வலைப்பதிவில் தேட..

Wednesday, March 26, 2008

அண்ணன் மனைவி அண்ணியை..

அஸ்ஸலாமு அலைக்கும்(வரஹ்). அன்னிய பெண்களை இச்சை இல்லாமல் பார்கலாமா? அதே போன்று அண்ணனுடைய மனைவி, மாமாவுடைய மனைவி போன்றோர்களையும் இச்சை இல்லாமல் பார்க்கலாமா? அப்படி பார்க்க அனுமதி இல்லையெனில் யார் யாரை பார்க்க இஸ்லாம் அனுமதிக்கின்றது? இது பற்றி நமது மார்க்கம் என்ன கூறுகின்றது?

Name: Azeezudheen
email: skn.azeesudeen@....
Location: Dubai
Subject: Question
...............


நமக்கு உரிமையுள்ள மனைவியைத் தவிர வேறு எந்தப் பெண்ணையும் இச்சையுடன் பார்ப்பதற்கு இஸ்லாத்தில் அனுமதியில்லை.

இச்சையில்லாமல் பார்ப்பது என்பது பொதுவான அனுமதியாகும்.

அண்ணன், தம்பி மனைவிகள் விஷயத்தில் மிகுந்த எச்சரிக்கையுணர்வுடன் இருப்பது அவசியம்.

ஏனெனில்

முகம் கை தவிர மற்றப் பாகங்கள் முழுதும் மறைந்துள்ள நிலையில் பெண்கள் இருந்தால் அவர்களை தேவைக்காக பார்க்கலாம் என்ற அனுமதி அடங்கியுள்ள வசனம் கீழே!

முஃமினான பெண்களுக்கும் நீர் கூறுவீராக அவர்கள் தங்கள் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும்; தங்கள் வெட்கத் தலங்களைப் பேணிக்காத்துக் கொள்ள வேண்டும்; தங்கள் அழகை அதினின்று (சாதாரணமாக வெளியில்) தெரியக் கூடியதைத் தவிர (வேறு எதையும்) வெளிக் காட்டலாகாது இன்னும் தங்கள் முன்தானைகளால் தங்கள் மார்புகளை மறைத்துக் கொள்ள வேண்டும். (அல்குர்ஆன் 24:31)

வீடுகளில் இருக்கும் போது பெண்கள் சாதாரண உடைகளுடன் இருப்பார்கள். அது அவர்களின் உடலில் முகம் முன் கைகளைத் தவிர மற்றப்பாகங்களை மறைக்காத நிலையில இருந்தால் அவர்கள் மற்ற ஆண்களுக்கு மத்தியில் வெளிவரக் கூடாது. வெளிவரும் சூழ்நிலை ஏற்பட்டால் மறைத்த நிலையிலேயே வர வேண்டும். முகம், கைகளில் முற்பகுதி தெரியும் நிலையில் வெளிப்படலாம் என்பதிலிருந்தே ஆண்கள் அவசியத் தேவைக்காக பெண்களைப் பார்க்கலாம் என்பது விளங்குகின்றது.

வீட்டில் சாதாரணமாக வீட்டு உடைகளுடன் இருக்கும் போது யார் யார் முன்னிலையில் அந்த உடையுடன் வரலாம் என்பதையும் வசனம் தொடர்ந்து விளக்குகின்றது.

(முஃமினான பெண்கள்) தம் கணவர்கள்,
தம் தந்தையர்கள், (பெற்றத் தந்தை - வாப்பா, அத்தா, பெரியத்தா, சின்னத்தா)
தம் கணவர்களின் தந்தையர்கள் (மாமனார்கள், சின்ன பெரிய மாமனார்கள்)
தம் புதல்வர்கள் (மகன்கள்)
தம் கணவர்களின் புதல்வர்கள், (கணவருக்கு ஏற்கனவே திருமணமாகி ஆண் குந்தைகள் இருந்தால் அவர்கள்)
தம் சகோதரர்கள் (அண்ணன் தம்பிகள்)
தம் சகோதரர்களின் புதல்வர்கள், (அண்ணன் தம்பிகளின் மகன்கள்)
தம் சகோதரிகளின் புதல்வர்கள், (அக்காள் தங்கைகளின் மகன்கள்)
ஆடவர்களில் தம்மை அண்டி வாழும் (பெண்களை விரும்ப முடியாத அளவு வயதானவர்கள்) தளர்ந்து போன முதியவர்கள்.
பெண்களின் மறைவான அங்கங்களைப் பற்றி அறிந்து கொள்ளாத சிறுவர்கள் ஆகிய இவர்களைத் தவிர, (வேறு ஆண்களுக்குத்) தங்களுடைய அழகலங்காரத்தை வெளிப்படுத்தக் கூடாது. (அல்குர்ஆன் 24:31)

திருமணம் செய்ய தடுக்கப்பட்ட பெண்கள் ஆண்களுக்கு முன் சாதாரண உடையில் காட்சியளிக்கலாம். அதாவது மாமி, சின்னம்மா போன்றவர்கள் (திருமணம் செய்ய விலக்கப்பட்ட பெண்கள் யார் யார் என்பதை அல்குர்ஆன் 4:23 வசனத்தில் அறியலாம்.

சாதாரண உடையுடன் பார்வையில் படலாம் என்ற பட்டியலில் அண்ணிகள் (அண்ணன் - தம்பி மனைவிகள்) அடங்கவில்லை என்பதால் அவர்கள் முகம் முன்கைகள் தெரியும் நிலையில் மட்டுமே மச்சான்களிடம் (கணவரின் உடன் பிறந்த சகோதரர்களிடம்) இருக்க வேண்டும்.

பெண்களை சாதாரணமாக பார்க்க அனுமதியுள்ளது என்றால் முஃமினான ஆண்கள் தங்கள் பார்வையை தாழ்த்திக் கொள்ள வேண்டும் என்ற பொருள் அல்குர்ஆன் 24:30 வசனத்தின் பொருள் என்ன?

இங்கு பார்வையைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும் என்பது பெண்களை விட்டு பார்வையைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும் என்றக் கருத்தில் மட்டும் வரவில்லை. பொதுவாகவே தவறான - பாவமான அனைத்தையும் விட்டு பார்வையைத் தாழ்த்திக் கொள்ள வேண்டும் என்ற பொருளில் தான் வந்துள்ளது.

பார்வையில் பாவம் உருவாகும் நிலை இருந்தால் பெண்களை விட்டு பார்வையைத் திருப்பிக் கொள்ள வேண்டும்.

Wednesday, March 19, 2008

அரசு மானியம் பெறுவது ஹராமா...?

அஸ்ஸலாமு அலைக்கும். சிறுமான்மை நலத்திற்காக அரசின் சலுகைகளை பெற பொதுவாக போராடும் நாம், அரசு தரும் மானியங்களை, கடன் உதவிகளை பெறுவது கிடையாது. யாரும் தர மறுக்கும் பட்சத்தில், சிறுமான்மையினருக்காக ஒதுக்கப்படும் அரசின் கடனுதவித் திட்டங்கள் மற்றும் மானியங்களை பெறுவது ஹராமா? நான் பல வருடங்களாக வியாபரம் செய்து முன்னுக்கு வராமல் போனதற்கு எந்த பொருளாதால உதவிகளும் கிடைக்கமால் போனதுதான். ஆனால் அரசின் பல நல்ல திட்டங்களை பெற இது ஹராமாக இருக்குமோ என்கிற அச்சத்தில் விட்டு விட்டடேன். தயவு செய்து இது குறித்து விளக்கம் அளிக்கவும். அல்லாஹ் நல்லருள் புரிவானாக.

அன்புடன் பஃக்ருத்தீன்
Name: M.G. Fakrudeen
Location: Riyadh
Subject: Question
..............................
அரசின் நல திட்டங்கள் உட்பட பெரும்பாலும் பொருளாதார வழிகாட்டல் நம் சமுதாயத்திற்கு இதுவரை கிடைக்கவில்லை. வணக்க வழிபாடுகளில் பிரச்சாரகர்கள் காட்டும் ஆர்வமும் அக்கறையும் பொருளாதார வழிகாட்டலில் காட்டுவதில்லை. இதற்கு காரணம் அவர்கள் கற்றக் கல்வி முறை என்றுக் கூட கூறலாம்.

அரசின் நல திட்டங்களில் முஸ்லிம்கள் பெருமளவு பங்கேற்க வேண்டும். ஏனெனில் அரசின் மக்கள் நல திட்டங்களில் பயன்படுத்தப்படும் தொகை மக்களின் வரிப்பணமாகும்.

நம்மிடமிருந்து பெற்றத் தொகையை அரசு வேறொரு திட்டத்திற்காக நம்மிடம் வழங்கும் போது அதை புறக்கணிப்பது நமது தொகையை நாமே புறக்கணி்ப்பதற்கு சமமாகி விடும்.

இப்போதுள்ள கேள்வி, அரசின் நல திட்டங்களுக்காக அரசு வழங்கும் கடன் தொகை என்பது வட்டியை அடிப்படையாகக் கொண்டதாகும். கடன் பெற்றால் அதற்கு வட்டி செலுத்தும் நிலை ஏற்படுவதால் அரசின் நல திட்டங்களில் பங்கேற்க முடியுமா.. என்பதாகும்.

இதற்கு விடைக் காண்பதற்கு அரசி்ன் நல திட்டங்களின் விதிகள் குறித்த அறிவு நமக்கு இருக்க வேண்டும்.

அரசு தொழில் கடனுக்காக ஒதுக்கும் மானியம் என்பது நமது வரிப் பணம் என்பதை முதலில் கவனத்தில் கொள்ளும் அதே வேலை கடன் தொகை அரசால் தள்ளுப்படி செய்யும் நிலையும் அவ்வப்போது ஏற்படுகின்றது.

பணம் கொடுத்துப் பணம் பெறுவது வட்டி என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது என்பதால் அரசிடம் இருந்து பணம் பெற்று அதற்கு மேதலிக பணம் கொடுப்பது வட்டி என்று அஞ்சுபவர்கள் அரசின் தொழில் மற்றும் விவசாய திட்டங்களில் பங்கேற்கலாம்.

பணமாக பெறாமல் தொழில் கருவிகளாகவோ விவசாய நிலங்களாகவோ பெறுபவர்கள் அதிலிருந்து அரசுக்கு கொடுக்கும் தொகை வட்டியில் அடங்குமா என்றால் திட்டமாக அவற்றை வட்டி என்று சொல்ல முடியாது. ஏனெனில் பணம் பொருளாக மாறும் போது அது வட்டியின் தரத்தை இழக்கின்றது.

உதாரணமாக வயலில் உழுவதற்கு ஒரு டிராக்டரை அரசிடமிருந்து பெறுபவர் அதற்காக அரசுக்கு மாதந்தோரும் ஒரு தொகை செலுத்துகிறார் என்றால் அது இஸ்லாமியப் பார்வையில் அது பொருளுக்கான வாடகையாகவோ, அல்லது லாபத்தில் குறைந்த ஒதுக்கீடாவோதான் அது அமையும்.

வட்டி என்ற பெயரில் இன்றைக்கு இருக்கும் திட்டங்கள் அனைத்தும் இஸ்லாமியப் பார்வையில் வட்டியாகுமா என்பது ஆய்வுக்குரியதாகும்.

Sunday, March 9, 2008

தங்கத்திலே ஒரு குறை

முஸ்லிம் ஆண்கள் தங்கம் அணிவதற்கு ஏன் அனுமதியில்லை. மாற்றுமத சகோதரர் இதைப்பற்றி என்னிடம் கேட்கிறார். தெளிவாக விளக்கவும்.

Name: Syed Mansoor
email: alshifas@...
Location: Abu Dhabi
Subject: Question
...................

ஆண்களுக்கு தங்கம் ஹராம் என்று இறைத்தூதர் தடுத்தது உண்மைதான். எல்லா நிலைகளிலும் ஆண் ஆணாகவும் - பெண் பெண்ணாகவும் இருக்க வேண்டும் என்ற இயல்பை இஸ்லாம் விரும்புகின்றது. நடை - உடை - பாவனை - பேச்சு - செயல்பாடு என்ற அனைத்திலும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் வித்தியாசம் இருக்க வேண்டும்.

பெண்ணை பெண் என்று எடுத்துக் காட்டும் உடைகளை ஆண்களோ, ஆண்களை அடையளாப்படுத்தும் உடைகளைப் பெண்களோ அணியக் கூடாது என்றும் இஸ்லாம் சொல்லியுள்ளது.

அதே போன்று தான் அணிகலன்களும். தங்கம் என்பது பொதுவாக, காலாகாலமாக, பெண்களுக்கான ஆபரணம் என்று வழக்கில் உள்ளது. தங்க நகை அணியும் போது ஒரு பெண் கூடுதல் அழகைப் பெறுகிறாள். அவளுக்கென்று, அவள் அழகை மேம்படுத்தும் ஆபரணமாக இருப்பதை ஆணும் தனக்காக்கிக் கொள்ளக் கூடாது என்ற கருத்து இதில் அடங்கி இருக்கலாம். ஆண் தங்கம் அணிவதால் அவன் அழகு மேம்படப் போவதில்லை. அது வெறும் 'பந்தா' தோரணையை மட்டுமே ஏற்படுத்தும்.

மைனர் சைன் என்று போட்டுக் கொள்ளும் சிலர் தங்கள் சட்டையின் சில பொத்தான்களை திறந்து விட்டுக் கொண்டு, தெருக்களில் பெண்களுக்கு முன்னால் உலவுவதைப் பார்க்கலாம். ஆண்கள் தங்கம் அணிவது இத்தகைய செயல்களுக்கு மட்டுமே வழிவகுக்கும்.

தேவைக்கு ஆண்கள் தங்கம் அணிவதை இஸ்லாம் தடுக்கவில்லை. உடைந்துப் போன, அல்லது பிடுங்கி எடுத்த பற்களுக்கு பதிலாக இன்றைக்கு நவீன சிகிட்சை முறை பிரபல்யமாகி புதிய செயற்கைப் பற்கள் வந்து விட்டன. ஒரு காலத்தில் பற்களுக்கு தங்கத்தைப் பயன்படுத்தி வந்தனர். அத்தகைய தேவைக்கா ஆண் தங்கத்தைப் பயன்படுத்தினால் தடையில்லை. நவீன அறுவை சிகிட்சையில் இன்றைக்கு பொருத்தப்படும் உடல் உறுப்புகள் போன்ற வளர்ச்சியில்லாத காலத்தில் போரில் மூக்கு வெட்டப்பட்ட ஒருவர் தங்கத்தால் மூக்கை வடிவமைத்துக் கொண்டார் அதை இறைத்தூதர் அனுமதித்தார்கள்.

சிறிய அளவிளான இத்தகைய தங்கங்களை தேவைக்கேற்ப ஆண்கள் பயன்படுத்திக் கொள்ளலாம்.

தங்கம் - பட்டு - வெள்ளிப் போன்றவை பெண்கள் பிரத்யேகமாக பயன்படுத்துபவையாகும். அதில் ஆண்கள் போட்டிப் போடக் கூடாது என்பதால் அவை ஆண்களுக்கு தடுக்கப்பட்டிருக்கலாம். ஆரம்ப வரிகளைப் படியுங்கள். "ஆண் ஆணாகவும், பெண் பெண்ணாகவும் (எல்லா நிலைகளிலும்) இருக்க வேண்டும் என்று இஸஸ்லாம் விரும்புவதைப் புரிந்துக் கொண்டால் இந்தத் தடைக்காண அர்த்தம் புரிந்து விடும்.

Monday, March 3, 2008

இந்த விருந்துக்கு செல்லலாமா..?

அஸ்ஸலாமு அலைக்கும். "விருந்துக்காக அழைப்பவரின் அழைப்பை ஏற்றுக் கொள்வது" நபி (ஸல்) அவர்கள் நமக்கு காட்டிதந்த வழிமுறையாகும். ஆனால் ஒருவரது வருமானம் ஹராமான முறையில் பெறப்பட்டதாக இருக்கும்போது அவருடைய அழைப்பை ஏற்றுகொள்ளலாமா?

Name: Azeezudheen
email: skn_azeesudeen@....
Location: Dubai
Subject: Kelvi

அனுமதிக்கப்பட்ட ஒரு பொருளை ஒருவர் ஹராமான வழியில் பெறுகிறார் அதை அவர் பிறருக்கு கொடுக்கிறார் என்றால் அதைப் பெற்றுக் கொள்வதற்கு மார்க்கத்தில் தடையொன்றும் இல்லை.

பணம் என்பது ஹலாலான ஒன்று. அதை லஞ்சமாக பெற்ற ஒருவர் தன் குடும்பத்திற்காக செலவு செய்கிறார் அல்லது நற்பணிகளுக்கு கொடுக்கிறார் என்றால் லஞ்சம் பெற்றதற்கு அவர் குற்றவாளியாவாரே தவிர அவரிடமிருந்து அதைப் பெற்றுக் கொள்ளும் எவரும் மார்க்கம் அனுமதிக்கப்பட்டவழியில் அதைப் பெறுவதால் அவர்களுக்கு அது ஹராமாகாது.

நபி(ஸல்) அவர்கள் தனக்கும் தன் குடும்பத்தாருக்கும் தர்மப் பொருளை ஹராமாக்கிக் கொண்டார்கள். ஹலாலான பொருளை ஒருவர் தரமமாக நபி(ஸல்) அவர்களுக்கு வழங்கினால் அது அவர்களுக்கு ஹராமாகும்.

பாகம் 3, அத்தியாயம் 50, எண் 2576

அல்லாஹ்வின் தூதரிடம் உணவுப் பொருள் கொண்டு வரும் போது இது அன்பளிப்பா? தருமமா? என்று அவர்கள் கேட்பார்கள். தருமம் தான் என்று பதிலளிக்கப்பட்டால் தம் தோழர்களிடம், நீங்கள் உண்ணுங்கள் என்று கூறிவிடுவார்.
.............................

இதை கவனத்தில் கொண்டு கீழுள்ள நபிமொழியைப் பாருங்கள்.

பாகம் 2, அத்தியாயம் 24,எண் 1495 அனஸ்(ரலி) அறிவித்தார்.

தர்மமாகக் கொடுக்கப்பட்ட இறைச்சி நபி(ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்பட்டது. அப்போது அவர்கள் இது பரீராவுக்குத் தர்மமாகும்; ஆனால் நமக்கு அன்பளிப்பாகும்' என்றார்கள்.
...........................

பாகம் 6, அத்தியாயம் 68, எண் 5279

பாத்திரம் ஒன்றில் இறைச்சி கொதித்துக் கொண்டிருந்த நிலையில் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் (வீட்டுக்குள்) நுழைந்தார்கள். அப்போது அவர்களுக்கு முன் ரொட்டியும் வீட்டிலிருந்த குழம்பும் வைக்கப்பட்டது. அப்போது அவர்கள் 'பாத்திரத்தில் இறைச்சி இருக்கக் கண்டேனே! (அது என்னவாயிற்று?)' என்று கேட்டார்கள். அதற்குக் குடும்பத்தார் 'ஆம்! (இருக்கிறது)ஆனால், அது பரீராவுக்கு தர்மமாக வழங்கப்பட்டதாகும். தாங்கள் தாம் தர்மப் பொருட்களைச் சாப்பிடமாட்டீர்களே?' என்று கூறினர். அப்போது நபி(ஸல்) அவர்கள் 'அது பரீராவுக்குத்தான் தர்மம்; நமக்கு அது (பரீராவிடமிருந்து) அன்பளிப்பு' என்றார்கள்.
....................

பரீரா என்ற நபித்தோழியருக்கு ஆட்டிறைச்சி தர்மமாக கிடைக்கின்றது. தர்மம் என்ற நிலையில் அது பரீராவுக்கு ஹலாலாகவும் நபி(ஸல்) அவர்களுக்கு ஹராமாகவும் இருந்தது. தனக்கு கிடைத்த தர்மத்தை பரீரா நபி(ஸல்) அவர்களுக்கு அன்பளிப்பாக கொடுக்கின்றார். அதை நபி(ஸல்) பெற்றுக் கொண்டு (பிறருக்கு விளக்கமளித்து விட்டு) உண்கிறார்கள்.

இதிலிருந்து நமக்கு கிடைக்கும் வழி அனுமதிக்கப்பட்ட வழியா என்பதை மட்டும் பார்த்து விருந்தையோ - இதர எதுவொன்றையோ பெற்றுக் கொள்ளலாம் என்பதை விளங்கலாம்.

இதை இன்னும் சற்று விளக்கமாக சொல்வதென்றால் யுதர்கள் பற்றிய விளக்கத்தை நாம் எடுத்துக் கொள்ளலாம்.

யுதர்கள் மீது வட்டி ஹராமாக்கப்பட்டது ஆனால் அவர்கள் அதை பொருட்படுத்தாமல் வட்டியில் மூழ்கினார்கள்.

وَأَخْذِهِمُ الرِّبَا وَقَدْ نُهُواْ عَنْهُ وَأَكْلِهِمْ أَمْوَالَ النَّاسِ بِالْبَاطِلِ وَأَعْتَدْنَا لِلْكَافِرِينَ مِنْهُمْ عَذَابًا أَلِيمًا
வட்டி வாங்குவது அவர்களுக்குத் தடை செய்யப்பட்டிருந்தும், அவர்கள் அதை வாங்கி வந்ததன் (காரணமாகவும்,) தவறான முறையில் அவர்கள் மக்களின் சொத்துகளை விழுங்கிக் கொண்டிருந்ததன் (காரணமாகவும், இவ்வாறு தண்டனை வழங்கினோம்), இவர்களில் காஃபிரானோருக்கு (மறுமையில்) நோவினை செய்யும் வேதனையையும் நாம் சித்தப்படுத்தியுள்ளோம் (அல் குர்ஆன் 4:161)

பாகம் 2, அத்தியாயம் 34, எண் 2224
இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்'
'யூதர்களை அல்லாஹ் சபிப்பானாக! அவர்களுக்குக் கொழுப்பு ஹராமாக்கப்பட்டபோது அதைவிற்று அதன் கிரயத்தை அவர்கள் சாப்பிட்டார்கள்.' என அபூ ஹுரைரா(ரலி) அறிவிக்கிறார்கள்.

யுதர்களைப் பொருத்தவரை அவர்களின் வருமானம் ஹராமான வழியில் இருந்தது என்பதற்கு இந்த வசனமும் நபிமொழியும் சான்றாக உள்ளது.

இவர்களோடு நமக்குள்ள உறவைப் பற்றி குர்ஆன் குறிப்பிடும் போது,

وَطَعَامُ الَّذِينَ أُوتُواْ الْكِتَابَ حِلٌّ لَّكُمْ
வேதம் கொடுக்கப்பட்டோரின் உணவும் உங்களுக்கு ஹலாலானதே. (அல்குர்ஆன் 5:5) என்று குறிப்பிடுகின்றது. வேதக்காரர்களில் முக்கியமானவர்களாக கருதப்படுபவர்களைப் பற்றி குர்ஆன் 'அவர்களின் வருமானம் ஹராமான வழியில் இருந்தது' என்று கூறிவிட்டு அவர்களின் உணவு உங்களுக்கு ஹலால் என்றும் குறிப்பிடுகின்றது.

இதிலிருந்து நமக்கு வரும் வழி அனுமதிக்கப்பட்ட வழியாக இருந்தால் நாம் சாப்பிடலாம் பெற்றுக் கொள்ளலாம் என்பதை விளங்க முடிகின்றது.

எனவே ஹராமான வழியில் பொருள் திரட்டுபவர்கள் நம்மை விருந்துக்கு அழைத்தால் அதில் கலந்துக் கொள்வது பற்றி தடையொன்றும் இல்லை. அதே நேரம் அவர்களின் தவறை சுட்டிக்காட்டும் கடமையும் நமக்கு இருக்கின்றது என்பதை மறந்து விடக் கூடாது.
அல்லாஹ் மிக்க அறிந்தவன்