வலைப்பதிவில் தேட..

Monday, March 3, 2008

இந்த விருந்துக்கு செல்லலாமா..?

அஸ்ஸலாமு அலைக்கும். "விருந்துக்காக அழைப்பவரின் அழைப்பை ஏற்றுக் கொள்வது" நபி (ஸல்) அவர்கள் நமக்கு காட்டிதந்த வழிமுறையாகும். ஆனால் ஒருவரது வருமானம் ஹராமான முறையில் பெறப்பட்டதாக இருக்கும்போது அவருடைய அழைப்பை ஏற்றுகொள்ளலாமா?

Name: Azeezudheen
email: skn_azeesudeen@....
Location: Dubai
Subject: Kelvi

அனுமதிக்கப்பட்ட ஒரு பொருளை ஒருவர் ஹராமான வழியில் பெறுகிறார் அதை அவர் பிறருக்கு கொடுக்கிறார் என்றால் அதைப் பெற்றுக் கொள்வதற்கு மார்க்கத்தில் தடையொன்றும் இல்லை.

பணம் என்பது ஹலாலான ஒன்று. அதை லஞ்சமாக பெற்ற ஒருவர் தன் குடும்பத்திற்காக செலவு செய்கிறார் அல்லது நற்பணிகளுக்கு கொடுக்கிறார் என்றால் லஞ்சம் பெற்றதற்கு அவர் குற்றவாளியாவாரே தவிர அவரிடமிருந்து அதைப் பெற்றுக் கொள்ளும் எவரும் மார்க்கம் அனுமதிக்கப்பட்டவழியில் அதைப் பெறுவதால் அவர்களுக்கு அது ஹராமாகாது.

நபி(ஸல்) அவர்கள் தனக்கும் தன் குடும்பத்தாருக்கும் தர்மப் பொருளை ஹராமாக்கிக் கொண்டார்கள். ஹலாலான பொருளை ஒருவர் தரமமாக நபி(ஸல்) அவர்களுக்கு வழங்கினால் அது அவர்களுக்கு ஹராமாகும்.

பாகம் 3, அத்தியாயம் 50, எண் 2576

அல்லாஹ்வின் தூதரிடம் உணவுப் பொருள் கொண்டு வரும் போது இது அன்பளிப்பா? தருமமா? என்று அவர்கள் கேட்பார்கள். தருமம் தான் என்று பதிலளிக்கப்பட்டால் தம் தோழர்களிடம், நீங்கள் உண்ணுங்கள் என்று கூறிவிடுவார்.
.............................

இதை கவனத்தில் கொண்டு கீழுள்ள நபிமொழியைப் பாருங்கள்.

பாகம் 2, அத்தியாயம் 24,எண் 1495 அனஸ்(ரலி) அறிவித்தார்.

தர்மமாகக் கொடுக்கப்பட்ட இறைச்சி நபி(ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்பட்டது. அப்போது அவர்கள் இது பரீராவுக்குத் தர்மமாகும்; ஆனால் நமக்கு அன்பளிப்பாகும்' என்றார்கள்.
...........................

பாகம் 6, அத்தியாயம் 68, எண் 5279

பாத்திரம் ஒன்றில் இறைச்சி கொதித்துக் கொண்டிருந்த நிலையில் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (வீட்டுக்குள்) நுழைந்தார்கள். அப்போது அவர்களுக்கு முன் ரொட்டியும் வீட்டிலிருந்த குழம்பும் வைக்கப்பட்டது. அப்போது அவர்கள் 'பாத்திரத்தில் இறைச்சி இருக்கக் கண்டேனே! (அது என்னவாயிற்று?)' என்று கேட்டார்கள். அதற்குக் குடும்பத்தார் 'ஆம்! (இருக்கிறது)ஆனால், அது பரீராவுக்கு தர்மமாக வழங்கப்பட்டதாகும். தாங்கள் தாம் தர்மப் பொருட்களைச் சாப்பிடமாட்டீர்களே?' என்று கூறினர். அப்போது நபி(ஸல்) அவர்கள் 'அது பரீராவுக்குத்தான் தர்மம்; நமக்கு அது (பரீராவிடமிருந்து) அன்பளிப்பு' என்றார்கள்.
....................

பரீரா என்ற நபித்தோழியருக்கு ஆட்டிறைச்சி தர்மமாக கிடைக்கின்றது. தர்மம் என்ற நிலையில் அது பரீராவுக்கு ஹலாலாகவும் நபி(ஸல்) அவர்களுக்கு ஹராமாகவும் இருந்தது. தனக்கு கிடைத்த தர்மத்தை பரீரா நபி(ஸல்) அவர்களுக்கு அன்பளிப்பாக கொடுக்கின்றார். அதை நபி(ஸல்) பெற்றுக் கொண்டு (பிறருக்கு விளக்கமளித்து விட்டு) உண்கிறார்கள்.

இதிலிருந்து நமக்கு கிடைக்கும் வழி அனுமதிக்கப்பட்ட வழியா என்பதை மட்டும் பார்த்து விருந்தையோ - இதர எதுவொன்றையோ பெற்றுக் கொள்ளலாம் என்பதை விளங்கலாம்.

இதை இன்னும் சற்று விளக்கமாக சொல்வதென்றால் யுதர்கள் பற்றிய விளக்கத்தை நாம் எடுத்துக் கொள்ளலாம்.

யுதர்கள் மீது வட்டி ஹராமாக்கப்பட்டது ஆனால் அவர்கள் அதை பொருட்படுத்தாமல் வட்டியில் மூழ்கினார்கள்.

وَأَخْذِهِمُ الرِّبَا وَقَدْ نُهُواْ عَنْهُ وَأَكْلِهِمْ أَمْوَالَ النَّاسِ بِالْبَاطِلِ وَأَعْتَدْنَا لِلْكَافِرِينَ مِنْهُمْ عَذَابًا أَلِيمًا
வட்டி வாங்குவது அவர்களுக்குத் தடை செய்யப்பட்டிருந்தும், அவர்கள் அதை வாங்கி வந்ததன் (காரணமாகவும்,) தவறான முறையில் அவர்கள் மக்களின் சொத்துகளை விழுங்கிக் கொண்டிருந்ததன் (காரணமாகவும், இவ்வாறு தண்டனை வழங்கினோம்), இவர்களில் காஃபிரானோருக்கு (மறுமையில்) நோவினை செய்யும் வேதனையையும் நாம் சித்தப்படுத்தியுள்ளோம் (அல் குர்ஆன் 4:161)

பாகம் 2, அத்தியாயம் 34, எண் 2224
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
'யூதர்களை அல்லாஹ் சபிப்பானாக! அவர்களுக்குக் கொழுப்பு ஹராமாக்கப்பட்டபோது அதைவிற்று அதன் கிரயத்தை அவர்கள் சாப்பிட்டார்கள்.' என அபூ ஹுரைரா(ரலி) அறிவிக்கிறார்கள்.

யுதர்களைப் பொருத்தவரை அவர்களின் வருமானம் ஹராமான வழியில் இருந்தது என்பதற்கு இந்த வசனமும் நபிமொழியும் சான்றாக உள்ளது.

இவர்களோடு நமக்குள்ள உறவைப் பற்றி குர்ஆன் குறிப்பிடும் போது,

وَطَعَامُ الَّذِينَ أُوتُواْ الْكِتَابَ حِلٌّ لَّكُمْ
வேதம் கொடுக்கப்பட்டோரின் உணவும் உங்களுக்கு ஹலாலானதே. (அல்குர்ஆன் 5:5) என்று குறிப்பிடுகின்றது. வேதக்காரர்களில் முக்கியமானவர்களாக கருதப்படுபவர்களைப் பற்றி குர்ஆன் 'அவர்களின் வருமானம் ஹராமான வழியில் இருந்தது' என்று கூறிவிட்டு அவர்களின் உணவு உங்களுக்கு ஹலால் என்றும் குறிப்பிடுகின்றது.

இதிலிருந்து நமக்கு வரும் வழி அனுமதிக்கப்பட்ட வழியாக இருந்தால் நாம் சாப்பிடலாம் பெற்றுக் கொள்ளலாம் என்பதை விளங்க முடிகின்றது.

எனவே ஹராமான வழியில் பொருள் திரட்டுபவர்கள் நம்மை விருந்துக்கு அழைத்தால் அதில் கலந்துக் கொள்வது பற்றி தடையொன்றும் இல்லை. அதே நேரம் அவர்களின் தவறை சுட்டிக்காட்டும் கடமையும் நமக்கு இருக்கின்றது என்பதை மறந்து விடக் கூடாது.
அல்லாஹ் மிக்க அறிந்தவன்

No comments: