வலைப்பதிவில் தேட..

Friday, August 22, 2008

நோன்பு - தலைப்பிறை

அன்பிற்கான சகோதரர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்.
காலம் முழுதும் உலகவாழ்க்கையையே குறிக்கோளாக கொண்டு உழன்றுகொண்டிருக்கும் மனிதர்களுக்கு மறுமை வாழ்க்கையை நினைவூட்டுவதற்காகவும், அங்கு வெற்றிப்பெறுவதற்காகவும் இறைவனால் முன்வைக்கப்பட்ட அமல்களில் ரமளானும் முக்கிய இடத்தை வகிக்கின்றது.
குர்ஆன் இறங்கிய மாதம் என்பதால் அந்த மாதத்தையும் குர்ஆன் இறங்கிய இரவு என்பதால் லைலதுல்கத்ர் இரவையும் இறைவன் மிகப் பெரிய அந்தஸ்த்துகளுடன் சிறப்பித்துள்ளான். அத்தகைய புனிதமாதத்தை நோக்கி நாம் மிக அருகில் சென்றுவிட்டோம்.

ரமளான் வந்து விட்டால் வழக்கம்போல முஸ்லிம்களிடம் பல சர்ச்சைகள் உருவாகி விடும் அதில் முதன்மையானது ரமளானை தீர்மானிக்கும் பிறை.
பிறை பார்த்து நோன்பை அடைவது உலகெங்கும் ஒரே நாளிலா, அந்தந்த நாடுகளுக்கா, அந்தந்தப் பகுதிகளுக்கா, மாநிலங்களுக்கு தனி பிறையா, லோக்களில் டவுன் ஹாஜிகளின் அறிவிப்பிலா, ஜமாஅத்துல் உலமா தீர்மானத்திலா என்று முஸ்லிம்களுக்கு மத்தியில் மாறுபட்ட கருத்துக்கள் எழும். நாம் எப்படி முடிவு செய்வது என்று அவசியம் பரிசீலிக்க வேண்டும். ஏனெனில் சில ஊர்களில் (நம்மூர் உட்பட) பலர் நோன்புடன் இருக்கும் போது பலர் பெருநாளில் இருக்கிறார்கள். பெருநாள் கொண்டாட்டங்களில் நோன்பு அல்லது நோன்பு நாளில் பெருநாள் கொண்டாட்டம். இது முறையா... இன்னும் சில ஊர்களில் மூன்று நாட்கள் பெருநாள் தொழுகை நடக்கின்றது. இது எந்த வகையில் நியாயம்?

வணக்க வழிபாடுகள் அனைத்திலும் ஒரே சீராக இயங்க வழிகாட்டும் இஸ்லாம் நோன்பில் மட்டும் வழிகாட்டவில்லை என்பது போல நாம் அலட்சியமாக இருக்கக் கூடாது. எனவே இது குறித்து ஒரு விவாதகளத்தை துவங்குவோம். ஆதாரங்களை அலசுவோம். எது சரியோ அதை நாமும் பின்பற்றி நம் குடும்பங்ளுக்கும் தெரிவிப்போம் என்ற அடிப்படையில் "ரமளான் பிறை"யை உங்கள் பார்வைக்கு வைக்கிறோம். அவசியம் உங்கள் கருத்துக்களைப் பதியுங்கள்.

فَمَن شَهِدَ مِنكُمُ الشَّهْرَ فَلْيَصُمْهُ

உங்களில் எவர் அந்த மாதத்தை அடைகிறாரோ அவர் நோன்பு வைக்கட்டும் (அல்குர்ஆன் 2:185)

ஒருமாதத்தின துவக்கம் முதல் பிறையில் தான் உள்ளது. பிறை பிறந்து அதை பார்த்து மாதத்தை அடைந்த பிறகும் எங்கள் பகுதியில் - எங்கள் நாட்டில் - தெரியவில்லை அதனால் நாங்கள் ரமளானை அடையவில்லை என்று சொல்ல முடியுமா...? முஸ்லிம்களில் ஒருவர் ரமளான் பிறை பார்த்து உறுதிபடுத்தி விட்டால் போதும் என்பது நபி(ஸல்) நமக்கு கற்றுக் கொடுத்துள்ள பாடம். அப்படி பார்த்து அறிவித்த பிறகும் நாம் மறுக்கிறோம் என்றால் இதை எப்படி எடுத்துக் கொள்வது? எனவே அந்த புனித மாதத்தின் ஒரு நாளையும் நாம் முன் பின் என்று ஆக்கி விடாமல் தேர்ந்தெடுப்பதற்கு பிறை குறித்து தீர்க்கமாக சிந்திக்க உங்களை அழைக்கிறோம். எதிர்கருத்தோ - ஆதரவு கருத்தோ - மேலதிக சந்தேகமோ எதுவாக இருந்தாலும் பதியுங்கள். -------------------------------------------------------------------------------- அஸ்ஸலாமுஅலைக்கும், ஜனாப் அபுதமீம் ஹாபிஸ் கலீமுல்லா உமரி மதனி அவர்கள் ஆய்வு நடத்தி ஒரே நாளில் உலகம் முழுவதும் ஒரே பிறையை ஏற்றுக்கொள்வது இயலாது என விளக்கிவுள்ளார்களே. தங்கள் விளக்கம் என்ன?அன்புடன்அன்சாரி.
--------------------------------------------------------------------------------
வஅலைக்குமுஸ்ஸலாம்.
பல சகோதரர்களும் அறிஞர்களும் அந்த "ஏற்றுக்கொள்ள முடியாது" என்ற கருத்தில் இருப்பதை நாமும் அறிவோம். இது விரிவாக அணுகி அலச வேண்டிய ஒன்றாகும். எதிர்கருத்துள்ளவர்கள் ஆன்லைனில் விவாதிக்க முன் வந்தால் இது குறித்து விளக்கலாம். அல்லது ஏற்றுக்கொள்ள முடியாது என்பதற்கான காரணத்தை நீங்கள் முன் வைத்தால் அதற்கான பதிலை பார்க்கலாம்.

ஒரே நேரத்தில் ஏற்றுக் கொள்ள முடியாது என்பதுதான் உண்மை. ஒரே நாளில் ஏற்றுக் கொள்ள முடியாது என்பது சரியல்ல. அந்தந்தப் பகுதியில் பிறைப் பார்க்க வேண்டும் என்பவர்களிடம் நாமும் கேள்விகளை வைப்போம். அப்போது அதன் சிக்கல், ஆதாரங்களுக்கு மாற்றமான நிலை விளங்கும்.
--------------------------------------------------------------------------------
எனக்கு பிறை சம்பந்தமாக சில சந்தேகங்கள் உண்டு அவைகள்:
1) "பிறை பார்த்து நோன்பு வையுங்கள், பிறை பார்த்து நோன்பை விடுங்கள்" என்பது ஹதீஸாக உள்ளது. டெலிபோன், சட்டேளிட் போன்ற நவீன கால தகவல் தொடர்பு சாதனங்கள் எதுவரை? நாம் நம் கண்களால் பிறை பார்த்து நோன்பு பிடிப்பது தானே சரியாக இருக்கும்?
2) உலகில் பிறை, காலம் முழுவதும் ஒரு குறிப்பிட்ட பகுதியில் தான் உதிக்குமா / உதிக்கிறதா?
3) அவ்வாறு உதிக்கும் பகுதி மாறுபடாது என்பது தெளிவானால் எந்த பகுதியில் முதல் பிறை பிறக்கிறது?
4) அவ்வாறு உதிக்கும் பகுதி மாறுபடும் என்கிற பட்சத்தில் அதனை நாம் எவ்வாறு அறிவது?
5) பிறை பார்த்தாகிவிட்டது என்று உலகில் எங்கு கூறப்பட்டாலும் அதனை நாம் எடுத்துக்கொள்ள வேண்டியது தானா?
அன்புடன் ஹபீப்
--------------------------------------------------------------------------------
அன்புச் சகோதரர் ஹபீப் அவர்களுக்கு வஅலைக்குமுஸ்ஸலாம்.
அல்லாஹ் உங்கள் ஆர்வத்தையும் - மார்க்க அறிவையும் அதிகப்படுத்துவானாக.

நீ்ங்கள் கேட்டுள்ள கேள்விகளுக்குரிய பதிலை வரிசையாகப் பார்ப்போம். முதல் கேள்வி மார்க்க அடிப்படையில் ஆய்வுச் செய்ய வேண்டியவையாகும். அதை விரிவாக பார்த்து விட்டு மற்ற கேள்விகளுக்கு செல்வோம். இன்ஷா அல்லாஹ்.

1) "பிறை பார்த்து நோன்பு வையுங்கள், பிறை பார்த்து நோன்பை விடுங்கள்" என்பது ஹதீஸாக உள்ளது. டெலிபோன், சட்டேளிட் போன்ற நவீன கால தகவல் தொடர்பு சாதனங்கள் எதுவரை? நாம் நம் கண்களால் பிறை பார்த்து நோன்பு பிடிப்பது தானே சரியாக இருக்கும்? ஹபீப்.

ஒரே தலைப்பிறையின் கீழ் முஸ்லிம் உம்மத் ஒன்றுப்பட வேண்டும் என்று நாம் கூறிவருகிறோம். அதற்கு வலுவான ஆதாரமே நீங்கள் குறிப்பிடும் ஹதீஸ்தான். ஆனால் அந்த ஹதீஸை சரியாக புரிந்துக் கொள்ளாதவர்கள் அந்தந்தப் பகுதிக்கு அந்த ஹதீஸை ஆதாரமாக்குகிறார்கள். ஹதீஸின் வாசகத்தைப் பார்த்து விட்டு தொடர்வோம்.

‏حدثنا ‏ ‏آدم ‏ ‏حدثنا ‏ ‏شعبة ‏ ‏حدثنا ‏ ‏الأسود بن قيس ‏ ‏حدثنا ‏ ‏سعيد بن عمرو ‏ ‏أنه سمع ‏ ‏ابن عمر ‏ ‏رضي الله عنهما ‏ ‏عن النبي ‏ ‏صلى الله عليه وسلم ‏ ‏أنه قال ‏ ‏إنا أمة أمية لا نكتب ولا نحسب الشهر هكذا وهكذا ‏ ‏يعني مرة تسعة وعشرين ومرة ثلاثين
http://hadith.al-islam.com/Display/Display.asp?Doc=0&Rec=3006

நாம் உம்மி சமுதாயமாவோம். எழுதுவதை அறிய மாட்டோம்; விண் கலையையும் அறிய மாட்டோம். மாதம் என்பது இப்படியும் அப்படியும் இருக்கும்; அதாவது சில வேளை இருபத்தொன்பது நாள்களாகவும் சில வேளை முப்பது நாள்களாகவும் இருக்கும்!" என்று நபி(ஸல்) குறிப்பிட்டுள்ளார்கள். (புகாரி)இந்த ஹதீஸையும் அடுத்த ஹதீஸையும் கவனத்தில் கொண்டு தொடருங்கள்.

‏حدثنا ‏ ‏آدم ‏ ‏حدثنا ‏ ‏شعبة ‏ ‏حدثنا ‏ ‏محمد بن زياد ‏ ‏قال سمعت ‏ ‏أبا هريرة ‏ ‏رضي الله عنه ‏ ‏يقول ‏ ‏قال النبي ‏ ‏صلى الله عليه وسلم ‏ ‏أو قال قال ‏ ‏أبو القاسم ‏ ‏صلى الله عليه وسلم ‏ ‏صوموا لرؤيته وأفطروا لرؤيته فإن ‏ ‏غبي ‏ ‏عليكم فأكملوا عدة شعبان ثلاثين
http://hadith.al-islam.com/Display/Display.asp?Doc=0&Rec=3000

"பிறையைப் பார்த்து நோன்பு வையுங்கள்; பிறையைப் பார்த்து நோன்பு விடுங்கள்! உங்களுக்கு மேக மூட்டம் தென்பட்டால் ஷஅபான் மாதத்தை முப்பது நாள்களாக முழுமைப் படுத்துங்கள் என்று நபி(ஸல்) கூறியுள்ளார்கள். (புகாரி உட்பட பல நூல்களில் இந்த செய்தி பதியப்பட்டுள்ளது).

முதல் செய்தியில் நபி(ஸல்) முக்கிய தகவலை கொடுத்துள்ளார்கள். அதாவது அவர்களின் சமுதாயம் எழுதப்படிக்கத் தெரியாத - பாமர - சமுதாயம். அந்த சமுதாயத்திற்கு விஞ்ஞானம் பற்றிய தெளிவோ விண்கலையை ஆய்வு செய்யும் திறனோ கிடையாது. அதனால் மாதத்தை இருபத்தி ஒன்பதாகவோ - முப்பதாகவோ முடிவு செய்துக் கொள்ள வேண்டியதுதான்.

ரமளான் பற்றிய பாடத்தில் புகாரி இமாம் இந்த ஹதீஸை பதிவு செய்துள்ளார்கள். 'நமக்கு விண்கலைப் பற்றிய அறிவு கிடையாது" என்று நபி(ஸல்) குறிப்பிட்டுள்ளதிலிருந்து விண்கலைப் பற்றிய அறிவு பெற்றவர்கள் வருவார்கள் அவர்களின் துள்ளியமான ஆய்வை - அறிவை ஏற்கலாம் என்பதை தெளிவுபடுத்தியுள்ளார்கள். இல்லையென்றால் ரமளான் மாதம் பற்றி பேசும் போது விண்கலை அறிவு பற்றி குறிப்பிட வேண்டும் என்கிற அவசியமில்லை. பிறை கண்டு ரமளானை தீர்மானிக்கும் விஷயத்தில் நபி(ஸல்) தகுந்த இடத்தில் விண்கலையைப் பற்றி பேசியுள்ளார்கள் என்பதிலிருந்து அவர்களுக்கு பிறகு வளர்ந்து வரும் விண்ணாய்வுக்கு அவர்கள் வழிகாட்டி சென்றுள்ளார்கள் என்பது தெளிவாக விளங்குகின்றது.

அடுத்து பிறைப் பார்த்து நோன்பு வையுங்கள் பிறைப் பார்த்து நோன்பை விடுங்கள் என்ற எந்த ஒரு ஹதீஸிலும் 'கண்களால் பிறைப் பார்க்க வேண்டும்' என்ற பதம் வரவேயில்லை. பிறைக் கண்டு - பார்த்து நோன்பு வையுங்கள் என்றே நபி(ஸல்) குறிப்பிட்டுள்ளார்கள். அப்போதைய மக்களுக்கு கண்களால் பார்ப்பது மட்டுமே தீர்வாக இருந்தது. வேறு வழியொன்றும் இல்லை. அதனால் அவர்கள் கண்களால் பார்த்து தீர்மானித்தார்கள். கண்களால் பார்க்க முடியாத சந்தர்பங்களில் மாதத்தை முப்பதாக பூர்த்தி செய்துக் கொண்டார்கள். அவ்வளவுதான். கண்களால் பார்க்க வேண்டும் என்ற கட்டளை எதுவுமில்லை. நாம் இப்படி சொன்னவுடன் யாராவது அந்த ஹதீஸில் இடம் பெறும் அரபு வார்த்தையை எடுத்துக் காட்டி 'கண்களால் பார்க்க வேண்டும்' என்று வாதிக்கலாம்.

"ருஃயதஹு" என்ற பதம் சம்பந்தப்பட்ட ஹதீஸ்களில் வருகின்றன. 'அதைப் பார்த்து' " என்பது அதன் பொருள். எனவே பார்க்கத்தான் வேண்டும் என்று வாதிக்கலாம். ருஃயத் என்ற அரபி பதம் விரிந்த பொருட்களை உள்ளடக்கியதாகும். பார்த்தல், ஆய்வு செய்தல், கேட்டறிதல் போன்ற பொருள்கள் இந்த பதத்திற்கும் இதன் துணைப்பதங்களுக்கும் உண்டு. இதைப் புரிந்துக் கொள்வதற்கு மிகப் பெரும் ஆராய்சி எதுவும் தேவையில்லை. எல்லோரும் அறிந்த குர்ஆனின் ஒரு அத்தியாயத்தி்ன் துவக்க வசனத்திலிருந்தே இதை விளக்கி விடலாம்.

யானை அத்தியாயம் என்று பெயர் பெற்ற சூரத்து ஃபீல் என்ற அத்தியாயத்தின் ஆரம்ப வசனத்தை இறைவன் இவ்வாறு ஆரம்பிக்கிறான்.

أَلَمْ تَرَ كَيْفَ فَعَلَ رَبُّكَ بِأَصْحَابِ الْفِيلِ

யானை(ப் படை)க் காரர்களை உம் இறைவன் என்ன செய்தான் என்பதை நீர் பார்க்கவில்லையா? ( அல்குர்ஆன் 105:1)

கஃபாவை அழிக்க வந்த யானை படையினரை அல்லாஹ் அழித்த விபரத்தை இங்கு சுட்டிக்காட்டி (நபியே) நீர் பார்க்கவில்லையா..? என்று கேட்கிறான். "பார்க்கவில்லையா" என்று மொழி பெயர்க்கும் இடத்தில் 'தர' என்ற பதம் வருகின்றது. ருஃயத் பதத்தை சேர்ந்த பதம் தான் இது. இந்த வசனத்திற்கு 'பார்க்கவில்லையா" என்று பொருள் கொள்ளவே முடியாது. ஏனெனில் நபி(ஸல்) பிறப்பதற்கு முன்பே யானைப்படையினர் அழிக்கப்பட்டு விட்டனர். அழிக்கப்பட்டப்பின் பிறந்து, நாற்பது வயதை கடந்த பின் நபி(ஸல்) அவர்களிடம் இறைவன் இப்படி கேட்கிறான் என்றால் 'பார்க்கவில்லையா" என்ற அர்த்தத்தில் கேட்கவில்லை. அறியவில்லையா, செய்தி கிடைக்கவில்லையா என்ற அர்த்தத்தில் தான் அந்த பதத்தை பயன்படுத்துகிறான்.

எனவே நோன்பு பற்றி வரும் அந்த ஹதீஸுக்கு பிறையை பார்த்து - அறிந்து நோன்பு வையுங்கள். பிறையை பார்த்து - அறிந்து நோன்பை விடுங்கள் என்பதே சரியான பொருளாகும். பார்க்கவோ, அறியவோ முடியாத சந்தர்பங்களி்ல் முந்தைய மாதமான ஷஃபானை 30 நாட்கள் என்று கணக்கிட்டுக் கொள்ள வேண்டியதுதான்.

வானவியலைப்பற்றி நபி(ஸல்) அன்றைக்கே குறிப்பிட்டுள்ளதாலும், கண்களால் பார்க்க வேண்டும் என்ற கட்டளை வராததாலும் அந்தந்தப் பகுதியில் பிறைப் பார்க்க வேண்டும் என்ற வாதம் ஆதாரமற்றுப் போய் விடுகின்றது. பிறை செய்தி கிடைத்தால் அதை ஏற்று நோன்பை துவங்கி விட வேண்டும் என்பதே முஸ்லிம்களை ஐக்கியப்படுத்தும் சரியான முடிவாக இருக்க முடியும். (அல்லாஹ் மிக்க அறிந்தவன்)

ஒரு பிறையையே அனைவரும் கடைபிடிக்க வேண்டும் என்பதற்குரிய அழுத்தமான அடுத்த ஆதாரத்தை பார்த்து விட்டு மற்றக் கேள்விகளுக்கு நகர்வோம். இன்ஷா அல்லாஹ்.
--------------------------------------------------------------------------------
ஒவ்வொரு மாதத்திற்கும் தலைப்பிறை ஒன்றுதான்
அன்புச் சகோதரர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்.

ரமளான் பிறையின் கருத்து வேறுபாட்டை களைந்து முஸ்லிம் சமுதாயத்தில் ஏற்பட்டு நீடிக்கும் இரண்டு, மூன்று நாட்கள வித்தியாசத்தில் நோன்பு - நோன்புப் பெருநாள் என்ற நிலை தவறு என்பதை புரிநதுக் கொள்ள வேண்டும் என்பதற்காக அது பற்றி பேசி வருகிறோம். இந்த வருட ரமளானில் முதல் பிறை அறிவிக்கப்பட்டவுடன், "இது நம்மை கட்டுப்படுத்தாது" என்று அலட்சியமாக இருந்து விடாமல் நாம் நம் குடும்பங்களுக்கும் நமக்கு தெரிந்தவர்களுக்கும் பிறை அறிவிப்பை எத்தி வைத்து நோன்பு பிடிக்க சொல்ல வேண்டும். முந்தைய பதிவில் இதற்கான ஆதாரத்தை ஓரளவு கண்டோம். இப்போது தலைப்பிறை ஒன்றுதான் என்பதற்கான அடுத்த வலுவான ஆதாரத்தைக் காண்போம்.

فَمَن شَهِدَ مِنكُمُ الشَّهْرَ فَلْيَصُمْهُ

உங்களில் எவர் அந்த மாதத்தை அடைகிறாரோ அவர் நோன்பு வைக்கட்டும் (அல்குர்ஆன் 2:185)

இந்த வசனத்தில் "மாதத்தை அடைகின்றாரோ" என்று இறைவன் குறிப்பிடுவதிலிருந்து எல்லோராலும் ஒரே நேரத்தில் மாதத்தை அடைய முடியாது என்று விளங்கலாம். உதாரணமாக சவுதியில் இரவு 6 மணிக்கு பிறை தெரிகின்றது என்று வைத்துக் கொள்வோம். இதே நேரத்தில் சவுதி அரேபியாவுக்கு கீழுள்ள கீழ் திசை நாடுகள் இரவின் உள்ளே சென்று விடும். இந்தியா 8.30 அடைந்திருக்கும். அதே போன்று சவுதிக்கு மேல்திசை நாடுகள் பகல் பொழுதிலும் இரவை நெருங்கியும் வந்துக் கொண்டிருக்கும். எனவே சவுதியில் பிறை தெரியும் போது அவர்கள் மட்டும் தான் அந்த நேரத்தில் அந்த மாதத்தை அடைகிறார்கள். இப்போது சவுதிக்கு 2 மணி நேரத்துக்கு முன் இரவை அடைந்த நாம் (இந்தியா) அந்த மாதத்தை அடைந்து விட்டோமா இல்லையா....? இந்தக் கேள்வியை முக்கியமாக கவனத்தில் கொண்டு தொடருங்கள்.

உங்களில் எவர் அந்த மாதத்தை அடைகிறாரோ அவர் நோன்பு வைக்கட்டும். என்ற வசன அடிப்படையில் மாதத்தை அடைந்தவர்கள் இரவில் தான் நோன்பு வைக்கப்பட வேண்டும். அதாவது இரவு 6 மணி முதல் நோன்பை துவங்க வேண்டும். ஆனால் யாரும் அப்படி செய்வதில்லை. 6 மணிக்கு பிறை தெரிந்தாலும் அன்று காலை வரை பொருத்திருந்து 5 மணிக்கு தான் முதல் நோன்பின் உள்ளே செல்கிறோம். இந்த இடைப்பட்ட நீண்ட பொழுதின் அர்த்தம் என்ன? என்பதை சற்று சிந்தித்துக் கொண்டு கீழுள்ள குர்ஆன் வசனத்தை அணுகுங்கள்.

يَسْأَلُونَكَ عَنِ الأهِلَّةِ قُلْ هِيَ مَوَاقِيتُ لِلنَّاسِ وَالْحَجِّ وَلَيْسَ الْبِرُّ بِأَنْ تَأْتُوْاْ الْبُيُوتَ مِن ظُهُورِهَا وَلَـكِنَّ الْبِرَّ مَنِ اتَّقَى وَأْتُواْ الْبُيُوتَ مِنْ أَبْوَابِهَا وَاتَّقُواْ اللّهَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ
பிறைகளைப் பற்றி (நபியே!) உம்மிடம் கேட்கின்றனர். ''அவை மக்களுக்கு காலம் காட்டுகின்றது, ஹஜ்ஜை அறிவிக்கின்றது'' எனக் கூறுவீராக! வீடுகளுக்குள் அதன், பின் வழியாக வருவது நன்மை அன்று. (இறைவனை) அஞ்சுவதே நன்மை. எனவே வீடுகளுக்கு வாசல்கள் வழியாகவே செல்லுங்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள். இதனால் வெற்றி பெறுவீர்கள். (அல்குர்ஆன் 2:189)

இந்த வசனத்தில் இறைவன் "பிறை மக்களுக்கு காலம் காட்டுகின்றது - ஹஜ்ஜை அறிவிக்கின்றது" என்று இரண்டு கருத்துக்களை தெளிவு படுத்தியுள்ளான். ஹஜ்ஜை அறிவிக்கும் அதே பிறைத்தான் நோன்பையும் அறிவிக்கின்றது. (ஆனால் நாம் ஹஜ்ஜுக்கு ஒரு பிறை - நோன்புக்கு ஒரு பிறை என்று வேறுபடுத்துகிறோம். இதை ஒருபக்கம் வைப்போம்)

இறைவன் பிறைப்பற்றி சுட்டிக்காட்டி விட்டு "வீடுகளுக்கு அதன் முன் வாசல் வழியாக வாருங்கள். பின் வாசல் வழியாக வருவது நன்மையல்ல" என்ற செய்தியையும் சொல்கிறான். (அரபுகளிடம் இருந்த ஒரு மூட பழக்கதை இது சுட்டிக் காட்டினாலும்) அதில் பிரிதொரு முக்கிய சட்டமும் உள்ளது. ரமளானை வீடு என்று உவமையாகக் கொண்டால் அதன் வாசல் என்பது முதல் ஸஹர் தான். வாசல் வழியாக உள்ளே நுழையுங்கள் என்ற கட்டளைப்படி சவுதியில் பிறைத்தெரிந்தாலும் நாம் தான் முதலில் ஸஹர் செய்து ரமளான் உள்ளே செல்ல வேண்டும். சவுதியில் பிறைத் தெரிந்த பிறகு அவர்களுக்கு முற்பகுதியில் உள்ள நாம் நோன்பைத் துவங்காமல் அவர்களை சுற்றி வந்து அடுத்த நாள் நோன்பைத் துவங்குகிறோம் என்றால் வீடுகளுக்கு பின் வழியாக நுழைவதாகின்றது. பின் வழியாக உள்ளே நுழைவது நன்மையில்லை என்ற இறைவனின் வசனத்தை நாம் கணக்கில் எடுத்துக் கொண்டு அஞ்சினால் பிறை செய்தி கிடைத்தவுடன் முதல் ஸஹருக்கு தயாராகி விடலாம்.

இதை இன்னும் வலுபடுத்தும வசனத்தையும் பார்ப்போம்.

رَبُّ الْمَشْرِقَيْنِ وَرَبُّ الْمَغْرِبَيْنِ

இரு கீழ்திசைகளுக்கும் இறைவன் அவனே, இரு மேல்திசைகளுக்கும் இறைவன் அவனே (அல்குர்ஆன் 55:17)

இரு கீழ் திசைகளும் மேல்திசைகளும் பூமியிலிருக்கும் என்ற பேருண்மையை அன்றைக்கு அறிவித்த குர்ஆனில் பிறைத் தெரிந்த பிறகு அதன் கீழ் திசை - மேல் திசை நாடுகள் என்னவென்று பார்க்க வேண்டும் சவுதியில் பிறை கண்டால் - தெரிந்தால் - கணித்தால் அதன் கீழ் திசை நாடுகளில் நாம் வந்து விடுவோம். கீழ்திசை என்று இறைவன் குறிப்பிடுவதிலிருந்து பிறைத் தெரிந்து விடியும் வரை உள்ள இரவு நாடுகள் அனைத்தும் அந்த பிறைக்கு உட்பட்டு விடுகின்றது என்ற முக்கிய செய்தியை இறைவன் சுட்டிக்காட்டியுள்ளான்.

எனவே இதுவரைப் பார்த்த ஆதாரங்களின் அடிப்படையில் தலைப்பிறை உலகிற்கு ஒரே பிறைத்தான் என்பதை விளங்கலாம்.

ரமளானை அறிவிக்க பிறை பிறந்து விட்ட பிறகும் நாம் வகுத்துக் கொண்ட பூமியின் எல்லைக் கோடுகளை காரணம் காட்டி 'இது எங்களுக்குரிய பிறையல்ல" என்று ஒதுங்குவது மார்க்க அடிப்படையில் சரிதானா என்பதை நாம் சிந்திக்க வேண்டும்.

பிறை பிறந்து ரமளான் அறிவிக்ப்பட்டு விட்ட பிறகும், வெட்கப்பட்டு கொண்டு அல்லது ஊரோடு ஒத்துபோவோம் என்ற பலவீனமான எண்ணத்தில் அல்லாஹ் அறிவித்த ரமளானை நாம் அலட்சியப்படுத்தினால் குற்றவாளியாகி விடுவோம். இந்த அலட்சியம் பெருநாள் தினத்தில் நோன்பு வைக்கக் கூடாது என்ற நபி(ஸல்) அவர்களின் எச்சரிக்கையையும் புறக்கணிக்க வைக்கும் என்பதை அஞ்சி தலைப்பிறைக் குறித்து முடிவு செய்யுமாறு உங்கள் அனைவரையும் அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
(இது குறித்து ஐயம் இருந்தால் எழுதுங்கள்)
இனி சகோதரர் ஹபீபின் அடுத்தக் கேள்விக்கு நகர்வோம். இன்ஷா அல்லாஹ்.
--------------------------------------------------------------------------------
சகோதரர் ஹபீப் அவர்களின் அடுத்தக் கேள்விகளை காண்போம்.
2) உலகில் பிறை, காலம் முழுவதும் ஒரு குறிப்பிட்ட பகுதியில் தான் உதிக்குமா / உதிக்கிறதா?
3) அவ்வாறு உதிக்கும் பகுதி மாறுபடாது என்பது தெளிவானால் எந்த பகுதியில் முதல் பிறை பிறக்கிறது?
4) அவ்வாறு உதிக்கும் பகுதி மாறுபடும் என்கிற பட்சத்தில் அதனை நாம் எவ்வாறு அறிவது? "ஹபீப்"

وَالْقَمَرَ قَدَّرْنَاهُ مَنَازِلَ حَتَّى عَادَ كَالْعُرْجُونِ الْقَدِيمِ

சந்திரனுக்கு நாம் பல மன்ஸில்களை (நிலைகளை) ஏற்படுத்தியிருக்கின்றோம். பழைய பேரீத்த மட்டையைப் போலாகின்றது (36:39)

இந்த வசனம் சந்திரனுக்கென்று ஒரு குறிப்பிட்ட (மாறுபட்ட) நிலைகள் உள்ளன என்பதை அறிவிக்கின்றது. வருடத்தில் சந்திர ஆண்டு சூரிய ஆண்டைவிட 11 நாட்கள் குறைவதால் அமவாசைக்கு பிறகுள்ள முதல் பிறை எப்போதும் ஒரே இடத்தில் தோன்றாது. ஒரே இடத்தில் தோன்றும் என்று விஞ்ஞானமும் சொல்லவில்லை.

அது மாறுபட்ட பகுதிகளில் தோன்றும் என்பதால் குறிப்பிட்ட பகுதியை முதல் பிறைக்கான அடையாளமாக்க முடியாது என்பதை விளங்கலாம். அது எங்கு தெரிகின்றது என்பது முக்கியமல்ல. பூமியின் எல்லைகள் என்பது நமது நிர்வாக வசதிக்காக நாம் வகுத்துக் கொண்டதாகும். இந்த எல்லைகள் மனிதனால் பன்னெடுங்காலமாக மாற்றங்களுக்குள்ளாக்கப்பட்டு வருகின்றன. எனவே எல்லைகளை கருத்தில் கொள்வது சந்திரனை தீர்மானிக்கும் அளவுகோலாக்க முடியாது.

அமவாசைக்கு அடுத்து முதல் பிறை பிறந்து விட்டது என்பதே நாட்களை தீர்மானிக்கும் அளவாக எடுக்க வேண்டும்.

உதிக்கும் பகுதி மாறுபடும் என்கிற பட்சத்தில் அதனை நாம் எவ்வாறு அறிவது? "ஹபீப்"

நாம் நேரடியாக அறிவதற்கும் அறிந்தவர்கள் சொல்லும் நம்பகமான தகவல்களை ஏற்பதற்கும் வித்தியாம் ஒன்றுமில்லை. விண்ணியலைப் பொருத்தவரை நாம் (அதாவது ஒவ்வொருவரும்) நேரடியாக அறிந்தே - கண்டபிறகே அமல்களை செய்ய வேண்டும் என்ற எந்த கட்டளையும் இஸ்லாத்தில் இல்லை. நம்பகமானவர்களால் தீர்மானிக்கப்பட்ட விண்ணியல் - புவியியல் கருத்தோட்டங்களை உலகம் ஏற்றுக் கொண்டுள்ளது. நாமும் அந்த நிலையில் தான் இருக்கிறோம். பிறை மாறுபட்ட பகுதிகளில் தோன்றும் என்பது விஞ்ஞான உண்மை. அதைக் காணவும் - தீர்மானிக்கவும் பல நாடுகள் முயல்கின்றன. (கூடுதல் கவனத்தை சவுதி மேற்கொள்கின்றது. - ஹஜ்ஜுக்கு இவர்கள் வழிகாட்ட வேண்டும் என்பதால் இந்த கூடுதல் கவனம்) அவர்கள் அறிவிக்கும் நேரத்தில் முதல் பிறை என்று தீர்மானித்து நம் அமல்களைத் தொடங்கி விட வேண்டியததான்.

பிறை பார்த்தாகிவிட்டது என்று உலகில் எங்கு கூறப்பட்டாலும் அதனை நாம் எடுத்துக்கொள்ள வேண்டியது தானா? ஹபீப்

அமவாசைக்கு அடுத்த பூமியின் எந்தப்பகுதியில் தெரியும் பிறையாக இருந்தாலும் அதுவே அந்த மாதத்திற்கான முதல் பிறையாகும். பூமி அமைப்பில் நேரங்கள் மட்டும் தான் வித்தியாசப்படும். நாள் வித்தியாசப்பட வாய்ப்பே இல்லை என்பதால் தகவல் எங்கிருந்து கிடைத்தாலும் அதை பின்பற்றத்தான் வேண்டும். அதை நாம் புறக்கணித்தால் இதுவரை நாம் எடுத்துக் காட்டியுள்ள (முந்தைய பதிவுகள்) ஆதாரங்களுக்கு மாறுபட்டு நிர்ப்போம்.

அந்ததந்தப் பகுதியில் பிறை தெரியவேண்டும் என்போரின் வாதத்தில் ஏராளமான பலவீனங்கள் கொட்டிக் கிடக்கின்றன. தலைப்பிறைக் குறித்த ஆதாரங்களே போதுமானதாக இருப்பதால் நாம் அந்தப்பகுதிக்கு செல்லவில்லை.

நாம் எடுத்து வைத்துள்ள ஆதாரங்களில் - வாதங்களில் மாற்றுக்கருத்து இருந்தால் எதிர் ஆதாரங்கள் இருந்தால் எழுதுங்கள். இன்னும் கூடுதல் தகவல்களை பரிமாறலாம்
--------------------------------------------------------------------------------
ஆனால் நாட்டுக்கு ஒரு பிறை என்ற முறையில் அவர்கள் எடுத்து வைக்கும் வாதம் தான் என்ன.? இதில் இந்தியாவில் டெல்லி, கேரளா ,தமிழ் நாடு என்று மூன்று மாநிலம் கலம் தனி தனி யாக (நோன்பை ) எடுத்த வரலாறும் உண்டு. ஊருக்கு ஒரு பெருநாள் தொழுகை நடந்த நிகழ்ச்சியும் உண்டு. சில ஊர்களில் மூன்றாம் பிறையை முதல் பிறையாக கணித்து நோன்பு நோற்ற சம்பவங்களும் உண்டு.

இதை அரசியல் / கவர்மெண்டு காக அப்படியே ஏற்கிறார் கலா ? (காரணம் இன்று பெருநாள் என்று காலண்டரில் ஒரு வருடத்திற்கு முன்பே விடுமுறை யை அறிவித்து விடுகிறார்கள். அதை ஏன் மாற்ற வேண்டும் என்று கவர்மெண்டு சொல்லுவதால் அதையே அப்படியே அறிவிப்பு செய்து விடுகிறார்களா ?.) இல்லை என்றால், அவர்கள் ஒவ்வரு நாட்டிலும் பிறை பார்க்கும் போதுதான் , அதை வைத்துதான் நோன்பு நோற்க வேண்டும் என்று சொல்லும் அவர்களின் வாதத்தை தங்களால் விளக்க முடியுமா ? மேலும் சிலோன் நாட்டில் பிறை தென்பட்டால் நோன்பு எடுக்கும் இவர்கள் ( தற்போது கேரளாவில் தெரிந்தால் எடுக்க மாட்டார்கள்). சவுதி அரேபியா வில் தென்பட்டு அறி வித்து விட்ட பிறகும் , நோன்பு வைக்க மறுப்பது ஏன்.? சற்றே விபரமாக விளக்கவும். அவர்களின் வாதத்தையும் அறிய ஆவல்.
செய்யத்
--------------------------------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும்.
// உங்களில் எவர் அந்த மாதத்தை அடைகிறாரோ அவர் நோன்பு வைக்கட்டும். என்ற வசன அடிப்படையில் மாதத்தை அடைந்தவர்கள் இரவில் தான் நோன்பு வைக்கப்பட வேண்டும். அதாவது இரவு 6 மணி முதல் நோன்பை துவங்க வேண்டும். ஆனால் யாரும் அப்படி செய்வதில்லை. 6 மணிக்கு பிறை தெரிந்தாலும் அன்று காலை வரை பொருத்திருந்து 5 மணிக்கு தான் முதல் நோன்பின் உள்ளே செல்கிறோம். இந்த இடைப்பட்ட நீண்ட பொழுதின் அர்த்தம் என்ன? என்பதை சற்று சிந்தித்துக் கொண்டு கீழுள்ள குர்ஆன் வசனத்தை அணுகுங்கள் //

6 - 7 மணிக்கு பிறை தெரிந்து அந்த புனிதமிக்க ரமளானை அடைந்தாலும்" ஸஹருடைய நேரத்தை அடைந்து உணவு உண்டு வானம் கருப்பு கோட்டிலிருந்து வெள்ளை கோட்டிற்கு வரும்முன் நோன்பை ஆரம்பிப்பது தானே நபி வழி? அப்படி இருக்க இந்த வாதம் ஏற்புடையதாக இல்லை.
மற்றும்

ஷேய்க் இப்னு உத்தைமீன், ஷேய்க் அல் இஸ்லாம் இப்னு தைமியா போன்ற ஹதீஸ் கலை வல்லுனர்களும் அந்த அந்த நாட்டின் பிறை தெரிவதை வைத்தே நோன்பு நோற்பதும் விடுவதும் ஆகும் என்று கருத்து கூறியுள்ளார்களே ? சகோதரர் தல்பாதர்
http://www.islam-qa.com/en/ref/40720
--------------------------------------------------------------------------------
வஅலைக்குமுஸ்ஸலாம்.
முதலில் சகோதரர் தல்பாதர் அவர்களி்ன் பதிவிற்கான விளக்கத்தைப் பார்த்து விட்டு சகோதரர் செய்யத் முன் வைத்துள்ள கேள்விகளுக்கு வருவோம்.
இரவில் நாம் மாதத்தை அடைந்துவிடுகிறோம். 2:185 வது வசனப்படி மாதத்தை அடைந்தவர் நோன்பு வைக்க வேண்டும். மாதத்தை அடைந்தவர் நோன்பு வைக்கட்டும் என்று சொல்லும் ரப்புல் ஆளமீன் அடுத்த வசனத்தில் ' கருப்பு நூலிலிருந்து வெள்ளை நூல் தெளிவாக தெரியும் வரை உண்ணுங்கள் குடியுங்கள்" என்கிறான்.

இப்போது சிந்திக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் மாதத்தை அடைந்த பின்பும் உடனடியாக நோன்பைத் துவக்காமல் ஒரு நீண்ட ஏறத்தாழ 10.30 முதல் 11 மணி நேரம் இடைவெளிக்கு பிறகே முதல் நோன்பின் உள்ளே நுழையும் ஏற்பாட்டை இறைவன் செய்துள்ளான். இறைவன் செய்துள்ள இந்த ஏற்பாட்டின் அர்த்தம் என்னவென்பதே நமது கேள்வி.

பிறைத் தெரிந்தவுடன் நோன்பு துவங்குவது கட்டளையாக இருந்தால் 'சவுதியில் பிறை தெரிந்து அவர்கள் நோன்பைத் துவங்கி விட்டார்கள். நாங்கள் பிறைப் பார்க்காமல் கடந்து விட்டதால் எங்களால் நோன்பை துவக்க முடியாது' என்று கீழ் திசை நாட்டுக்காரர்கள் சொல்வதில் ஒரு அர்த்தம் இருக்கும். ஒரு பகுதியில் பிறைத் தெரிந்த பின்பும் அதிலிருந்து 11 மணிநேரம் கழித்து நோன்பின் உள்ளே செல்லும் ஏற்பாட்டை இறைவன் செய்ததிலிருந்து பிறை தெரிநத பகுதியிலிருந்து அதற்கு கீழ் திசை நாட்டவர்கள் அனைவரும் அந்தப் பிறைக்குள்ளே வந்து விடுவார்கள். அவர்கள் ஸஹர் செய்து நோன்பை துவங்கலாம் என்ற ஹிக்மத் அதில் பொதிந்துள்ளதையே நாம் சுட்டிக்காட்டினோம். இந்த வாதத்துடன் நாம் வைத்துள்ள இதர ஆதாரங்களையும் வாதங்களையும் கவனமாக ஆராயுங்கள்.

ஸாலிஹல் உதைமீன் போன்ற நல்லறிஞர்கள் உட்பட இன்னும் பலரும் அந்தந்தப்பகுதியில் பிறை பார்த்து நோன்பு வைக்கலாம் என்ற கருத்தை முன் வைத்துள்ளார்கள் என்பதை நாமும் அறிவோம். யார் எந்த கருத்தை சொல்லியுள்ளார்கள் என்பது முக்கியமல்ல. எந்த ஆதார அடிப்படையில் சொல்கிறார்கள் என்பதுதான் முக்கியம்.

அந்தந்தப்பகுதியில் தான் பிறை பார்க்க வேண்டும் அதுதான் இஸ்லாமிய சட்டம் என்று யாராவது வாதிட்டால் அவர்கள் அதற்கான ஆதாரத்தை முன் வைக்க வேண்டும்.

நாமறிந்தவரை, இது தரப்பு வாதங்களையும் பரிசீலித்த வரை, அந்தந்தப்பகுதியில் பிறைப் பார்க்க வேண்டும் என்பதை விட உலகெங்கும் ஒரே பிறைதான் என்ற வாதமும் அதற்கான ஆதாரங்களுமே தெளிவாகவும், ஏற்புடையதாகவும் உள்ளது. அதையே உங்கள் பார்வைக்கு வைத்து வருகிறோம்.

இனி சகோதரர் செய்யத் அவர்களின் சந்தேகத்தை எடுத்துக் கொள்வோம்.
இந்தியாவில் பிறையை தீர்மானிப்பதில் வருடந்தோரும் ஏற்படும் உள்நாட்டுக் குளறுபடிகளை ஒரு பக்கம் வைத்து விட்டு, அந்தந்தப்பகுதியில் பிறைப் பார்க்க வேண்டும் என்பவர்கள் என்ன வாதங்களை வைக்கிறார்கள் அது ஏற்புடையதாக உள்ளதா.. என்பதை காண்போம்.

அந்தந்தப்பகுதியில் பிறைப்பார்க்க வேண்டும் என்பவர்களின் இரண்டு வாதங்களே முக்கியமானதும் முழுமையானதுமாகும்.

1) உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ அவர் நோன்பு வைக்கட்டும் என்ற வசன அடிப்படையில் எல்லோரும் ஒன்றாக மாதத்தை அடைய முடியாது.
2) பிறை பார்த்து நோன்பு வையுங்கள் - பிறைப்பார்த்து நோன்பை விடுங்கள் என்று நபி(ஸல்) கூறியுள்ளதால் நம் பகுதிகளில் நாம் பிறைப் பார்த்துக் கொள்வதே சரி.

இந்த இரண்டு வாதங்கள் தான் அவர்களுடையது. இதில் மாதத்தை அடைதல் என்பதன் அர்த்தம் என்னவென்பதை நாம் முந்தைய பதிவுகளில் விளக்கியுள்ளோம். எல்லோராலும் ஒரே நேரத்தில் அந்த மாதத்தை அடைய முடியாது - ஆனால் ஒரே நாளில் அடைந்து விட முடியும். முதல பிறை என்பது சிறிது நேரத்தில் மறைந்து விடக் கூடியதாகும். ஆனால் முதல் பிறையின் இரவு நீளமானதாகும். ஆம் முதல் பிறையை அறிந்தவர்கள் கூட அந்த இரவின் நீண்ட பொழுதை கழித்த பிறகுதான் நோன்பின் உள்ளே செல்கின்றாகள். எனவே அந்த வசனத்தை வைத்து 'உனக்கொரு பிறை - எனக்கொரு பிறை" என்று வாதிக்க முடியாது. அந்த வாதம் நிற்காது.

பிறைப் பார்த்து நோன்பு வையுங்கள் என்ற நபி(ஸல்) அவர்களின் ஹதீஸும் ஏற்கனவே விளக்கப்பட்டுள்ளது. கண்களால் பார்க்க வேண்டும் என்றக் கட்டளையோ அந்தந்தப்பகுதியில் பார்க்க வேண்டும் என்றக் கட்டளையோ எந்த நபிமொழியிலும் வரவில்லை. மாதப்பிறப்பை அறிந்துக் கொள்ள பிறை அவ்வளவுதான். பிறையின் துவக்கத்தை எப்படி வேண்டுமானாலும் அறியலாம். நபி(ஸல்) காலத்தில் கண்களால் மட்டுமே பார்க்கும் சூழல் இருந்தது. அவர்கள் அப்படிப் பார்த்தார்கள் அவ்வளவுதான். உண்மையில் அவர்கள் பார்த்த பிறை இரண்டாகவோ மூன்றாகவோ கூட இருக்கலாம். ஆனால் அவர்கள் அதை ஒன்று என்றே தீர்மானித்துக் கொள்வார்கள். அன்றைக்கு வேறு வழியில்லை.

ஆனால் இன்றைக்கு இறைவன் அநேக முன்னேற்பாடுகளை செய்துக் கொடுத்துள்ளான். மனிதன் சந்திரனில் குடியேறினால் கூட பூமித் தகவலில் பிறை பிறந்து விட்டதை அறிய முடியும். (சந்திரனில் குடியேறினால் நம் ஊர்காரர்கள் பரங்கிப்பேட்டையில் பிறைத் தெரிகிறதா என்று கேட்பார்களோ..அங்கு பரங்கிப்பேட்டைக்காரருக்கு பக்கத்தில் சென்னைக் காரர் இருந்தால் உங்கள் ஊர் தகவல் என்னைக் கட்டுப்படுத்தாது எனக்கு சென்னையிலிருந்து தகவல் வர வேண்டு்ம் என்று கூறுவாரோ..)

இறைவனின் பெரும் கொடையாக வளர்ந்து நிற்கும் அறிவியலை, அதன் ஆணித்தரமான நிரூபனங்களை கண்டுக் கொள்ளத் தேவையில்லை என்று சொல்லும் அளவிற்கு இஸ்லாம் பிற்போக்கானது அல்ல.

நாம் மேற்சொன்ன இரண்டு வாதங்களைத் தவிர அந்தந்தப்பகுதியில் பிறைப் பார்க்க வேண்டும் என்பவர்களிடம் வேறெந்த வாதமும் இல்லை.

அந்தந்தப்பகுதியில் தான் பிறைப்பார்க்க வேண்டும் என்போர் ஹஜ் செய்வதாக இருந்தால் மட்டும் வரும் தகவலை ஏற்று (உலகெங்கும் ஒரே பிறை என்ற கோட்பாட்டை) ஒப்புக் கொள்கிறார்கள்.

பெருநாள் - அரஃபா - லைலதுல் கதர் என்று அநேக பிரச்சனைகளை உள்ளடக்கியதாக 'அந்தந்தப்பகுதி பிறை" வாதம் பலவீனப்பட்டுப் போய் உள்ளது.

28 நாட்களில் மாதம் முடியும் தெரியுமா..?

அந்தந்தப்பகுதியில் பிறைப்பார்க்க வேண்டும் என்று முடிவெடுத்தால் சில நேரம் 28 நாட்களில் மாதத்தை முடித்துக் கொள்ளும் நிலையும் வரும்.
எப்படி? (ஒன்று - .இரண்டு - மூன்று நாட்கள் வித்தியாசத்தில் கூட தமிழகத்தில் பிறை எடுக்கப்படுகின்றது என்பதை கவனத்தில் வைத்துக் கொண்டு தொடருங்கள்.)

ஷஃபானை 30 ஆக பூர்த்தி செய்து சென்னை, ரமளானின் முதல் பிறையை அறிவிக்கின்றது என்று வைத்துக் கொள்வோம். கடலூரிலிருப்பவர்கள் 'எங்களுக்கு மேகமூட்டத்தால் பிறை தெரியவில்லை அதனால் நாங்கள் நாளை முப்பதை பூர்த்தி செய்தே பிறையை எடுப்போம்" என்று கூறி சென்னையின் தகவலை புறக்கணித்து விடுகிறார்கள். இப்போது சென்னை முதல் பிறையில் இருக்கும் போது கடலூர் கடைசி நாளான முப்பதிலும், சென்னை இரண்டாம் நோன்பிலிருக்கும் போது கடலூர் முதல் நோன்பிலும் இருக்கிறார்கள்.

இப்படியே நாட்கள் நகர்ந்து அந்த மாதம் 29ல் முடிந்து சென்னையில் பிறைத் தெரிகின்றது. அதே நாள் எவ்வித மேகமூட்டமுமில்லாமல் கடலூரிலும் பிறைத் தெரிகின்றது என்று வையுங்கள். இப்போ கடலூருக்கு கிடைத்த நோன்புகள் எத்தனை. 28 மட்டுமே.

மாதம் என்பது சிலபோது 30ஆகவும் சிலபோது 29ஆகவும் இருக்கும் என்று நபி(ஸல்) கூறியுள்ளார்கள். பிறை மாதங்கள் 28ஆகவோ 31ஆகவோ முடிய வாய்ப்பே இல்லாத நிலையில் வரும் ஆதாரப்பூர்வமான தகவலை புறக்கணித்த கடலூர்வாசிகள் அந்த மாதத்தை 28ல் முடித்து சாதனைப் படைப்பார்கள்.

தனித்தனிப் பிறையில் இத்தகைய முரண்பாடுகள் அநேகம் உள்ளது. (நாம் கூறியுள்ள இந்த உதாரணத்தை ஒன்றுக்கு பலமுறை படியுங்கள். 28ஆக ரமளான் குறைய வாய்ப்புள்ள தனித் தனிப்பிறை பற்றிய சிந்தனை விபரீதமானது என்பது புரியும்.

இதுவரை வந்துள்ள பதிவுகள் அனைத்தையும் வரிசையாக படித்து விட்டு தனிப்பிறையா - ஒரேப் பிறையா என்பதை முடிவு செய்யுங்கள் ( நேர்வழிக்காட்ட அல்லாஹ் போதுமானவன்)

Thursday, August 14, 2008

மனைவியைக் கொல்

பாகம் 1, அத்தியாயம் 8, எண் 423 ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அறிவித்தார். \'இறைத்தூதர் அவர்களே! ஒருவர் தம் மனைவியுடன் மற்றோர் ஆடவனைக் காண நேர்ந்தால் அவனைக் கொன்று விடலாமா?\' என்று ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் கேட்டார். (\"அது கூடாது! மாறாக இருவரும் லிஆன் செய்ய வேண்டும்\" என்று நபி(ஸல்) கூறியதும்) அவ்விருவரும் பள்ளியிலேயே லிஆன் செய்தனர். நான் அதைப் பார்த்துக் கொண்டிருந்தேன். \

இது எனக்கு சரியாகப்படவில்லை. ஏன் இப்படியுள்ளது என்பதை விளக்குங்கள்.

Name: abdul azeez
email: azeez1729@...
Location: abudhabi
Subject: kelvi

இறைவன் அனைத்தையும் அறிந்த நுண்ணறிவாளனாக இருக்கிறான். அவன் வகுத்த சட்டங்கள் சில நேரம் நமது சிற்றறிவிற்கு சரியாக படாவிட்டாலும் கூட அவன் வகுத்துள்ள சட்டங்கள் குறைவில்லாததுதான்.

நமது அறிவின் தரம் கூடும் போது அந்த சட்டங்களில் விளக்கங்கள் நமக்கு கிடைக்கும். அதுவரை நமது தேடலை நாம் தொடரத்தான் வேண்டும்.

ஆண் பெண்ணுக்கு மத்தியிலான உறவுமுறையை - பிரிவை தீர்மானிக்கும் எந்த சட்டமாக இருந்தாலும் அதில் பெண்களுக்கு கூடுதல் பாதுகாப்பு இருக்கத்தான் செய்யும். இதை முஸ்லிம்களாகிய நாம் அனைவரும் ஏற்றுள்ளோம்.

லிஆனை சிந்திக்கும் போதும் அதில் பெண்களுக்கு பாதுகாப்பு இருப்பதை உணரலாம்.

ஒரு பெண் விபச்சாரத்தில் ஈடுபட்டுள்ளதை அந்தப் பெண்ணின் கணவன் நேரடியாக பார்த்து விடுகிறான். இப்போது அவனது ரத்தம் கொதிக்கும். கட்டுப்படுத்த முடியாத ஆத்திரத்துக்கு அவன் ஆளாவான். இந்நிலையில் தண்டனைக் கொடுக்கும் சட்டத்தை அவன் கையில் கொடுத்தால் உடனடியாக அந்கு ஒரு அல்லது இரு கொலை நடக்கும். அவன் தரப்பிலும் ரோஷமுள்ளவர்கள் தரப்பிலும் இது நியாயம் தான் என்றாலும், இஸ்லாம் இத்தகைய உணர்வுகளை மட்டும் கருத்தில் கொண்டு சட்டம் வகுக்காது. வகுக்கப்படும் சட்டங்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது என்பதிலும் இஸ்லாம் அக்கறைக் கொள்ளும்.

விபச்சாரம் செய்யும் மனைவியை கணவன் கொள்ளலாம் என்ற சட்டத்தை இஸ்லாம் கணவன் கரங்களில் கொடுத்திருந்தால் கணவனால் கொல்லப்படும் மனைவிகள் அனைவருமே விபச்சாரிகளாக சித்தரிக்கப்பட்டு விடுவார்கள். ஆம், பல குடும்பங்களில் கணவர்களுக்கும் மனைவிகளுக்கும் மத்தியில் தீராத சண்டைகள் நடப்பதை நாம் பார்க்கிறோம். பெண்கள் வாய் விட்டு கத்தி தீர்த்து விடுவார்கள். ஆண்களால் அப்படி முடியாது. மனைவி கணவனை வாயால் அடித்தால், கணவன் மனைவியை கையால் அடிப்பான்.

போதை - வரதட்சனை - மாமியார் மருமகள்கள் சண்டைப் பிரச்சனை போன்றவற்றால் முரட்டு கணவன்மார்களால் பெண்கள் தாக்குதலுக்குள்ளாக்கப்படுகிறார்கள். பல நேரங்களில் வரதட்சனைப் போன்ற காரணத்துக்காக குடும்பத்தார் சேர்ந்து தன் வீட்டுக்கு வந்த மருமகளை தீர்த்துக் கட்டுகிறார்கள்.

கணவனின் முரட்டு, மடத்தனமான சுபாவத்தை எதிர்கொள்ள முடியாத பெண்கள் தங்கள் உயிரை விடுகிறார்கள். இது பரவலான நடைமுறையாகிவிட்டதை நாம் பார்க்கிறோம். பெண்ணை இழந்தவர்கள் நீதித் தேடி நீதிமன்றங்கள் செல்கிறார்கள்.

கணவனுக்கென்று இருக்கும் உரிமைகளை அவன் மீறும்போது தான் அங்கு நீதி தலையிடும். அவன் உரிமைக்குட்பட்டதை அவன் செய்யும் போது அதை யாரும் தட்டிக் கேட்க முடியாது. இந்த அடிப்படையை மனதில் நிறுத்திக் கொண்டு தொடருங்கள்.

விபச்சாரும் செய்யும் பெண்ணை கொல்லும் உரிமையை கணவன் கையில் கொடுத்தால், வரதட்சனைப் போன்ற பொருளாதாரத்திற்காக கொலைச் செய்யப்படும் மனைவி விபச்சாரத்திற்காகத்தான் கொல்லப்பட்டாள் என்று ஆகிவிடும்.

போதையால் கணவன் மனைவியை கொலை செய்தால் விபச்சாரத்திற்காக கொலை செய்தேன் என்று சொல்லி தப்பிக்க முடியும்.

இன்னப்பிற ஏதோ காரணத்துக்காக சாகடிக்கப்படும் பெண்கள் அனைவரும் கணவனின் வாக்கு மூலத்தால் விபச்சாரிகளாவார்கள். உயிரை விட்டது மட்டுமின்றி சமூகத்தில் இழிபெயரும் நிலைக்கும். நியாயம் கிடைக்க வழியில்லாமல் போகும். இன்னும் நாம் அறியாத பல நுணுக்கங்களுக்காக கூட இறைவன் கணவர்கள் கைகளில் அந்த சட்டத்தை கொடுக்காமல் தடுத்திருக்கலாம்.

பெண்களுக்கு சாதகமா..?

விபச்சாரம் செய்யும் பெண் கணவனால் நேரடியாக பிடிக்கப்பட்ட பிறகும் அவளை தண்டிக்காமலிருப்பது பெண்களுக்கு சாதகமாக - தவற வழி வகுப்பதாக ஆகாதா..? என்ற சிந்தனை எழலாம்.

ஒரு வகையில் சிந்தித்துப் பார்த்தால் மரண தண்டனை கொடுத்து கதையை முடிப்பதை விட தன்னை தானே சபித்துக் கொண்டு சமுதாய மத்தியில் இழி நிலையில் வாழ்வது அதை விட பெரிய தண்டனையாகும். தன் மனைவி விபச்சாரம் செய்துவிட்டால் என்று கணவன் குற்றம் சுமத்துகிறான். அதை நிரூபிக்க அவனிடம் நான்கு சாட்சிகள் இல்லை. சாட்சிகளில்லாத நிலையில் குற்றத்தை நிரூபிக்க முடியாது. உலக நீதிமன்றங்கள் என்றால் சாட்சிகள் இல்லாததால் கணவனை எச்சரித்து அவனோடு மனைவி சேர்ந்து வாழ வேண்டும் என்று உத்திரவு பிறப்பிக்கும். உண்மையில் மனைவி தவறியதை நேரடியாக கண்ட கணவன் நீதிமன்ற உத்திரவால் மீண்டும் அவளோடு சேர்ந்து வாழ முடியுமா...? அது பல்வேறு சிக்கல்களை இருவருக்கும் மத்தியில் ஏற்படுத்தி விடும். அதனால் தான் இஸ்லாம் மாற்று வழியை முன் வைத்துள்ளது.

சாட்சிகள் இல்லாத நிலையில் கணவனால் குற்றம் சுமத்தப்பட்டால் அவ்விருவரும் மக்கள் மன்றத்தில் தன்னைத் தானே சபித்துக் கொண்டு கணவன் - மனைவி உறவைத் துண்டித்துக் கொள்ள வேண்டியதுதான். இது அவர்களிருவரும் மீண்டும் சேர்ந்து வாழ முடியாத அளவிற்குள்ள நிரந்தர பிரிவாகும்.

இதில் யாரொருவர் பொய் சொல்லி இருந்தாலும் அவர்கள் இறைவனிடம் குற்றவாளியாகி நிற்பார்கள். இந்த விபரம் குர்ஆனில் 24வது அத்தியாயத்தின் 5 முதல் 9 வரையுள்ள வசனங்களில் காணலாம்.

இஸ்லாமிய ஆட்சியில்லாத நாடுகளில்,

இஸ்லாமிய ஆட்சியில்லாத நாடுகளில் வாழும் முஸ்லிம்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும். அவர்களும் ஊரிலுள்ள பொதுஜமாஅத்கள் முன்னிலையில் தன்னை சாபமிட்டுக் கொண்டு பிரியலாம்.

நான்கு முறை 'தாம் உண்மைச் சொல்வதாக சத்தியமும், ஐந்தாம் முறை தம் மீது தாமே சாபமிட்டுக் கொள்வது என்பதும் அத்துனை சுலபமான விஷயமல்ல. ஒரு பெரும் சக்தியை நம்பி அதற்கு கட்டுப்படும் மனநிலையைப் பெற்றவர்கள் இதில் விளையாட மாட்டார்கள் என்பதையும் நாம் புரிந்துக் கொள்ள வேண்டும்.

அஸ்ஸலாமு அலைக்கும்.
எனது வங்கிக்கணக்கில் ஒரு தொகையுள்ளது. அது எனது வங்கிக்கணக்கிற்காக வட்டித்தொகையாகும். நான் அத்தொகையை பொது காரியங்களுக்காக பயன்படுத்தலாமா? (உ.தா., சாலைவிளக்குகள். கழிவரை போன்றவைகள்).
Name: farhan
email: farhan88lk@...
Location:
Subject: Question

வங்கி வட்டி குறித்தும், அந்த தொகையை என்ன செய்யலாம் என்பது குறித்தும் ஏற்கனவே விரிவாக விளக்கியுள்ளோம். கீழுள்ள லிங்கை சொடுக்குங்கள்.
வங்கி வட்டி முஸ்லிம்கள்
இந்த வலைப்பூவிலும் வட்டி குறித்து பதிலளிக்கப்பட்டுள்ளது. பார்வையிடவும்.

பெர்மூடா பிளாக்ஹோல்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.
நாஸாவின் வெப்ஸைட்டில் மேய்ந்த போது அன்டார்டிகா கடலில் உள்ள பெர்முடா தீவுக்கருகில் பெர்மூடா பிளாக்ஹோல் என அழைக்கப்படும் ஒரு மர்ம இடம் இருப்பதாகவும் அந்த குறிப்பிட்ட வளையத்துக்குள் நீர்வழி மற்றும் வான்வழி செல்லும் கப்பல் மற்றும் விமானங்கள் மாயமாய் மறைவதாகவும் அதுபற்றிய ஒரு விபரமும் கிடைப்பதில்லை என்றும் விஞ்ஞாணிகளுக்கும் இது புதிராக இருப்பதாக அறிந்தேன். இது உண்மையாக இருக்குமா இது பற்றிய இஸ்லாமிய குறிப்புகள் அடையாளங்கள் உண்டா விளக்கவும்

Name: முஹம்மது இக்பால்
email: mimhouse@...
Location: Sharjah - U.A.E
Subject: Kelvi

மது - சம்பளம்

அஸ்ஸலாமு அலைக்கும்.
நான் இலங்கையைச்சேர்ந்தவன். நான் தங்களது இணையதளத்தை பார்த்துவருகிறேன். இது நமது சமுதாய மக்களுக்கு ஒரு சிறந்த வழிகாட்டும் இடமாக விளங்கிவருகிறது. அல்ஹம்துலில்லாஹ்.

நான் தற்பொழுது கத்தாரில் உள்ள ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் கணக்காளராக (Accountant) பணியாற்றி வருகிறேன். என்னுடைய நிறுவனத்தின் மற்றொரு கிளை மது வகைகளை மேல் நாட்டவருக்கு மட்டும் விற்பனை செய்து வருகிது. நான் எனது நிருவனத்தின் கணக்கு வழக்கு பணிகளை மட்டும் செய்து வருகிறேன். மதுக்களை விற்பனை செய்து வரும் கிளை நிருவனத்தின் கணக்குகளை பார்ப்பது கிடையாது. இருந்த போதும் ஒரு சில பறிமாற்றங்கள் இந்த இரு நிறுவனத்திற்குள் நடந்து வருகின்றது ஒவ்வொரு மாதமும். ஏனெனில் இரண்டு நிருவனத்தினுடைய உரிமையாளர் ஒருவரே. நான் இந்த இரு நிறுவனத்திற்குமான பணியாளர்களது மாத சம்பளம் சம்மந்தமான பணிகளை செய்து வருகிறேன். அனைத்து பணியாளர்களது மாத சம்பளமும் மது விற்பனையின் மூலம் கிடைக்கும் லாபத்திலிருந்தே வழங்கப்படுகின்றது. ரியல் எஸ்டேட் நிருவனம் தான் "பாரில்" பணியாற்றும் பணியாளர்களுக்கு சம்பளம் தர வேண்டும். அதுவே அப்பணியாளர்களுக்கு அவர்களது சம்பளத்தைவிட அதிகமாக பெற கிடைக்கும்.
நான் கத்தார் வந்த பிறகு எனக்கு இவ்வகையான நிருவனங்களில் பணியாற்றுவதற்கு துளிகூட விருப்பமில்லை. நான் ஒரு முஸ்லிமாக, இந்தவகையான நிருவனத்திலிருந்து பெறப்படும் சம்பளம் "கூடுமா (Halaal)" (அ) கூடாதா (Haraam)". நான் தற்பொழுது குழப்பமான சூழலில் இருந்து வருகிறேன். எனக்கு இந்த விஷயத்தில் ஒரு தீர்க்கமான விளக்கம் தேவை. தங்களது பதில் என்னைப்போன்றுள்ள மற்றவர்களுக்கும் பயனளிப்பதாக இருக்கும்.
Name: Ali Akbar
email: aliakbar.ma@....
Location: Qatar
Subject: kelvi