வலைப்பதிவில் தேட..

Thursday, September 27, 2007

ஹதீஸ்கள் வேண்டுமா?

குர்ஆன் முழுமையடைந்து விட்டது இந்நிலையில் நாம் ஏன் ஹதீஸ்களை எடுத்துக் கொள்ள வேண்டும். ஹதீஸ்களை எழுதி வைக்குமாறு முஹம்மத்(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்களா..? ஹதீஸ் என்றப் பெயரில் நிறைய தவறான கருத்துக்கள் இருக்கின்றனவே?

Mohamed saleem
mhsaleem(att) otmaildotcom

2 comments:

மழைத்தூறல் said...

ஹதீஸ்களைப் பின்பற்ற வேண்டும்.

முஹம்மத் அவர்களைப் பின்பற்ற வேண்டுமென்றால் ஹதீஸ்களைப் பின்பற்ற வேண்டும் என்பது உலக முஸ்லிம் அறிஞர்களின் முடிவு. எத்தகைய ஹதீஸ்களைப் பின்பற்ற வேண்டும் என்பதில் உள்ளுக்குள் சில கருத்து வேறுபாடுகள் தென்பட்டாலும் ஹதீஸ்களைப் பின்பற்ற வேண்டும் என்பதில் கடந்தக் காலங்களில் மாற்றுக் கருத்துக் கொள்ளவில்லை.

முஹம்மத்(ஸல்) அவர்களின் மரணத்திற்கும் முஸ்லிம் சமுதாயத்தில் காலாகாலமாக பிரபல்யமாக இருந்து வரும் ஹதீஸ் தொகுப்புகளுக்கும் இருந்த கால இடைவெளிகளையெல்லாம் உலக அறிஞர்கள் ஆய்வுக்கு எடுத்துக் கொண்டுள்ளார்கள். இதில் மிகப் பெரும்பான்மையான அறிஞர்கள் கால இடைவெளிகளை நிரம்பும் மனிதத் தொடர்கள் அறிவுப்பூர்வமானவைதான் என்று முடிவுக்கு வந்துவிட்டார்கள். சில அறிஞர்கள் கால இடைவெளியில் கோளாறு ஏற்பட்டிருக்கலாம் என்று ஹதீஸ்களைப் புறக்கணிக்கும் மனநிலையைப் பெற்றுவிட்டார்கள்.

ஹதீஸ்களைப் புறக்கணிக்க வேண்டும் என்பதில் 'அஹ்லுல் குர்ஆன்' என்பவர்கள் 'குர்ஆன் மட்டும் போதும்' என்றக் கொள்கையை மக்களிடம் முன் வைக்கிறார்கள். இவர்கள் எடுத்து வைக்கும் வாதங்களில் படித்த - சிந்தனை தெளிவுமிக்க சிலர் கூட தடுமாறும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே முஹம்மத்(ஸல்) அவர்களைப் பின்பற்ற வேண்டுமானால் எப்படி எதைப் பார்த்துப் பின்பற்றுவது என்றத் தெளிவை நாம் பெற்றாக வேண்டும்.

குர்ஆனில் ஏராளமான வசனங்கள் முஹம்மத்(ஸல்) அவர்களைப் பின்பற்ற வேண்டும் என்றக் கட்டளையை முன் வைக்கிறது. அவற்றையெல்லாம் கவனமாக ஆராய்ந்தால் குர்ஆனோடு சேர்த்து 'இது நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கைப் பாடம் தான்' என்று நிரூபணமான ஹதீஸ்களையும் பின்பற்ற வேண்டும் என்பதை ஐயமின்றி விளங்கலாம்;.

முதலில் குர்ஆனில் இடம்பெற்றுள்ள அத்தகைய வசனங்களைப் பார்ப்போம்.

1)மக்களுக்காக அருளப்பட்டதை நீர் அவர்களுக்கு விளக்க வேண்டும் என்பதற்காகவும் (அதை) அவர்கள் சிந்திக்க வேண்டும் என்பதற்காகவும் நாம் நாம் இதை இறக்கி வைத்துள்ளோம். (அல் குர்ஆன் 16:44)

2)(நபியே!) அவர்கள் முரண்பட்டு நிற்பதை அவர்களுக்கு நீர் விளக்குவதற்காகவே இந்தக் குர்ஆனை நாம் அருளினோம். (அல் குர்ஆன் 16:64)

இந்த இரண்டு வசனங்களில் 'நீர் அவர்களுக்கு விளக்க வேண்டும்' என்று இறைவன் கூறுவதின் விளக்கம் என்ன என்பதை ஆராய முற்படும் எவரும் குர்ஆனுக்கு தேவையான இடங்களில் மேலதிகப் படியான விளக்கம் நபி(ஸல்) அவர்களால் கொடுக்கப்பட்டுள்ளதை விளங்கிக் கொள்வர்.

குர்ஆனில் பார்த்தவுடன் - படித்தவுடன் சட்டென்று புரிந்துக் கொள்ளக் கூடிய வசனங்களும் சற்று சிந்தித்தவுடன் புரிந்துக் கொள்ளக் கூடிய வசனங்களும், 'இதற்கு ஏதாவது விளக்கம் இருக்க வேண்டும்' என்று கூடுதலாக ஆய்வு செய்யத் தூண்டும் வசனங்களும் இருக்கத்தான் செய்கின்றன. குர்ஆன் இறங்கிக் கொண்டிருந்த காலகட்டத்தில் ஒவ்வொரு வசனத்திற்கும் சஹாபாக்கள் விளக்கம் கேட்டுக் கொண்டிருக்கவுமில்லை. நபி(ஸல்) விளக்கம் சொல்லிக் கொண்டிருக்கவுமில்லை. ஏனெனில் பெருவாரியான வசனங்கள் பார்த்தவுடன், கேட்டவுடன் விளங்கி விடும் விதத்திலேயே இறங்கிக் கொண்டிருந்தன. சில வசனங்கள் சிலருக்கு புரியாத தருணங்களில் அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் வந்து விளக்கம் கேட்டு தெரிந்துள்ளனர். இன்னும் சில வசனங்களுக்கு நபி(ஸல்) அவர்கள் வலியவே விளக்கமளித்துள்ளனர். இதற்கு ஏராளமான சான்றுகள் உள்ளன. அவைகளையெல்லாம் இங்கு விளக்கத் தேவையில்லை. இங்குள்ள முக்கிய விஷயம் என்னவென்றால் 'நீர் அவர்களுக்கு விளக்குவதற்காக..' என்று இறைவன் குர்ஆன் விளக்கவுரையாளராக நபி(ஸல்) அவர்களை குறிப்பிடுவதிலிருந்து 'குர்ஆனுக்கு நபி(ஸல்) மேலதிக விளக்கம் கொடுத்துள்ளார்கள் அதை இறைவன் அங்கீகரித்துள்ளான்' என்பதை விளங்கிக் கொள்ளவேண்டும்.

இறைச் செய்தி வெளிப்படும் விதங்கள்.

3)இறைவன் எந்த ஒரு மனிதரிடத்திலும் பேசுவதாக இருந்தால்,

வஹியின் மூலமாகவோ அல்லது

திரைக்கு அப்பாலிருந்தோ அல்லது

ஒரு தூதர் வழியாக அவன் நாடியதை அறிவிப்பதன் மூலமாகவோ தவிர வேறு விதத்தில் பேசுவதில்லை. அவன் உயர்ந்தவன் ஞானமிக்கவன். (அல் குர்ஆன் 42:51)

இந்த வசனத்தில் 'தூதர் வழியாக நாடியதை அறிவிப்பதன் மூலமாக..' என்பது எதைக் குறிக்கிறது? பெரிய ஆராய்ச்சியே தேவையில்லை. ஜிப்ரயீல் வழியாக வந்த குர்ஆன் என்பதை விளங்கிக் கொள்ளலாம். (வானவர்கள் நேரடியாக நபிமார்களை சந்தித்து உரையாடியுள்ள விதமும் இதில் அடங்கும் இப்ராஹீம்(அலை) லூத்(அலை) ஆகியோரை வானவர்கள் சந்தித்து உரையாடியுள்ளார்கள்).

நபிமார்களுக்கு வானவ தூதர்கள் மூலம் சொல்லப்பட்டு - வெளிப்பட்டு தொகுக்கப்பட்டது வேதங்கள் என்றால் 'வஹியின் மூலமாகவோ..' என்று இறைவன் குறிப்பிடும் அந்த வஹி என்ன?

ஜிப்ரயீல் வழியாக குர்ஆன் வந்து விட்டது. இது இறைவன் பேசக்கூடிய ஒரு விதம். வஹியின் மூலம் பேசுவேன் என்று இறைவன் கூறுகின்றானே அந்த வஹி எது? இது நிச்சயம் நபிமார்களுக்கு மனஉதிப்பை ஏற்படுத்தும் வஹியாகவே இருக்க முடியும். குர்ஆன் மட்டுமில்லாமல் மன உதிப்பின் மூலமாகவும் இறைச் செய்தி வெளிப்படும் என்பதற்கு இந்த வசனம் ஆதாரமாக உள்ளது. அப்படியானால் மன உதிப்பின் மூலமாக வந்த அந்த செய்திகள் எங்கே? குர்ஆனோடு நிருத்திக் கொள்ளலாம் என்று கூறுவோர் குர்ஆனில் இடம் பெறும் இந்த வசனத்திற்கு என்ன விளக்கமளிப்பார்கள்?. மன உதிப்பின் வழியாக வந்த வஹியின் தொகுப்புகளே ஹதீஸ்களாகும். (தொகுப்பட்டுள்ள அனைத்து ஹதீஸ்களும் வஹிதானா.. என்று அவசரமாக யாரும் கேள்வி கேட்டுவிட வேண்டாம். எத்தகைய ஹதீஸ்கள் வஹியின் வெளிபாடு என்பதை பின்னர் விளக்குவோம் இன்ஷா அல்லாஹ்)

திரைக்கு அப்பாலிருந்து பேசுவேன் என்கிறான் இறைவன். மூஸா(அலை) அவர்களோடு நடந்த உரையாடல் குர்ஆனில் இடம் பெற்றுள்ளது. முஹம்மத்(ஸல்) அவர்களோடும் உரையாடல் நடந்துள்ளது இதை பலமான ஹதீஸ்கள் வழியாக அறியமுடிகிறது.

4)எந்த ஒரு தூதரையும் அந்த சமுதாயம் பேசும் மொழியிலேயே அனுப்பினோம் அந்த சமுதாயத்திற்கு அவர் விளக்கிக் கூறுவதற்காக. (அல் குர்ஆன் 14:4)

வெறும் வேத வெளிப்பாடு மட்டுமே போதும் என்ற நிலை இருந்தால் விளக்கிக் கூறும் தகுதி தேவையில்லாமல் போயிருக்கும். விளக்கிக் கூறும் தகுதியை இறைவன் பிரத்யேகப் படுத்துவதிலிருந்தே வேதங்களுக்கு நபிமார்கள் மேலதிக விளக்கம் கொடுக்கும் பொறுப்பில் இருந்துள்ளார்கள் என்பதை விளக்குகிறது.

வேதம் என்று ஒன்று வந்து விட்டால் போதும் அதை தேவையான இடங்களில் மேலதிகமாக விளக்க வேண்டும் என்கிற அவசியமில்லை என்றால் எந்த சமுதாயத்திற்கு வேதம் வருகிறதோ அந்த சமுதாயத்தின் மொழியில் வேதம் மட்டும் இருந்தால் போதும். வேதத்தை வெளிபடுத்தும் தூதரருக்கு குறைந்தபட்சம் அந்த மொழி பேச தெரிந்தால் போதும். வேதத்திற்கு மேலதிக விளக்கம் தேவையில்லை என்றால் தூதருக்கு 'விளக்கும் திறன்' அவசியப்பட்டிருக்காது. ஆனால் இந்த வசனத்தில் 'அவர் தம் சமுதாயத்திற்கு விளக்குவதற்காக அவர்களின் மொழியில் அனுப்பினோம்' என்கிறான் இறைவன். வேதத்திற்கு மேலதிக விளக்கம் நபிமார்களால் கொடுக்கப்பட வேண்டிய அவசியம் இருந்தது என்பதை இந்த வசனம் தெளிவாக நமக்கு உணர்த்துகிறது.

மூஸா(அலை) அவர்களின் பிரார்த்தனை!

5)என் இறைவா! என் உள்ளத்தை எனக்கு விரிவாக்கு. எனது பணியை எனக்கு எளிதாக்கு. என் நாவில் உள்ள முடுச்சுகளை அவிழ்த்து விடு (அப்போதுதான்) என் சொல்லை அவர்கள் விளங்கிக் கொள்வார்கள். (அல் குர்ஆன் 20:25-28)

ஃபிர்அவ்னிடம் அழைப்புப் பணி செய்ய வேண்டிய மூஸா (அலை) அவர்களுக்கு இறைவன் ஏற்கனவே எழுதப்பட்ட தவ்ராத் என்ற ஏட்டை(வேதத்தை) வழங்கி இருந்தான். தவ்ராத்தைப் பெற்ற நிலையில்தான் அவர்கள் ஃபிர்அவ்னை சந்திக்க செல்கிறார்கள். இந் நிலையில் வேதத்தை மட்டும் சமர்பித்துவிட்டு வருவது அவர்களின் பணி என்றால் திக்குவாயைப் பற்றி அவர்கள் கவலைப்பட வேண்டும் என்கிற அவசியமில்லை. ஆனால் அவர்கள் கவலைப்படுகிறார்கள். தன் நாவில் உள்ள முடுச்சால் தன்னால் இறைச் செய்திகளை ஒழுங்காக விளக்க முடியாமல் போய்விடுமோ என்று அஞ்சுகிறார்கள். அதனால்தான் இறைவனிடம் முறையிடுகிறார்கள். 'அவர்கள் என் சொல்லை விளங்கிக் கொள்வதற்காக என் நாவின் முடுச்சை அவிழ்த்து விடு' என்ற மூஸா(அலை) அவர்களின் பிரார்த்தனையும் அதை ஏற்றுக் கொண்டேன் (20:36) என்ற இறைவனின் உத்திரவாதமும் மூஸா(அலை) வேதத்தை மேலதிகமாக விளக்கும் கடமையில் இருந்துள்ளார்கள் என்பதை எடுத்துக் காட்டவில்லையா..?

6)(முஹம்மத்) உங்களுக்கு நம் வசனங்களை ஓதி காண்பிப்பார். உங்களைத் தூய்மைப் படுத்துவார். உங்களுக்கு வேதத்தையும் (அதன்) ஞானத்தையும் கற்றுத் தருவார். நீங்கள் அறியாதவற்றையெல்லாம் அவர் உங்களுக்குக் கற்றுக் கொடுப்பார். (அல் குர்ஆன் 2:151)

இந்த வசனத்தையும் நாம் ஆழமாக சிந்திக்க வேண்டும். இதில் நபி(ஸல்) அவர்களின் பணி பல கோணங்களில் விளக்கப்பட்டுள்ளது.

உங்களுக்கு நம் வசனங்களை ஓதி காண்பிப்பார்.

உங்களைத் தூய்மைப் படுத்துவார்;.

வேதத்தையும் ஞானத்தையும் கற்றுக் கொடுப்பார்.

அறியாதவற்றையும் கற்றுக் கொடுப்பார்.

உங்களுக்கு நம் வசனங்களை ஓதிக் காண்பிப்பார் என்பதோடு இறைவன் நிருத்தி இருக்கலாம் அதாவது நபிமார்களுக்கு மேலதிக பணி இல்லையென்றால். உங்களைத் தூய்மைப் படுத்துவார் என்கிறான். இது ஆன்மீகத் தூய்மையைக் குறிப்பதாகும். பின்னர் வேதத்தையும் ஞானத்தையும் கற்றுக் கொடுப்பார் என்கிறான் இறைவன்.

வேதத்தை ஓதிகாண்பித்து விட்டு ஒதுங்கிக் கொள்வது மட்டும் அவர்களின் பணியாக இல்லாமல் வேதத்தைக் கற்றுக் கொடுப்பதும் அதன் ஞானத்தை விளக்குவதும் கூட அவர்களின் பணியாக இருந்துள்ளது.

இங்கு கற்பித்தல் என்பது இரண்டு அர்த்தங்களில் பயன்படுத்தப்பட்டுள்ளது.

கற்பித்தல்: விளக்குவது.

கற்பித்தல்: வாழ்ந்துக் காட்டவது

வேதத்தையும் ஞானத்தையும் கற்பிப்பார் என்று இறைவன் சொல்வதிலிருந்தே அவைகள் பதிவு செய்யப்பட வேண்டும் - அடுத்தடுத்தத் தலைமுறைக்காக அவை எடுத்துச் செல்லப்பட வேண்டும் என்பது விளங்குகிறது.

குர்ஆன் மட்டுமே போதும் என்றால் இறைத்தூதர் கற்பித்த அந்த ஞானம் எங்கே என்பதற்கு பதிலில்லாமல் போய் விடும்.

எனவே இன்றைக்கும் அந்தத் தலைவர் பின்பற்றத்தக்கவராகத் தான் இருக்கிறார் என்பதை குர்ஆன் மெய்ப்பித்துக் கொண்டுதான் இருக்கிறது.

அவரைப் பின்பற்றத்தான் வேண்டும் என்பதற்கு இன்னும் ஏராளமான சான்றுகள் உள்ளன குர்ஆனில்.

'(மக்களே) நீங்கள் இறைவனை நேசிப்பவர்களாக இருந்தால் என்னைப் பின்பற்றுங்கள் என்று நபியே நீர் கூறும். நீங்கள் என்னைப் பின்பற்றினால் (அதன் காரணமாக) இறைவன் உங்களை நேசிப்பான் உங்களுக்காக உங்கள் பாவங்களை மன்னிப்பான் அவன் மிக்க மன்னிப்பவன்' அலு இம்ரான் 3:31.

ஹதீஸ்களில் - முரண்பாடுகளும் கலப்படங்களும் உள்ளதால் 'குர்ஆன் மட்டுமே' போதும் என்ற வாதத்தை சிலர் முன் வைக்கிறார்கள் அது குர்ஆன் வசனங்களுக்கே முரண்படுகிறது என்பதை மேலே சுட்டியுள்ளோம்.

குர்ஆன் வசனங்களில் பலவற்றிற்கு கூடுதலான விளக்கம் தேவை என்ற தோரணையில் அமைந்துள்ள வசனங்கள் குர்ஆனில் நிறையவே உண்டு. அது போன்ற இடங்களில் இறைத்தூதர் என்ற முறையில் நபி(ஸல்) அவர்கள் விளக்கியுள்ள கூடுதல் விளக்கம் ஹதீஸ்களில் வருகிறது. ஹதீஸ்களைத் தவிர்த்து குர்ஆனின் மற்றப்பகுதிகளில் அந்த வசனங்களுக்கான விளக்கத்தைத் தேடினால் கிடைக்காது என்பதுதான் உண்மை.

அத்தகைய வசனங்களை நாம் இந்தத் தொடரில் பார்ப்போம்.

(நபியே!) நீர் எங்கிருந்து புறப்பட்டாலும் உம் முகத்தைப் புனிதப் பள்ளிவாயிலின் பக்கமே திருப்பிக்கொள்வீராக. நிச்சயமாக இதுதான் உம் இறைவனிடமிருந்து வந்த உண்மை- அல்லாஹ் நீங்கள் செய்பவை பற்றிப் பராமுகமாக இல்லை. (அல் குர்ஆன், 2:149.)

(நபியே!) நீர் எங்கிருந்து புறப்பட்டாலும் உம் முகத்தைப் புனிதப் பள்ளவாயிலின் பக்கமே திருப்பிக் கொள்ளும்; (முஃமின்களே!) உங்களில் அநியாயக்காரர்களைத் தவிர மற்ற மனிதர்கள் உங்களுடன் வீண் தர்க்கம் செய்ய இடங்கொடாமல் இருக்கும் பொருட்டு, நீங்களும் எங்கே இருந்தாலும் புனிதப் பள்ளியின் பக்கமே உங்கள் முகங்களைத் திருப்பிக் கொள்ளுங்கள். (அல் குர்ஆன் 2:150)

இந்த வசனங்களின் நேரடிப் பொருள் என்ன? முஹம்மத்(ஸல்) அவர்கள் உட்பட இறை நம்பிக்கையாளர்கள் யாவரும் தங்கள் முகங்களை எந்நேரமும் புனித பள்ளிவாசலான கஃபத்துல்லாஹ்வின் பக்கமே வைத்துக் கொள்ள வேண்டும் என்பதுதான் இதன் நேரடிப் பொருள்.

தொழுகையின் போது முகத்தைக் கஃபாவின் பக்கம் திருப்புங்கள் என்று குர்ஆனில் எந்த இடத்திலும் கூறப்படவில்லை. பொதுவாக முகத்தை அதன் பக்கம் திருப்புங்கள் என்றே குர்ஆனில் வருகிறது. ஹதீஸ்களைக் கொண்டு இதன் பொருளை விளங்காவிட்டால் - குர்ஆனுடைய எந்த வசனத்தையும் நான் நேரடியாகத்தான் புரிந்துக் கொள்வேன் என்று யாராவது கூறினால் அவர்கள் இந்த வசனத்தை நடைமுறைப் படுத்தும் போக்கு எப்படி இருக்கும் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும். தொழுகையின் போது முகத்தை கஃபாவின் பக்கம் திருப்புவதற்கும் - எந்த நேரமும் கஃபாவின் பக்கமே முகத்தை வைத்துக் கொள்வதற்கும் நினைத்துப் பார்க்க முடியாத அளவிற்கு வித்தியாசங்கள் உள்ளன. ஹதீஸ்களைக் கொண்டு இதை விளங்காமல் நடை முறைக்கு சாத்தியமில்லாத ஒன்றை இறைவன் குர்ஆனில் குறிப்பிட்டு விட்டான் என்று முடிவுக்கு வர முடியுமா..? இந்த வசனம் குர்ஆனுக்கு தேவையான இடங்களில் மேலதிக விளக்கம் வேண்டும் என்பதை அறிவிக்கவில்லையா..

நோன்புக் கால இரவில் நீங்கள் உங்கள் மனைவியருடன் கூடுவது உங்களுக்கு அனுமதிக்கப் பட்டுள்ளது. அவர்கள் உங்களுக்கு ஆடையாகவும், நீங்கள் அவர்களுக்கு ஆடையாகவும் இருக்கின்றீர்கள். நீங்கள் இரகசியமாகத் தம்மைத் தாமே வஞ்சித்துக் கொண்டிருந்ததை அல்லாஹ் நன்கறிவான்;. அவன் உங்கள் மீது இரக்கங்கொண்டு உங்களை மன்னித்தான். எனவே, இனி(நோன்பு இரவுகளில்) உங்கள் மனைவியருடன் கூடி அல்லாஹ் உங்களுக்கு விதித்ததை தேடிக்கொள்ளுங்கள். (அல் குர்ஆன் 2:287)

இந்த வசனத்தை ஊன்றிக் கவனியுங்கள். 'நீங்கள் இரகசியமாக உங்களை நீங்களே வஞ்சித்துக் கொண்டிருந்ததை இறைவன் அறிவான். எனவே அவன் உங்கள் மீது இரக்கம் கொண்டு உங்களை மன்னித்தான்'. என்கிறான் இறைவன். நபித்தோழர்கள் தங்களைத் தாங்களே வஞ்சித்துக் கொண்டிருந்தார்கள் என்றால் இறைவன் விதித்த ஏதோ ஒரு சட்டத்தை அவர்களால் செயல்படுத்த முடியாமல் போய் அந்த சட்டத்திற்கு எதிராக செயல்பட்டுள்ளார்கள் என்பது விளங்குகிறது.

இன்னும் தெளிவாகச் சொல்லப்போனால் ஆரம்பத்தில் நோன்புக் கால இரவில் மனைவியுடன் கூடக் கூடாது என்ற சட்டம் இருந்து நபித்தோழர்கள் அதை மீறி பாவம் செய்திருந்தால் தான் இவ்வாறு கூறமுடியும். இந்த வசனம் இந்தக் கருத்தைத்தான் உள்ளடக்கி நிற்கிறது. அப்படியானால் 'நோன்புக் கால இரவில் மனைவியுடன் சேரக் கூடாது' என்ற சட்டம் குர்ஆனில் இடம் பெற்றிருக்க வேண்டும். ஆனால் அப்படி எந்த ஒரு வசனமும் குர்ஆனில் இல்லை. ஹதீஸ்களில் தான் 'நபித்தோழர்கள் தங்கள் நல்லமல் அழிந்து விடுமோ.. என்ற அச்சப்பட்ட நிலையிலேயே தங்கள் மனைவியுடன் சேருவார்கள்' என்ற விபரம் கிடைக்கின்றது. ஹதீஸ்களை விடுத்து இந்த வசனத்தை விளங்க வேண்டுமென்றால் இந்த வசனத்தின் பொருள் என்ன என்பதை புரிந்துக் கொள்வதில் தடுமாற்றம் ஏற்படவே செய்யும்.

ஹஜ்ஜுக்குரிய காலம் குறிப்பிடப்பட்ட மாதங்களாகும்; எனவே, அவற்றில் எவரேனும் ஹஜ்ஜை தம் மீது கடமையாக்கிக் கொண்டால், ஹஜ்ஜின் காலத்தில் சம்போகம், கெட்ட வார்த்தைகள் பேசுதல், சச்சரவு - ஆகியவை செய்தல் கூடாது. நீங்கள் செய்யும் ஒவ்வொரு நன்மையையும் அல்லாஹ் அறிந்தவனாகவே இருக்கிறான்;. (அல் குர்ஆன் 2:197)

இந்த வசனத்தில் 'ஹஜ்ஜூக்குரிய மாதங்கள்' என்று பன்மையில் கூறப்பட்டுள்ளது. பிரிதொரு இடத்தில் 'புனித மாதங்கள்' என்றும் கூறப்பட்டுள்ளது. ஆனால் அந்த மாதங்கள் யாவை என்ற விபரம் குர்ஆனில் எந்த இடத்திலும் கூறப்படவில்லை. ஹதீஸ்களை புரட்டும் போது தான் ஹஜ்ஜூக்குரிய மாதங்கள் யாவை?. 'புனித மாதங்கள்' என்று கூறப்படுபவை எது? அவற்றிற்கும் ஹஜ்ஜூக்கும் தொடர்பு உண்டா..? போன்ற விபரங்கள் கிடைக்கும். 'விசுவாசிகளே. நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பீர்களானால் என்னைப் பின்பற்றுங்கள் என்று (நபியே) நீர் கூறும்' என்ற வசனம் இன்றைக்கும் ஒவ்வொரு முஸ்லிமுக்கும் பொருந்தும் என்பதற்கு இதுவும் சான்றாகும்.

குறிப்பிடப்பட்ட நாட்களில் அல்லாஹ்வை திக்ரு செய்யுங்கள்; எவரும் இரண்டு நாட்களில் விரைந்துவிட்டால் அவர் மீது குற்றமில்லை. யார் (ஒரு நாள் அதிகமாக) தங்குகிறாறோ அவர் மீதும் குற்றமில்லை. (அல் குர்ஆன் 2:203)

குறிப்பிட்ட நாட்களில் இறைவனை திக்ரு செய்யுங்கள் - இரண்டு நாட்களில் கிளம்பி விட்டாலும் குற்றமில்லை. மூன்று நாட்கள் முழுமையாக தங்கினாலும் குற்றமில்லை என்கிறது இந்த வசனம். குறிப்பிட்ட நாட்கள் என்பது என்ன? இரண்டு மூன்று நாட்கள் என்பது எதிலிருந்து துவங்குகிறது போன்ற விபரங்கள் குர்ஆனில் இல்லை. இதைப் புரிந்துக் கொள்ள வேண்டுமானால் முஹம்மத்(ஸல்) அவர்கள் இந்த நாட்களை எப்படி கணக்கிட்டு செயல்பட்டுள்ளார்கள் என்பதை பார்த்தால் தான் முடியும்.

தலாக் கூறப்பட்ட பெண்கள், தங்களுக்கு மூன்று மாதவிடாய்கள் ஆகும்வரை பொறுத்து இருக்க வேண்டும்; அல்லாஹ்வையும், இறுதி நாளையும் அவர்கள் நம்புவார்களாயின், தம் கர்ப்பக் கோளறைகளில், அல்லாஹ் படைத்திருப்பதை மறைத்தல் கூடாது. (அல் குர்ஆன் 2:228)

இந்த வசனத்தில் மூன்று மாதவிடாய்கள் என்று வருகிறது. அரபு மூலத்தில் இதை குறிக்க 'ஸலாஸத குரூஃ' என்ற பதம் வருகிறது. மூன்று மாதவிடாய்கள் என்றும், மூன்று மாதவிடாய்களிலிருந்து தூய்மையடையும் காலம் என்றும் இதற்கு இரண்டுப் பொருள்கள் உண்டு. இப்போது இந்த வசனத்திற்கு எப்படிப் பொருள் எடுப்பது என்பதை தீர்மானிக்க நாம் ஹதீஸ்களைத் தான் நாட வேண்டியுள்ளது. 'மூன்று மாதவிடாயிலிருந்து தூய்மையடைவதே அதன் பொருள் என்ற விளக்கம் ஹதீஸ்களில் கிடைக்கின்றது.

பெண்களை நீங்கள் தீண்டுவதற்கு முன், அல்லது அவர்களுடைய மஹரை நிச்சயம் செய்வதற்கு முன், தலாக் சொன்னால் உங்கள் மீது குற்றமில்லை. ஆயினும் அவர்களுக்குப் பலனுள்ள பொருள்களைக் கொடுங்கள். (அல் குர்ஆன் 2:237)

ஆயினும், அப்பெண்களைத் தீண்டுவதற்கு முன் - ஆனால் மஹர் நிச்சயித்த பின் நீங்கள் தலாக் சொல்வீர்களாயின், நீங்கள் குறிப்பட்டிருந்த மஹர் தொகையில் பாதி(அவர்களுக்கு) உண்டு- (அல் குர்ஆன் 2:238)

இந்த இரு வசனங்களிலும் 'தீண்டுதல் - தடவுதல்' போன்ற வெளிப்படையான பொருளைக் கொடுக்கக் கூடிய பதங்களே பயன்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் இந்த வசனங்களின் நோக்கம் 'உடலுறவுக்கு முன்' என்பதுதான் என்பதை ஹதீஸ்கள் விளக்குகின்றன.

இரண்டாவது அத்தியாயமான சூரத்துல் பகராவிலிருந்து மட்டும் சில வசனங்களை எடுத்துக் காட்டியுள்ளோம். இதே போன்று ஹதீஸ்களில் மேலதிக விளக்கம் கிடைக்கும் வசனங்கள் நிறையவே உண்டு. அவற்றையெல்லாம் பட்டியலிடுவது இந்தத் தொடரின் நோக்கமல்ல. 'நீங்கள் அல்லாஹ்வை நேசிப்பவர்களாக இருந்தால் என்னைப் பின்பற்றுங்கள்' என்ற வசன அடிப்படையில் இன்றைக்கும் முஹம்மத்(ஸல்) அவர்களைப் பின்பற்றத்தான் வேண்டும் என்பதை 'குர்ஆன் மட்டும் போதும்' என்பவர்களுக்கு எடுத்துக் காட்டுவதற்கேயாகும்.

அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் கட்டுப்படுங்கள் என்ற கட்டளை குர்ஆனில் ஏராளமான இடங்களில் சொல்லப்பட்டுள்ளன.

நீர் கூறும்; ''அல்லாஹ்வுக்கும் (அவன்) தூதருக்கும் கட்டுப்படுங்கள்.'' ஆனால் அவர்கள் புறக்கணித்துத் திரும்பி விடுவார்களானால் - நிச்சயமாக அல்லாஹ் நிராகரிப்பவர்களை நேசிப்பதில்லை (அல் குர்ஆன் 3:32)

அல்லாஹ்வுக்கும், (அவன்) தூதருக்கும் கீழ்படியுங்கள்;. நீங்கள் (அதனால் அல்லாஹ்வினால்) கிருபை செய்யப்படுவீர்கள். (அல் குர்ஆன் 3:132)

நம்பிக்கை கொண்டவர்களே! அல்லாஹ்வுக்கு கீழ்படியுங்கள்; இன்னும் (அல்லாஹ்வின்) தூதருக்கும், உங்களில் (நேர்மையாக) அதிகாரம் வகிப்பவர்களுக்கும் கீழ்படியுங்கள். உங்களில் ஏதாவது ஒரு விஷயத்தில் பிணக்கு ஏற்படுமானால் - மெய்யாகவே நீங்கள் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்புபவர்களாக இருப்பின் - அதை அல்லாஹ்விடமும், (அவன்) தூதரிடமும் ஒப்படைத்துவிடுங்கள் - இதுதான் (உங்களுக்கு) மிகவும் சிறப்பான, அழகான முடிவாக இருக்கும். (அல்குர்ஆன் 4:59)

முஃமின்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கீழ்படியுங்கள்; நீங்கள் கேட்டுக் கொண்டிருக்கும் நிலையிலேயே அவரைப் புறக்கணிக்காதீர்கள். (அல் குர்ஆன் 8:20)

எவர்கள் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் கீழ்படிந்து அல்லாஹ்வுக்கு பயபக்தி கொள்கிறார்களோ அவர்கள் தாம் வெற்றி பெற்றவர்கள். (அல்குர்ஆன் 24:52)

அல்லாஹ்வுக்கு நீங்கள் கீழ்படியுங்கள்; இன்னும் (அவனுடைய) ரஸூலுக்கும் கீழ்ப்படியுங்கள் என்று (நபியே!) நீர் கூறுவீராக. ஆனால் நீங்கள் புறக்கணித்தால் அவர் மீதுள்ள கடமையெல்லாம் தம் மீது சுமத்தப்பட்ட (தூதுவச் செய்தியை உங்களிடம் அறிப்ப)துதான்; எனவே, நீங்கள் அவருக்குக் கீழ்படிந்து நடந்தால் நீங்கள் நேர்வழி பெறுவீர்கள் இன்னும் (நம் தூதைத்) தெளிவாக எடுத்துரைப்பதைத் தவிர (வேறெதுவும் நம்முடைய) இத்தூதர்மீது கடமையில்லை. (அல்குர்ஆன் 24:54)

ஈமான் கொண்டவர்களே! நீங்கள் அல்லாஹ்வுக்கு வழிபடுங்கள். இன்னும் இத்தூதருக்கும் வழிபடுங்கள் - உங்கள் செயல்களை பாழாக்கிவிடாதீர்கள். (அல் குர்ஆன் 47:33)

குர்ஆன் மட்டுமே போதும் என்பது இஸ்லாத்தின் நிலைப்பாடு என்றால் - தூதர் என்பது அவர் வாழ்ந்தக் காலத்திற்கு மட்டும் தான் இப்போது பொருந்தாது என்றால் - 'தூதருக்கு கட்டுப்படுங்கள்' என்ற வசனங்களை (சிலரைப்போல) செல்லாத வசனங்களாக கருத வேண்டி வரும் (அத்தகைய எண்ணங்களை விட்டு அல்லாஹ் நம்மைப் பாதுகாப்பானாக)

அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுங்கள் என்பது எப்படி குர்ஆனைப் பின்பற்றுவதாக அமையுமோ அதே போன்று இத்தூதருக்குக் கட்டுப்படுங்கள் என்பது குர்ஆனுக்கு மாற்றமில்லாத வகையில் அமைந்துள்ள ஆதாரப்பூர்வமான நபிவழி செய்திகளுக்குப் பொருந்தும்.

'(மக்களே) நீங்கள் இறைவனை நேசிப்பவர்களாக இருந்தால் என்னைப் பின்பற்றுங்கள் என்று நபியே நீர் கூறும். நீங்கள் என்னைப் பின்பற்றினால் (அதன் காரணமாக) இறைவன் உங்களை நேசிப்பான் உங்களுக்காக உங்கள் பாவங்களை மன்னிப்பான் அவன் மிக்க மன்னிப்பவன்' (அலு இம்ரான் 3:31.)

நாம் விளக்கிக் கொண்டிருக்கும் இந்த வசனத்தில் இடம் பெறும் 'என்னைப் பின்பற்றுங்கள்' என்ற கட்டளை இன்றைக்கும், நாளைக்கும், யுக முடிவுவரையிலும் செயல்படுத்த வேண்டிய கட்டளையாகும்.

இப்னு ஹம்துன் said...

நபி(ஸல்) அவர்கள் தெளிவாகவே தனது இறுதிப் பேருரையில் குறிப்பிட்டுள்ளார்கள்::

"நான் இரண்டை விட்டுச்செல்கிறேன், அவற்றைப் பற்றிக்கொள்ளும் காலமெல்லாம் நீங்கள் வழிதவறமாட்டீர்கள், ஒன்று இறைமறை குர்ஆன். மற்றது என் வழிமுறை"

நபியவர்களின் வழிமுறைகள் தானே ஹதீஸ்களில் அறிகிறோம்.