வலைப்பதிவில் தேட..

Wednesday, February 27, 2008

முதலை - உடும்பு எதை சாப்பிடுவது?

ஒரு எகிப்து சகோதரர் முதலைக்கறி சாப்பிடலாம் என்று கூறுகிறார். இஸ்லாம் இதை அங்கீகரித்துள்ளது என்று கூறினார். நான் அவருக்கு இதை குர் ஆன் ஹதீஸ் அடிப்படையில் விளக்க வேண்டும். இவர் ஒரு அரபியாக இருப்பதால் இவர் சொல்வதில் எனக்கு இன்னும் சந்தேகமாகவே உள்ளது. ஏன் எனில் உடும்பும், முதலையும் பார்ப்பதற்கு ஒரே மாதிரியாகவே உள்ளது. இருப்பினும் வெவ்வேறு இடத்திலேயே வசிக்கின்றது. முதலையோ தண்ணீரில் வசிக்கின்றது. உடும்போ தண்ணீரில் இல்லாமல் நிலத்திலும் மரத்திலும் வசிக்கின்றது.

Name: abdul azeez
email: azeez1729@.....
Location: abudhabi habshan
Subject: Question

உயிரினங்களில் பறவையினங்களாகட்டும், மிருகங்களாகட்டும் இவைகளில் உண்ண அனுமதிக்கப்பட்டது அனுமதிக்கப்படாதது என்பதை ஒரு ஹதீஸின் துணையுடன் முழுவதுமாக விளங்கி விடலாம். அந்த ஹதீஸை விளங்கிக் கொண்டால் நமக்கு சந்தேகம் ஏற்படும் எந்த ஒரு உயிரினத்தையும் அது ஹலாலா அல்லது ஹராமா என்று நாமே தீர்மானித்துவிடலாம்.
............................

பாகம் 6, அத்தியாயம் 72, எண் 5530 அபூ ஸஅலபா(ரலி) கூறினார்

இறைத்தூதர்(ஸல்) அவர்கள் விலங்குகளில் கோரைப் பற்கள் உள்ள எதையும் உண்ணக் கூடாதெனத் தடை விதித்தார்கள்.
........................
பாகம் 6, அத்தியாயம் 76, எண் 5780 அபூ ஸஅலபா அல்குஷனீ(ரலி) அறிவித்தார்

நபி(ஸல்) அவர்கள் விலங்குகளில் கோரைப் பற்கள் உள்ளவற்றை உண்ண வேண்டாமெனத் தடைசெய்தார்கள்.
........................

எந்த உயிரினத்திற்கு (குறிப்பாக விலங்குகளுக்கு) கோரைப் பற்கள் (இடது மற்றும் வலது புறங்களில் நீளமாகவும் கூர்மையாகவும் உள்ள இரு பற்கள்) உள்ளதோ அந்த உயிரினத்தை உண்ணக் கூடாது.

தண்ணீரிலும் தரையிலும் வாழும் சில உயிரினங்களைப்பற்றி முடிவு செய்யவும் நாம் இந்த அளவுகோலை எடுத்துக் கொள்ளலாம். முதலை கோரைப் பற்களுடன் பயங்கரமாக காட்சியளிக்கும் ஒரு உயிரினமாகும். அது தண்ணீரில் வாழ்ந்தாலும் அது கோரைப் பற்களைப் பெற்றுள்ளதால் அதை சாப்பிடக் கூடாது.

கடல்வாழ் உயிரினத்தைப் பொருத்தவரை முஸ்லிம் உம்மத்துக்கு ஹராமாக்கப்பட்டது என்று எதுவும் இல்லை. சுரா, திமிங்கலம் உட்பட எந்த மீனினத்தையும் சாப்பிடலாம். சிலர் அவற்றின் உருவங்களை காரணம் காட்டி சாப்பிடக் கூடாது என்று கூறுகிறார்கள். இவை அவர்களின் சொந்தக் கூற்றாகும். மார்க்கம் அவற்றை தடைசெய்யவில்லை.
.........................................

பாகம் 3, அத்தியாயம் 56, எண் 2983 ஜாபிர்(ரலி) அறிவித்தார்.

நாங்கள் முந்நூறு பேர் எங்கள் பயண உணவை எங்கள் பிடரியில் சுமந்து கொண்டு (புனிதப் போருக்காகப்) புறப்பட்டோம். எங்கள் பயண உணவு (நாளாக, ஆகக்) குறையலாயிற்று. எந்த அளவிற்கென்றால் நாங்கள் ஒவ்வொரு நாளும் ஒரு பேரீச்சம் பழம் மட்டுமே உண்ண வேண்டிய நிலைக்கு ஆளாம் விட்டோம்... இதை ஜாபிர்(ரலி) அறிவித்துக் கொண்டிருந்தபோது ஒருவர், 'அபூ அப்தில்லாஹ்வே! (ஒரு நாள் முழுவதற்கும்) ஒரு பேரீச்சம் பழம் ஒருவருக்கு எப்படிப் போதுமாகும்?' என்று கேட்டார். நாங்கள் பயண உணவை இழந்தபோது மிகவும் கவலையடைந்தோம். இறுதியில், நாங்கள் கடலை வந்தடைந்தபோது திமிங்கல வகை மீன் ஒன்றைக் கண்டோம். கடல் அதை (கரையில்) எறிந்து விட்டிருந்தது. நாங்கள் அதிலிருந்து பதினெட்டு நாள்கள் நாங்கள் விரும்பியவாறு உண்டோம்.
.........................

கடல் வேட்டையாடுவதும் அதன் உணவும் உங்களுக்கு அனுமதிக்கப் பட்டுள்ளது. (திருக்குர்ஆன் 5:96)

பசுமையான மாமிசத்தை நீங்கள் புசிப்பதற்காக அவன் தான் கடலை உங்களுக்கு வசப்படுத்தித் தந்தான். (திருக்குர்ஆன் 16:14).

இந்த வசனம் கடல் வாழ் உயிரினங்கள் எதுவும் தடை செய்யப்பட்டதல்ல என்பதை தெளிவாக விளக்குகின்றது. அதனால் தான் நபித்தோழர்கள் திமிங்கலத்தை உணவாக்கிக் கொண்டார்கள்.

நீரில் வாழும் உயிரினங்களைப் பொருத்தவரை பொதுவாக அனைத்தும் ஹலால் என்று எடு்த்துக் கொள்ள முடியும் என்றாலும் மற்றொரு குர்ஆன் வசனத்திலிருந்து ஒரு விதிவிலக்கைப் பெற்றுக் கொள்ளலாம்.

உங்களை நீங்களே அழித்துக் கொள்ளாதீர்கள். (திருக்குர்ஆன் 2:195)

இந்த வசனத்திலிருந்து எது உடலுக்கு தீங்கு விளைவிக்கும் என்று கருதப்படுகின்றதோ அதை சம்பந்தப்பட்ட நபர்கள் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

மீனினத்தில் ஒருவகை மீன் சிலருக்கு அலர்ஜியை ஏற்படுத்துகின்றது என்று வைத்துக் கொள்வோம். அவர்கள் அந்த மீனினத்தை தவிர்த்துக் கொள்ளலாம்.
கடல்வாழ் உயிரினத்தில பாம்பு போன்ற விஷஜந்துக்கள் இருந்தால் மேற்கண்ட வசன அடிப்படையில் அனைவருக்கும் அது ஹராமாகி விடும். முதலையை சாப்பிடக் கூடாது என்பதற்கு கூடுதலாக இநத வசனம் பொருந்தி விடும்.

உடும்பை பொருத்தவரை விரும்பியவர்கள் அதை சாப்பிட்டுக் கொள்ளலாம் தடையில்லை.
.....................
பாகம் 6, அத்தியாயம் 70, எண் 5391

நான் இறைத்தூதர்(ஸல்) அவர்களுடன் (அன்னை) மைமூனா(ரலி) அவர்களின் இல்லத்திற்குச் சென்றேன். அவர்கள் எனக்கும் இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களுக்கும் சிறிய தாயாராவார்கள். (அன்னை) மைமூனாவிடம் பொரிக்கப்பட்ட உடும்பு ஒன்றைக் கண்டேன். அதை அவர்களின் சகோதரி ஹ¤ஃபைதா பின்த் ஹாரிஸ்(ரலி) நஜ்திலிருந்து கொண்டு வந்திருந்தார்கள். (அன்னை) மைமூனா(ரலி) அந்த உடும்பு இறைச்சியை இறைத்தூதர்(ஸல்) அவர்கள் முன் வைத்தார்கள். இறைத்தூதர் அவர்களோ, எந்த உணவாயினும் அதன் பெயர் தமக்குக் கூறப்பட்டு, அதைப் பற்றிய விவரம் சொல்லப்படாத வரை அதன் பக்கம் தம் கையை நீட்டுவது அரிதாகும். (இந்நிலையில்) இறைத்தூதர்(ஸல்) அவர்கள் தம் கையை அந்த உடும்பின் பக்கம் நீட்ட அங்கிருந்த பெண்களில் ஒருவர் 'நீங்கள் பரிமாறியிருப்பது என்னவென்று இறைத்தூதர்(ஸல்) அவர்களுக்குத் தெரிவியுங்கள். அது உடும்பு, இறைத்தூதர் அவர்களே!' என்று கூறினார். உடனே, இறைத்தூதர்(ஸல்) அவர்கள் உடும்பைவிட்டுத் தம் கையை எடுத்துக்கொண்டார்கள். அப்போது நான் 'உடும்பு தடை செய்யப்பட்டதா? இறைத்தூதர் அவர்களே!' என்று கேட்க, நபி(ஸல்) அவர்கள், 'இல்லை; ஆயினும், அது என் சமுதாயத்தாரின் பூமியில் இல்லை. எனவே, என் மனம் அதை விரும்பவில்லை' என்று கூறினார்கள். உடனே நான் அதைத் துண்டித்துச் சாப்பிட்டேன். அப்போது இறைத்தூதர்(ஸல்) அவர்கள் என்னைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
.........................

உடும்பு, வெட்டுக்கிளி போன்றவை உண்ணுவதற்கு ஏற்றதாகும்.

No comments: