். நான் என்னுடைய இஸ்லாமிய ஏற்பை பகிரங்கமாக அறிவிக்க முடியாமல் மிகுந்த மன வேதனையில் தவிக்கிறேன். என்னுடைய கேள்வி நான் இஸ்லாத்தை ஏற்றதை பகிரங்கமாக அறிவிக்காததற்காக மறுமையில் தண்டிக்கப்படுவேனா? mkannan@coolgoose.com
இறைவன் அவனை நம்பிய அடியார்களை கைவிடுவதில்லை. இறை நம்பிக்கைக் கொண்டுள்ள நமக்கு சில பொழுதுகளில் சில காரியங்கள் நெருக்கடியாக தெரிந்தாலும் அதற்காக நாம் மனம் சஞ்சலப்பட்டாலும் இறை நம்பிக்கையில் உறுதியுடன் நிலைப்பெற்றிருந்தால் அதற்கும் இறைவன் புறத்திலிருந்து கூலி கிடைத்து விடும் என்பதை இஸ்லாம் தெளிவாகவே சொல்லியுள்ளது.

இன்றைக்கு உங்களுக்கு ஏற்பட்ட நிலை உங்களுக்கு மட்டும் ஏற்பட்டுள்ள நிலையல்ல. இஸ்லாத்துடைய ஆரம்ப கால வரலாற்றை எடுத்து பார்த்தால் அன்றைய இறை நம்பிக்கையாளர்கள் கடின நெருக்கடிக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். இஸ்லாத்தின் பகிரங்க எதிரியாக இருந்த உமர் அவர்கள் இஸ்லாத்தை ஏற்பதற்கு முன்பு வரை மக்காவில் மனம் மாறி இஸ்லாத்தை ஏற்றவர்களில் பெரும்பாலோர் உமர் போன்றவர்களுக்கு பயந்து தங்கள் இறை நம்பிக்கையை மறைத்தே வைத்திருந்தனர். இதற்கு இறைத்தூதர் அனுமதியும் அளித்தார்கள். உமர் இஸ்லாத்தை ஏற்ற பிறகு தான் அங்கு அனைவரின் இறை நம்பிக்கையும் பகிரங்க அறிவிப்பாகின.

சில நெருக்கடிகளை சமாளிப்பதற்காக இறை நம்பிக்கையில் - இஸ்லாத்தில் - அசைக்க முடியாத நம்பிக்கை உள்ள நிலையில் அதை வெளிக் காட்டாமல் மறைத்துக் கொள்வதற்கு இஸ்லாம் அனுமதியளிக்கவே செய்கிறது. கீழுள்ள இறை வசனம் அதை தெளிவாக அறிவிக்கிறது பாருங்கள்.

எவர் (ஈமான்) இஸ்லாமிய நம்பிக்கைக் கொண்டபின் அல்லாஹ்வை நிராகரிக்கிறாரோ அவர் (மீது அல்லாஹ்வின் கோபம் இருக்கிறது) - எவருடைய உள்ளம் ஈமானைக் கொண்டு அமைதி கொண்டிருக்கும் நிலையில் யார் நிர்ப்பந்திக்கப்படுகிறாரோ அவரைத் தவிர - (எனவே அவர் மீது குற்றமில்லை) ஆனால் (நிர்ப்பந்தம் யாதும் இல்லாமல்) எவருடைய நெஞ்சம் இறை நிராகரிப்பைக் கொண்டு விரிவாகி இருக்கிறதோ - இத்தகையோர் மீது அல்லாஹ்வின் கோபம் உண்டாகும்; இன்னும் அவர்களுக்குக் கொடிய வேதனையும் உண்டு (அல் குர்ஆன் 16:106)

'நான் இறை நம்பிக்கையாளன் தான்" என்று உள்ளத்தில் இஸ்லாம் இல்லாத நிலையில் யார் கிண்டலாக இறை நம்பிக்கையை எடுத்துக் கொள்கிறார்களோ அவர்களுக்கு கடுமையான எச்சரிக்கையை இந்த வசனம் முன் வைக்கும் அதே வேளை, இக்கட்டான சூழ்நிலைக்காக தனது இஸ்லாமிய நம்பிக்கையை தற்ாகலிகமாக மறைத்துக் கொள்வது எந்த விதத்திலும் பாவமான காரியமல்ல. என்பதையும் இறைவன் தெளிவுப்படுத்தியுள்ளான். இந்த வசனத்தில் இடம் பெறும் ".எவருடைய உள்ளம் ஈமானைக் கொண்டு அமைதி கொண்டிருக்கும் நிலையில் யார் நிர்ப்பந்திக்கப்படுகிறாரோ அவரைத் தவிர - (எனவே அவர் மீது குற்றமில்லை)" என்ற வாசகம் உங்கள் மன அமைதிக்குரியது.

ஆனாலும் இஸ்லாம் ஒரு வாசனை மலருக்கு ஒப்பானது. அது உங்கள் வழியாக தனது வாசனையை வெளிப்படுத்தித் தான் தீரும். இறைவன் உங்களுக்கு அருள் புரிந்துள்ளான். உங்கள் வழியாக எத்துனைப் பேருக்கு இந்த பெரும்பாக்கியம் கிடைக்கப் போகிறது என்பதை அவன் தான் அறிவான்.

மிகவும் அமைதியாக சூழ்நிலையை அணுகுங்கள். எடுத்தேன் - கவிழ்த்தேன் என்ற அவசர பேர்வழிகளிடம் முதலில் உங்கள் எண்ணத்தை வெளிப்படுத்தாமல் நிதானமாக சிந்திக்கக் கூடியவர்களிடம் வெளிபடுத்துங்கள். எந்த சந்தர்பத்திலும் நிதானம் இழந்து விடாதீர்கள்.

ஒருவேளை கடைசிவரை உங்கள் இஸ்லாமிய நம்பிக்கையை வெளிபடுத்த முடியாத நிலை ஏற்பட்டாலும் அதற்காக வருத்தப்படாதீர்கள் உங்கள் எண்ணத்திற்கும், முயற்சிக்கும் தகுந்த பலன் கிடைத்து விடும்.

இறைவனின் உவப்பிற்குரியவர்களே நேர்வழிப் பெறுவார்கள். அந்த வகையில் நீங்கள் பாக்கியம் பெற்று விட்டீர்கள். வாழ்த்துக்கள். உங்களுக்காக நாங்களும் இறைவனைப் புகழ்கிறோம். அவனுக்கு நன்றி செலுத்துகிறோம். எப்போதும் அவனுடன் தொடர்புடன் இருங்கள்.
.................................................................................................
கேள்வி: 'விபச்சாரன் விபச்சாரியையோ அல்லது இணைவைப்பவளையோ தவிர (வேறு பத்தினிப்பெண்ணைத்) திருமணம் செய்யமாட்டான், (இவ்வாறே) விபச்சாரியை- விபச்சாரம் செய்பவனையோ அல்லது இணைவைப்பவனோ தவிர (பரிசுத்தமானவேறு யாரும்) திருமணம் செய்ய மாட்டாள் இ(த்தகையோரைத் திருமணம் செய்வ)து இறை நம்பிக்கையாளர்களின் மீது தடுக்கப்பட்டுள்ளது' என்று குர்ஆன் கூறுகிறது. எத்தனையோ குடும்பங்களில் ஒழுக்கமான பெண்களுக்கு குடி விபச்சாரம் போன்ற கெட்ட பழக்கங்கள் உள்ள கணவர்கள் அமைகின்றார்கள். அப்படி என்றால் இவர்களின் மனைவிமார்களும் இவர்களைப் போன்றவர்களா? wafiya_2000@yahoo.co.in
ஒழுக்கமான பெண்களுக்கு கெட்ட கணவர்கள் அமைய மாட்டார்கள் என்பதோ விபச்சாரத்தில் ஈடுபடும் ஆண்களுக்கு விபச்சாரிகள் தான் மனைவியாக அமைவார்கள் என்பதோ இந்த வசனத்தின் பொருளல்ல.விபச்சாரத்தில் ஈடுபடும் ஆண்கள் தங்கள் மனைவியை சந்தேகக் கண்ணோடு பார்க்க வேண்டும் என்பதோ அவள் கெட்டுப் போய் இருப்பாளோ என்று மன உளைச்சலுக்கு ஆளாகி அவள் வாழ்வை பாழ்படுத்த வேண்டும் என்பதோ இந்த வசனத்தின் பொருளல்ல.
வேறு என்ன கூறுகிறது அந்த வசனம்!
ஒரு ஆண் எவ்வளவு தான் கெட்டவனாக இருந்தாலும் தனக்கு வரும் மனைவி நல்லவளாக - ஒழுக்கமுள்ளவளாக இருக்க வேண்டும் என்று விரும்புவான். விபச்சார தொழிலில் ஈடுபடும் ஒரு பெண் திருமண வாழ்க்கையில் இணைகிறாள் என்றால் அவளும் கூட தன் கணவன் தன்னை மட்டுமே நேசிக்க வேண்டும் பிற பெண்களை மனதால் கூட தீண்டாதவனாக இருக்க வேண்டும் என்று விரும்புவாள்.
அவர்கள் அவ்வாறு விரும்பினாலும், அப்படி விரும்புவதற்கு அவர்களுக்கு தார்மீக உரிமையில்லை என்றே அந்த வசனம் கூறுகிறது. ஒருவன் விபச்சாரம் செய்பவனாகவோ கெட்டவனாகவோ இருக்கும் போது அவன் தன்னைப் போன்றுள்ள ஒரு விபச்சாரியையோ அல்லது கெட்டவளையோ தான் திருமணம் செய்துக் கொள்ள வேண்டும் அது தான் சரியான அளவுகோல் மனைவி ஒழுக்கமானவளாக அமைய வேண்டும் என்று ஒருவன் விரும்பினால் முதலில் அவன் எல்லா ஒழுங்கீனங்களையும் விட்டு தன்னை தூய்மைப் படுத்திக் கொள்ளட்டும் என்பதே நீங்கள் எடுத்துக் காட்டிய வசனம் சொல்லும் அறிவுரையாகும்.

கணவனின்றி தவறான வழியில் வாழும் ஒரு பெண் திருமணத்தை நாடும் போது தனக்கு கணவனாக வருபவன் யோக்கியனாக இருக்க வேண்டும் என்று எண்ணக் கூடாது. ஏனெனில் தவறான வழியில் உழலும் அவளுக்கு இப்படிப்பட்ட கணவன் தகுதியானவனல்ல. அதிகபட்சமாக அவளைப் போன்றே நாற்றமெடுத்த ஒருவனைத் தான் அவள் மணமுடிக்க வேண்டும் என்பதே அந்த வசனம் முன் வைக்கும் வாதமாகும்.

தவறான வழியில் பாழ்பட்டுக் கொண்டிருக்கும் எத்துனையோ ஆண்களுக்கு ஒழுக்கமும் - கண்ணியமும் மிக்க மனைவிகள் கிடைத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். தன் மனைவியின் ஒழுக்கத்தையும் நன்நடத்தையையும் பார்த்து அத்தகைய கணவர்கள் வெட்கி தலைகுனிந்து தன்னை திருத்திக் கொள்ள வேண்டும்.

நல்ல கணவர்களுக்கு கெட்ட மனைவி அமைந்து விடுவதும் நடக்காமலில்லை. ஒரு ஆண் கறைப்பட்டால் அது அவனோடு போய்விடும். பெண் கறைப்பட்டால் அது அவளது குடும்பத்தையே பாதிக்கும் என்பதால் நல்ல கணவர்களுக்கு வாழ்க்கைப்பட்ட தீய நடத்தையுள்ள பெண்கள் சிந்தித்து தங்கள் தவறுகளிலிருந்து விடுபட்டு இறைவனிடம் பாவமன்னிப்பு தேட வேண்டும். நல்ல கணவர்கள் இத்தகைய மனைவிகள் விஷயத்தில் பொறுமையை மேற் கொள்ள வேண்டும் என்பதற்கு நபிமார்களான நூஹு மற்றும் லூத் (அலை) ஆகியோரிடம் பாடம் உள்ளது.
..................................................................................................
கேள்வி: அஸ்ஸலாமு அலைக்கும்.. ஹலோ..நான் நஜ்மிலா இஸ்மின் நெதர்லாந்திலிருந்து..ஒரு விஷயம் பற்றி விளக்கம் பெற விரும்புகிறேன்.. நீங்கள் எனக்கு உதவ முடியும் என்று நம்புகிறேன்.. அதாவது நான் கற்பமாக இருந்தேன், பிரசவ நேரத்தில் மருத்துவமனையில் எனது கணவர் என்னருகில் இருந்தார். எங்களது குடும்ப நண்பர் ஒருவர் இது ஹராம், இவ்வாறு கணவர் பிரசவ நேரத்தில் உடனிருப்பது தவறு என்று சொன்னார். எனது கேள்வி.. ஒரு கணவர் தனது மனைவியின் அருகில் பிரசவ நேரத்தில் இருக்கலாமா? கூடாதா? விளக்கம் தரவும். உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துக்கள். hasalee@zeelandnet.nl
நல்லக் கேள்வி.
கணவன் - மனைவிக்கு மத்தியிலுள்ள உறவு என்பது படுக்கையறை உறவு மட்டுமல்ல. கணவன் மனைவிக்கும் மனைவி கணவனுக்கும் அனைத்து வகையிலும் உதவ வேண்டிய உறவே கணவன் மனைவிக்கு மத்தியில் இருக்கும் சிறந்த உறவாகும்.

சமைப்பதற்கு பெண், சாப்பிடுவதற்கு ஆண். துவைப்பதற்கு பெண், உடுத்துவதற்கு ஆண் என்று குடும்பத்தில் பெண்ணை உழைப்பாளியாகவும் ஆணை முதலாளியாகவும் ஆக்கி வைத்துள்ள போக்கு ஆணாதிகத்தின் குறியீடாகும். இதனால் தான் மனைவியின் கஷ்டத்தை அனேக ஆண்களால் புரிந்துக் கொள்ள முடியாமலே போய் விடுகிறது.

நபி(ஸல்) வீட்டில் இருந்தால் எங்களோடு குடும்பப் பணிகளில் ஒத்தாசை செய்வார்கள். பாங்கு சொன்னவுடன் பள்ளிக்கு செல்வார்கள் என்று அன்னை ஆயிஷா(ரலி) சொல்கிறார்கள் (புகாரி)

இதுதான் சிறந்த குடும்பத்திற்கு அடையாளம்.

உடலோடு கலந்து விடுவதுதான் இல்லறம் என்று இல்லறத்திற்கு வெறும் பாலியல் சாயம் மட்டும் பூசாமல் அது உள்ளத்தோடும், உணர்வோடும் கலந்துப் போகக்கூடிய ஒரு வாழ்க்கை என்பதை ஆண் மகன் உணர்ந்தால் அந்த கணவன் மனைவிக்கு மத்தியில் ஆயிரம் சந்தோஷங்கள் பூவாய் மலர்ந்துக் கொட்டும். இந்த சந்தோஷம் எப்போது சாத்தியம் என்றால் மனைவியை புரிந்துக் கொண்டு அவளுக்காக வாழ்வதில் தான்.

மாதவிடாய் சந்தர்பங்களில், குழந்தை பெற்றெடுக்கும் சந்தர்பங்களில் பெண் அனேக துன்பத்திற்கு ஆளாகிறாள். இந்த துன்பங்களை கணவன் கண்டு அறிய முடிவதில்லை. மனைவி குழந்தை பெற்றெடுக்கும் போது கணவன் அருகில் நின்று பார்க்க வேண்டும். அப்படி நடந்தால் அந்த சந்தர்பத்தில் மனைவிக்கு அது ஒரு பெரும் ஆருதலாகவும், அவளை புரிந்துக் கொண்டு கூடுதலாக நேசிப்பதற்கு கணவனுக்கு ஒரு தூண்டுதலாகவும் அது இருக்கும் என்று உளவியல் துறை அறிஞர்களும், டாக்டர்களும் கருதுகிறார்கள். ஒரு குழந்தைக்கும் அடுத்து குழந்தைக்கும் போதிய இடைவெளி விட இது வழிவகுக்கும் என்பதும் அவர்களின் முடிவாகும்.

இல்லறத்தில் ஒருவருடன் ஒருவர் கலந்து இரண்டற ஆகிவிட்ட பிறகு 'பிரசவ நேரத்தில் கணவன் - மனைவியின் பக்கத்தில் இருப்பது ஹராம்' என்பதற்கு எதை ஆதாரமாக எடுத்துக் காட்டுவார்களோ தெரியவில்லை.

உங்கள் குடும்ப நண்பர் எங்கோ வெளியில் கேள்விப்பட்டதை உங்களிடம் கூறி இருக்கலாம். இஸ்லாமிய சட்டம் அதை ஹராமாக்கியுள்ளது என்பதற்கு எந்த ஆதாரத்தையும் நம்மால் பார்க்க முடியவில்லை.
...................................................................................................

No comments: