வலைப்பதிவில் தேட..

Sunday, December 14, 2008

ஒற்றைச் சொல்லில் ஸலாம் சொல்லலாமா?

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்
சகோதரர் நிஜாமுத்தீன் அவர்களே
 
அஸ்ஸலாமு அலைக்கும் (10 நன்மைகள்)
 
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ் (20 நன்மைகள்)
 
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்தஹு (30 நன்மைகள்)
 
என்ற நிலையில் ''ஸலாம்" என்ற வார்த்தைக்கு மட்டும் எத்தனை நன்மைகள் என்று தெரிந்தால் மற்றவர்களும் அதை பயன்படுத்தலாமே. மேலும் முஸ்லிமல்லாத சகோதரர்களுக்கு ஸலாம் சொல்லலாமா? அல்லது அவர்கள் ஸலாம் கூறினால் பதிலாவது சொல்லலாமா?
 
அன்புடன்,
சகோ. அபூஃபைஸல்
ரியாத், சவூதி அரேபியா
........................
 
பொதுவாக ஸலாமை பொருத்தவரை நாம்,
 
அஸ்ஸலாமு அலைக்கும்
 
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்
 
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாத்தஹு
 
என்று மூன்று விதங்களில் சொல்லி பழகி விட்டதால் நாம் எழுதிய "ஸலாம்" என்ற ஒற்றைச் சொல் நெருடலாகவும், சிலருக்கு ஆச்சரியமாகவும் கூட இருக்கலாம்.
 
ஆனால் நாம் குர்ஆன் சுன்னாவிற்கு மாற்றமாக அந்த வார்த்தையை பயன்படுத்தவில்லை என்பதை புரிய வைப்பது கடமை என்பதால் இந்த விளக்கத்தை அளிக்கிறோம்.
 
முஹம்மத்(ஸல்) அவர்கள் கற்றுக் கொடுத்த ஸலாமை சொல்வது போன்றே குர்ஆனில் இறைவன் சுட்டிக் காட்டியுள்ள ஸலாமையும் நாம் பயன்படுத்தலாம். அதுவும் ஸலாமை பரப்பியதாகவே அமையும்.
 
"அஸ்ஸலாமு அலைக்கும்" போன்று "ஸலாமுன் அலைக்கும்" என்றும் "ஸலாம்" என்றும் பயன்படுத்தலாம்.  இவை அனைத்தும் இஸ்லாம் சொல்லக் கூடிய ஸலாமின் உள்ளே அடங்கி விடும்.
 
ஸலாம்
 
َلَقَدْ جَاءتْ رُسُلُنَا إِبْرَاهِيمَ بِالْبُـشْرَى قَالُواْ سَلاَمًا قَالَ سَلاَمٌ فَمَا لَبِثَ أَن جَاء بِعِجْلٍ حَنِيذٍ
 
நிச்சயமாக நம் தூதர்கள் (வானவர்கள்) இப்றாஹீமுக்கு நற்செய்தியுடன் வந்து 'ஸலாம்' என்றார்கள். (அவரும்) "ஸலாம்"  என்றார்  (அதன் பின்னர் அவர்கள் உண்பதற்காக) பொரித்த கன்றின் (இறைச்சியைக்) கொண்டு வருவதில் தாமதிக்கவில்லை. 11:69 - 51:25
 
இப்ராஹீம் (அலை) அவர்களை சந்தித்த வானவர்கள் 'அஸ்ஸலாமு அலைக்கும்" என்ற வார்த்தையை பயன்படுத்தாமல் "ஸலாம்" என்ற ஒரு வார்த்தையை மட்டுமே பயன்படுத்தியுள்ளார்கள்.  பதிலுக்கு இப்ராஹீம் (அலை) அவர்களும் "ஸலாம்" என்ற ஒரு வார்த்தையையே பதிலாக்கியுள்ளார்கள் என்பதை இறைவன் சுட்டிக் காட்டுகிறான்.  (இப்படி சொல்வது தவறென்று எந்த இடத்திலும் சுட்டிக்காட்டப்படவில்லை)  எனவே குர்ஆனின் வழிகாட்டல் அடிப்படையில் "ஸலாம்" என்ற வார்த்தையை மட்டும் கூட பயன்படுத்தலாம் என்பதை விளங்கலாம்.
 
திருக்குர்ஆனில் ஸலாம் என்ற வார்த்தையே அதிகமான இடங்களில் (முகமனுக்காக) பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதையும் நாம் இங்கு கூடுதலாக நினைவுப்படுத்திக் கொள்ள வேண்டும். 
.........................
அஸ்ஸலாமு அலைக்கும்,
 
ஸலாம் என்று ஒரே வார்த்தையில் சொன்னாலும் அது முழுமையான ஸலாம் சொன்ன பரக்கத் கிடைக்கும். மேலும், மாற்று மத சகோதரர்கள் ஸலாம் சொன்னால் நாம் பதில் சொல்வது கூடும். அதுபோல நாமும் அவர்களுக்கு ஸலாம் கூறலாம். அல்லாஹ் அஃலம்.
 
முஹம்மது இக்பால் - ஷார்ஜா,யு.ஏ.இ
.........................
ஸலாமுன் அலைக்கும்.
 
நாம் செய்யும் எல்லா அமல்களுக்கும் அதற்காக சொல்லப்பட்டுள்ள நன்மைகளை மட்டுமே கவனத்தில் கொண்டு செய்தால் "இத்துனை நன்மை" "இவ்வளவு நன்மை"  என்று சொல்லப்படாமல் குறிப்பிடப்பட்டுள்ள அமல்களை நாம் செய்யாமல் இருந்து விட முடியுமா..?
 
நீங்கள் குறிப்பிட்டுள்ளப்படி ஸலாம் சொல்வதால் என்ன நன்மைகள் கிடைக்குமோ அந்த நன்மைகளோ அல்லது சற்று குறைவாகவோ "ஸலாம்" என்ற ஒற்றை வார்த்தையிலும் நிச்சயம் கிடைக்கும். ஏனெனில் இது இறைவன் புறத்திலிருந்து வழிகாட்டப்பட்டுள்ள வார்த்தையாகும்.
 
குர்ஆனோடு ஒப்பிடும் போது ஹதீஸ்களில் சில விதிவிலக்கு, அல்லது மாற்று வியாக்யானங்கள் கொடுக்கலாமே தவிர ஹதீஸ்களோடு ஒப்பிட்டு குர்ஆன் வசனங்களுக்கு விதிவிலக்கோ - வியாக்யானங்களோ கொடுக்க முடியாது.
 
எனவே குர்ஆனில் ஒரு கட்டளை ஒரு தூண்டுதல் வந்துள்ள போது ஹதீ்ஸ்களை ஒப்பு நோக்கி குர்ஆன் வசனங்களை சற்று பின்னுக்கு தள்ளும் போக்கு கடுகளவும் நம்மிடம் வந்து விடக் கூடாது.
 
குர்ஆனில் "ஸலாம்" என்ற ஒற்றை வார்த்தையில் இறைவன் வழிகாட்டியுள்ளான் என்றால், "அதற்கு எவ்வளவு நன்மை கிடைக்கும்..?" என்றெல்லாம் கணக்குப் போட்டுக் கொண்டு இருப்பது முறையல்ல. அது இறைவனின் வழிகாட்டல் இறைவன் நன்மை கொடுப்பான் என்ற நம்பிக்கை வந்து விட வேண்டும்.
 
10, 20, 30 நன்மைகள் என்று ஹதீஸ்களில் வழிகாட்டுதல் உள்ளதால் அவ்வாறும் கூறிக் கொள்ளலாம்.
 
மாற்றாருக்கு ஸலாம்.
 
முஸ்லிம் அல்லாதவர்களுக்கு ஸலாம் சொல்லக் கூடாது என்ற எந்த தடையையும் நம்மால் பார்க்க முடியவில்லை. இறைவனின் படைப்பில் அனைவரும் "ஸலாமி"ற்குரியவர்கள், ஸலாமை விரும்புபவர்கள் என்பதால் அவர்களுக்கு நாம் ஸலாம் சொல்லலாம்.
 
மக்களே ஸலாத்தை பரப்புங்கள், தெரிந்தவர்கள் தெரியாதவர்கள் அனைவருக்கும் ஸலாம் சொல்லுங்கள் போன்ற ஆர்வமூட்டியுள்ள ஹதீஸ்கள் பிறருக்கு ஸலாம் சொல்வதை அனுமதித்தே வந்துள்ளது.
 
மாற்று மத சகோதரர்களின் ஸலாமுக்கு பதில்
 
وَإِذَا حُيِّيْتُم بِتَحِيَّةٍ فَحَيُّواْ بِأَحْسَنَ مِنْهَا أَوْ رُدُّوهَا إِنَّ اللّهَ كَانَ عَلَى كُلِّ شَيْءٍ حَسِيبًا
 
உங்களுக்கு ஸலாம் (வாழ்த்து) கூறப்பட்டால் அதைவிட அழகானதை அல்லது அதையே பதிலாக்குங்கள். அல்லாஹ் எல்லாவற்றையும் கணெக்கெடுப்பவனாக இருக்கிறான். (அல்குர்ஆன் 4:86)
 
"உங்களுக்கு ஸலாம் கூறப்பட்டால்.." என்ற சொற்பதம் சொல்லப்படும் வார்த்தையைத்தான் கவனிக்க சொல்கின்றதே தவிர சொல்லும் ஆட்களையல்ல.  எனவே நமக்கு யார் ஸலாம் சொன்னாலும் அவர்களுக்கு அதைவிட சிறந்த வார்த்தையை அல்லது அதையே பதிலாக சொல்லலாம்.
 
இணைவைப்பவர்களுக்கு முந்திக் கொண்டு ஸலாம் சொல்லாதீர்கள் என்று சில அறிவிப்புகள் உள்ளன. அவற்றை பொது அறிவிப்பாக எடுத்துக் கொள்ளக் கூடாது.  ஏனெனில் நம் ஸலாத்துக்கு முறையான பதில் கொடுக்காமல் ஸலாத்தை மாற்றி கூறும் செயலை சில யூதர்கள் செய்தார்கள் அது போன்றவர்களை கருத்தில் கொண்டே அந்த அறிவிப்புகள் வந்துள்ள என்று விளங்குவதே சரியாகத் தெரிகின்றது.   (அல்லாஹ் அனைத்தையும் நுணுக்கமாக அறிந்தவன் என்று நம்புகிறோம்)
......................
 
ஸலாத்தின் சிறப்பு குறித்து இன்னும் சில அறிவிப்புகள் உள்ளன அவற்றையும் அறிந்துக் கொள்வோம்.
 
(وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَا تَدْخُلُونَ الْجَنَّةَ حَتَّى تُؤْمِنُوا وَلَا تُؤْمِنُوا حَتَّى تَحَابُّوا أَوَلَا أَدُلُّكُمْ عَلَى شَيْءٍ إِذَا فَعَلْتُمُوهُ تَحَابَبْتُمْ أَفْشُوا السَّلَامَ بَيْنَكُمْ)
 
என் உயிர் யார் கைவசம் உள்ளதோ அவன் மீது சத்தியமாக, நீங்கள் முஃமின்களாகும் வரை சொர்க்கத்தில் நுழையமாட்டீர்கள். நீங்கள் ஒருவருக்கொருவர் நேசித்துக் கொள்ளும் வரை முஃமின்களாக முடியாது. உங்களுக்குள் நேசத்தை வளர்க்கும் ஒன்றை நான் அறிவிக்கட்டுமா? நீங்கள் உங்களுக்கிடையில் ஸலாத்தைப் பரப்புங்கள்! என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அபூஹுரைரா -ரலி, நூல் : முஸ்லிம்.
 
( . . . يَا أَيُّهَا النَّاسُ أَفْشُوا السَّلَامَ وَأَطْعِمُوا الطَّعَامَ وَصِلُوا الْأَرْحَامَ وَصَلُّوا بِاللَّيْلِ وَالنَّاسُ نِيَامٌ تَدْخُلُوا الْجَنَّةَ بِسَلَامٍ )
 
மக்களே! ஸலாத்தைப் பரப்புங்கள்! பிறருக்கு உணவளியுங்கள்! உறவினர்களுடன் இணைந்து வாழுங்கள்! இரவில் மக்கள் உறங்கிக் கொண்டிருக்கும் போது நீங்கள் வணங்கிக் கொண்டிருங்கள்! -இவ்வாறு செய்வீர்களானால்- நிம்மதியாக சொர்க்கத்தில் நுழைவீர்கள்! என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அப்துல்லாஹ் இப்னு ஸலாம் -ரலி,  திர்மிதீ, இப்னுமாஜா, அஹ்மத், ஹாகிம்.
 
(عن شريح بن هاني عن أبيه أنه قال: يا رسول الله أخبرني بشيء يوجب لي الجنة؟ قال : عليك بحسن الكلام وبذل السلام)
 
அல்லாஹ்வின் தூதரே! எனக்கு சொர்க்கத்தை நிச்சயமாகப் பெற்றுத் தரும் ஒன்றை அறிவியுங்கள்! என ஹானீ (ரலி) அவர்கள் கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், நல்ல வார்த்தைகளைப் பேசு! ஸலாத்தைப் பரப்பு! என்றார்கள். ஷுரைஹ் இப்னு ஹானீ -ரலி, இப்னுஹிப்பான், ஹாகிம்.
 
--
ஜி.நிஜாமுத்தீன் (ஜி என்)

No comments: