வலைப்பதிவில் தேட..

Monday, December 1, 2008

கர்பலாவைப் பற்றி நாம் எப்படி விளங்க வேண்டும்?

அஸ்ஸலாமு அலைக்கும்.
கர்பலாவைப் பற்றி நாம் எப்படி விளங்க வேண்டும்? மாற்று மத சகோதரர்களின் கேள்விக்கு எப்படி பதில் சொல்வது? குர்ஆன் ஹதீஸ் ஒளியில் விளக்கம் தரவும். --ஹஸன் கமருதீன்
 
வஅலைக்குமுஸ்ஸலாம்.
 
முஸ்லிம் உம்மத்தில் நடந்த வரலாற்று சோகங்களில் ஒன்று கர்பலா என்ற இடத்தில் முஸ்லிம்களுக்கு மத்தியில் நடந்த போர்.  இந்த போர் மற்றும் போரின் விளைவு குறித்து அன்றிலிருந்து இன்றுவரை உலகலாவிய முஸ்லிம்களுக்கு மத்தியில் கடுமையான கருத்து மோதல்கள் நடந்து வந்தாலும் "கர்பலா நிகழ்வை ஒரு அரசியல் நிகழ்வாகவே எடுத்துக் கொள்ள வேண்டும்" என்பது நமது நிலைப்பாடாகும். 
 
நபி(ஸல்) அவர்களின் பேரப்பிள்ளையான ஹுஸைன் (ரலி) அவர்களின் மரணம் (கொலை) யஸீத் பின் முஆவியா (July 23, 645  - 683) என்பவரால் நடத்தப்படுகின்றது.   யஸீத் பின் முஆவியா தனி மனிதராக நின்று இந்த காரியத்தில் ஈடுபடவில்லை.  அந்ந சம்பவம் நடக்கும் போது சம்பவம் நடந்த கர்பலா பகுதியில் யஸீத் பின் முஆவியா என்பவரே ஆளுனராக இருந்தார்.  அவருடைய ஆளுமைப் பகுதிகளுக்கு எதிராகவும் அவரது அதிகாரத்துக்கு எதிராகவும் நடந்தேறிய குழப்பங்களிலேயே ஹுஸைன் (ரலி) அவர்கள் கொல்லப்படுகிறார்கள்.   (முஹர்ரம் மாதம் 10 நாள் இந்த சம்பவம் நடக்கின்றது)
 
ஒரு அரசியல் நிகழ்வாக நடந்து முடிந்த இந்த சம்பவத்திற்கு ஷியாக்கள் வேறு வடிவம் கொடுத்து வளர்த்து விட்டார்கள். இன்றுவரை அந்த அரசியல் நிகழ்வை இஸ்லாமிய நிகழ்வாகவே காட்டி வருகிறார்கள். 
 
இஸ்லாமிய வரலாற்றில் உலக முஸ்லிம்களின் இரண்டாம் தலைவராக ஆட்சிப்புரிந்து வந்த உமர்(ரலி) அவர்கள் ஒரு மடையனால் (அவன் முஸ்லிம் அல்ல)  கொலை செய்யப்பட்டபோது உமர்(ரலி) அவர்களின் இடத்தை நிரப்ப (அதாவது முஸ்லிம் உம்மத்திற்கு தலைமை பொறுப்பேற்க) அலி(ரலி) அவர்களே அன்றைய ஆலோசனைக் குழுவினரால் முன்மொழியப்பட்டார்கள்.  அலி (ரலி) அந்த பொறுப்பை ஏற்க மறுத்தவுடன் பொறுப்பு உஸ்மான்(ரலி) அவர்களிடம் செல்கின்றது.  (இந்த சம்பவம் புகாரியில் விரிவாக பதிவு செய்யப்பட்டுள்ளது)  அந்த சம்பவத்தின் முக்கிய இடத்தை மட்டும் இங்கு பார்ப்போம்.
 
பாகம் 4, அத்தியாயம் 62, எண் 3699
 
அவர்களை அடக்கம் செய்து முடித்தபோது அந்த (ஆறு பேர் கொண்ட) ஆலோசனைக் குழுவினர் (அடுத்த ஆட்சித் தலைவர் யார் என்று தீர்மானிப்பதற்காக ஓரிடத்தில்) குழுமினர். அப்போது, அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப் (ரலி) அவர்கள், '(கருத்து வேறுபாட்டைக் குறைப்பதற்காக, ஆட்சித் தலைவரைத் தேர்ந்தெடுக்கும்) உங்களின் உரிமையை உங்களில் மூன்று பேர்களிடம் ஒப்படையுங்கள்' என்று கூறினார்ள். அப்போது ஸுபைர்(ரலி), 'என்னுடைய அதிகாரத்தை அலி அவர்களுக்கு (உரியதாக) நான் ஆக்கிவிட்டேன்' என்று கூறினார்கள். பிறகு தல்ஹா(ரலி), 'என்னுடைய அதிகாரத்தை நான் உஸ்மான் அவர்களுக்கு (உரியதாக) ஆக்கி விட்டேன்' என்று கூறினார்கள். பிறகு ஸஅத்(ரலி), 'என்னுடைய அதிகாரத்தை நான் அப்தூ ரஹ்மான் பின்அ வ்ஃப் அவர்களுக்கு (உரியதாக) ஆக்கிவிட்டேன்' என்று கூறினார்கள். அப்போது அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி) (அலீ ரலி- அவர்களையும் உஸ்முhன் - ரலி- அவர்களையும் நோக்கி), 'உங்கள் இருவரில் இந்த அதிகாரத்திலிருந்து விலகிக் கொள்(ள முன்வரு)கிறவரிடம் இந்தப் பொறுப்பை நாம் ஒப்படைப்போம். அல்லாஹ்வும், இஸ்லாமும் அவரின் மீது (கண்காணிப்பாளர்களாக) உள்ளனர். உங்களில் சிறந்தவர் யாரென (அவரவர் மனத்திற்குள்) சிந்தித்துக் கொள்ள வேண்டும்' என்று கூறினார்கள். அப்போது இருமூத்தவர்(களான உஸ்மான்(ரலி) அவர்களும், அலீ(ரலி) அவர்)களும் மெளனமாக இருந்தார்கள். அப்போது, அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி), 'நீங்கள் (ஆட்சியாளரைத் தேர்ந்தெடுக்கும்) அதிகாரத்தை என்னிடம் ஒப்படைக்கிறீர்களா? உங்களில் சிறந்தவரை நான் (தரத்தில்) குறைத்து மதிப்பிடவில்லை யென்பதை அல்லாஹ் கண்காணித்துக் கொண்டேயிருக்கிறான்' என்று கூறினார்கள். அதற்கு, அவ்விருவரும் 'ஆம்! (உங்களிடம் அப்பொறுப்பை ஒப்படைக்கிறோம்)' என்றனர். அப்போது அவ்விருவரில் ஒருவரின் ( - அலீ - ரலி அவர்களின்) கையை அப்துர் ரஹ்மான் இப்னு அவ்ஃப்(ரலி) பிடித்துக் கொண்டு 'உங்களுக்கு இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் (நெருங்கிய) உறவுமுறை இருக்கிறது. மேலும், இஸ்லாத்தில் உங்களுக்கு நீங்களே அறிந்துள்ள சிறப்பும் உண்டு. அல்லாஹ் உங்களைக் கண்காணித்துக் கொண்டேயிருக்கிறான். உங்களை நான் ஆட்சித் தலைவராக நியமனம் செய்தால் (குடிமக்களிடத்தில்) நீங்கள் நீதியுடன் நடந்து கொள்வீர்கள். உஸ்மான் அவர்களை நான் ஆட்சித் தலைவராக நியமனம் செய்தால் அவருக்கு செவிமடுத்து, கட்டுப்பட்டு நடப்பீர்கள்' என்று கூறினார்கள். பிறகு இன்னொருவரிடம் ( உஸ்மான் - ரலி - அவர்களிடம்) தனியே வந்து அலீ(ரலி) அவர்களிடம் கூறியதைப் போன்றே (அவர்களிடமும்) வாக்குறுதி வாங்கிய பின், 'உஸ்மான் அவர்களே! தங்களின் கையைத் தாருங்கள்' என்று கூறி (உஸ்மான் - ரலி - அவர்களின் கையைப் பிடித்து) அவர்களுக்கு பைஅத் (விசுவாசப் பிரமாணம்) செய்து கொடுத்தார்கள். அப்போது அலீ(ரலி) அவர்களும் உஸ்மான்(ரலி) அவர்களுக்கு விசுவாசப் பிரமாணம் செய்தார்கள். மேலும், அந்நாட்டவரும் (மதீனா வாசிகளும்) வந்து அவர்களிடம் பைஅத் செய்து கொடுத்தார்கள்.
முதலில் ஆட்சிப் பொறுப்பு அலி (ரலி) அவர்களிடமே கோரப்படுகின்றது.  பிறகே உஸ்மான் (ரலி) அவர்களிடம் செல்கின்றது.  ஆட்சிப் பொறுப்பை முன் மொழிந்த அப்துர்ரஹ்மான் பின் அவ்ப் அவர்களையடுத்து தனது முதல் ஒப்புதலை( இன்றைய ஓட்டெடுப்பு முறை) ஜனநாயக முறையில் அலி (ரலி) அவர்களே செலுத்துகிறார்கள்.  ஒட்டுமொத்த முஸ்லிம்களின் வாக்கெடுப்பிலும் கருத்து வேறுபாடின்றி உஸ்மான் (ரலி) அவர்களின் ஆட்சி அமைகின்றது.   உஸ்மான் (ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்தில் அவர்களின் ஆட்சிக்கு எதிரான கருத்தோட்டங்கள் துவங்கி வலுபெற்று கடைசியில் உஸ்மான்(ரலி) அவர்களின் கொலையில் அது முடிகின்றது.  அவர்களின் இடத்தை அலி(ரலி) நிரப்புகிறார்கள்.  
 
ஒரு ஜனாதிபதியின் கொலை, அதை தொடர்ந்து புதிய ஜனாதிபதியின் பதவிஏற்பு என்று சூழ்நிலையின் கடினம் மக்களை பலவிதமாக சிந்திக்க வைத்து அவை முஸ்லிம் உம்மத்தின் பிரிவினையாக உருவெடுக்க வைத்து விட்டது.  அதன் தொடர்ச்சியாக நடந்ததே கர்பலாவாகும்.   வரலாற்று சம்பவங்களை ஊன்றி படிப்பவர்களுக்கு, அந்த வரலாறு குறித்து சிந்திப்பவர்களுக்கு "கர்பலா என்பது ஒரு அரசியல் நிகழ்வு" என்பது தெளிவாக விளங்கும்.
 
அதை ஒரு அரசியல் நிகழ்வாகவே சில முக்கிய நபித்தோழர்களும் பார்த்தார்கள். அதனால் தான் யஸீத் பின் முஆவியாவின் ஆளுமைக்கு எதிரான கிளர்ச்சி துவங்குவதை அவர்களால் ஒப்புக் கொள்ள முடியவில்லை. ஆட்சியாளராக இருந்த யஜீதையே அவர்கள் ஆதரித்தார்கள்.  இதற்கான சான்றை பார்த்து விட்டு தொடர்வோம்.
 
பாகம் 7, அத்தியாயம் 92, எண் 7111 

 நாபிஉ(ரஹ்) அவர்கள் அறிவித்தார்.

மதீனாவாசிகள் யஸீத் இப்னு முஆவியாவுக்க அளித்த விசுவாசப் பிரமாணத்தை விலக்கிக் கொண்டபோது, இப்னு உமர்(ரலி) அவர்கள் தம் அபிமானிகளையும் தம் மக்களையும் ஒன்று திரட்டி, 'மோசடி (நம்பிக்கைத் துரோகம்) செய்பவன் ஒவ்வொருவருக்கும் (உலகில்) அவன் செய்த மோசடியை வெளிச்சமிட்டு காட்டுவதற்காக வெளிச்சமிட்டுக் காட்டுவதற்காக மறுமைநாளில் கொடியொன்று நடப்படும் என்று நபி(ஸல்) அவர்கள் சொல்லக் கேட்டுள்ளேன். அல்லாஹ் மற்றும் அவரின் தூதர் வழிமுறைப்படி நாம் மனிதருக்கு (யஸீதுக்கு) விசுவாசப் பிராமணம் செய்துகொடுத்துள்ளோம். அல்லாஹ் மற்றும் அவனுடைய தூதரின் வழிமுறைப்படி ஒரு மனிதருக்கு விசுவாசப்பிரமாணம் செய்துகொடுத்துள்ளோம். அல்லாஹ் மற்றும் அவனுடைய தூதரின் வழிமுறைப்படி ஒரு மனிதருக்கு விசுவாசப் பிரமாணம் செய்து கொடுத்துவிட்டுப் பிறகு அவருக்கே எதிராகப் போரிடுவதை விடப் பெரிய மோசடி எதையும் நான் அறியவில்லை. (என் சகாக்களான) உங்களில் எவரும் யஸீதுக்கு செய்து கொடுத்த விசுவாசப் பிராமணத்தை விலக்கிக் கொண்டதாகவோ, இந்த ஆட்சியதிகாரத்தில் வேறெவருக்காவது விசுவாசப் பிரமாணம் செய்து கொடுத்ததாகவோ நான் அறிந்தால், அதுவே அவருக்கும் எனக்கும் இடையே உள்ள உறவை துண்டிக்கக் கூடியதாக இருக்கும்' என்றார்கள்.
 
யஜீதின் செயல்பாடுகளில் அதிருப்தியடைந்தவர்கள் அவரது ஆட்சிக்கு கொடுத்த வாக்குறுதியை மீறி நடக்கத் துவங்கிய போது மிக சிறந்த நபித்தோழரான இப்னு உமர் (ரலி) அவர்கள் அதை மிக வன்மையாக கண்டித்துள்ளார்கள் என்பதும், யஸீதின் ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சி செய்வது நயவஞ்சகத்தனத்தின் அடையாளம் என்று கூறி அதற்கு சான்றாக நபி(ஸல்) அவர்களின் எச்சரிக்கையை சமர்பித்ததுத் இங்கு ஊன்றி கவனிக்கத்தக்கதாகும்.    
 
ஒரு ஆட்சியாளரின் ஆட்சிக்கு கீழ் மக்கள் ஒன்றுபட்டிருக்கும் போது அங்கு வேறு ஆட்சியாளரை கொண்டு வர முயற்சிப்பது, உள்நாட்டுக் குழப்பத்தை ஏற்படுத்துவது போன்றவை இறையாண்மைக்கு எதிரானது என்று இஸ்லாம் சொல்கின்றது.
 
سمعت رسول الله ‏ ‏صلى الله عليه وسلم ‏ ‏يقول ‏ ‏من أتاكم وأمركم جميع على رجل واحد يريد أن ‏ ‏يشق عصاكم ‏ ‏أو يفرق جماعتكم فاقتلو
 
நீங்கள் ஒரு அமீருக்கு (அதிகாரம் உள்ளவருக்கு) கீழ் ஒருங்கிணைந்து கட்டுப்பட்டிருக்கும் போது அதில் குழப்பம் ஏற்படுத்த முனைபவர்களை - பிரிவினையை உருவாக்குபவர்களைக் கொல்லுங்கள் என்றும் பிறிதொரு அமீராக தன்னை அறிவிப்பவர்களில் பிந்தியவரை கொல்லுங்கள் என்றும் நபி(ஸல்) குறிப்பிட்டுள்ளார்கள்.
 
இஸ்லாமிய ஆட்சிக்கு எதிராக குழப்பம் விளைவிப்பவர்கள் முஸ்லிமா அல்லது பிறரா என்று பார்க்கப்படமாட்டார்கள். ஆட்சியாளர்கள் அவர்களை குழப்பக்காரர்களாகவே பார்ப்பார்கள்.   அத்தகைய குழப்பம் விளைவதை இப்னு உமர் (ரலி) அவர்கள் வன்மையாகக் கண்டிக்கிறார்கள்.  இப்னு உமர் (ரலி) அவர்கள் யஜீத் பின் முஆவியாவை யஜீத் என்ற தனிமனிதனாகப் பார்க்கவில்லை. அவர் ஒரு ஆட்சித்தலைவர் என்றே பார்க்கிறார்கள்.  நமது நிலைப்பாடும் அதுதான்.
 
ஷியாக்களால் வன்மையாக்கப்பட்டுள்ள வரலாற்றுப் பக்கங்களை கருத்தில் கொள்பவர்கள்தான் கர்பலாவை உலகலாவிய துக்க இடமாகவும், துக்க தினமாகவும் பார்ப்பார்கள் என்பதை நாம் புரிந்துக் கொள்ள வேண்டும்.
 
-
ஜி.நிஜாமுத்தீன் (ஜி என்)

No comments: