வலைப்பதிவில் தேட..

Tuesday, March 10, 2009

பரிசுபெற்றக்கட்டுரை. (குழுமத்திலிருந்து)


ஊடகங்களின் மறைத்தலும் திரித்தலும் தீர்வு என்ன?
 
ஊடகங்களின் நன்மையும் தீமையும்

பாரெங்கும் பரந்து வாழும் பலதரப்பட்ட மக்களிடம் தகவல்களைக் கொண்டு சேர்ப்பதில் மீடியாக்கள் எனப்படும் ஊடகங்களின் பணி மகத்தானது. உலகின் ஒருகோடியில் நடைபெறும் ஒரு நிகழ்வை மறுகோடியில் வசிப்பவர்களால் உடனுக்குடன் அறியவும் அது குறித்து பேசவும் முடிகிறதெனில் பத்திரிகை, வானொலி, தொலைக்காட்சி, இணையம் ஆகிய ஊடகங்களின் மூலமே இது சாத்தியமாகிறது. ஊடகத்துறையால் மனித சமூகம் அடைந்த பயன்கள் கணக்கிலடங்கா.

மனித குல நன்மைக்காக உருவாக்கப்பட்ட ஊடகங்களில் சிலவற்றைத் தவிர பெரும்பாலும் வியாபாரத்தை மட்டுமே நோக்கமாகக் கொண்டிருப்பதும், பரபரப்பை ஏற்படுத்தும் நோக்கத்தில், இல்லாதவற்றை இட்டுக்கட்டுவதையும் உள்ளவற்றை மறைப்பதையும் திரிப்பதையுமே தமது குறிக்கோளாகக் கொண்டிருப்பதும் வேதனை தரும் உண்மை.

அகில உலகத்தையும் ஆட்டிப் படைத்துக் கொண்டிருக்கும் இந்த ஊடகங்கள் மூலம் பரப்பப்படும் செய்திகளும் தகவல்களும் நல்லவையாக இருப்பின் மனித குலத்திற்கு நன்மை அளிக்கவும் தீயவையாக இருப்பின் தீமை அளிக்கவும் செய்கின்றன. ஊடகங்கள் மூலம் உரத்துச் சொல்லப்படும் கருத்துகள்தாம் மக்களின் உள்ளங்களில் ஊடுருவி ஓர் இனத்தை அல்லது தேசத்தை வழிநடத்தவோ வழிகெடுக்கவோ செய்கின்றன. சீர்கேடு-சீரமைப்பு ஆகிய இரண்டுமே ஊடகங்களால் சாத்தியப்படும்.

மறைத்தலுக்கும் திரித்தலுக்கும் காரணம்

 

உலகம் முழுவதும் இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் எதிராகப் பெருமளவில் களம் இறங்கியுள்ள ஊடகங்கள் இஸ்லாத்தையும் முஸ்லிம்களையும் குறித்த செய்திகளை மறைத்தும் திரித்தும் வெளியிடுவதையே தங்கள் குறிக்கோளாகக் கொண்டிருப்பதற்குச் சில காரணங்களும் இருக்கின்றன.

நாகரிகம் என்ற பெயரில் அநாச்சாரங்களிலும் கேடுகெட்டக் கலாச்சாரங்களிலும் ஊறிப்போன மேற்குலகும் அவற்றின் மூலம் பணம் சம்பாதிப்பதை மட்டுமே நோக்கமாகக் கொண்ட முதலாளித்துவமும் இவற்றுக் கெல்லாம் பெரும் சவாலாக, தனிமனித-சமூக ஒழுக்கத்தை வலியுறுத்தும் இஸ்லாத்தின் வளர்ச்சியைப் பொறுக்காமல் இஸ்லாத்தின் மீதும் முஸ்லிம்களின் மீதும் அவதூறுச் சேற்றை அள்ளி இறைத்து இஸ்லாத்தின் மீது களங்கத்தை ஏற்படுத்துவதே இவர்களின் நோக்கம். அதன் மூலம் காட்டாற்று வெள்ளமெனக் கரைபுரண்டோடும் இஸ்லாத்தின் வளர்ச்சியைத் தடுத்து நிறுத்திவிடலாம் என்பது இவர்களின் கனவு. அதற்காக இவர்கள் தம் ஆதிக்கத்தில் வைத்திருக்கும் ஊடகங்களைப் பயன்படுத்திக் கொள்கின்றனர்.

இந்தியா போன்ற கலாச்சாரப் பெருமை வாய்ந்த நாடுகளின் ஊடகங்கள் இஸ்லாத்தின் மீதும் முஸ்லிம்கள் மீதும் களங்கம் ஏற்படுத்தக் களம் இறங்கியிருப்பதற்கான காரணம் வேறுவிதமானது.

ஆண்டாண்டுக் காலமாக ஒரு சாராரை அடிமைப்படுத்தி, பிறப்பால் உயர்வு தாழ்வு கற்பித்து, அடக்கி ஒடுக்கி வைத்திருந்தவர்கள், இஸ்லாம் இந்த மண்ணில் வேரூன்றி ஏற்றத் தாழ்வுகளை வேரறுத்து சமத்துவத்தையும் சகோதரத்துவத்தையும் வலியுறுத்தியபோது அதன்பால் கவரப்பட்டு கோடானு கோடி மக்கள் விடியலைத்தேடி, சத்தியத்தை நோக்கி வருவதையும் அதன் காரணமாக இவ்வளவு காலமும் தமக்கு அடிபணிந்து, தலைவணங்கிச் சேவகம் செய்து வந்தவர்கள் வீறுகொண்டு எழுந்து நிமிர்ந்து நிற்பதைக் கண்டு பொறுக்காமல், தம் கைவசம் இருக்கும் ஊடகங்கள் மூலம் இஸ்லாம் மற்றும் முஸ்லிம்கள் தொடர்பான செய்திகளை மறைத்தும் திரித்தும் தங்கள் கைவரிசையைக் காட்டுவதன் மூலம் இந்திய மண்ணில் இஸ்லாம் அடைந்து வரும் அசுர வளர்ச்சியைத் தடுத்து நிறுத்திவிடலாம் என்பது இவர்களின் எண்ணம். இதையும் மீறி இஸ்லாம் வளர்ந்து வருகிறது என்பது வேறு விஷயம்.

வெகுவேகமாகப் பரவி வரும் சத்திய இஸ்லாத்தின் மீது கொண்ட காழ்ப்புணர்ச்சி காரணமாக உலக அளவில் யூத கிறிஸ்தவ சக்திகளும், நமது தேச அளவில் சங்பரிவார சக்திகளும் தம் கட்டுப்பாட்டில் உள்ள ஊடகங்களைப் பயன்படுத்தி இஸ்லாத்திற்கெதிராகவும் முஸ்லிம்களுக்கெதிராகவும் திட்டமிட்டு வதந்திகளைப் பரப்புவதையும் உண்மைச் செய்திகளை இருட்டடிப்பு செய்வதையும் தமது கொள்கையாகவே கொண்டுள்ளன.

ஊடகங்களின் பாரபட்சமான போக்கு

 

தீவரவாதத்திற்கு மதம், இனம், மொழி, தேசம் என்னும் எந்த வேறுபாடும் இல்லை. தீவிரவாதம் முற்றிலுமாக வேரறுக்கப்படவேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால் முஸ்லிமல்லாத ஒருவன் அவன் சார்ந்துள்ள மதத்தின் பெயராலோ, இனத்தின் பெயராலோ, மொழியின் பெயரலோ தீவிரவாதத்தில் ஈடுபட்டால் அந்த மதம், இனம், மொழி, ஆகியவற்றின் அடைமொழியுடன் அவன் அழைக்கப்படுவதில்லை. அதே செயலை ஒரு முஸ்லிம் செய்து விட்டால் 'முஸ்லிம் தீவிரவாதி' அல்லது 'இஸ்லாமியத் தீவிரவாதி' என்னும் அடைமொழியுடன் வெளியிட எந்த ஊடகமும் தயங்குவதில்லை.

எந்த இடத்தில் என்ன குற்றம் நிகழ்ந்தாலும் அக்குற்றத்தில் தொடர்புடையவர்கள் முஸ்லிம்களாக இருந்து விட்டால் அதைப் பெரிதுபடுத்தித் தலைப்புச் செய்தியாக வெளியிடுவதும், அதே குற்றத்தை மற்றவர்கள் செய்தால் அச்செய்தியை ஒரு மூலையில் சாதராணச் செய்தியாக வெளியிடுவதும், பல்லாயிரக் கணக்கில் முஸ்லிம்கள் கலந்து கொள்ளும் மாபெரும் மாநாடுகள், பேரணிகள் என்றால் சில நூறு பேர்கள் கலந்து கொண்டதைப்போலப் பத்திரிகைகளில் வெளியிடுவதும் தொலைக்காட்சி செய்திகளில் காண்பிக்கும்போது மாநாடு அல்லது பேரணி தொடங்குவதற்குமுன் மக்கள் வந்துசேரத் தொடங்கிய நிலையில் உள்ள காட்சிகளை மட்டும் வெளியிடுவதும்தான் அவர்களின் 'ஊடக தர்மம்'.

முஸ்லிம் வீடுகளில் பழைய பேட்டரிகளும் துண்டு ஒயர்களும் காய்கறி நறுக்கப் பயன்படுத்தும் கத்திகளும் கண்டெடுக்கப் பட்டால் அவை 'பயங்கர ஆயுதங்கள்'; ஆனால் பாசிச சக்திகளின் அங்கத்தவர் வீடுகளில் துப்பாக்கிளும் வெடிகுண்டுகளும் டெட்டனேட்டர்களும் கிடைத்தால் அவற்றைப் பரப்பிவைத்து எந்த காவல்துறையும் படம் காட்டாது.

பல்வேறு வகைகளிலும் முஸ்லிம்கள் குறித்த செய்திகள் மறைக்கப்படுவதையும் திரிக்கப்படுவதையும் அன்றாடம் கண்டு கண்டு நமது மனம் குமுறுகிறது.

இதற்கான தீர்வு என்ன?

 

"நமக்கென்று தனியாக நாளிதழும் தொலைக்காட்சியும் தேவை" இதுவே முஸ்லிம்கள் பெரும்பாலானோரின் பதிலாக இருக்கும். ஆம், தேவைதான் என்பதை மறுப்பதற்கில்லை. ஆனால் செய்தித்தாள் மற்றும் தொலைக்காட்சி ஒளிபரப்பு ஆகிய இவ்விரண்டையும் தொடங்குவதும் தொடங்கியதைத் தொய்வின்றித் தொடர்ந்து நடத்துவதும் பலரும் நினைப்பதுபோல் அவ்வளவு எளிதான காரியமல்ல.

இலாப நோக்கம் இல்லாவிட்டாலும் நஷ்டம் இல்லாமல் தொடர்ந்து நடத்துவதற்கு வாசகர்களாகிய நாம் நமது பங்களிப்பைச் சரியான முறையில் நல்குவதிலும் பெரும் வியாபார நிறுவனங்கள் பொறுப்புடன் தமது விளம்பரங்களைத் தந்துதவுவதிலும்தான் அவற்றின் எதிர்காலம் அடங்கியுள்ளது.

1.நமக்கென்று தனியாக ஊடகம் தொடங்கும் திட்டம்

முஸ்லிம்களுக்கெனத் தனியொரு நாளிதழ் தொடங்குவதானாலும், தொலைக்காட்சித் தொடங்குவதானாலும் அதற்கான ஏற்பாட்டைச் சமுதாய அக்கரை கொண்ட செல்வந்தர்களும் தொழிலதிபர்களும் செய்ய முன்வரவேண்டும். இவ்விதம் தொடங்கப்படும் ஊடகங்கள் இயக்கச் சார்பில்லாதவையாக இருக்க வேண்டும் என்பது மிக முக்கியம்.

நூளிதழ் தொடங்கத் திட்டமிடுபவர்கள், அண்டை மாநிலமான கேரளத்தில் அண்மையில் தொடங்கப்பட்ட 'மாத்யமம்' நாளிதழ், அதற்கு முன்னதாக நீண்ட காலமாக நடந்து வரும் பல்வேறு நாளிதழ்களைப் பின்னுக்குத் தள்ளிவிட்டு வெகுவேகமாக முன்னேறி வளைகுடாப் பதிப்பு வரை பல்வேறு பதிப்புகளை வெளியிடும் அளவுக்கு வளர்ந்திருப்பதையும் முன்னுதாரணமாகக் கொண்டு தமது திட்டத்தை அமைத்துக் கொள்ளலாம்.

2.கேபிள் தொலைக்காட்சி ஒளிபரப்பு

தனியாகத் தொலைக்காட்சி தொடங்குவது என்னும் பெரும் திட்டத்தை உடனடியாகச் செயல்படுத்துவது சற்றுச் சிரமம்தான் என்றாலும் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதிகளில் இஸ்லாமிய கேபிள் ஒளிபரப்புகளைத் தொடங்கலாம்.

நம் சமுதாயம் குறித்து மறைக்கப்பட்டவற்றை வெளிச்சத்திற்குக் கொண்டு வருவதும் திரிக்கப்பட்டவற்றின் உண்மை நிலையை பகிரங்கப்படுத்துவதும் இத்தகைய கேபிள் தொலைக்காட்சி ஒளிபரப்பின் மூலம் செயல்படுத்துவது எளிது.

சமீபத்தில் குமரி மாவட்டத்தில் ஒரு கிறிஸ்தவ சகோதரர் இஸ்லாமிய கேபிள் ஒளிபரப்பைத் தொடங்கி வெற்றிகரமாக நடத்திக் கொண்டிருப்பது மட்டுமின்றி உயரிய இஸ்லாத்தின் உன்னதக் கொள்கைகளால் கவரப்பட்டு அவரே இஸ்லாத்திற்கு மாறியதும் இங்குக் குறிப்பிடத் தக்கது.

நமக்கென நாளிதழும் தொலைக்காட்சியும் தொடங்கப்படும்போது நமது செய்திகள் உள்ளது உள்ளபடி உலகுக்கு உணர்த்தப்படும். அதற்கான காலம் கனிந்து வரும், இன்ஷா அல்லாஹ்.

இப்போதைக்கு நாம் செய்ய வேண்டியது என்ன?

3.தனியார் தொலைக்காட்சிகளைப் பயன்படுத்திக் கொள்ளுதல்

சமுதாய இயக்கங்கள் அவ்வப்போது தனியார் தொலைக்காட்சிகளில் தினந்தோறும் நேரத்தை ஒதுக்கி நிகழ்ச்சிகள் நடத்துகின்றன. இந்த நிகழ்ச்சிகளில் அவ்வப்போது மறைக்கப்பட்ட, திரிக்கப்பட்ட நம் சமுதாயச் செய்திகளின் உண்மை நிலவரங்களை விளக்கிச் சொல்வதிலும், உண்மை நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவதிலும் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

4.ஊடகத்துறை குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துதல்

இனிவரும் அடுத்த தலைமுறையினராவது கல்வியில் மேம்பாடு அடைய வேண்டும் என்னும் உயரிய நோக்குடன் சமுதாய இயக்கங்கள் ஆண்டு தோறும் மாணவர்களுக்கென கல்வி வழிகாட்டுதல் சேவைகளை கோடை விடுமுறையில் வழங்கி வருகின்றன. அதன் காரணமாக அண்மைக் காலமாக உயர்கல்வி கற்பதில் நம் சமுதாய மாணவர்கள் அதிக அக்கரை எடுத்து வருவதும், பெற்றோர்கள் தம் பிள்ளைகளை உயர்கல்வி பயில ஊக்கப்படுத்துவதும் பாராட்டுக்குரியன.

உயர்கல்வி பற்றிய தெளிவை வழங்கும்போது ஊடகத்துறை பற்றியும் இதழியல் பற்றியும் மாணவர்களுக்கு எடுத்துக் கூறி அதிகமதிகம் நம் சமுதாய மாணவர்களை இத்துறையில் கவனம் செலுத்தும்படி உற்சாகப்படுத்தினால், நம் சமுதாயத்தில் ஊடகவியாலளர்கள் அதிகமதிகம் உருவாக வாய்ப்புகள் ஏற்படும். பரவலாக ஊடகத்துறையில் நாம் ஊடுருவும்போது பெருமளவில் மறைத்தலும் திரித்தலும் தவிர்க்கப்படும்.

ஊடகங்களில் பணிபுரிபவர்கள் பொதுவாக அவற்றின் நிர்வகத்துக்கு கட்டுப்பட்டுத்தான் செயல்பட முடியும் என்றாலும், செய்தியாளர்கள் செய்திகளை வழங்கும் விதத்தில்கூட மறைத்தலும் திரித்தலும் நடக்கின்றன என்பதும் உண்மை. நம் சமுதாயச் செய்தியாளர்கள் அதிகமாகும்போது அவர்கள் உண்மையான செய்திகளை உள்ளது உள்ளபடி தருவதற்கு அதிக வாய்ப்புகள் உண்டு.

5. சமுதாயப் பத்திரிகைகள் ஊடகப் பயிற்சிப் பட்டறைகளை உருவாக்குதல்

நம் சமுதாயத்தின் பிரபலமான பத்திரிகைகள், குறிப்பாக வார இதழ்கள், பத்திரிகைத் துறையில் ஆர்வமுள்ள, எழுத்தாற்றல் மிக்க இளைஞர்களுக்குக் கட்டுரைப்போட்டிகள், செய்திசேகரிப்புப் பயிற்சிகள் ஆகியவற்றை நடத்துவதன் மூலம், திறமையானவர்களைத் தேர்ந்தெடுத்து அவர்களுக்கு அனுபவம் உள்ள ஊடகவியலாளர்களைக் கொண்டு பயிற்சி அளித்து சிறந்த பத்திரிகையாளர்களாக உருவாக்க வேண்டும். இத்திட்டத்தின் மூலம் ஆண்டு தோறும் சிலரையாவது தேர்ந்தெடுத்து அதற்கான பயிற்சியை அளித்தால் நம் சமுதயத்திலும் நாளடைவில் சிறந்த பத்திரிகையாளர்கள் உருவாக வழிபிறக்கும்.

6.பத்திரிகைகளுக்கு வாசகர் கடிதம் எழுதுதல்

நாம் அன்றாடம் வாசிக்கும் பத்திரிகைளில் இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் எதிரான தகவல்களை நாம் காண நேர்ந்தால் அத்தகவல் தவறானதாக இருப்பின் சரியான தகவலை தகுந்த ஆதாரங்களுடன் உடனுக்குடன் அப்பத்திரிகைக்கு மறுப்புக்கடிதம் எழுத வேண்டும்.

எங்கோ ஓர் இடத்தில் நடந்ததாக நாம் படிக்கும் செய்தி பற்றிய உண்மை நிலை நமக்குத் தெரியாது தான். ஆனால் அவரவர் வசிக்கும் பகுதியில் நடந்ததாக ஒரு தவறான செய்தியை காணும்போது அப்பகுதியைச் சேர்ந்தவர்களாவது இது பற்றிய உண்மை நிலையை அறிந்து தமது மறுப்பையும் உண்மை நிலையையும் தெரிவிக்கலாம் அல்லவா?

நாம் எழுதும் கடிதங்களை சம்பந்தப்பட்ட பத்திரிகை பிரசுரிக்காவிட்டாலும் (பெரும்பாலும் பிரசுரிக்க மாட்டார்கள் என்பது வேறு விஷயம்) மனம் தளராமல் தொடர்ந்து ஒவ்வொரு தவறான தகவலுக்கும் நமது எதிர்ப்பைக் கடிதம் மூலம் தெரிவிக்க வேண்டும். இதற்காகப் பெரும் பொருள் செலவு செய்யவேண்டியதில்லை ஒரு சாதாரண அஞ்சலட்டையேகூடப் போதும். மேலும் மேலும் தொடர்ந்து மறுப்புகளும் எதிர்ப்புகளும் வரும்போது அடுத்தடுத்த செய்திகளிலாவது கொஞ்சம் அடக்கியே வாசிப்பார்கள்.

7. தொலைக்காட்சிகளுக்கு மறுப்பைத் தெரிவித்தல்

தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் இவ்விதம் தவறான தகவல்கள் வரும்போது, தொலைபேசி மூலம் நேயர்கள் நேரடியாக தொடர்பு கொள்ளும் நிகழ்ச்சிகள் நடக்கும் தருணத்தைப் பயன்படுத்தி, நம் சமுதாயம் தொடர்பாக தவறான தகவல் வெளியிட்ட அவர்களின் தவறான போக்கை கண்டிக்க வேண்டும். உடனே இணைப்பை அவர்கள் துண்டித்தும் விடலாம்; ஆனாலும் நடுநிலையான நேயர்கள் அவர்களை இனம் கண்டு கொள்வார்கள் அல்லவா?

8. நீதிமன்றங்களில் வழக்குத் தொடுத்தல்

சமுதாயத்துக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் நோக்கில் தவறான தகவல்களை வெளியிடும் ஊடகங்களுக்கு எதிராக நீதி மன்றங்களில் வழக்குத் தொடரலாம். இவ்விதம் வழக்குத் தொடுப்பது பற்றிய விபரங்களை அறிய சமுதாயத்தில் அக்கரை கொண்ட வழக்குரைஞர்களை அனுகலாம். இலவச சட்ட ஆலோனைகள் வழங்க எத்தனையோ நல்ல வழக்குரைஞர்கள் நம் சமுதாயத்தில் இருக்கின்றனர். அவர்களை அணுகி ஆலோசனைகள் பெறலாம்.

9. ஊடகங்களின் பேட்டிகளைப் பயன்படுத்திக் கொள்ளுதல்

அவ்வப்போது பத்திரிகைள் மற்றும் தொலைக்காட்சிகள் சார்பாக ஏதேனும் பிரச்சினைகள் குறித்து சமுதாயத் தலைவர்களிடம் பேட்டி காண்பது வழக்கம். அத்தகைய பேட்டிகளை சமுதாயத் தலைவர்கள், மறைக்கப்பட்ட உண்மைகளை வெளிக் கொணரவும் திரிக்கப்பட்ட செய்திகளைத் தெளிவாக விளக்கிச் சொல்லவும் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

10.குறுஞ்செய்திகள் எனப்படும் எஸ் எம் எஸ் தகவல் பரிமாற்றம்

கைபேசி எனப்படும் செல்போன்கள் பட்டி தொட்டியெங்கும் பரவலாகப் பலரிடமும் உபயோகத்துக்கு வந்து விட்ட இக்காலத்தில் நமது கைகளில் உள்ள நமது கைபேசிகளையே நாம் ஓர் ஊடகமாக்கி அவ்வப்போது இஸ்லாம் மற்றும் முஸ்லிம்கள் குறித்த தவறான செய்திகள் ஊடகங்களில் படிக்க/பார்க்க நேர்ந்தால் அவற்றின் உண்மை நிலையைச் சுருக்கமாகக் குறுஞ்செய்திகள் எனப்படும் எஸ்எம்எஸ் மூலம் நமக்குத் தெரிந்தவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். குறிப்பாக மாற்று மத நண்பர்களுக்கு உண்மையை உணர்த்தலாம். பல கைபேசி இணைப்பு நிறுவனங்கள் இலவச எஸ்எம்எஸ் சேவையை வழங்குகின்றன. இத்தகைய இலவச சேவைகளை ஆக்கப்பூர்வமான வழிகளில் நாம் பயன்படுத்தலாம்.

11.ஜும்ஆ மேடைகள் என்னும் அற்புதமான ஊடகம்

ஊடகங்கள் உலகத்தில் உலாவரத் தொடங்குமுன்பே மிகச்சிறந்த ஊடகமாகிய ஜும்ஆ மேடைகள் நம்மிடம் இருக்கின்றன என்பதை நாம் உணரத் தவறிவிட்டோம்.

ஜும்ஆ மேடைகளில் தொழுகையையும் நோன்பையும் பற்றி மட்டுமே பேசிக் கொண்டிருக்காமல், சமுதாயத்திற்கு ஏற்பட்டுள்ள களங்கத்தைத் துடைத்தெறிவதும், நம் சமுதாயத்தைப் பற்றிய தவறான கண்ணோட்டத்தைக் களைவதும் கூட மார்க்கத்திற்கு உட்பட்டதுதான் என்பதை உணர்ந்து அந்தந்த வாரங்களில் நாம் சந்திக்கும் பிரச்சனைகளின் உண்மை நிலை குறித்து மக்களுக்கு உரை நிகழ்த்தும் ஆலிம்கள் உணர்த்த வேண்டும்.

ஜும்ஆ பிரசங்கம் நடத்தும் ஆலிம்கள் அவரவர் பகுதிகளில் நடக்கும் சம்பவங்கள் குறித்த விரிவான தகவல்களைத் திரட்டி அந்த வார ஜும்ஆ பிரசங்கத்தில் அது பற்றி விளக்க வேண்டும். ஆலிம்களாகிய மார்க்க அறிஞர்கள் அதற்கேற்பத் தங்களைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.

செய்தி ஊடகங்களில் பெரும்பாலும் பொய்யான தகவல்கள் திரும்பத் திரும்பத் கூறப்படுவதால் அவற்றைக் கேட்கும் நம் சமுதாயத்தவர் சிலர் கூட இவை பற்றிய உண்மை நிலையை அறியாதிருக்கலாம். அத்தகையோர் இந்த ஜும்ஆ உரைகளைக் கேட்பதன் மூலம் உண்மையை உணர்ந்து கொள்வர். பெரும்பாலான பள்ளிகளில் ஜும்ஆ உரைகள் ஒலிபெருக்கி மூலம் ஒலிபரப்பப்படுவதால் பள்ளிக்கு வெளியே இருக்கும் மாற்றுமத சகோதரர்களின் செவிகளையும் இச்செய்திகள் சென்றடையும்.

12. ஊடகங்களைப் புறக்கணிக்கும் கட்டாயம்

டென்மார்க் பத்திரிகை ஒன்று கடந்த ஆண்டு நமது உயிரினும் மேலான நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறித்த கேலிச்சித்திரம் வெளியிட்டதையும், அதற்கு ஆதரவாக அந்நாட்டு அரசு, "அது பத்திரிகை சுதந்திரம்" என்று சப்பைக் கட்டு கட்டியதையும் கண்டித்து உலகம் முழுதும் வாழும் முஸ்லிம்கள், குறிப்பாக டென்மார்க் அரசின் தயாரிப்புகளைப் பெருமளவில் இறக்குமதி செய்து வந்த மத்திய கிழக்கு நாடுகள் டென்மார்க் தயாரிப்புகளைப் புறக்கணித்ததால் அந்நாட்டின் பொருளாதாரத்தையே ஆட்டம் காணச் செய்தோமே! அந்த முன்னுதாரணத்தைப் பின்பற்றி நமக்கு எதிராகச் செயல்படும் அனைத்து ஊடகங்களுக்கும் எதிராக நாம் களம் இறங்க வேண்டும். நமக்கு எதிராக எழுதும் பத்திரிகைகளைக் காசு கொடுத்து வாங்குவதை முதலில் நாம் நிறுத்த வேண்டும். நமக்கெதிராக செயல்படும் தினமலர் போன்ற பத்திரிகைகளை முற்றிலுமாகப் புறக்கணிக்க வேண்டும்.

13.மக்கள் சக்திப் போராட்டம்

நம் சமுதாயத்திற்கு எதிராகக் கங்கணம் கட்டிக் கொண்டு களம் இறங்கியுள்ள ஊடகங்களைக் கண்டறிந்து அவற்றை நாம் விழிப்புடன் கண்கானித்து வரவேண்டும். இதற்கென அறிஞர் குழு ஒன்றை அமைத்துக் கண்கானித்து, விஷமத்தனத்தை அவை அரங்கேற்றும்போது அதற்கு எதிராக முழு சமுதாயமும் ஒன்றினைந்து அத்தகைய ஊடகங்களுக்கெதிராக வீதியில் இறங்கி ஜனநாயக முறையில் போராடவேண்டும்.

சமீபத்தில் நமது உயிரினும் மேலான நபிகள் நாயகம் குறித்து டென்மார்க் பத்திரிகையின் கேலிச்சித்திரத்தை வேண்டுமென்றே மறுபிரசுரம் செய்த தினமலருக்கு எதிராக நாம் போராடியதும், நமது வீரியமான போராட்டத்தைக் கண்டு அஞ்சி அவர்கள் பகிரங்க மன்னிப்புக் கேட்டதும் நினைவிருக்கலாம்.

14. இணையம் - நமக்கு வாளும் கேடயமும்

ஊடகங்களில் அதிநவீனமானதும் உலகம் முழுவதும் இப்போது பரவலாக உபயோகத்திற்கு வந்து விட்டதுமான இன்டர்நெட் எனப்படும் இணையத்தில் நாம் அதிக கவனம் செலுத்த வேண்டும்.

இஸ்லாத்திற்கெதிரான கருத்துக்களைத் திட்டமிட்டு பரப்புவதில் பத்திரிகை, தொலைக்காட்சி ஆகியவற்றையெல்லாம் விட அதிகமாகப் பொய்யும் புரட்டும் மறைத்தலும் திரித்தலும் இணையத்தில் கொடிகட்டப்பறக்கின்றன.

நேருக்கு நேர் நின்று போராட நெஞ்சுரம் இன்றி ஒளிந்து கொண்டு புறமுதுகில் குத்தும் கோழைகள் ஒருபுறம், கொடிய நஞ்சைத் தேன் கலந்து கொடுப்பதுபோல் இஸ்லாத்தின் பெயரால் முஸ்லிம்களைக் கவரும் விதத்தில் இணையத்தில் சில கருத்துக்களைப் பதித்து, துவக்கத்தில் இஸ்லாமியப் பதிவுகளைப்போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி, பின்னர் வாழைப்பழத்தில் ஊசியை ஏற்றுவதைப்போல் இஸ்லாத்திற்கு எதிரான கருத்துக்களைத் திணிக்கும் தளங்கள் ஒருபுறம், பகிரங்கமாகவே இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் எதிராக வன்முறையைத் தூண்டும் சங்பரிவாரச் சதித்தளங்கள் இன்னொரு புறம், இவ்விதம் அநேக சவால்களை இணையத்தில் நாம் அன்றாடம் சந்திக்க நேருகிறது.

இணையத்தில் உலாவரும் இஸ்லாமியச் சகோதரர்கள் மிகவும் எச்சரிக்கையுடன் இணையத்தைக் கையாள வேண்டும். ஈமானின் வலிமையை இதயத்தில் தேக்கி இணைய எதிரிகளை இணையத்தின் மூலமே தோற்கடிக்க வேண்டும்.

சில புகழ்பெற்ற இணைய தளங்கள் இலவசமாகப் பதிவுகளை உருவாக்க வழிவகை செய்து வைத்துள்ளன. அவற்றை முறையாகப் பயன்படுத்தி இஸ்லாத்திற்கெதிரான சவால்களை இணையத்தில் முறியடிக்க வேண்டும்.

நாம் உருவாக்கிய பதிவுகளை நமக்கு அறிமுகமானவர்களுக்கு மட்டுமே கொடுத்துப் படிக்கச் சொல்வதை விடுத்து முறையாக இணைய தளங்களின் தேடுபொறிகளிலும் பதிவுகளைத் திரட்டும் தமிழ்மணம், தமிழ்வெளி, திரட்டி, போன்ற அனைத்துப் பதிவுத்திரட்டிகளிலும் பதிந்து வைத்தால்தான் நமது பதிவுகளும் அவற்றின் மூலம் நாம் சொல்லும் கருத்துக்களும் அனைவரையும் சென்றடையும்.

வலைப்பதிவுகளில் இஸ்லாத்திற்கெதிரான கருத்துக்களைக் காண நேர்ந்தால் உடனுக்குடன் அவற்றுக்குப் பின்னூட்டங்களின் மூலம் பதில் கொடுக்க வேண்டும். பின்னூட்டங்கள் இடும்போது சரியான தகவல்களை ஆதாரங்களுடன் பதிக்க வேணடும்.

பதில் சொல்லும் அளவுக்கு போதிய ஆற்றல் நமக்கு இல்லாவிட்டால் இதே விஷயம் குறித்துப் பல்வேறு முஸ்லிம் வலைப்பதிவர்கள் தரும் தகவல்களை நன்றியுடன் குறிப்பிட்டு அவற்றுக்கான தொடுப்புகளைக் கொடுக்க வேண்டும்.

இணையத்தில் உலா வரும் இஸ்லாத்திற்கெதிரான தகவல்களுக்கு திறமையுடன் பதில் அளிக்கும் சகோதரப் பதிவர்களான அபூமுஹை, நல்லடியார், இறைநேசன், வஹ்ஹாபி, ஜீஎன், இப்னுபஷீர், மரைக்காயர், அபூசாலிஹா போன்ற சிறந்த பதிவர்கள் அருமையாக இப்பணியைச் செய்து வருகின்றனர். இவர்களைப்போல் இன்னும் ஏராளமான பதிவர்கள் அற்புதமாகவும் அமைதியாகவும் அழகாகவும் இணைய எதிரிகளை எதிர்கொண்டு வருவதைத் தொடர்ந்து இணையத்தில் உலா வருபவர்கள் அறிவார்கள். இவர்களின் பதிவுகளை ஊன்றி கவனித்தால் ஏராளமான தகவல்கள் நமக்குக் கிடைக்கும்.

15. முஸ்லிம் பதிவர்கள் நடத்தும் பொதுவான பதிவுகள்

மொழி, கலை, இலக்கியம், கதை, கவிதை, கட்டுரைகள் இப்படிப் பொதுவானவற்றில் ஆர்வம் கொண்ட முஸ்லிம் பதிவர்கள் இணையத்தில் நிறைய பேர் இருப்பது ஆறுதலான விஷயம். இஸ்லாமியப் பதிவுகள் எழுதும் எழுத்தாளர்களைவிடப் பொதுவான பதிவுகள் எழுதும் எழுத்தாளர்கள், இணையத்தில் இஸ்லாம் குறித்து மறைக்கப்படும் திரிக்கப்படும் செய்திகளை வெளிக் கொணர்வதற்கு மிகவும் ஏற்றவர்கள் எனலாம்.

இஸ்லாமிய பதிவுகளை முஸ்லிம்கள் மட்டுமே பெரும்பாலும் பார்வையிடுவர். எனவே இஸ்லாமியப் பதிவுகளில் எடுத்துவைக்கப்படும் கருத்துகள் முஸ்லிம்களை மட்டுமே சென்றடையும். ஆனால் பொதுவானவற்றில் ஆர்வம் கொண்டு இணையத்தில் உலாவரும் அனைத்துச் சமய சகோதர சகோதரிகள் கவனத்திற்கு நம்மைப் பற்றிய உண்மைகளை இத்தகைய வலைப்பதிவர்களால்தான் கொண்டு சேர்க்க முடியும்.

எனவே மொழி, இலக்கியம், கதை கவிதை கட்டுரைகளில் ஆர்வம் கொண்ட இஸ்லாமியப் பதிவர்களே! உங்கள் இலக்கிய ஈடுபாட்டுடன் நம் சமுதாயச் செய்திகளையும் இஸ்லாம் மற்றும் முஸ்லிம்கள் தொடர்பான உண்மையான தகவல்களையும் இடையிடையே உங்கள் வாசகர்களுக்கு மத்தியில் கொண்டு செல்லுங்கள். நடுநிலையான நல்லவர்கள் உண்மைகளை உணர்ந்து கொள்ள வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுங்கள். இதன் மூலம் இம்மையில் மட்டுமின்றி மறுமையிலும் வெற்றி பெறுவீர்கள். அல்லாஹ் உங்களுக்கு அளித்திருக்கும் அற்புதமான எழுத்தாற்றலை இஸ்லாத்திற்காகப் பயன்படுத்தியதற்கு அளப்பெரும் கூலியை நாளை மறுமையில் பெறுவீர்கள்.

16.இஸ்லாமிய இணைய தளங்களின் மேலான கவனத்திற்கு

பத்திரிகை, தொலைக்காட்சி ஆகிய ஊடகங்களைவிட இணையத்தில் இஸ்லாமிய எதிர்ப்பு எந்த அளவுக்கு இருக்கிறதோ அதைவிடவும் அதிகமாகவே இஸ்லாமியப் பிரச்சாரமும் நடக்கிறது என்பதே உண்மை. உலககெங்கும் இணைய வழியே இஸ்லாத்தை அறிந்து அதன்பால் ஈர்க்கப்பட்டவர்கள் அதிகம். இந்நிலையை உருவாக்கிய இஸ்லாமிய இணைய தளங்களைப் பாராட்ட வேண்டும்.

இஸ்லாமிய இணைய தளங்கள், இணைய உலகில் இஸ்லாத்திற்கும் முஸ்லிம்களுக்கும் எதிரான மறைத்தலையும் திரித்தலையும் சரியான முறையில் வெளிக் கொணர அதிக கவனம் எடுக்க வேண்டும். சதிகாரர்களின் சதியை துணிவுடன் தோலுரித்துக் காட்டிய தெஹல்கா போன்ற வீரமும் விவேகமும் நிறைந்த தளங்களைப்போல் உங்கள் தளங்களை பயன்படுத்தி உண்மைகளை வெளிச்சத்திற்கு கொண்டு வரவேண்டும்.

சமூகத்தின்பால் நீங்கள் கொண்டுள்ள அக்கரை அவ்வப்போது நீங்கள் வெளியிடும் ஆக்கங்களில் பிரதிபலிக்க வேண்டும். புகழ் பெற்ற இஸ்லாமிய இணைய தளங்களுக்கென ஏராளமான வாசகர்கள் உள்ளனர். சமுதாயம் உங்கள் நிலைபாட்டை உன்னிப்பாகக் கவனித்து வருகிறது.

நமது உயிரினும் மேலான நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை அவமதித்த தினமலர் நாளிதழுக்கெதிராக 'சத்தியமார்க்கம்' போன்ற இணைய தளங்கள் விடுத்த வேண்டுகோளை ஏற்று வளைகுடா நாடுகளில் வசிக்கும் வாசகர்கள், தாம் வசிக்கும் நாடுகளில் அந்த நாளிதழின் இணைய தளத்தை முடக்க மிகவும் ஆர்வத்துடன் செயல்பட்டதை இணையத்தில் தொடர்புடைய பலரும் அறிவர். எனவே எண்ணற்ற வாசகர்களைத் தம்வசம் கொண்டுள்ள இஸ்லாமிய இணைய தளங்கள் நம் சமுதாய மக்களிடையே போதிய விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.

17.மின்னஞ்சல் மூலம் உண்மையை உணர்த்துதல்

பல்வேறு இலவச மின்னஞ்சல் சேவைகள் இணையத்தில் கிடைக்கின்றன. அவற்றைப் பயன்படுத்தி மறைக்கப்பட்ட திரிக்கப்பட்ட கருத்துக்களின் உண்மையை விளக்கி எண்ணற்ற இணைய எழுத்தளர்கள் அற்புதமான மடல்களை எழுதிக் குவிக்கின்றனர். அத்தகைய மின்னஞ்சல்கள் நமக்கு வரும்போது சக நண்பர்களின் மின்னஞ்சல் முகவரிகளுக்கு அவற்றை அனுப்பிவைக்க வேண்டும். மடலாடற் குழுமங்களில் நமது மின்னஞ்சல் முகவரியை இணைத்துக் கொண்டு உண்மையை நம் சக நண்பர்களுக்கு மத்தியில் - குறிப்பாக - பிறமத நண்பர்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும்.

முடிவுரை

"உங்களில் எவரேனும் தீய செயல் நடப்பதைக் கண்டால் அவர் அதனைத் தம் கரங்களால் தடுக்கட்டும்; இயலாவிட்டால் நாவினால் தடுக்கட்டும்; (அதற்கும்) இயலா விட்டால் இதயத்தால் தடுத்து(ஒதுங்கி)க் கொள்ளட்டும். இது ஈமானின் பலவீனமான (இறுதி) நிலையாகும்" என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூ சயீத் (ரலி); ஆதாரம்: புகாரி.

மேற்காணும் நபிமொழிக்கேற்ப நமது சமுதாயத்திற்கெதிரான மறைத்தலும் திரித்தலும் நம் கண் முன்னே நடைபெறும்போது "நமக் கென்ன?" என்று ஒதுங்கி நிற்காமல் ஒவ்வொரு முஸ்லிமும் தம்மால் இயன்ற வழியில் இத்தகைய அநீதிக் கெதிராகக் களம் இறங்க வேண்டும்.

நம் சமுதாயம் விழிப்புடன் இருக்கிறது என்பதை ஊடக உலகம் உணர வேண்டும்.

இதை உணர்த்த வேண்டியது நமது கடமை என்பதை ஒவ்வொரு முஸ்லிமும் உணர்ந்தால் ஊடகங்கள் மட்டுமல்ல உலகமே இனி நம் கைகளில், இன்ஷா அல்லாஹ்.

***

கட்டுரை ஆக்கத்திற்குத் துணை நின்ற நன்றிக்குரிய தளங்கள் மற்றும் பதிவுகள்

ஆக்கம்: சகோதரர் அப்துஸ்ஸலாம் மஸ்தூக்கா. 

 
 
சத்தியமார்க்கம்.காம் தளத்தில் வெளியான கட்டுரை.
 
நன்றி : சத்தியமார்க்கம்.காம்
 
 
 
அன்புடன்
ஹஸன் கமருதீன்.

No comments: