வலைப்பதிவில் தேட..

Monday, February 11, 2008

இணைவைக்கும் இமாம்

இணைவைக்கும் இமாமைப் பின்பற்றித் தொழலாமா...?

Name: meera hussain
email: nkmmeera@......
Location: india
Subject: Kelvi
.........................

13 comments:

mhIbrahim said...

இணை கற்பிக்கும் இமாமைப் பின்பற்றி தொழுவது பற்றி நேரடியாக ஹதீஸ் ஏதும் இல்லை. ஆயினும் அது பற்றி எந்த முடிவுக்கு வரலாம் என்பதற்கான அடிப்படை குர்ஆனிலும் ஹதீஸிலும் காணப்படுகிறது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் ஒருவர் மக்களுக்கு தொழுகை நடத்தி வந்தார். அவர் ஒரு நாள் கிப்லாவை நோக்கி எச்சில் துப்பினார். அதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அவர் தொழுது முடித்தவுடன் இனி மேல் அவர் உங்களுக்கு தொழுகை நடத்தக் கூடாது என்று மக்களிடம் கூறினார்கள். அவர் மற்றொறு தடவை தொழுவிக்க முயன்ற போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதை அவரிடம் தெரிவித்தனர். அவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் கேட்ட போது நீ அல்லாஹ்வையும் அவனது துதரையும் துன்புறுத்தி விட்டாய் எனக் கூறினார்கள்.அறிப்பவர் : அஹ்மத் (ர)

நுற்கள் : அபூதாவூத்(407). அஹ்மத்(15966)

நபிகள் நாயகம் பார்த்துக் கொண்டிருக்கும் போது கிப்லாவின்பால் எச்சில் துப்பியவர் இமாமத் செய்யக் கூடாது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தடுத்துள்ளனர்.வெளிப்படையாக பகிரங்கமாக பாவம் செய்பவர் தொழுகை நடத்தும் தகுதியை இழந்து விடுகிறார் என்பதை இதிருந்து அறியலாம்.ஆனால் தொழுத தொழுகையை திருப்பித் தொழுமாறு மக்களிடம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறவில்லையே என்று சிலர் வாதிடலாம். சட்டம் இயற்றப்படாத நேரத்தில் சட்ட மீறல் கிடையாது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு கட்டளையிட்ட பிறகு தான் இந்தச் சட்டம் நடைமுறைக்கு வருகிறது. அதற்கு முன் செய்த செயலை திரும்பச் செய்ய வேண்டியதில்லை.கிப்லாவை நோக்கி எச்சில் துப்புவதை விட அல்லாஹ்வுக்கு இணை கற்பித்தல் கடுமையானது என்பதில் சந்தேகம் இல்லை.மேலும் இது குறித்து திருக்குர்ஆன் வசனங்களும் கடும் போக்கை காட்டுங்கின்றன. அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்போர் பள்ளி வாசல்களை நிர்வகிக்க் கூடாது. அந்த உரிமையும் தகுதியும் அவர்களுக்கு இல்லை என்று திருக்குர்ஆன் கூறுகிறது.இணை கற்பிப்போர் தமது (இறை) மறுப்புக்கு, தாமே சாட்சி கூறிக் கொண்டிருக்கும் நிலையில் அல்லாஹ்வின் பள்ளிவாசல்களை நிர்வகிப்பது தகாது. அவர்கள் செய்தவை அழிந்து விட்டன. அவர்கள் நரகில் நிரந்தரமாக இருப்பார்கள்.(திருக்குர்ஆன் 9 : 17தொழுகைக்கு தலைமை தாங்குவது தான் நிர்வகிப்பதில் முக்கியமானதாகும்.. தாங்கள் இணை கற்பிப்பதை பகிரங்கமாக அறிவித்துக் கொண்டுள்ளவர்களை இமாமாக ஏற்கக் கூடாது என்பதை இதிருந்து அறியலாம்.மேலும் இணை கற்பிப்பவருக்கு பாவ மன்னிப்பு கேட்கக் கூடாது என திருக்குர்ஆன் கூறுகிறது.இணை கற்பிப்போர் நரகவாசிகள் என்பது தெரிந்த பின்னர், அவர்கள் நெருங்கிய உறவினரேயானாலும் அவர்களுக்காக பாவமன்னிப்புத் தேடுவது நம்பிக்கை கொண்டோருக்கும், இந்த நபிக்கும் (முஹம்மதுக்கும்) தகாது.(திருக்குர்ஆன் 9 : 113)இணை கற்பிக்கும் இமாமை பின்பற்றும் போது தொழுகையில் நாம் கேட்கும் பாவமன்னிப்பு அவருக்கும் உரியதாகிறது. இந்தக் காரணத்திற்காகவும் இணை கற்பிப்போரை பின்பற்றக் கூடாது.மேலும் இணை கற்பிப்போரை பொறுப்பாளராக ஆக்கக் கூடாது என்று பின் வரும் வசனங்கள் கூறுகின்றன.நம்பிக்கை கொண்டோர், நம்பிக்கை கொண்டோரை விட்டு விட்டு (ஏக இறை வனை) மறுப்போரைப் பொறுப்பாளர்களாக ஆக்கக் கூடாது. இவ்வாறு செய்பவருக்கு அல்லாஹ்விடமிருந்து (பாதுகாப்பு) எதுவுமில்லை. அவர்களிடமிருந்து தற்காத்துக் கொள்வதற்காக தவிர. அல்லாஹ் தன்னைப் பற்றி உங்களுக்கு எச்சரிக்கிறான். திரும்புதல் அல்லாஹ்விடமே உள்ளது.(திருக்குர்ஆன் 3 : 28)(இறை) மறுப்பை விரும்புவார்களானால் அவர்களை உற்ற நண்பர்களாக்காதீர்கள்! உங்களில் அவர்களை உற்ற நண்பர்களாக்குவோரே அநீதி இழைத்தவர்கள்.(திருக்குர்ஆன் 9 : 23)அவர்கள் நம்பிக்கை கொண்டோரை விடுத்து (ஏக இறைவனை) மறுப்போரை உற்ற நண்பர்களாக்கிக் கொண்டனர்.அவர்களிடம் கண்ணியத்தைத் தேடுகிறார்களா? கண்ணியம் யாவும் அல்லாஹ்வுக்கே உரியது.(திருக்குர்ஆன்4 : 139)


நம்பிக்கை கொண்டோரே! நம்பிக்கை கொண்டோரை விடுத்து (ஏக இறைவனை) மறுப்போரை உற்ற நண்பர் களாக்கிக் கொள்ளாதீர்கள்! உங்களுக்கு எதிரான சான்றை அல்லாஹ்வுக்கு ஏற்படுத்திக் கொடுக்க விரும்புகிறீர்களா?(திருக்குர்ஆன் 4 : 144)

படிப்பாளி said...

தொழுகை என்பது அமல்களிலேயே மிக சிறந்த அமலாகும். ஒரு முஸ்லிம் அதை சிறந்த முறையில் கடைபிடிக்கும் பட்சத்தில் அது அவருக்கு சிறந்ததாக அமைந்து விடும். ஜமாஅத்தாக தொழும் தொழுகையின் சிறப்புப் பற்றி பல ஹதீஸ்கள் வந்துள்ளன. அந்த ஹதீஸ்களையெல்லம் படித்து நிறைய நன்மையை பெறுவோம் என்ற எண்ணத்தில் பள்ளிக்கு செல்லும் தவ்ஹீத் வாதிகளில் பலருக்கு சட்டென்று ஒரு ஊசலாட்டம் மனதில் எழுகிறது. இந்த பள்ளி இமாம் நம் கொள்கையை சார்ந்தவர் அல்லவே! எனவே இவர் பின்னால் நின்று தொழுதால் நம் தொழுகை கூடுமா...? என்று. சிலர் ஊசலாட்டத்தை புறக்கணித்து விட்டு ஜமாஅத்தில் சேர்ந்து விடுகிறார்கள். மற்ற சிலர் ஊசலாட்டத்தை மேலும் வளர்த்துக் கொண்டு ஒதுங்கி - தனித்து விடுகிறார்கள் அல்லது தன் கொள்கைக் உட்பட்டவரையாக தேடி தனி ஜமாஅத் அமைத்துக் கொள்கிறார்கள்.

எந்த முன்னோக்கமும் இன்றி திறந்த மனதுடன் குர்ஆன் சுன்னாவை அணுகும் போது இணைவைப்பு உட்பட எந்த தீய காரியத்தை செய்பவராக இருந்தாலும் அவரை பின்பற்றி தொழக் கூடாது என்பதற்கு எந்த ஒரு இடத்திலும் தடை வரவில்லை. நாம் ஏற்படுத்திக் கொண்ட ஊசலாட்டம்தான் நமக்கு தடையாக இருக்கிறது.

முஸ்லிம் என்ற தன்னை அறிவித்துக் கொண்டு தொழுகைக்கு இமாமத் செய்யும் எவரையும் பின்பற்றி நாம் தொழலாம்.

ஒருவர் ஷிர்க் - வட்டி போன்ற கடும் குற்றங்களை செய்கிறார். முஸ்லிம் என்ற நிலையில் இமாமத்திற்காக நிற்கிறார் என்றால் அவருடைய பாவம் அவரை பாதிக்கும் நிலையில் அவரை பின்பற்றி தொழுவதால் நம்முடைய தொழுகைக்கு எத்தகைய பாதிப்பும் வரப்போவதில்லை.

பாவம் செய்யும் எந்த ஒரு ஆத்மாவும் தனக்கே கெடுதியை தேடிக் கொள்கிறது ஒரு ஆத்மாவின் பாவ சுமையை மற்ற ஆத்மா சுமக்காது. (அல் குர்ஆன் 6:164)

நம் சந்தேகங்களை நிவர்த்தி செய்ய இந்த ஒரு அறை வசனம் போதும். ஒருவர் சுமையை அடுத்தவர் சுமக்க மாட்டார் என்பது இஸ்லாத்தின் மிக முக்கிய கோட்பாடுகளில் ஒரு கோட்பாடாகும். எனவே இமாமத் செய்பவர் எத்தகைய பாவத்தில் மூழ்கி இருந்தாலும் அவரது பாவம் நம்முடைய அமல்களை ஒரு போதும் பாதிக்காது என்பதால் அத்தகையோரை பின்பற்றி தொழுவதற்கு தடை எதுவும் இல்லை.

எவர் நம் தொழுகையை தொழுது - நம் கிப்லாவை முன்னோக்கி - நாம் அறுத்ததை சாப்பிடுகிறாரோ அவர் முஸ்லிம். அவர் அல்லாஹ்வின் பாதுகாப்பிலும் அவன் தூதரின் பாதுகாப்பிலும் இருக்கிறார். மற்ற முஸ்லிம்களுக்கு இருக்கும் உரிமைகளும் கடமைகளும் இவருக்கும் உண்டு என நபி(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். (அனஸ்(ரலி) புகாரி - திர்மிதி)

ஒருவரை முஸ்லிம் என்று தெரிந்துக் கொள்வதற்கு வெளிப்படையான பல அடையாளங்களை இஸ்லாம் காட்டுகிறது. அந்த அடையாளங்களில் சிலது இந்த ஹதீஸில் வந்துள்ளது.

நம் - அதாவது முஸ்லிம்களின் தொழுகையை தொழுதல்

நம் - முஸ்லிம்களின் கிப்லாவை முன்னோக்குதல்

நம் - முஸ்லிம்களின் குர்பானியில் பங்குபெறுதல்.

ஒருவர் முஸ்லிம்களின் தொழுகையை தொழுவதற்காக நின்று - முஸ்லிம்களின் கிப்லாவை முன்னோக்குகிறார் இந்நிலையில் அவரை பின்பற்றி தொழ மனம் இடங் கொடுக்காமல் ஊசலாட்டம் ஏற்பட்டால் ஊசலாட்டத்தைதான் புறக்கணிக்க வேண்டும் ஏனெனில் ஊசலாட்டம் ஷெய்த்தானின் ஆயுதமாகும்.

அதே ஹதீஸில் மற்ற முஸ்லிம்களுக்கு உள்ள உரிமையும் கடமையும் இவருக்கும் உண்டு என்ற வாசகத்தையும் கவனிக்க வேண்டும்.

இமாமத் - ஜமாஅத் தொழுகை என்பது கொள்கையின் அடிப்படையில் இஸ்லாத்தில் நிர்ணயம் செய்யப்படவில்லை. தேவையான சந்தர்பங்களில் முஸ்லிம்கள் ஒருங்கிணைந்து வணங்க வேண்டும் என்பதற்கான ஏற்பாடேயாகும்.

தெளிவான வார்த்தையில் சொல்ல வேண்டுமானால் இமாமத் செய்பவரின் கொள்கையும் பின்பற்றி தொழுபவரின் கொள்கையும் பின்னி பிணைந்திருக்க வேண்டும் என்பதற்கு ஆதாரம் எதுவுமில்லை. இமாமுக்கும் மஃமூம்களுக்கும் உள்ள தொடர்பு முதல் தக்பீரிலிருந்து ஸலாம் கொடுக்கும் வரைதான். அதன் பின் அவர் யாரோ, நாம் யாரோ அவ்வளவுதான். அது ஒரு தற்காலிக கூட்டமைப்பிற்குரிய தலைமைதான் என்பதை விளங்கிக் கொண்டால் ஊசலாட்டம் அகன்றுவிடும்.

எனவே எந்த இமாமையும் பின்பற்றி தொழலாம். நம்முடைய அமல்கள் நம் எண்ண அடிப்படையில் சரியாக இருக்கும் வரை மற்றவர்களால் நம் அமல்களுக்கு எந்த பாதிப்பும் வராது என்பதே உண்டையாகும்.

அபூ முஹை said...

இணை கற்பிக்கும் இமாமைப் பின்பற்றி தொழக்கூடாது என சட்டம் இயற்ற எடுத்து வைத்த ஆதாரங்கள் வலுவாக இல்லை! இமாம் தொழுகையில் நுழைந்த பின் கிப்லாவை நோக்கி எச்சில் துப்பினார் என்பது வெளிப்படையான இறை அவமதிப்பு. இணை கற்பிக்கும் இமாம் தொழுகைக்குள்ளே இணை கற்பித்தலை வெளிப்படையாகக் காட்டினால் அவரை அப்புறப்படுத்தலாம்.

''சில இமாம்கள் தொழுகை நடத்துவார்கள். அவர்கள் முறையாகத் தொழ வைப்பார்களானால் உங்களுக்கும் அவர்களுக்கும் பயனுள்ளதாகும். அவர்கள் தவறிழைப்பார்களானால் உங்களுக்கு நல்லதுதான், அவர்களுக்குத்தான் கேடு'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி)

இமாமத் செய்பவர் வெளிப்படையாகவோ, அந்தரங்கமாகவோ தொழுகையில் தவறிழைத்தால் அது அவருக்குத்தான் கேடாகும். இமாமின் தவறு, பின்பற்றியவர்களுக்கு தொழுகையில் எவ்வித குறைபாட்டையும் ஏற்படுத்துவதில்லை என இஸ்லாம் சட்டம் வகுத்துள்ளது.

இமாம் பித்அத்வாதி, குழப்பவாதியாக இருந்தாலும் அவைகள் அவருடன் இருக்கும் நிலையில் அவரைப் பின்பற்றி தொழுபவர்களை பாதிப்பதில்லை.

''அவர்கள் சொல்லைச் செவியேற்று அதில் அழகானதைப் பின்பற்றுவார்கள்'' (திருக்குர்ஆன், 039:018)

மக்களின் அமல்களில் தொழுகை அழகான செயலாகும். இமாமத் செய்பவர் இணை கற்பிப்பவராக இருந்தாலும் இணை கற்பித்தலில் அவரைப் பின்பற்றவில்லை! ''தொழுகையை நிலை நிறுத்துங்கள்'' (002:043) என்ற இறை கட்டளைக்கு அழகான செயல் வடிவம் தந்த இறைத்தூதர் (ஸல்) அவர்களின் வழிகாட்டல் இங்கு பின்பற்றப்படுகிறது. தொழுகைக்கு வெளியே செயல்படுத்தும் இணை கற்பித்தல் அவருக்குத்தான் கேடு விளைவிக்கும்.

''அவர்கள் மறைவானவற்றை நம்புவார்கள், தொழுகையை நிலைநாட்டுவார்கள், நாம் அவர்களுக்கு வழங்கியவற்றிலிருந்து (நல்வழியில்) செலவிடுவார்கள். உமக்கு அருளப்பட்டதையும், உமக்கு முனனர்் அருளப்பட்டதையும் அவர்கள் நம்புவார்கள். மறுமையையும் உறுதியாக நம்புவார்கள்'' (திருக்குர்ஆன், 002:003-004)

''லாயிலாஹா இல்லல்லாஹ்'' கூறியவர் தமது உயிரையும் உடமையையும் என்னிடமிருந்து காத்துக்கொண்டார் - தண்டனைக்குரிய குற்றம் புரிந்தவரைத் தவிர - அவரது விசாரணை அல்லாஹ்விடமே உள்ளது.''

''நாம் அறுத்ததை புசித்து, நம் கிப்லாவை முன்னோக்குபவர் முஸ்லிம்''

மேற்கண்ட வசனமும், நபிமொழியும் முஸ்லிம் என்பதற்கான குறைந்தபட்ச அளவுகோலை நிர்ணயிக்கிறது. இந்த நிலையில் தம்மை ஒரு முஸ்லிம் என்று சொல்லிக்கொண்டு சமூகத்தில் இணைத்து கொண்டவரை, பித்அத், இணை கற்பித்தல் போன்ற பாவங்களைச் செய்வதால் அவரை முஸ்லிம் இல்லை என்று ஒதுக்கித்தள்ள தெளிவான ஆதாரங்களை வைக்க வேண்டும்.

mhIbrahim said...

இணை கற்பிக்கும் இமாமை பின் பற்றலாம் என்றால் கீழ்கண்ட குர்ஆன் வசனம் எதை சொல்கிறது என்பதை விளக்கவும்


இணை கற்பிப்போர் தமது (இறை) மறுப்புக்கு, தாமே சாட்சி கூறிக் கொண்டிருக்கும் நிலையில் அல்லாஹ்வின் பள்ளிவாசல்களை நிர்வகிப்பது தகாது. அவர்கள் செய்தவை அழிந்து விட்டன. அவர்கள் நரகில் நிரந்தரமாக இருப்பார்கள்.

திருக்குர்ஆன் 9 : 17

இணை கற்பிப்போர் நரகவாசிகள் என்பது தெரிந்த பின்னர், அவர்கள் நெருங்கிய உறவினரேயானாலும் அவர்களுக்காக பாவமன்னிப்புத் தேடுவது நம்பிக்கை கொண்டோருக்கும், இந்த நபிக்கும் (முஹம்மதுக்கும்) தகாது.(திருக்குர்ஆன் 9 : 113)நம்பிக்கை கொண்டோர், நம்பிக்கை கொண்டோரை விட்டு விட்டு (ஏக இறை வனை) மறுப்போரைப் பொறுப்பாளர்களாக ஆக்கக் கூடாது. இவ்வாறு செய்பவருக்கு அல்லாஹ்விடமிருந்து (பாதுகாப்பு) எதுவுமில்லை. அவர்களிடமிருந்து தற்காத்துக் கொள்வதற்காக தவிர. அல்லாஹ் தன்னைப் பற்றி உங்களுக்கு எச்சரிக்கிறான். திரும்புதல் அல்லாஹ்விடமே உள்ளது.

அபூ முஹை said...

முஃமின்கள் (தங்களைப் போன்ற) முஃமின்களையன்றி காஃபிர்களைத் தம் உற்ற துணைவர்களாக எடுத்துக்கொள்ள வேண்டாம். அவர்களிடமிருந்து தங்களைப் பாதுகாத்துக் கொள்வதற்காக அன்றி (உங்களில்) எவரேனும் அப்படிச் செய்தால் (அவருக்கு) அல்லாஹ்விடத்தில் எவ்விஷயத்திலும் சம்பந்தம் இல்லை. இன்னும் அல்லாஹ் தன்னைப் பற்றி உங்களை எச்சரிக்கின்றான். மேலும் அல்லாஹ்விடமே (நீங்கள்) மீள வேண்டியதிருக்கிறது. (திருக்குர்ஆன், 003:028)

திருக்குர்ஆன் 003:028வது வசனம் கூறும் கருத்தை போலவே மேலும் சில வசனங்கள்,

முஃமின்களையன்றி காஃபிர்களைத் தம் உற்ற துணைவர்களாக எடுத்துக்கொள்ள வேண்டாம். (திருக்குர்ஆன், 003:118)

அவர்களிலிருந்து எவரையும் நண்பர்களாக நீங்கள் எடுத்துக் கொள்ளாதீர்கள். (திருக்குர்ஆன், 004:089)

இவர்கள் முஃமின்களை விட்டும் காஃபிர்களை (தங்களுக்குரிய) உற்ற நண்பர்களாக எடுத்துக்கொள்கிறார்கள். (திருக்குர்ஆன், 004:139)

முஃமின்களே! நீங்கள் முஃமின்களை விடுத்து காஃபிர்களை (உங்களுக்கு உற்ற) நண்பர்களாய் ஆக்கிக் கொள்ளாதீர்கள். உங்களுக்கே எதிராக நீங்கள் ஒரு தெளிவான ஆதாரத்தை அல்லாஹ்வுக்கு ஆக்கிக் தர விரும்புகிறீர்களா? (திருக்குர்ஆன், 004:144)

முஃமின்களே! யூதர்களையும், கிறிஸ்தவர்களையும் உங்களுடைய பாதுகாவலர்களாக ஆக்கிக் கொள்ளாதீர்கள். (திருக்குர்ஆன், 005:051)

முஃமின்களே! உங்களுக்குமுன் வேதம் வழங்கப்பட்டவர்களிலிருந்தும் காஃபிர்களிலிருந்தும் யார் உங்கள் மார்க்கத்தைப் பரிகாசமாகவும் விளையாட்டாகவும் எடுத்துக் கொள்கிறார்களோ அவர்களை நீங்கள் பாதுபாவலர்களாக ஆக்கிக் கொள்ளாதீர்கள், (திருக்குர்ஆன், 005:057)

ஈமான் கொண்டவர்களே! உங்கள் தந்தைமார்களும் உங்கள் சகோதரர்களும் ஈமானை விட்டு குஃப்ரை நேசிப்பார்களானால் அவர்களை நீங்கள் பாதுகாப்பளர்களாக எடுத்துக் கொள்ளாதீர்கள். (திருக்குர்ஆன், 009:023)

ஈமான் கொண்டவர்களே! எனக்கு விரோதியாகவும் உங்களுக்கு விரோதியாகவும் இருப்பவர்களைப் பிரியத்தின் காரணத்தால் இரகசியச் செய்திகளை எடுத்துக்காட்டும் உற்ற நண்பர்களாக்கிக் கொள்ளாதீர்கள். (திருக்குர்ஆன், 060:001)

மேற்கண்ட வசனங்களெல்லாம் இறைநம்பிக்கை கொண்டோர் நிராரிப்பவர்களை உற்ற நண்பர்களாக்கிக் கொள்ள வேண்டாம் என்று கட்டளையிடுகிறது.

திருக்குர்ஆன் 060:001வது வசனத்தின் பின்னணி: மக்கா வெற்றிப் போருக்காக ஆயத்தமாகிக் கொண்டிருக்கும் வேளையில், நபித்தோழர் ஹாத்திப் (ரலி) அவர்கள் முஸ்லிம்களின் போர் தொடுப்பு ராணுவ ரகசியங்களை ஒரு பெண்மணி மூலம் ரகசியச் செய்தியாக மக்கத்து காஃபிர்களுக்கு அனுப்பி வைக்கிறார். இது நபி (ஸல்) அவர்களால் முறியடிக்கப்படுகிறது. (புகாரி, 3007, 3081, 3983, 4274)

இது தொடர்பாகவே திருக்குர்ஆன் அறுபதாம் அத்தியாயத்தின் முதல் வசனம் அருளப்பட்டதாக ஒரு கருத்து இருக்கிறது.

முஸ்லிம்கள் காஃபிர்களை உற்ற நண்பர்களாக ஆக்கிக்கொள்ள வேண்டாம் என்ற கருத்தின் பொருள்: மார்க்க விஷயத்தில் காஃபிர்களை உற்ற நண்பர்களாக ஆக்கிக்கொள்ள வேண்டாம் என்று கொள்வதே சரியாக இருக்கும். இதற்கான விளக்கம் திருக்குர்ஆனில் காணலாம்.

மார்க்க (விஷய)த்தில் உங்களிடம் போரிடாமலும் உங்கள் இல்லங்களிலிருந்து உங்களை வெளியேற்றாமலும் இருந்தார்களே அவர்களுக்கு நீங்கள் நன்மை செய்வதையும் அவர்களுக்கு நீங்கள் நீதி செய்வதையும் அல்லாஹ் விலக்க வில்லை - நிச்சயமாக அல்லாஹ் நீதி செய்பவர்களை நேசிக்கிறான். (திருக்குர்ஆன், 060:008)

நிச்சயமாக அல்லாஹ் உங்களை விலக்குவதெல்லாம் மார்க்க விஷயத்தில் உங்களிடம் போர் செய்து உங்களை உங்கள் இல்லங்களை விட்டும் வெளியேற்றி நீங்கள் வெளியேற்றப்படுவதற்கு உதவியும் செய்தார்களே அத்தகையவர்களை நீங்கள் நேசர்களாக ஆக்கிக் கொள்வதைத் தான் - எனவே எவர்கள் அவர்களை நேசர்களாக்கிக் கொள்கிறார்ளோ அவர்கள்தாம் அநியாயம் செய்பவர்கள். (திருக்குர்ஆன், 060:009)

இறைமார்க்கத்தை எதிரியாகக் கருதி, மார்க்கத்தை கருவறுக்க சூழ்ச்சிகள் செய்து, இஸ்லாத்தை எதிர்த்துப் போர் செய்யத் தயாராகும் காஃபிர்களை உற்ற நண்பர்களாக்கிக் கொள்ளாதீர்கள். இஸ்லாம் பற்றிய ரகசியங்களைப் பறிமாறிக்கொள்ளும் அளவுக்கு காஃபிர்களை உற்ற நண்பர்களாக்கிக் கொள்வது முஸ்லிம்களுக்கும், இஸ்லாமிய ஆட்சிக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் என பின் விளைவுகளை கருத்தில் கொண்டு இறைவசனங்கள் எச்சரிக்கை செய்கிறது.

இஸ்லாத்தை எதிரியாகக் கருதாமல் வாழும் முஸ்லிமல்லாதவர்களுடன் நட்புடன் பழகவும், அவர்களிடம் கொடுக்கல் வாங்கல் செய்து கொள்வதிலும் தவறு இல்லை என்பதை அறுபதாம் அத்தியாயத்தின் 008,009வது வசனங்கள் உணர்த்துகின்றது.

எனவே,

இணைவைக்கும் இமாமைப் பின்பற்றித் தொழக்கூடாது என்பதற்கு ஆதாரமாக - (''காஃபிர்களை உற்ற நண்பர்களாக்கிக் கொள்ளாதீர்கள்'') - வைத்த வசனங்கள் பொருத்தமற்றது!

(வளரும் இன்ஷா அல்லாஹ்)

mhIbrahim said...

நீங்கள் உங்கள் கட்டுரையில் “முஸ்லிம்கள் காஃபிர்களை உற்ற நண்பர்களாக ஆக்கிக்கொள்ள வேண்டாம் என்ற கருத்தின் பொருள்: மார்க்க விஷயத்தில் காஃபிர்களை உற்ற நண்பர்களாக ஆக்கிக்கொள்ள வேண்டாம் என்று கொள்வதே சரியாக இருக்கும்” என்று கூறிப்பிட்டுறிந்தீர்கள். அதை தான் நாமும் சொல்கிறோம், மற்ற உலக விசயங்களில் அவர்களுடம் நட்பு வைத்து கொள்ளளாம், ஆனால் மார்க்கம் என்று வந்து விட்டால் அதில் அல்லாஹ்வை மட்டும் வணங்குபவரை மாத்திரம் தான் நண்பராக ஆக்கி கொள்ளவேண்டும்.

இணைவப்பது என்பது நீங்கள் நினைப்பது போல் சிறிய பாவம் அல்ல, மற்ற எந்த பெரிய பாவம் செய்தாலும் அது இஸ்லாத்தைவிட்டு வெளியற்றாது, ஆனால், இணைவத்தால் நிச்சயமாக அது இஸ்லாத்தை விட்டு வெளியெற்றிவிடும், இஸ்லாத்தைவிட்டு வெளியறியர் எவ்வாறு தொழுகை நடத்த முடியும், அவர்கள் பள்ளிவாசலை கூட நிர்வாகிக்க கூடாது என்று அல்லாஹ் கூறும் போது எவ்வாறு அவர்கள் தொழுகை நடத்தமுடியும்,

இங்கு நான் இஸ்லாத்தைவிட்டு வெளியறியவர் என்று சொல்வது, வெளிபடையாக இணைவைப்பவரைத்தான்.

படிப்பாளி said...

இணை கற்பிக்கும் இமாமை பின் பற்றலாம் என்றால் கீழ்கண்ட குர்ஆன் வசனம் எதை சொல்கிறது என்பதை விளக்கவும்

இணை கற்பிப்போர் தமது (இறை) மறுப்புக்கு, தாமே சாட்சி கூறிக் கொண்டிருக்கும் நிலையில் அல்லாஹ்வின் பள்ளிவாசல்களை நிர்வகிப்பது தகாது. அவர்கள் செய்தவை அழிந்து விட்டன. அவர்கள் நரகில் நிரந்தரமாக இருப்பார்கள்.
திருக்குர்ஆன் 9 : 17

இணை கற்பிப்போர் நரகவாசிகள் என்பது தெரிந்த பின்னர், அவர்கள் நெருங்கிய உறவினரேயானாலும் அவர்களுக்காக பாவமன்னிப்புத் தேடுவது நம்பிக்கை கொண்டோருக்கும், இந்த நபிக்கும் (முஹம்மதுக்கும்) தகாது.
(திருக்குர்ஆன் 9 : 113)

நம்பிக்கை கொண்டோர், நம்பிக்கை கொண்டோரை விட்டு விட்டு (ஏக இறை வனை) மறுப்போரைப் பொறுப்பாளர்களாக ஆக்கக் கூடாது. இவ்வாறு செய்பவருக்கு அல்லாஹ்விடமிருந்து (பாதுகாப்பு) எதுவுமில்லை. அவர்களிடமிருந்து தற்காத்துக் கொள்வதற்காக தவிர. அல்லாஹ் தன்னைப் பற்றி உங்களுக்கு எச்சரிக்கிறான். திரும்புதல் அல்லாஹ்விடமே உள்ளது.

...................................

நீங்கள் எடுத்துக் காட்டும் வசனங்கள் அனைத்தும் இணைவைப்பவர்களை கடுமையாக கண்டிக்கின்றது என்பது உண்மைதான்.

இந்த வசனங்களை பொதுவாக நீங்கள் சுட்டிக் காட்டும் நபர்களோடு பொருத்திப் பார்க்க முடியுமா..? விரிவாக அலசுவோம்.

ஒன்று: முதலாவதும் பள்ளியை நிர்வகிப்பவர்களை எடுத்துக் கொள்வோம்.

எந்த மக்களை நோக்கி 'அவர்கள் பள்ளியை நிர்வகிக்கக் கூடாது' என்று இறைவன் கூறுகின்றானோ அந்த மக்களுடையக் கொள்கையும், நீங்கள் சுட்டிக் காட்டும் மக்களுடைய கொள்கையும் ஒன்றா...? நிச்சயம் இல்லை. அந்த மக்கள் தம்மை முஸ்லிம் என்று சொல்லிக் கொள்ளவில்லை. குர்ஆனை ஏற்றுக் கொள்ளவில்லை. இறைத்தூதராக முஹம்மத் (ஸல்) அவர்களை அங்கீகரிக்கவில்லை. அதாவது அவர்களிடம் ஒட்டு மொத்த நிராகரிப்பு இருந்தது. ஏற்றுக் கொள்ளவில்லை என்பது மட்டுமின்றி பகிரங்கமாகவும், மூர்க்கத்தனமாகவும் குர்ஆனையும், இறைத்தூதரையும் எதிர்க்கவும் செய்தனர். நீங்கள் சுட்டிக் காட்டும் இன்றைய மக்களிடம் இத்தகைய போக்கு இருக்கின்றது என்று சொல்ல வருகிறீர்களா..?

நீங்கள் சுட்டிக்காட்டும் மக்கள் தங்களை முஸ்லிம் என்று அறிவிக்கின்றார்கள். குர்ஆனையும், இறைத்தூதரையும் நம்பிக்கைக் கொள்கிறார்கள், இறைவன் கூறியுள்ள வணக்கங்களில் ஈடுபடுகிறார்கள். இஸ்லாமிய கொள்கை மற்றும் சட்டங்களை விளங்குவதில் சில தடுமாற்றங்கள் மட்டுமே இவர்களிடம் காணப்படுகின்றது. இஸ்லாமிய பிரச்சாரங்கள் மூலம் இறை நாட்டத்துடன் இவர்களை மாற்றி எடுக்க முடியும் என்ற நிலை இருக்கும் போது அந்த வசனத்தை இவர்களுக்கு பொருத்திக் காட்டி இவர்களையும் மக்கத்து காபிர்களாக்குவது எந்த வகையில் நியாயம் என்பது உங்கள் சிந்தனைக்குரிய முதல் கேள்வியாகும்.

ஏராளமான பள்ளி நிர்வாகிகளிடம் இஸ்லாமிய அகீதாவை விளங்குவதில் பலவீனம் இருக்கத்தான் செய்கின்றன. இதற்கு பல்வேறு காரணங்கள் உண்டு. பிரச்சாரங்கள் வழியாக அனேக நிர்வாகிகள் உண்மையை உணர்ந்து தங்கள் நிலையை மாற்றி வருகிறார்கள். ஆனால் இவர்களில் ஒருவரும் மக்கத்து காபிர்களின் நிலையில் இஸ்லாத்தைப் புறக்கணிப்பவர்கள் இல்லை என்பதை அழுத்தமாகச் சொல்ல முடியும்.

பள்ளியை நிர்வகிக்கும் தகுதி யாருக்கு உள்ளது என்பதை இறைவன் சுட்டிக் காட்டும் அடுத்த வசனத்தை சிந்தியுங்கள்.

அல்லாஹ்வின் மீது நம்பிக்கை இறுதி நாளின் மீது நம்பிக்கை, தொழுகை, ஜகாத், இறைவனைத் தவிர மற்றவர்களுக்கு அஞ்சாத நிலை என்று ஐந்து தகுதிகளை சொல்லிக் காட்டுகிறான். இதில் மூன்று அல்லது நான்கு தகுதிகளை நீங்கள் எவர்களை மக்கத்து காஃபிர்கள் அளவில் வைத்து சுட்டிக் காட்டுகிறீர்களோ அவர்கள் பெற்றுள்ளார்கள். அவர்கள் இறைவன் மீது நம்பிக்கைக் கொள்கிறார்கள், மறுமையை நம்புகிறார்கள், தொழுகிறார்கள், சிலர் ஜகாத்தும் கொடுத்து வருகிறார்கள், இறைவனுக்கு மட்டும் அஞ்ச வேண்டும் என்ற தகுதியில் மட்டும் அறிவின்மையால், குர்ஆனின் ஞானமின்மையால், முறையான பிரச்சாரம் எத்திவைக்கப்படாமையால் சில இடற்பாடுகளைக் கொண்டுள்ளார்கள்.

இந்த ஐந்துத் தகுதிகளில் தொழுகை, ஜகாத் போன்றவற்றில் குறைப்பாடுகளுடைய ஏகத்துவம் பேசுபவர்களும் சில பள்ளிகளில் நிர்வாகிகளாக இருக்கத்தான் செய்கின்றார்கள்.

நீங்கள் குறிப்பிடும் அந்தத்தகுதி அவர்களுக்கு இருப்பதாகவே வைத்துக் கொண்டாலும் பள்ளியை நிர்வகிப்பது என்பது வேறு. அங்குபோய் தொழுவது என்பது வேறு.

அங்கு தொழுதால் தொழுகைக் கூடுமா கூடாதா என்பது பற்றி நாம் பேசிக் கொண்டிருக்கிறோம்.

ஏகத்துவக் கொள்கையுள்ள ஒருவர் அங்கு போய் தொழுகிறார் என்றால் அவரது தொழுகை பாழாகி விடுமா...? தொழுகைக் கூடாது, ஏற்றுக் கொள்ளப்படாது என்றால் அதற்கான ஆதாரத்தை எடுத்துக் காட்டுங்கள்.

அடுத்து, 9:113வது வசனத்தை எடுத்துக் கொள்வோம்.

இணை கற்பிப்போர் யாராக இருந்தாலும் எவ்வளவு நெருங்கியவராக இருந்தாலும் அவர்களுக்கு பாவமன்னிப்புக் கேட்கக் கூடாது என்பது இறை கட்டளை.

இதற்கு என்ன பொருள் கொடுக்க வருகிறீர்கள். இந்தியாவில் கோடானக் கோடி மக்கள் தங்களை முஸ்லிம்கள் என்று அறிவித்துக் கொண்டு வாழ்கிறார்கள். தமிழகத்தை மட்டும் எடுத்துக் கொண்டு பேசினாலும் 15 முதல் 20 சதவிகித மக்களே பிரச்சாரத்தின் வழியாக உண்மையை உணர்ந்து மாற்றம் கண்டுள்ளார்கள்.

மீதி அனைவரும் பழையக் கொள்கையிலிருந்து விடுபடவில்லை. அவர்களில் பல ஆயிரக்கணக்கானவர்களுக்கு பிரச்சாரமே இன்னும் எட்டவில்லை. அதாவது உங்கள் கருத்துப்படி மக்கத்துக் கொள்கையில் இருப்பவர்கள். இவர்களெல்லாம் மெளத்தானால் பள்ளிக்கு கொண்டுவரக் கூடாது, ஜனாஸா தொழுகை நடத்தக் கூடாது என்று சொல்லவருகிறீர்களா...? பகிரங்க காபிர்களுக்கு சொல்லப்பட்ட சட்டங்களை எப்படி முஸ்லிம்களுக்குப் பொருத்துகிறீர்கள் என்பது ஆச்சரியமாக இருக்கின்றது.

முஸ்லிம்களில் இணைவைப்போர் என்று உங்களைப் போன்றோர் ஒதுக்கித் தள்ள முற்படுவோருக்கு எதிராக நீங்கள் காட்டும் எந்த வசனமும் அவர்களுக்குப் பொருந்தக் கூடியதாக இல்லை. அந்த வசன அமைப்புகளை நீங்கள் ஒன்றுக்கு பலமுறை படித்தாலே புரியும்.

உங்களிடம் கேள்விகள்:
1) முஸ்லிம் என்று தன்னை கூறிக் கொள்ளுவோரை இஸ்லாமிய வட்டத்திலிருந்து வெளியேற்றும் ஆதாரத்தை நீங்கள் எங்கிருந்துப் பெறுகிறீர்கள்?

ஈமான் என்பது சாதாரணமான ஒன்றல்ல. 'என் வாளுக்கு பயந்துதான் அந்த எதிரி 'லாஇலாஹ இல்லல்லாஹ் ' சொன்னான் அதனால் தான் நான் அவனை வெட்டினேன் என்று தன் செயலுக்கு நியாயம் கற்பித்த ஒரு நபித்தோழரை நபி(ஸல்) கண்டித்து 'அவரது உள்ளத்தை பிளந்துப் பார்த்தாயா... என்று கேட்டு நாளை மறுமையில் அந்த லாஇலாஹ இல்லல்லாஹ்வுக்கு என்ன பதில் சொல்வாய்?' என்றுக் கேட்ட அந்தக் கேள்வியை இன்றைக்கு உங்களைப் போன்ற அனைவருக்கும் நாம் முன் வைக்கிறோம்.

எவருடைய உள்ளத்தில் லா இலாஹ இல்லல்லாஹ் இருக்கின்றதோ அவரது ஈமானை பரிசீலிப்பதும், அதற்கு தீர்ப்பு வழங்குவதும் இறைவன் ஒருவனுக்கு மட்டுமே சொந்தமான தகுதியாகும். அந்தத் தகுதியை நபிமார்கள் உட்பட எவருக்கும் இறைவன் பகிர்ந்தளிக்கவில்லை.

2) எத்தகைய பாவம் செய்பவராக இருந்தாலும் அவரது பாவத்தால் பிறரது அமல்கள் ஒ ரு கடுகளவும் பாதிக்கப்படப் போவதில்லை.

எவர் பாவத்தை சம்பாதிக்கின்றாரோ அவர் தனக்குக் கேடாகவே அதை சம்பாதித்துக் கொள்கிறார். (அல் குர்ஆன் 4:111)

இது இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையாக இருக்கும் போது எந்த ஆதாரத்தில் இணை வைக்கும் காரியத்தில் ஈடுபடும் இமாம்களை பின்பற்றித் தொழுவதைத் தடுக்க முடியும்?

3) தொழுகைக்கு இமாமத் செய்பவர் அதிகாரம் பெற்றவரல்ல.

தொழுகைக்கு இமாமாக வருபவர் , மஃமும்கள் (பின்பற்றித் தொழுபவர்கள்) மீது பொறுப்பாளரோ, பின்பற்றித் தொழுபவர்கள் இமாமின் மீது பொறுப்புள்ளர்களோ அல்ல. தொழுகை என்ற உயர்ந்த அமல் செயல்படுத்தப்படும் அந்த நேரம் மட்டுமே இவர்களுக்கு மத்தியில் தொடர்பு உண்டு. எனவே இமாம்களின் தவறுகள் மஃமூம்களையோ, மஃமூம்களின் தவறுகள் இமாமையோ எந்த வகையிலும் பாதிக்காது.

இந்த விளக்கங்களை நிதானமாகப் படியுங்கள். சரியோ தவறோ எந்த கருத்திருந்தாலும் அதைப் பதியுங்கள்.

அபூ முஹை said...

இறைவனுக்கு இணை வைக்கும் செயல்கள் எதுவும் இறைவனால் மன்னிப்படுவதில்லை! என்பதை திருக்குர்ஆன் பல வசனங்களில் மிகத் தெளிவாக எச்சரிக்கை செய்துள்ளது.

''நிச்சயமாக அல்லாஹ் தனக்கு இணை கற்பிப்பதை மன்னிக்க மாட்டான் அதற்கு கீழ் நிலையில் உள்ள (பாவத்)தை தான் நாடியவர்களுக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பவர் மிகப் பெரிய பாவத்தையே கற்பனை செய்கிறார்.'' (திருக்குர்ஆன், 004:048,116)

''அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பவர் (உண்மையை விட்டும்) தூரமான வழி கேட்டில் விழுந்து விட்டார்.''
(திருக்குர்ஆன், 004:116)

லுக்மான் தம் புதல்வருக்கு, நல்லுபதேசம் செய்யும் போது '' என் அருமை மகனே! அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்காதே! இணை கற்பித்தல் மாபெரும் அநீதியாகும்'' என்று கூறியதை நினைவூட்டுவீராக! (திருக்குர்ஆன், 031:013)

''அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்போருக்கு சொர்க்கத்தை அல்லாஹ் விலக்கப்பட்டதாக ஆக்கி விட்டான்.''(திருக்குர்ஆன், 005:72)

ஏக இறைவனுக்கு இணை கற்பிப்பது: பெரும் பாவம், வழிகேடு, மாபெரும் அநீதி எனவும், இறைவனுக்கு இணை கற்பிக்கும் எவரும் மன்னிக்கப்பட மாட்டார், இணை கற்பித்தவருக்கு சொர்க்கம் விலக்கப்பட்டுள்ளது என்பதும் இறைவனின் வாக்கு! எவர் இறைவனுக்கு இணை கற்பிக்கின்றாரோ அவருடைய நல்லறங்கள் அழிந்து விடும், அவர் நஷ்டமடைந்தவராவார். இதற்கு முஸ்லிம்களும் விதிவிலக்கல்ல.

''இதுவே அல்லாஹ்வின் நேர் வழியாகும், தனது அடியார்களில் தான் நாடியோரை, இதன் மூலம் நேர்வழி காட்டுகிறான். (பின்னர்) அவர்கள் இணை கற்பித்தால், அவர்கள் செய்து வந்ததெல்லாம், அவர்களை விட்டு அழிந்துவிடும்.'' (திருக்குர்ஆன், 006:088)

''நம்பிக்கை கொண்ட பின்னர் மறுத்து, பின்னர் (இறை) மறுப்பை அதிகமாக்கிக் கொண்டோரின் மன்னிப்பு ஒரு போதும் எற்கப்படாது. அவர்களே வழி தவறியவர்கள்.'' -

- (ஏக இறைவனை) ''மறுத்து, மறுத்தவராகவே மரணித்தவர்கள் பூமி நிரம்பும் அளவுக்குத் தங்கத்தை ஈடாகக் கொடுத்தாலும் அது ஏற்கப்படாது. அவர்களுக்குத் துன்புறுத்தும் வேதனை உண்டு. அவர்களுக்கு உதவுவோர் யாருமில்லை.'' (திருக்குர்ஆன், 003:090,091)

இறைத்தூதர்களுக்கும் இதே எச்சரிக்கை வைக்கப்படுகிறது.

''நீர் இணை கற்பித்தால் உமது நல்லறம் அழிந்து விடும், நீர் நஷ்டமடைந்தோராவீர். மேலும் அல்லாஹ்வை வணங்குவீராக! நன்றி செலுத்துவோரில் ஆவீராக!'' என்று (முஹம்மதே) உமக்கும், உமக்கு முன் சென்றோருக்கும் தூதுச் செய்தி அறிவிக்கப்பட்டது. (திருக்குர்ஆன், 039:065,066)

ஒரு முஸ்லிம் இறைவனுக்கு இணை கற்பித்தால் அவருடைய எல்லா நல்லறங்களும் அழிந்துவிடும். இது அவருக்குத்தான் இழப்பு. தொழுகையைப் பேணித் தொழும்போது ஒரு முஸ்லிம் தமக்காக நல்லறத்தை செய்கிறார். தொழுது முடித்து இணை வைத்தலில் ஈடுபட்டால் அவர் செய்த நன்மைகளை இழக்கிறார். இதனால் இறைவனுக்கு இணை கற்பிக்கும் இமாமைப் பின்பற்றித் தொழுபவர்களுக்கு எந்த இழப்பும் ஏற்படுவதில்லை - பின்பற்றுபவர்களுக்கு இழப்பு ஏற்படும் என்று மார்க்கத்தில் எந்த சான்றும் இல்லை!

//நீங்கள் உங்கள் கட்டுரையில் “ முஸ்லிம்கள் காஃபிர்களை உற்ற நண்பர்களாக ஆக்கிக்கொள்ள வேண்டாம் என்ற கருத்தின் பொருள்: மார்க்க விஷயத்தில் காஃபிர்களை உற்ற நண்பர்களாக ஆக்கிக்கொள்ள வேண்டாம் என்று கொள்வதே சரியாக இருக்கும்” என்று கூறிப்பிட்டுறிந்தீர்கள். அதை தான் நாமும் சொல்கிறோம், மற்ற உலக விசயங்களில் அவர்களுடம் நட்பு வைத்து கொள்ளளாம், ஆனால் மார்க்கம் என்று வந்து விட்டால் அதில் அல்லாஹ்வை மட்டும் வணங்குபவரை மாத்திரம் தான் நண்பராக ஆக்கி கொள்ளவேண்டும்.//

இஸ்லாத்தின் மீது நம்பிக்கை கொண்டு தொழுகை, நோன்பு, ஸக்காத், ஹஜ் போன்ற கடமைகளைச் செய்யும் ஒரு முஸ்லிம் இறைவனுக்கு இணை கற்பித்தால் அவர் காஃபிராகி விடுவாரா? முதலில் இதை உடைத்துச் சொல்லுங்கள்.

''இவர்கள் நிச்சயமாக 'குஃப்ருடைய' சொல்லைச் சொல்லிவிட்டு அதைச் சொல்லவே இல்லை என்று அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்கிறார்கள். அவர்கள் இஸ்லாம் மார்க்கத்தை ஏற்றுக்கொண்டபின் நிராகரித்தும் இருக்கின்றனர், (அவர்கள் உங்களுக்குத் தீங்கிழைக்கக் கருதித்) தங்களால் அடைய முடியாததையும் (அடைந்துவிட) முயன்றனர். அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் அவனுடைய அருட்கொடையினால் அவர்களைச் சீமான்களாக்கியதற்காகவா (இவ்வாறு) பழிவாங்க முற்பட்டனர்? எனவே அவர்கள் (தம் தவறிலிருந்து) மீள்வார்களானால், அவர்களுக்கு நன்மையாக இருக்கும். ஆனால் அவர்கள் புறக்கணித்தால், அல்லாஹ் அவர்களை நோவினை மிக்க வேதனை கொண்டு இம்மையிலும், மறுமையிலும் வேதனை செய்வான்; அவர்களுக்குப் பாதுகாவலனோ, உதவியாளனோ இவ்வுலகில் எவரும் இல்லை.'' (திருக்குர்ஆன், 009:074)

இறை மறுப்புப் பேச்சைப் பேசியவருக்கும், இஸ்லாத்தை ஏற்று மறுத்தவருக்கும், தம்மைத் திருத்திக் கொண்டால் அவர்களுக்கு நன்மையாகும் என இறைவன் சந்தர்ப்பம் வழங்குகிறான்.

''உமது சமுதாயத்தினரில் எவர் அல்லாஹ்வுக்கு எதனையும் இணை வைக்காமல் (வாழ்ந்து) மரணம் அடைந்து விடுகின்றாரோ அவர் சொர்க்கம் புகுவார்'' (புகாரி, 2388) என்று வானவத் தூதுவர் ஜிப்ரீல் (அலை) நபி (ஸல்) அவர்களிடம் கூறுகிறார்.

இஸ்லாத்தை ஏற்றவர் தமது அறியாமையினால் இறைவனுக்கு இணை கற்பித்தாலும், அவர் முஸ்லிம் சமுதாயத்தைச் சேர்ந்தவர் என்பதை மேற்கண்ட நபிமொழியிலிருந்து விளங்கலாம். மற்ற அமல்களை இஸ்லாத்தின் ஏவல்படியே அமைத்துக் கொண்டிருப்பதால் அவரை இஸ்லாத்திலிருந்து வெளியேற்ற முடியாது.

''யாரேனும் அல்லாஹ்வுக்கு இணை கற்பித்தால் அவருக்கு அல்லாஹ் சொர்க்கத்தைத் தடை செய்து விடுவான்'' (திருக்குர்ஆன், 005:072)

''அவர்கள் அல்லாஹ்வின்பால் மீண்டு, அவனிடம் பாவமன்னிப்புக் கோரலாம் அல்லவா? அல்லாஹ் மிகவும் மன்னிப்போனும், மிகுந்த கருணையாளனும் ஆவான்'' (திருக்குர்ஆன், 005:074)

இறைவனுக்கு இணை கற்பிக்கும் ஓர் அடியான் எந்த நொடியிலும் தனது தவறை உணர்ந்து இறைவனிடம் பாவமன்னிப்புக் கேட்டு மீண்டுவிட முடியும். ஓர் அடியானின் அமல்களைக் கொண்டு அவர் சொர்க்கவாசி, நரகவாசி என தீர்மானிக்க முடியாது!

''மக்களின் வெளிப் பார்வைக்கு ஒரு மனிதர் சொர்க்கத்திற்குரிய (நற்) செயலைச் செய்து வருவார். ஆனால் (உண்மையில்) அவர் நரகவாசியாக இருப்பார். மக்களின் வெளிப் பார்வைக்கு ஒரு மனிதர் நரகத்திற்குரிய செயலைச் செய்து வருவார். ஆனால் (உண்மையில்) அவர் சொர்க்கவாசியாக இருப்பார். இறுதி முடிவுகளைப் பொறுத்தே செயல்கள் தீர்மானிக்கப்படும்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி, 2898, 4207, 6493, 6607 முஸ்லிம், 179)

எனவே,

வெளிப்படையாகவே இணை கற்பிக்கும் எந்த முஸ்லிமுடைய செயலானாலும் அச்செயல் ஷிர்க்கான செயல் என்று சொல்லிக் கண்டிக்கலாமே தவிர அவரை முஸ்லிம் இல்லை என ''உம்மத்தே முஹம்மதன்'' சமுதாயத்திலிருந்து வெளியேற்ற முடியாது. இறுதி வேதத்தையும், இறுதி இறைத்தூதரையும் இவர்கள் நம்பிக்கை கொண்டுள்ளார்கள்.

ஏற்கெனவே சொன்னது மீண்டும்,

இணை கற்பிக்கும் இமாமாக இருந்தாலும், இணை கற்பித்தலில் அவரைப் பின்பற்றுவதில்லை. இஸ்லாத்தில் அழகான செயலாகத் தொழுகை அறிவிக்கப்பட்டுள்ளது. அழகானத் தொழுகையை நிறைவேற்றும் இமாமைப் பின்பற்றித் தொழுவதால் பின்பற்றித் தொழுபவர்களுக்கு இணை வைத்தல் தொற்றிக்கொள்ளாது.
இமாம் வெளியில் இணை கற்பிப்பவராக இருந்தாலும் தொழுகையில் அவர் முஸ்லிமாக இருப்பதால் அவருக்காகப் பிரார்த்தனை செய்வதிலும் எவ்விதத் தடையும் இல்லை! இஸ்லாத்தை ஏற்க மறுத்தவர்களுக்காக நபி (ஸல்) அவர்கள் பிரார்த்தனை செய்திருக்கிறார்கள்.

''இறைவா தவ்ஸ் குலத்தாரை நேர்வழியில் செலுத்துவாயாக'' (புகாரி, 2937)

முஷ்ரிகீன் நேர்வழி அடைய இறைவனிடம் பிராத்திக்கலாம் என நபிவழி காட்டல் இருக்கும்போது தொழுகையில் முஸ்லிம்களுக்காக பிராத்தனை செய்வதில் தவறேதும் இல்லை!

குறிப்பு: இணை கற்பிக்கும் இமாமைப் பின்பற்றித் தொழுவதால், பின்பற்றியவர்களின் தொழுகையில் குறைபாடுகள் ஏற்படும் என்பதை ஆதாரத்துடன் வைத்தால் இந்த விவாதத்தை அடுத்தக் கட்டத்திற்கு நகர்த்தலாம்.

கூட்டுத் தொழுகை என்பது யார் இமாமாக நின்று தொழ வைத்தாலும் அணிவகுப்பில் போய் சேர்ந்து கொண்டுப் பின்பற்றித் தொழுபவர்கள் தொழுகை முடிந்தவுடன் பிரிந்து சென்று விடுவார்கள். இங்கு இமாமை உற்ற நண்பராக்கிக் கொள்வதும் இல்லை, அவரிடம் ரகசியங்களை பறிமாறிக்கொள்ளும் பேச்சுக்கும் இடமில்லை!

அப்படியிருக்க, ''மார்க்க விஷயத்தில் காஃபிர்களை உற்ற நண்பர்களாக ஆக்கிக்கொள்ள வேண்டாம் என்று கொள்வதே சரியாக இருக்கும்”'' என்று நாம் எழுதியது இஸ்லாத்தை நிராகரித்த, இஸ்லாத்தை எதிராகக் கருதி இஸ்லாத்தை உண்டு இல்லையென அழித்திட முயன்ற காஃபிர்களை உற்ற நண்பர்களாக்கிக் கொள்ளாதீர்கள் என்று கொள்வதுதான் பொருத்தமாக இருக்கும். இதே கருத்தையே திருக்குர்ஆனின் வேறு வசனங்களிலிருந்தும் எடுத்து வைத்தோம். அது இங்கு சரியாகப் புரிந்து கொள்ளப்படவில்லை.

mhIbrahim said...

நீங்கள் ஒரு விசயத்தை விளங்கி கொள்ள வேண்டும், ஒருவர் தன்னை முஸ்லிம் என்று சொல்லி கொள்வதினால் முஸ்லிம் ஆகிவிடுவதில்லை, அல்லாஹ்வை மட்டும் நம்பினால் தான் முஸ்லிம் ஆவார், அதை நாம் அவருடைய வெளிப்டையான நடவடிக்கையை வைத்து அறிந்து கொள்ளளாம். அல்லாஹ் இருக்கிறான் என்று சொல்வதற்காக இந்த மார்க்கம் வரவில்லை, அல்லாஹ் இருகிறான் என்பதை மக்கத்து காஃபிர்களும் நம்பி இருந்தார்கள், அல்லாஹ்வை தவிர யாரும் இல்லை என்று சொல்வதற்கு தான் இந்த மார்ககம் வந்தது, இஸ்லாத்தின் உடையை கலிமாவே “லா இலாஹா இல்லாஹ்” (அல்லாஹ்விவை தவிர வணங்கி வழிபடுவதற்க்கு தகுதியானவர்கள் யாருமில்லை) எனவே அல்லாஹ்வுடன் வேறு கடவுள்களை ஏற்படுத்தி கொண்டவர்களுடன் எவ்வாறு தொழ வைக்க முடியும்.

மக்கத்து காஃபிர்களும் இவர்களும் ஒன்றா? என்று கேட்டூள்ளிர்கள், ஆம் ஒன்று தான், மக்கத்து காஃபிர்கள் எதை காரணம் காட்டி அந்த சிலைகளை வணங்கினார்களோ, அதை காரணம் காட்டி தான் கப்ருகளை இவர்கள் வணங்குகிறார்கள். அந்த காரணத்தை அல்லாஹ் குர்ஆனில் கூறுகிறான்.

கவனத்தில் கொள்க! தூய இம்மார்க்கம் அல்லாஹ்வுக்கே உரியது. அவனையன்றி பாதுகாவலர்களை ஏற்படுத்திக் கொண்டோர் "அல்லாஹ்விடம் எங்களை மிகவும் நெருக்கமாக்குவார்கள் என்பதற்காகவே தவிர இவர்களை வணங்கவில்லை'' (என்று கூறுகின்றனர்). அவர்கள் முரண்பட்டது பற்றி அவர்களிடையே அல்லாஹ் தீர்ப்பளிப்பான். (தன்னை) மறுக்கும் பொய்யனுக்கு அல்லாஹ் நேர் வழி காட்ட மாட்டான்.
(அல்குர்ஆன் 39: 3)

இதை காரணத்தை தான் கப்ருரை வணங்குபவரும் கூறுகிறார் எனவே அவரை எவ்வாறு முஸ்லிம் என்று கூறமுடியும்.

அது போல நான் சுட்டிகாட்டிய வசனம் மக்கத்து காஃப்ர்களுக்கு மட்டும் தான் பொருந்தம் என்று சொன்னீர்கள், அதே வசனத்தில் அல்லாஹ் அவர்களுக்கு நிரந்த நரகம் என்று சொல்கின்றான், இது மக்கத்து காஃபிகளுக்கு மட்டும் என்று சொல்விற்களா? இல்லை, இணைவைப்பு என்று தன்மை யாரிடமெல்லாம் இருகிறதோ அவர்கள் அனைவர்க்கும் பொருந்து, அது போல தான் பள்ளியை நிர்வகிப்பது, இது இணைவப்பு என்ற தன்மை உள்ள அனைவரையும் குறிக்கும், அவர் தன்னை முஸ்லிம் என்று சொல்லி கொண்டாலு சரியே.

அடுத்து லாயிலாஹா இல்லாஹ் என்று சொன்னவரை எவ்வாறு காஃபிர்கள் என்று சொன்னீர்கள் என்று கேட்டுள்ளீர்கள், நான் அவரது உள்ளத்தை திறந்து பார்த்து சொல்லவில்லை, அவருடைய வெளிபடையான் இணைவப்பால் தான் சொன்னேன், இதற்கு மார்க்கத்தில் ஆதாரம் உள்ளது, தேவைப்பட்டால் தருகிறேன்.

அடுத்து, இதனால் மஃமூம்கள் எவ்வாறு பாதிக்க படுவார்கள் என்று கேட்டுள்ளீர்கள், இணைவப்பவர்களை அவ்லியாக்களாக( பொருப்பாளர், உற்ற நண்பன், பாதுகாவலர்.) ஆக்க வேண்டாம் என்று அல்லாஹ் குர்ஆனில் கட்டளையிடுகிறான், அல்லாஹ்வுடய கட்டளைக்கு தான் நாம் முக்கியத்துவம் தர வேண்டும்.

அல்லாஹ் மிக அறிந்தன்.

படிப்பாளி said...

அன்புச் சகோதரருக்கு,

மனித கருத்துக்கள் மார்க்கமாகாது என்பதில் உங்களுக்கு நம்பிக்கையிருந்தால் 'எப்படி ஏற்க முடியும் 'எவ்வாறு தொழவைக்க முடியும்' 'எவ்வாறு முஸ்லிம் என்று கூற முடியும்' என்ற கேள்விகளைத் தவிர்த்து 'அவர்களைப் பின்பற்றித் தொழக் கூடாது இதோ ஆதாரம்' 'அவர்களைப் பின்பற்றித் தொழுதால் நம் தொழுகைக் கூடாது, இதோ ஆதாரம்' என்று ஆதாரத்தை முன் வையுங்கள்.

முஸ்லிம் என்று சொல்லிக் கொள்ளும் ஒருவரை 'நீ முஸ்லிம் இல்லை' என்று கூறி முஸ்லிம் உம்மாவிலிருந்து வெளியேற்றுவதற்கான ஆதாரத்தை எடுத்துக் காட்டுங்கள். “எந்த ஒரு ஆத்மாவும் பிற ஆத்மாவின் பாவங்களை சுமக்காது“ என்ற வசனத்தை நாம் எடுத்துக் காட்டி, நம் தொழுகைக்கு பாதிப்பு ஏற்படாது என்கிறோம். இல்லை, இல்லை நம் தொழுகை பாழாகும் என்றால் அதற்கான ஆதாரத்தைத் தாருங்கள்.

இணை வைப்பவர்களை அவ்லியாக்களாக ஆக்கக் கூடாது என்ற வசனத்தைக் காட்டி அவ்லியாக்களுக்கு என்னப் பொருள் வேண்டுமானாலும் கொடுத்துக் கொள்ளுங்கள். இமாமாக நிற்பவர் அவ்லியா தகுதியைப் பெற்றவர் என்பதை உங்களால் உறுதிப்படுத்த முடியாது. ஏனெனில் அவ்லியாவிற்கு நீங்கள் கொடுக்கும் பொருள் -பாதுகாவலர், உற்ற நண்பர், பொறுப்புதாரி - இதை இமாமுக்கு பொறுத்திக் காட்டுங்கள் பார்ப்போம்.

தொழுகைக்கு இமாமத் செய்யும் ஹதீஸ்களை அலசிப் பார்த்தால் இமாமை இமாம் என்றுதான் நபி(ஸஸ்) குறிப்பிட்டுள்ளார்களேத் தவிர ஒரு இடத்திலும் அவர்களை அவ்லியா அல்லது வலி என்ற பதத்தில் இமாமை நபி(ஸல்) குறிப்பிடவில்லை. காரணம் என்னவென்றால் தொழுகைக்கு (மட்டும்) இமாமத் செய்பவர் எந்த விதத்திலும் மஃமும்களுக்கு பொறுப்புதாரி (வலி)யாக மாட்டார்.

ஒரு ஆட்சியாளர் குறித்து மக்களிடமும், மக்கள் குறித்து அவர்களுக்கு தலைவராக இருந்த ஆட்சியாளரிமும் கேட்கப்படும் என்பது நபிமொழி. (புகாரி) அதேபோன்று இமாம் குறித்து மஃமும்களிடமும், மஃமும்கள் குறித்து இமாமிடமும் விசாரிக்கப்படும் என்று ஏதாவது அறிவிப்பு உள்ளதா...?

தொழுகைக்கு இமாமத் செய்பவர் வலியாக இருந்தால் மஃமும்கள் குறித்து அவரிடமும், அவர் குறித்து மஃமும்களிடமும் விசாரிக்கப்படும். இமாமத் என்பது ஒரு தற்காலிக கூட்டமைப்பிற்கான தலைமை என்று நாம் கூறி வருகிறோம்.

உங்களில் மூவர் இருந்தால் பாங்கு சொல்லட்டும் உங்களில் வயதில் மூத்தவர் இமாமத் செய்யட்டும். (புகாரி) உங்களில் அதிகம் குர்ஆன் ஓத தெரிந்தவர் இமாமத் செய்யட்டும், அதில் சமமாக இருந்தால் நபிவழியைத் தெரிந்தவர் இமாமத் செய்யட்டும், அதிலும் சம அளவில இருந்தால் ஹிஜ்ரத் சென்றவர் இமாமத் செய்யட்டும், அதிலும் சமமாக இருந்தால் வயதில் மூத்தவர் இமாமாகட்டும் என்பதும் நபிமொழி( திர்மிதி)

இந்த ஹதீஸ்களெல்லாம் சொல்லும் கருத்து இமாமத் என்பது தற்காலிக தலைமை என்பதைத்தான். ஸலாம் கொடுத்த பிறகு அவர் யாரோ.. நாம் யாரோ... இந்தத் தற்காலிக இமாம் என்பது வலிக்கு பொருந்தாது.

மக்கத்து காஃபிர்களையும் முஹம்மத்(ஸல்) அவர்களின் உம்மத்தான் முஸ்லிம்களையும் ஒன்றாக்கி பார்க்கும் உங்கள் வாதம் பலவீனமானது என்பதை சுட்டிக்காட்டிதான் அவர்களுக்கும் இவர்களுக்கும் உள்ள வித்தியாசத்தை பட்டியலிட்டோம்.

அவர்கள் சிலைகளை வணங்குவதை மட்டும் இறைவன் சுட்டிக்காட்டவில்லை. அவர்கள் குர்ஆனை எதிர்த்ததை சுட்டிக்காட்டுகிறான், முஹம்மத் (ஸல்) அவர்களை புறக்கணித்து அவர்கள் தூதுத்துவப் பணியை ஏளனம் செய்து, அவர்களை அழிக்க முற்பட்டதையும் சுட்டிக்காட்டுகிறான், இறைப் பள்ளியில் சிலைகளை நிரப்பிவைத்திருந்ததும், முஸ்லிம்களின் தொழுகையில் சீட்டியடித்து கேலி செய்ததும் சுட்டிக்காட்டப்படுகின்றது. முஹம்மத் (ஸல்) அவர்களை 'பைத்தியம்' என்று விமர்சித்ததும் சுட்டிக்காட்டப்படுகின்றது. மன இச்சையை மூர்க்கத்தனமாக வணங்கி - கடவுளாக ஆக்கிக் கொண்டு இஸ்லாத்தை அழிக்க துணிந்த அனைத்து செயல்களையும் ஒருங்கிணைத்து சுட்டிக்காட்டப்பட்ட 'காஃபிர்'களை முஸ்லிம்களுக்கு பொருத்துவது தகுமா சகோதரரே..

எவர் உள்ளத்தில் கடுகளவு ஈமான் இருக்கின்றதோ அவர்கள் சொர்க்கம் செல்வார்கள் என்ற நபிமொழியை நீங்கள் அறியாமல் இருக்க முடியாது. ஈமானின் அளவை தீர்மானிப்பது இறைவன் ஒருவன்தான். அந்தத் தகுதி உங்களுக்கு உண்டா..?

நபித்துவத்தில் பங்குண்டு என்று பகிரங்கமாக அறிவித்த முஸைலமாவைக் கூட 'காபிர்' என்று நபி(ஸல்) கூறாமல் 'பொய்யன்' என்றே குறிப்பிட்டுள்ளார்கள்.

கடைசியாக
அபுமுஹை கேட்டுள்ளது போல 'ஏகத்துவக்காரரின் தொழுகை பாழ்பட்டு போகுமா...? என்பதை உடைத்து சொல்லுங்கள். பிறகு விவாதத்தைத் தொடர்வோம் இன்ஷா அல்லாஹ்.

mhIbrahim said...

கேள்வி: முஸ்லிம் என்று சொல்லிக் கொள்ளும் ஒருவரை 'நீ முஸ்லிம் இல்லை' என்று கூறி முஸ்லிம் உம்மாவிலிருந்து வெளியேற்றுவதற்கான ஆதாரத்தை எடுத்துக் காட்டுங்கள்.

ஆதாரம்

'நாங்கள் உற்சாகமாயிருக்கும் போதும் சோர்ந்திருக்கும்போதும் வசதியாயிருக்கும் போதும் சிரமத்திலிருக்கும் போதும் எங்களை விடப் பிறருக்கு முன்னுரிமை வழங்கப்படும் போதும்கூட (ஆட்சித் தலைவரின் கட்டளையை)ச் செவியேற்று (அவருக்குக்) கீழ்ப்படிந்து நடப்போம்; ஆட்சியதிகாரத்திலிருப்பவர்களுடன் நாங்கள் சண்டையிடமாட்டோம்; எந்த விஷயம் பகிரங்கமான இறைமறுப்பு என்பதற்கு அல்லாஹ்விடமிருந்து எங்களுக்கு ஆதாரம் கிடைத்துள்ளதோ அத்தகைய விஷயத்தை ஆட்சியாளரிடம் நாங்கள் கண்டாலே தவிர' என்று எங்களிடம் நபி(ஸல்) அவர்கள் உறுதிமொழி வாங்கியதும் அவர்கள் எங்களிடம் பெற்ற பிரமாணங்களில் அடங்கும்.

புகாரி 7056

இப்னு மஸ்வூத்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் மக்காவில் நஜ்மு அத்தியாயத்தை ஓதும்போது ஸஜ்தாச் செய்தார்கள். ஒரு முதியவரைத் தவிர அவர்களுடன் இருந்த அனைவரும் ஸஜ்தாச் செய்தனர். அம்முதியவர் ஒரு கையில் சிறிய கற்களையோ மண்ணையோ எடுத்துத் தம் நெற்றிக்குக் கொண்டு சென்று 'இவ்வாறு செய்வது எனக்குப் போதும்' என்று கூறினார். பின்னர் அவர் காபிராகக் கொல்லப் பட்டதை பார்த்தேன்.

புகாரி 1067

இந்த ஹதீஸிகளில் இருந்து வெளிபடையான இறைமறுப்பை வைத்து, காஃபிர் என்று சொல்லாம் என்று விளங்கமுடிகிறது..

இதை இன்னும் விளக்குகிறேன் கேளுங்கள், முஸ்லிம் என்பது, முஷுரிக் என்பது முரண்பட்ட இரு கொள்கைகள், இரண்டும் ஒன்று செறவே செறாது, ஒருவரை முஸ்லிம் என்று சொன்னால் அவரை முஷிர்க் என்று சொல்ல முடியாது, ஒருவரை முஷிரிக் என்று சொன்னால் முஸ்லிம் என்று சொல்லமுடியாது. ஒருவர் முஸ்லிமாக இருக்கிறார் ஆனால் ஈஸா (அலை) அவர்களை அல்லாஹ்வின் மகன் என்கிறார் அவரை நான் இஸ்லாத்தை விட்டு வெளியெரியவர் என்று தான் சொல்ல முடியும்.

ஒருவர் பள்ளிவாசலிலும் தொழுது விட்டு கோயிலில் சென்று சாமியும் கும்பிட்டால், அவரையும் நாம் இஸ்லாத்தை விட்டு வெளியரியவர் என்று தான் சொல்வோம்.

வெளிபடையாக மது அருந்துபவரை, குடிகாரர் என்று தான் சொல்ல முடியும், திருடுபவனை திருடன் என்று தான் சொல்ல முடியும், இணைவைப்பவர்ளை இறைவனை மறுப்பவர்கள் என்று தான் சொல்ல முடியும்.

கேள்வி :மக்கத்து காஃபிர்களையும் முஹம்மத்(ஸல்) அவர்களின் உம்மத்தான் முஸ்லிம்களையும் ஒன்றாக்கி பார்க்கும் உங்கள் வாதம் பலவீனமானது, அவர்கள் நபிகள் நாயகதை எதிர்த்தார்கள், அடித்தார்கள், பைத்தியம் என்றார்கள்,

பதில்: நபிகள் நாயகத்தை மக்கத்து காஃபிர்கள் எதிர்கவில்லை, நபிகள் சொன்ன அந்த தவ்ஹீதிற்காக தான் எதிர்த்தார்கள், நீங்கள் அல்லாஹ்வுடன் யாரை வேண்டுமானாலும் வணங்கலாம் என்று கூறியிருந்தால் நபிகள் நாயகத்தை அவர்கள் துன்புருத்தி இருக்கமாட்டார்கள்.

இப்பொழுது உள்ள இணைவைப்பவர்கள் நபிகள் நாயகத்தை எதிர்க்க வில்லை என்பது உண்மை தான், ஆனால் நபிகள் நாயகம் சொன்ன அந்த தவ்ஹீதை சொன்ன யாராக இருந்தாலும் அவர்களுக்கு அடி உதை விழாமல் இருந்ததில்லை, அவர்களை பைத்தியம், வழித்தவரியவர்கள் என்று ஏன் சில தவ்ஹீத் சகோதரர்களை கொன்றும் இருக்கிறார்கள். மக்காவில் இணைவப்பவர்கள் நபிகள் நாயகத்தை எவ்வாறு துன்புறுத்தினார்களோ, அது போல தமிழகத்தில் தவ்ஹீதை ஏற்று கொண்ட அனைவரும் இணைவப்பவர்களால் சில ஆண்டுகளுக்கு முன் துன்புருத்த பட்டனர்.அதை நபிகள் நாயகத்தயும் அல்லாஹ்வையும் எதிர்த்தாக தான் நாம் எடுத்து கொள்ள முடியும்.
எனவே மக்கத் காஃபிர்களும் இவர்களும் ஒன்றில்லை என்று கூறமுடியாது.

கேள்வி: எவர் உள்ளத்தில் கடுகளவு ஈமான் இருக்கின்றதோ அவர்கள் சொர்க்கம் செல்வார்கள் என்ற நபிமொழியை நீங்கள் அறியாமல் இருக்க முடியாது. ஈமானின் அளவை தீர்மானிப்பது இறைவன் ஒருவன்தான். அந்தத் தகுதி உங்களுக்கு உண்டா..?

பதில்: அவருடைய உள்ளத்தில் ஈமான் இருக்கிறதா இல்லையா என்பது எனக்கு தெரியாது, ஆனால் அவருடைய வெளிபடையான் செயல்களை வைத்து தான் நான் முடிவு செய்வேன், அவருடைய இருதி முடிவு அல்லாஹ்வுடன் உள்ளது, அதனால் நான் பாதிக்க பட மாட்டேன்.

மக்கத்து காஃபீர்கள் அல்லாஹ்வை ஈமான் கொண்டுதான் இருந்தார்கள்,
ஆனால் அவர்களை அல்லாஹ் நிரந்தர நரகவாசிகள் என்று சொல்கிறான்.

எனவெ கடுகளவு ஈமான் என்றால் அல்லாஹுடன் மற்ற எவரையும் இணையாக்காமல் ஈமான் கொண்டால் தான்.

கேள்வி: 'ஏகத்துவக்காரரின் தொழுகை பாழ்பட்டு போகுமா...? என்பதை உடைத்து சொல்லுங்கள். பிறகு விவாதத்தைத் தொடர்வோம் இன்ஷா அல்லாஹ்.

பதில்: சொல்கிறேன் கேளுங்கள், ஒருவர் இணைவப்பவர் என்று உங்களுக்கு தெளிவாக தெரிந்த பின், அவருக்கு நீங்கள் தவ்ஹீதை எடுத்து சொல்லி அவர் அதை கேட்காமல் இருக்கும் பட்சத்தில், நீங்கள் தொழுதால் அது ஏற்று கொள்ளபடாது.

காரணம் 1: நபிகள் நாயகம் காலத்திலும் சரி நபிகள் நாயகத்திற்கு பிறகும் சரி, முஸ்லிம்கள் இணைவைப்பவர்களை தொழுகையில் பின்பற்றியதற்கு எந்த ஆதாரமும் இல்லை, நபிகள் நாயகத்தின் வழிகாட்டுதல் இல்லாத அனைத்து இபாதத் விசயங்களும் நிராகரிக்கபடும். இணைவப்பவர்களை பின்பற்றலாம் என்றால் நீங்கள் ஆதாரத்தை எடுத்து வைங்கள்.

காரணம்2: இணைவைப்பவர்கள் பள்ளிவாசலை நிர்வாகிக்க கூடாது, என்று அல்லாஹ் கட்டளையிடுகிறான், பள்ளிவாசலை நிர்வாகிக்க கூடாது என்றால், தொழவைக்கவும் கூடாது என்ற கருத்து இதனுல் அடங்கியுள்ளது, எனவே,பின்பற்றினால் கூடுமா? கூடாதா என்றே கேள்விக்கே இங்கு இடமில்லை.

திருடுவது ஹராம் என்றால், அதை தர்மம் செய்தால் நன்மையா என்று கேட்டால் இல்லை என்று தான் சொல்வோம், எனவே தொழவைப்பது ஹராம் என்றால், பின்பற்றுவதும் ஹராம் தான், அதனால் எந்த நன்மையும் கிடைக்காது.

படிப்பாளி said...

எப்படியாவது சுற்றி வளைத்து உங்கள் வாதத்தை நிலைநாட்ட முற்பட்டுள்ளீர்கள். ஆனாலும் நீங்கள் எடுத்துக் காட்டும் ஆதாரங்கள் எதுவும் உங்கள் வாதத்துக்கு உதவி செய்யவில்லை என்பதுதான் உண்மை.

முஸ்லிம் என்று சொல்பவர்களை “முஸ்லிம் இல்லை“ என்று முடிவுகட்டுவதற்கு நீங்கள் எடுத்துக் காட்டியுள்ள ஹதீஸை எடுத்துக் கொள்வோம். அந்த ஹதீஸின் சட்டம் ஆட்சியாளருக்கும் குடிமக்களுக்கும் உள்ள தொடர்பை விளக்குகின்றதா அல்லது காஃபிர் பத்வா கொடுப்பதற்கு அனுமதியளிக்கின்றதா...

நாங்கள் சந்தோஷமாக இருந்தாலும் முஸ்லிம் ஆட்சியாளருக்கு கட்டுப்படுவோம்,
துக்கத்தில் இருந்தாலும் அவருக்கு கட்டுப்படுவோம்,
எங்களை விட பிறருக்கு (பிற குடிமக்களுக்கு) முன்னுரிமைக் கொடுக்கப்பட்டாலும் கட்டுப்படுவோம்.

எந்த விஷயம் பகிரங்கமான இறைமறுப்பு என்பதற்கு அல்லாஹ்விடமிருந்து எங்களுக்கு ஆதாரம் கிடைத்துள்ளதோ அத்தகைய விஷயத்தை ஆட்சியாளரிடம் நாங்கள் கண்டாலே தவிர'

حدثنا ‏ ‏إسماعيل ‏ ‏حدثني ‏ ‏ابن وهب ‏ ‏عن ‏ ‏عمرو ‏ ‏عن ‏ ‏بكير ‏ ‏عن ‏ ‏بسر بن سعيد ‏ ‏عن ‏ ‏جنادة بن أبي أمية ‏ ‏قال دخلنا على ‏ ‏عبادة بن الصامت ‏
‏وهو مريض قلنا أصلحك الله حدث بحديث ينفعك الله به سمعته من النبي ‏ ‏صلى الله عليه وسلم ‏ ‏قال دعانا النبي ‏ ‏صلى الله عليه وسلم ‏ ‏فبايعناه فقال فيما أخذ علينا ‏ ‏أن بايعنا على السمع والطاعة في منشطنا ومكرهنا وعسرنا ويسرنا وأثرة علينا وأن لا ننازع الأمر أهله إلا أن تروا كفرا بواحا عندكم من الله فيه برهان

http://hadith.al-islam.com/Display/Display.asp?Doc=0&Rec=10519

எந்த விஷயத்தில் ஆட்சியாளரிடம் இறை மறுப்பு இருக்கின்றதோ அதற்கு ஆதாரம் குர்ஆன் சுன்னாவில் கிடைக்கின்றதோ அந்த விஷயத்தில் அவருக்கு கட்டுப்பட மாட்டோம் என்பதுதான் அந்த ஹதீஸ் முன் வைக்கும் சட்டம். அதாவது ஒரு ஆட்சியாளரிடம் இறை மறுப்பு செயல்கள் தென்பட்டால் அந்த விஷயத்தில் அவருக்கு கட்டுப்படக் கூடாது. அது தவிர மற்ற எல்லா நிலைகளிலும் அவருக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும். தேவையில்லாமல் போராட்டம், ஆர்பாட்டம், எதிர்புரட்சி போன்ற செயல்களில் ஈடுபட்டு நாட்டின் அமைதியையும், பிறருக்கு மனஉளைச்சலையும் ஏற்படுத்தக் கூடாது என்பதை மிகத் தெளிவாக இஸ்லாம் முன் வைக்கின்றது. இதை எப்படி நீங்கள் குஃப்ர் பத்வாவிற்கு ஆதாரமாக்குகின்றீர்கள்?

இந்த ஹதீஸில் இடம் பெறும் இறை மறுப்பு என்பது இணைவைத்தலை மட்டும் குறிக்கின்றதா...? நிச்சயம் இல்லை. ஒரு ஆட்சியாளர் இருக்கின்றார் அவரிடம் இணைவைத்தலின் சாயல் எதுவும் இல்லை. ஆனால் ஜகாத் போன்றவற்றை மறுக்கிறார், செயல் படுத்த தடை விதிக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அவரும் இந்த செய்தி அடிப்படையில் இறை மறுப்புக்கு உள்ளே வருகின்றார். அவருக்கு எதிராக ஜகாத்தை நடைமுறைப்படுத்த சொல்லி மக்கள் போராடலாம் என்ற அனுமதியை இந்த ஹதீஸ் வழங்குகின்றது.

இப்படி ஆட்சியாளருக்கும், குடிமக்களுக்கும் உள்ள தொடர்பை விரிவான அர்த்தத்துடன் விவரிக்கும் ஹதீஸை குஃப்ர் ஃபத்வாவிற்கு ஆதாரமாக்குவது சற்றும் பொருத்தமாக இல்லை.

ஹதீஸ்கள் குறித்து ஆழ்ந்த ஆய்வு இல்லாமல் மேலோட்டமாகப் புரிந்துக் கொள்பவர்கள் கூட இந்த ஹதீஸை குஃப்ர் பத்வாவிற்கு பொருத்திப் பார்க்க மாட்டார்கள்.

நஜ்ம் அத்தியாயம் - குப்ர் ஃபத்வா

நஜ்ம் அத்தியாயத்தின் ஸஜ்தா வசனத்திற்கு ஸஜ்தா செய்ய மறுத்த ஒரு முதியவரைப் பற்றிக் குறிப்பிட்டிருந்தீர்களே அவர் எந்தக் காலத்தில் முஸ்லிமாக இருந்தார் என்று சொல்லுங்களேன் பார்ப்போம்.

நஜ்ம் அத்தியாயத்தை ஓதி நபி(ஸல்) ஸஜ்தா செய்த போது அவர்களோடு முஸ்லிம்களும், முஸ்லிமல்லாதவர்களும், ஜின்களும் சேர்ந்து ஸஜ்தா செய்கிறார்கள். அனைவரும் ஸஜ்தா செய்த போது ஒருவர் மட்டும் ஆணவத்தோடு இருக்கிறார் என்றால் அவரை குப்ர்தனத்தில் இறைவன் நீடிக்க செய்து விட்டான். இதிலிருந்து குஃப்ர் பத்வாவிற்கு எப்படி ஆதாரம் எடுத்தீர்கள்?
..................

மக்காவில் நபி(ஸல்) துன்புறுத்தப்பட்டது போன்று தமிழகத்தில் தவ்ஹீத்வாதிகள் துன்புறுத்தப்பட்டுள்ளார்கள் என்ற உங்கள் ஒப்பீடு சகித்துக் கொள்ள முடியவில்லை. அன்றைக்கு அவர்கள் பட்ட துன்பங்களில் 5 சதவிகிதமாவது இன்றைக்கு கிடைத்துள்ளதா என்று பார்த்தால் நிச்சயம் இல்லை. இது குறித்து மேற்கொண்டு எதுவும் எழுதுவதற்கில்லை. உண்மையில் உங்கள் எண்ணம் அப்படி இருந்தால் (நபி(ஸல்) பட்ட அளவிற்கு நபித்தோழர்கள் பட்ட அளவிற்கு நாங்களும் துன்பத்தை அனுபவித்துள்ளோம் என்று நினைத்தால்) இருந்துவிட்டுப் போங்கள் அது உங்களுக்கும் இறைவனுக்கும் உரியது.

ஆனால் ஒன்றை சொல்லிக் கொள்ள விரும்புகிறோம். தவ்ஹீத் சிந்தனைக்கு முன் பரவலாக தப்லீக் இயக்கம் பேசப்பட்ட பொழுதுகளில் பல இடங்களில் அவர்களும் துன்பத்திற்கு ஆளாக்கப்பட்டார்கள். பள்ளிகளிலிருந்து விரட்டப்பட்டார்கள் என்பதை இங்கு ஞாபகப்படுத்திக் கொள்வது நல்லது.

மற்றப்படி நீங்கள் எடுத்த வைத்துள்ள வாதம் எதுவும் பதிலளிக்கும் விதத்தில் அமையவில்லை. ஒன்றையே சுற்றி சுற்றி எழுதியுள்ளீர்கள்.

நாங்கள் எடுத்து வைத்த பல வாதங்கள் அதற்கான ஆதாரங்களில் உங்களால் பதிலளிக்க முடிந்தவற்றை மட்டும் எடுத்துக் கொண்டு பிறவற்றை கண்டுக் கொள்ளவில்லை. அவற்றை மீண்டும் ஞாபகமூட்டுவதுடன் இன்னும் சில கேள்விகளையும் வைக்கிறோம்.

1) எந்த ஆத்மாவும் பிற ஆத்மாவின் சுமைக்கு பொறுப்பாகாது என்ற பல குர்ஆன் வசனங்களுக்கு என்ன அர்த்தம். இணைவைப்பவர்களை பின்பற்றினால் நம் தொழுகைக் கூடாது என்று எவ்வாறு உங்களால் சொல்ல முடிகின்றது. அப்படியானால் இந்த வசனத்தைக் கண்டுக் கொள்ள மாட்டீர்களா..?

2) ஒருவரை முஸ்லிம் என்றுக் கண்டுக் கொள்ள வெளிப்படையான செயல்களாக “எவர் நம் தொழுகையை தொழுது, நம் கஃபாவை முன்னோக்கி, நாம் அறுத்ததை சாப்பிடுகிறாரோ அவர் முஸ்லிம்“ என்ற ஹதீஸை ஆதாரமாகக் கொண்டு வட்டி வாங்குபவர், திருடுபவர், விபச்சாரம் செய்பவர் இவர்கள் இமாமத் செய்தால் பின்பற்றலாமா கூடாதா..?

3) யார்மீதும் உங்களைப் பொறுப்புதாரியாக ஆக்கவில்லை என்று நபி(ஸல்) உட்பட பல நபிமார்களுக்கு இறைவன் கூறுகிறான். “தெளிவாக எத்திவைப்பது மட்டும் தான் எங்கள் கடமை“ என்று பல நபிமார்கள் சொன்ன விபரத்தையும் இறைவன் சுட்டிக் காட்டுகிறான்.

எத்திவைக்கும் நிலையில் இருக்க வேண்டியவர்கள் அதை கடந்து செயல்படுவது குர்ஆன் சுன்னா அடிப்படையிலா..?

4) காஃபிர் பத்வா கொடுக்கப்படாத, காபிர் பத்வா பெறாத எந்த ஒரு அமைப்பும் (குறிப்பாக) தமிழகத்தில் இல்லை. தவ்ஹீத் ஜமாஅத்துகளுக்கும், அமைப்புகளுக்கும் காஃபிர் பத்வா வழங்கப்பட்டுள்ளது - இன்றைக்கும் வழங்கப்படுகின்றது. நீங்கள் அவர்களை காபிர் என்றால் அவர்கள் உங்களைக் காபிர் என்கிறார்கள். இப்போது காபிர் யார், முஸ்லிம் யார் என்று யார் தீர்மானிப்பது? மறுமையில் இறைவன் தீர்ப்பு வழங்குவான் என்று நீங்கள் சொன்னால் “அதே வாதத்தைதான் நாங்கள் எடுத்து வைத்துக் கொண்டிருக்கிறோம்“ என்பதை மீண்டும் ஒரு முறை சொல்லிக் கொள்கிறோம்.

(குறிப்பு: ஏகத்துவவாதி இமாமத் செய்தால் அவரைப் பின்பற்றுவதற்கு என்ன அளவுகோல்? குர்ஆனிலிருந்து பார்க்க இருக்கிறோம் இன்ஷா அல்லாஹ்).

உங்கள் தரப்பிற்கு நீங்கள் வலுவான ஆதாரங்களை எடுத்து வைத்தால் தொடர்வோம்.

அல்லாஹ் மிக்க அறிந்தவன்.

Iqbal said...

அஸ்ஸலாமு அலைக்கும்

இனைவைக்கும் இமாமை பின்பற்றி தொழக்கூடாது என்று கூறுபவர்கள் இன்றைய முஸ்லிம்களை அவர்களின் கொள்கைகளை மக்கா காபிர்களோடு ஒப்பிடுவது அநியாயம். மக்கா காபிர்கள் அல்லாஹ்வையும் அல்லாஹ்வின் தூதரையும் நிராகரித்தவர்கள். ஆனால் இன்றைய முஸ்லிம்கள் அப்படியல்ல. மக்கா காபிர்கள் நயவஞ்சகர்கள் ஆனால் இன்றைய முஸ்லிம்கள் நயவஞ்சகர்கள் இல்லை. மக்கா காபிர்கள் இணைவைப்பின் உச்சத்திற்கு சென்றவர்கள். அவர்களோடு இன்றைய முஸ்லிம்களை ஒப்பிட்டு இணைவைக்கும் இமாம் பின்னால் தொழக்கூடாது என்பது சரியல்ல. பொருத்தமற்ற ஆதாரங்களை கூறி இணைவைக்கும் இமாமை பின்பற்றி தொழக்கூடாது என்கின்றனர். முகல்லிது மவ்லவிகளாக இருந்தாலும் சரி தவ்ஹீத் மவ்லவிகளாக இருந்தாலும் சரி இருவரும் இமாமத் பணிக்கு கூலி வாங்கிக் கொண்டுதான் தங்கள் பள்ளிகளில் தொழுகை நடத்துகிறார்கள். அல்குர்ஆன் 36-21 வசனப்படி "உங்களிடம் ஒரு கூலியும் கேட்காத இவர்களை நீங்கள் பின்பற்றுங்கள்; இன்னும் இவர்களே நேர்வழி பெற்றவர்கள்" என்று அல்லாஹ் கூறுகிறான். ஆகையால் இமாமத் பணிக்கு கூலி வாங்கும் எந்த இமாமின் பின்னாலும் நாங்கள் தொழமாட்டோம் என்று இவர்கள் கூறுவார்களா?