வலைப்பதிவில் தேட..

Sunday, January 20, 2008

ஸஹாபாக்கள் நட்சத்திரங்களா?

அஸ்ஸலாமு அலைக்கும். நபி (ஸல்l) அவர்கள் \" என்னுடைய சகாபாக்கள் வானத்தில் மின்னும் நட்சத்திரங்களை போன்றவர்கள், அவர்களில் நீங்கள் எவறைப்பின்பற்றினாலும் வெற்றி அடைவீர்கள்\" என்று கூறி இருக்கும்போது நாங்கள் அவர்களை பின்பற்ற மாட்டோம் நபி (ஸல்) அவர்கள் செய்தவற்றை மட்டுமே பின்பற்றுவோம் என்று சில சகோதர்கள் கூறுகின்றனர். மேலும் கண்ணியமிக்க \"சகாபாக்களை நானும் பொருந்திக் கொண்டேன் \" அவர்களும் என்னை பொருந்திக் கொண்டார்கள்\" என்று அல்லாஹ்வே சான்று தரும்போது சில மூடர்கள் சகாபாக்கள் அறியாமல் செய்த சில தவறுகளை சொல்லி காட்டி அவர்களின் கண்ணியத்திற்கு இழுக்கு ஏற்ற்படுத்துவதை பற்றி தங்களின் கருத்து என்ன?


AZEEZUDDHEEN
skn_azeesudeenஅட்gmail.com
Dubai



நீங்கள் சுட்டிக் காட்டியுள்ள நபித்தோழர்கள் நட்சத்திரங்களைப் போன்றவர்கள் என்ற செய்தி இரண்டு விதத்தில் பலவினப்படுகின்றது.

ஒன்று: அதன் அறிவிப்பாளர் தொடர்:

இரண்டு: அதன் கருத்து.

'அஸ்ஹாபீ கன்னுஜூமி பிஅய்யிஹிம் இக்ததைத்தும் இஹ்ததைத்தும்',

அறிவிப்பாளர் வரிசையில் உள்ள குறைபாடுகள். இந்த ஹதீஸை இமாம் இப்னுஹஸ்மு(ரஹ்) அவர்கள் தமது 'அல் இஹ்காம்' என்ற நூலில் பதிவு செய்துள்ளார்கள். இந்த ஹதீஸைப்பற்றி 'இது ஏற்கத் தகாத ஹதீஸாகும்' என்று குறிப்பிடுகிறார்கள். இதன் அறிவிப்பாளர்களில் ஒருவராகிய ஸலாம் இப்னு ஸூலைம் என்பவர் நிறைய இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களை அறிவிப்பவராவார். 'இந்த ஹதீஸூம் அத்தகைய இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களில் ஒன்றாகும்' என்றும் இமாம் இப்னுஹஸ்மு அவர்களே குறிப்பிடுகிறார்கள்.

இந்த ஹதீஸை இமாம் 'இப்னு அல்தில்பர்' (ரஹ்) அவர்களும் தமது 'ஜாமிவுல் இல்மி' என்ற நூலில் பதிவு செய்துள்ளார். இதன் அறிவிப்பவர்களில் இடம்பெறுகின்ற 'ஹாரிஸ் இப்னு குஸைன்' என்பவர் ஹதீஸ்கலையில் அறியப்படாதவர். இது ஏற்றத்தக்க ஹதீஸ் அல்ல என்றும் குறிப்பிடுகிறார்கள்.

இந்த 'ஸலாம் இப்னு ஸூலைம்' என்பவரைப்பற்றி இமாம் இப்னு ஹர்ராஷ் அவர்கள் 'இவர் பெரும் பொய்யர்' என்றும், இமாம் 'இப்னு ஹிப்பான்' அவர்கள் 'இவர் இட்டுக் கட்டப்பட்ட ஹதீஸ்களை அறிவிப்பவர்' என்றும் குறிப்பிடுகிறார்கள்.

கருத்துத் தவறு:

சில நட்சத்திரங்களை வைத்து நேரம், காலம், வழி அறியப்படுகின்றது. சில நட்சத்திரங்களிலிருந்து தான் இந்த படிப்பினை கிடைக்கின்றதே தவிர எல்லா நட்சத்திரங்களும் மக்களுக்கு வழிகாட்டுவதில்லை. பொருத்தமில்லாத உவமைகளை நபி(ஸல்) கூற மாட்டர்கள்.

நபித்தோழர்கள் அனைவரின் அறிவும், ஆற்றலும், தகுதியும் ஒரே விதத்தில் அமைந்தவையல்ல. இறைவனால் வழங்கப்பட்ட சிறப்பில் கூட அவர்களுக்கு மத்தியில் வேறுபாடுகள் இருக்கின்றன.

1)உங்களில் (மக்கா) வெற்றிக்கு முன்னர் செலவு செய்து, போரிட்டவர்களுக்கு உங்களில் எவரும் சமமாகமாட்டார். (மக்காவின்) வெற்றிக்குப் பின் செலவு செய்து போரிட்டவர்களை விட, அவர்கள் பதவியால் மிகவும் மகத்தானவர்கள்': எனினும் அல்லாஹ் எல்லோருக்கும் அழகானதையே வாக்களித்திருக்கிறான். மேலும்; அல்லாஹ் நீங்கள் செய்பவற்றை நன்கு தெரிந்தவன். (57:10)

மக்கா வெற்றிக்கு முன்னுள்ளவர்களின் நிலையும், மக்கா வெற்றிக்கு பின் செலவிட்டவர்களின் நிலையும் சமமல்ல என்று இறைவன் தரத்தைப் பிரிக்கிறான்.

2)பத்ருப் போரில் கலந்துகொண்டவர்களின் நிலையை மற்றவர்கள் அடைய முடியாது. அவர்களிலும் சொர்க்கத்தின் நற்செய்திப் பெற்ற பத்து நபித்தோழர்களின் நிலையை மற்றவர்கள் அடைய முடியாது. அந்தப் பத்துப் பேர்களிலும் நாற்பெரும் கலீபாக்களின் நிலை மிகவும் உயர்ந்தது. நான்கு கலீபாக்களிலும் முதலிருவரின் நிலை பன்மடங்கு மேலானது. அந்த இருவர்களிடம் கூட அபூபக்கர் (ரலி) அவர்கள் மிகமிக மேலான தகுதியை பெற்றவர்களாவார்கள்

எந்த நபித்தோழரையும் பின்பற்றலாம் என்ற உவமை இப்படி பல வழிகளில் முரண்படுவதால் அந்த செய்தியை ஒதுக்கித் தள்ளியாக வேண்டும்.

குர்ஆனும் சுன்னாவும் மட்டுமே மார்க்கத்தின் ஆதாரங்களாகும். நபி(ஸல்) அவர்கள் தனிப்பட்ட முறையில் செய்த செயல்களே மார்க்கமாகாது எனும் போது (உதாரணம் தலைப்பாகை அணிதல்) நபித்தோழர்களின் செயல்களை எப்படி மார்க்க ஆதாரமாக்க முடியும்?

இது அல்லாஹ்வின் மார்க்கம், இந்த மார்க்கத்தில் எதுவொன்றிற்கும் அல்லாஹ்வின் வழிகாட்டல் வேண்டும். அல்லது அல்லாஹ்விடமிருந்து வஹியைப் பெற்ற நபியுடைய வழிகாட்டல் வேண்டும். இதுவல்லாத எதுவும் மார்க்க ஆதாரமாகாது.

நபித்தோழர்களை கண்ணியப்படுத்த வேண்டும் என்பது வேறு. அவர்களைப் பின்பற்ற வேண்டும் என்பது வேறு. இரண்டுக்கும் உள்ள வித்தியாசத்தைப் புரிந்துக் கொள்ள வேண்டும். நபித்தோழர்களுக்கு மத்தியில் சிறப்பில் ஏற்றத் தாழ்வு இருந்தாலும் அவர்களுக்கு பின்பு இன்று வரை வந்த கோடான கோடி முஸ்லிம்களுடன் ஒப்பிடும் போது அவர்களின் சிறப்பும் அந்தஸ்த்தும் மகத்தானவை. அதற்காக அவர்களைப் பின்பற்ற வேண்டும் என்ற நிலையை இறைவன் ஏற்படுத்தவில்லை.

நபித்தோழர்களுக்கு மத்தியிலேயே இஸ்லாமிய சட்டங்களை விளங்குவதில் சில - பல கருத்து வேறுபாடுகள் நிலவின. ஹதீஸ் கிதாப்களுடன் தொடர்புள்ளவர்களுக்கு இது தெரியும்.

எனவே பின்பற்றத் தகுதியானவர்கள் நபி(ஸல்) அவர்கள் மட்டுமே.

நபித்தோழர்களை யாரும் திட்டமாட்டார்கள் அதிலும் குர்ஆன் சுன்னாவை விளங்கியவர்கள் நிச்சயம் திட்ட மாட்டார்கள். அவ்வாறு திட்டுபவர்கள் ஒட்டு மொத்த சமுதாயத்தால் ஒதுக்கித் தள்ளப்படுவார்கள்.
...............................

No comments: