வலைப்பதிவில் தேட..

Sunday, November 23, 2008

அரபுமொழி பற்று ஏன்?

கேள்வி - அல்லாஹ் குர்ஆனில் சிந்தித்து உணரும்படி வலியுறுத்துகிறான். அவ்வகையில், குர்ஆன் அருளப்பட்டது அரபி மொழியில், அதன் வசனங்களை நமது ஐவேளை தொழுகைகளில் அன்றாடம் அதே அரபி மொழியில்தான் ஓதி வருகிறோம். ஆனால் உலகில் உள்ள முஸ்லிம்களில் 70 சதவிகிதம் பேர் அரபியை தாய்மொழியாக கொண்டவர்கள் அல்ல. இவர்கள் குர்ஆனுடைய விளக்கங்களை தங்களது மொழிபெயர்ப்புகளிலிருந்துதான் விளங்கிக் கொள்கின்றனர். அப்படி இருக்க பொருள் உணர்ந்து அல்லாஹ்வை பிரார்த்திக்க வேண்டிய தருணமான தொழுகையில் அரபியில்தான் ஓத வேண்டும் என்று நிர்ப்பந்திப்பது ஏதோ அரபு மொழிப்பற்றை வளர்ப்பதற்காக செய்யப்படுகின்ற ஒரு காரியமாகவே தெரிகிறது. இந்த விஷயத்தை விளக்கவும்.
 
உங்களைப் போன்றே பலரும் சிந்திக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் இதில் சில முக்கியமான விஷயங்களை நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.

தொழுகையில் அரபியில் ஓதுவதற்கான காரணங்கள்.

1 - எது இறை வணக்கம் என்று இறைத்தூதரால் காட்டிக் கொடுக்கப்பட்டதோ அதை மொழிமாற்றம் செய்யவோ அல்லது அதே மொழியில் வேறு சொற்களைப் பயன்படுத்திக் கொள்ளவோ இறைத்தூதர் அனுமதிக்கவில்லை என்பது முதலாவது காரணம்.

முஹம்மத்(ஸல்) அவர்கள் ஒரு தோழருக்கு இரவில் பிரார்த்திப்பதற்காக ஒரு பிரார்த்தனையைக் கற்றுக் கொடுக்கிறார்கள். அதில் 'வநபிய்யிக அல்லதி அர்ஸல்த' (உன்னால் அனுப்பப்பட்ட நபியையும் (நம்புகிறேன்) என்ற வார்த்தையைக் கற்றுக் கொடுக்கிறார்கள். அந்த நபித்தோழர் அந்தப் பிரார்த்தனையை மனனம் செய்துக் கொண்டு வந்து இறைத் தூதரிடம் ஒப்புவித்து சரிபார்க்கிறார். அப்போது 'வநபிய்யிக அல்லதி அர்ஸல்த' என்று இறைத்தூதர் கற்றுக் கொடுத்த அந்த வார்த்தையை மாற்றி 'வரஸூலிக அல்லதி அர்ஸல்த' என்று மனனம் செய்து வந்தார்.

'நபிய்யிக' 'ரஸூலிக்க' ஒரேயொரு பதம் மாறுகிறது. ஆனால் இரண்டுக்கும் அர்த்தம் ஒன்றுதான். 'நபிய்யிக' 'உனது நபியை' - 'ரஸூலிக்க' 'உனது தூதரை'. நபியாகவும் - ரஸூலாகவும் முஹம்மத்(ஸல்) இருக்கும் போதும் 'நபிய்யிக' என்றுக் கற்றுக் கொடுத்ததை 'ரஸூலிக்க' என்று மாற்றிக் கொண்டு வந்ததை முஹம்மத்(ஸல்) அவர்கள் ஒத்துக் கொள்ளவில்லை. 'நான் கற்றுக் கொடுத்தது போன்று 'நபிய்யிக' என்றே சொல்' என்று திருத்தம் செய்கிறார்கள். (இந்த சம்பவம் புகாரியின் ஆரம்பத்திலேயே இடம் பெறுகிறது)

நபி - ரஸூல் இரண்டும் ஒரே அர்த்தத்தைக் கொடுக்கக் கூடியதாக இருந்தும், ஒரே மொழியில் ஒரே அர்த்தத்தைக் கொடுக்கக் கூடியதாக இருந்தும் கூட முஹம்மத் (ஸல்) அவர்கள் வாயிலிருந்து வெளிப்பட்ட வார்த்தைகளில் எத்தகைய மாற்றமும் செய்யக் கூடாது என்று அவர்கள் விளக்கியுள்ளதால் 'அவர்கள் எதையெல்லாம் வணக்கமாக - பிரார்த்தனைகளாக சொல்லிக் கொடுத்தார்களோ அவற்றில் எத்தகைய மாற்றமும் செய்யக் கூடாது.

தொழுகை என்பது இறை வணக்கமாகும். அதில் இறைத்தூதர் அரபியில் தான் ஓதியுள்ளார்கள். அரபியில் தான் ஓத வேண்டும் என்று விரும்பியுள்ளார்கள் என்பதால் அரபியில் ஓதுவது தான் சரியாகும். இதை அரபி மொழிப் பற்று என்பதை விட இறைத்தூதர் மீதான விசுவாசமும் அவர்களை முழுவதுமாகப் பின்பற்றுவதற்கான அடையாளமுமாகும் என்பதே சரியாகும். ஒருவேளை முஹம்மத் (ஸல்) அவர்கள் அரபியல்லாத வேற்று மொழியில் வந்திருந்தால் அப்போது யாரும் அரபி மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்க மாட்டோம். அவர்கள் எந்த மொழியில் வந்தார்களோ அந்த மொழியில் தான் வணக்கங்கள் நடக்கும். இதிலிருந்து மொழியை விட இறைத்தூதருக்கு தான் முக்கியத்துவம் என்பதை விளங்குவீர்கள்.

அரபி மொழிப் பற்று தவறா..

அரபு மொழியின் மீதான விசுவாசமே அவ்வாறு செய்ய சொல்கிறது அல்லது செய்யும் படி தூண்டப்படுகிறது என்றே வைத்துக் கொண்டாலும் அதுவும் அவசியம் தான் என்பதையும் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.

ஒரு மொழி எந்த அளவிற்கு மக்களிடம் புழக்கத்திலிருக்கிறதோ அந்த அளவிற்கு அது நீண்ட ஆயுளைப் பெறும். தமிழ் என்ற மொழி பேச்சு வழக்கிலாவது இருப்பதால் தான் அதனால் இரண்டாயிரம் வருடங்களாக தாக்குபிடிக்க முடிகிறது. ஆனால் சமஸ்கிரத மொழியின் நிலை என்ன? வேதங்கள் அந்த மொழியில் இருந்தும் அது நடைமுறைப் படுத்தப்படாமலாகி விட்டதால் மக்களிடமிருந்து அந்த மொழி விடைப் பெற்றுக் கொண்டதோடு வேதங்களின் கருத்துக்களும் முடக்கப்பட்டு விட்டன.

குர்ஆன் என்பது இறைவனால் இறக்கியருளப்பட்ட இறுதி வேதமாகும். இதற்கு முன் வெளிபட்ட தவ்ராத் - இன்ஜில் போன்ற (இன்றைக்கு கிறிஸ்த்துவர்கள் வைத்திருக்கும் பழைய - புதிய ஏற்பாடுகளுக்கும் நபிமார்களுக்கு இறக்கப்பட்ட தவ்ராத் - இன்ஜில் ஆகியவற்றிற்கும் எத்தகைய சம்பந்தமுமில்லை) வேதங்கள் காலாவதியாகி மக்களிடமிருந்து மறைந்துப் போனதற்கு அந்த வேதங்கள் இறங்கிய மொழிகளும் காரணமாகும். படிப்படியாக அந்த மொழிகள் வழக்கொழிந்துப் போனதால் அவற்றோடு வேதங்களும் சென்று விட்டன. குர்ஆன் என்பது இறுதி நாள் வரை நீடிக்க வேண்டிய ஒரு வழிகாட்டி என்பதால் அது இறங்கிய மொழியான அரபு மொழி பாதுகாக்கப்பட வேண்டும் என்ற அக்கறை ஒவ்வொரு முஸ்லிமுக்கும் இருக்க வேண்டும்.  அதை பாதுகாக்கும் வழிகளில் ஒன்று தான் தொழுகையில் அது இறங்கிய அதே வடிவில் அதே மொழியில் ஓதுவதாகும். அந்த வகையில் அரபு மொழிப் பற்று அவசியமாகின்றது.

இன்னும் கூடுதல் பற்று வேண்டும்.

ஆங்கிலம் மிக சமீபத்திய மொழியாகும். அது இன்றைய உலகை ஆளுமைப் புரிவதற்கு காரணங்கள் இரண்டு.

அந்த மொழியைப் பரப்புவதற்காக அந்த மொழிப் பேசக் கூடிய நாட்டவர்கள் மற்றும் ஆட்சியாளர்கள் எடுத்துக் கொண்ட முயற்சி. அதற்கான அயராத உழைப்பு. அந்த முயற்சியும் உழைப்பும் தான் 'செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத் தேன் வந்துப் பாயுது காதினிலே' என்று மொழிப் பெருமைப் பேசும் நம் மாநிலத்தில் பிறக்கும் குழந்தைகள் 'அம்மா அப்பா' என்று கற்றுக் கொள்வதற்கு முன் 'மாம் - டாட்' என்பதை சொல்லி சந்தோஷப்படுகிறது. மொழி நாகரீகம் என்பதே ஆங்கிலம் தான். ஆங்கிலம் தெரியாதவன் நாகரீகக் குறைவு உடையவன்தான் என்ற மனநிலை உலகெங்கும் வியாபித்துப் போய்விட்டது. எண்ணிப் பார்க்க முடியாத அளவிற்கு விரிந்துப் போயுள்ள மனித அறிவின் எல்லைகள் அனைத்தும் ஆங்கில மொழியின் உள்ளே தான் புதைந்துக் கிடக்கின்றன. எந்த நாட்டு எழுத்தாளராக இருந்தாலும் அவரது ஆக்கம் உலக அளவில் போக வேண்டும் என்றால் அது ஆங்கிலத்தில் இருந்தாக வேண்டும். புகழ் பெற்ற இந்திய எழுத்தாளர் அருந்ததி ராய் தனது படைப்புகளை இந்திய மொழிகளில் கொடுத்திருந்தால் இத்துனை சீக்கிரம் அவருக்கு 'புக்கர்' விருது கிடைத்திருக்குமா..?

     ஒருவன் ஆங்கிலம் பேசும் போது 'இவனுக்கு ஆங்கிலப் பற்று, ஆங்கில வெறி' என்றெல்லாம் சொல்ல முடியாத அளவிற்கு அந்த மொழி உலகின் இயல்பான வாழ்க்கைத் தரத்தைப் பெற்று விட்டது.

ஆங்கிலம் தன்னை வளப்படுத்திக் கொள்வதற்கு எத்தகையக் காரியத்தையும் செய்யத் தயங்குவதேக் கிடையாது. அதாவது பிற மொழி வார்த்தைகளை தன்னோடு இணைத்துக் கொண்டு தன் பெயரை அதற்கு சூட்டிவிடுவதற்கு ஆங்கிலம் என்றைக்கும் வெட்கப்படுவதேக் கிடையாது. இன்றைக்கு மக்களிடம் புழக்கத்திலிருக்கும் அனேக ஆங்கில வார்த்தைகள் உண்மையில் அந்த மொழியின் வார்த்தைகளல்ல. பிற மொழிகளிலுள்ளவற்றை ஐக்கியப் படுத்திக் கொண்டதுதான்.

எந்த அளவிற்கு ஆங்கிலம் உலகை ஆதிக்கம் புரிகிறதோ அதை விட அதிகமாக இன்னும் முன்னேயே அரபி மொழி உலகை ஆதிக்கம் புரிந்திருக்க வேண்டும். காரணம் ஆங்கிலம் வெறும் மொழியாக மட்டுமே இருப்பது போன்று அரபு வெறும் மொழி மட்டுமல்ல அந்த மொழியில் மிகத் தெளிவான அர்த்தமுள்ள வாழ்க்கையொன்று புதைந்துக் கிடக்கின்றது.

குர்ஆன் வெளிப்பட்ட நாள் முதல் அதற்கு நிகராக உலகில் ஒரு வேதம் இல்லை. வருவதற்கும் வாய்ப்பில்லை என்றெல்லாம் பெருமைப்பட்டுக்கொள்ளும் முஸ்லிம்களில் போதிய அளவு செல்வமும் நிறைந்த வாழ்க்கைத் தரமும் அதிகப்படியான நிலப்பரப்புகளையும் கொண்டவர்கள் அரபிகள். இருந்தும் அவர்களால் அரபியை ஓர் உலக மொழியாக ஆக்க முடியவில்லை. முடியவில்லை என்பதை விட முயற்சிக்கவில்லை என்றே சொல்ல வேண்டும். இன்றைக்கும் நிலவரம் இதுதான். ஒரு ஐம்பது வருடங்களுக்கு முன்பாவது இம் முயற்சியில் அவர்கள் இறங்கி இருந்தால் இன்றைக்கு நீங்களும் நாமும் அரபி மொழியை முழுமையாக கற்றுக் கொண்டிருப்போம். அந்த மொழி நம்மிடையே பேச்சு வழக்கு மொழியாகி - தாய் மொழியின் இயல்பைப் பெற்றிருக்கும். அரபு மொழி ஆரம்பப் பள்ளியிலிருந்து மேற்படிப்பு வரை பாட திட்டத்தின் கீழ் கொண்டு வரப்பட்டிருந்தால் இந்தியா போன்ற நாடுகளில் அரபு மதரஸாக்களுக்கு வேலையில்லாமல் போயிருக்கும்.

அரபு, மத மொழியாக்கப்பட்டுள்ளது.

எந்த ஒரு மொழிக்கும் மத சாயம் பூசுவது முட்டாள்தனமானது என்பதை அறிவாளிகள் உலகில் முழங்கிக் கொண்டே இருக்கிறார்கள். எந்த மதத்திற்கும் எந்த மொழியும் சொந்தமில்லாத நிலையிலும் அரபு மொழிக்கும் - உருது மொழிக்கும் மத சாயம் பூசும் நிலை உருவாகி விட்டது. (உருது பற்றி நாம் இங்கு விவாதிக்க வேண்டாம்).

அரபி, பள்ளிப் பாடத்திட்டங்களில் இல்லாததால் அந்த மொழியை போதிப்பதற்கும் அந்த மொழியில் உள்ள இஸ்லாமிய கருத்துக்களை போதிப்பதற்கும் இந்தியா இலங்கை போன்ற நாடுகளில் அரபு மதரஸாக்கள் துவங்கப்பட்டன. தேசிய ஒருங்கிணைப்பு - நல்லக் கல்வித்திட்டம் - எதிர்கால வளர்ச்சி - போதிக்கும் முறைகளில் சீர்திருத்தம் என்று எது ஒன்றுமே அரபு மதரஸாக்களில் இல்லாததால் அவை மக்களிடம் எடுபடாமல் போய் விட்டன. (பாட திட்டங்களிலும் போதிக்கும் முறைகளிலும் மிகப் பெரிய அளவிலான சீர்திருத்தங்கள் வேண்டும் என்று கல்வியாளர்கள் உரத்து சொல்லிக் கொண்டிருந்தாலும் பழமை வாதிகளில் காதுகளில் அவை விழுவதேயில்லை).

அரபு ஒரு மதத்தின் மொழி என்ற நிலையைப் பெற்று விட்டதால் தான் அதில் உள்ள வார்த்தையைக் கூட மற்றவர்கள் தங்கள் வாய்களால் உச்சரிக்க மறுக்கிறார்கள். தமிழில் உள்ள 'வணக்கம்' என்ற வார்த்தையையும், சமஸ்கிரதத்திலுள்ள 'நமஸ்காரம்' என்ற வார்த்தையையும், ஆங்கிலத்திலுள்ள 'குட்மார்னிங்' என்ற வார்த்தையும் மரியாதைக்குரிய - வாழ்த்துக்குரிய வார்த்தைகளாக பார்ப்பவர்கள், அங்கீகரிப்பவர்கள் அரபு மொழியிலுள்ள 'அஸ்ஸலாமு அலைக்கும்' (உங்களுக்கு சாந்தி நிலவட்டும்) என்ற வாழ்த்து வார்த்தையை மட்டும் வாழ்த்தாக பார்க்காமல் ஒரு மத வார்த்தைப் போன்று, மத திணிப்புப் போன்று பார்க்கிறார்கள். அரபு நாடுகளில் வந்து பணம் சம்பாதித்து நல்ல நிலையிலிருக்கும் அன்னிய நாட்டு பிற மதத்தவர்களில் சிலர் திட்டமிட்டே அஸ்ஸலாமு அலைக்கும் போன்ற பொதுவான வார்த்தைகளை புறக்கணிப்பதை சர்வ சாதாரணமாகப் பார்க்கலாம்.

அரட்டை அரங்கத்தில் ஒரு முஸ்லிம் சலாத்தின் வழியாக 'விசு'விற்கு வாழ்த்து சொல்லும் போது விசுக்கென்று அவர் அதை மறுத்த விதத்தை நாம் மறக்க முடியாது. காரணம் அதை ஒரு மத வாழ்த்தாக அவர் நினைத்துக் கொண்டிருப்பதுதான்.

இந் நிலைக்கு உள்ள காரணங்கள் அனைத்தும் களையப்பட வேண்டும். அதை ஒரு மொழியாக மட்டுமே உலகம் பார்க்க வேண்டுமானால் தொழுகைப் போன்ற வணக்கங்களில் மட்டுமின்றி பொதுவாழ்க்கையிலும் அரபு நடைமுறைப் படுத்தப்பட வேண்டும். இது நம்மைப் பொருத்தவரை மிகக் கடினமான பணிதான் என்றாலும் அந்த சிந்தனையையாவது மக்களிடம் கொண்டு செல்வோம்.

நம் தேவைகளை இறைவனிடம் முறையிடும் போது நமக்கு தெரிந்த எந்த மொழியிலும் பிரார்த்தித்துக் கொள்ளலாம் அதற்கு தடையொன்றும் இல்லை.

--
ஜி என்

Friday, November 14, 2008

ஏன் இத்தனைத் திருமணம்?


கிறித்தவ நண்பர் ஒருவர் நபி(ஸல்) அவர்களின் திருமணங்களைப் பற்றி கீழ் கண்ட வினாக்களை எழுப்புகிறார்;.

இறைத்தூதர் மற்றவர்களுக்கு ஒரு முன்னுதாரணமாக இருக்கும் போது ஒன்று - இரண்டு திருமணங்கள் மட்டும் செய்திருக்கலாம். 11 திருமணங்கள் முடித்ததால் அதையே காரணங்காட்டி அரபுகள் 3 - 4 திருமணம் முடித்து அநீதம் இழைக்கிறார்கள் என்கிறார்.

இறைத்தூதர் தம்மை விட வயது முதிர்ந்த பெண்களை திருமணம் முடிக்கக் காரணம் என்ன? என்றும் கேட்கிறார் இது பற்றி தெளிவான விளக்கம் வேண்டும்  முபாரக் அலி - யாஹூ மெயில் வழியாக.

அரபுகளும் சரி உலகின் இதர பகுதிகளில் வாழும் முஸ்லிம்களில் விரல் விட்டு எண்ணக் கூடியவர்களும் சரி இவர்களெல்லாம் திருமணத்தின் மூலம் ஒரே நேரத்தில் 3 - 4 மனைவிகளை சொந்தமாக்கிக் கொள்வதற்கு காரணம் இறைத் தூதர் பலதாரமணம் புரிந்துள்ளார் என்பதனால் அல்ல மாறாக ஒரே நேரத்தில் நான்கு பெண்கள் வரை ஒருவனுக்கு மனைவியாக இருக்கலாம் என்ற இறைவனின் அனுமதிதான் இதற்கு காரணமாகும்.
 
فَانكِحُواْ مَا طَابَ لَكُم مِّنَ النِّسَاء مَثْنَى وَثُلاَثَ وَرُبَاعَ فَإِنْ خِفْتُمْ أَلاَّ تَعْدِلُواْ فَوَاحِدَةً

'....பெண்களில் உங்களுக்கு விருப்பமானவர்களை இரண்டிரண்டாகவோ - மும்மூன்றாகவே - நான்கு நான்காகவோ நீங்கள் திருமணம் செய்துக் கொள்ளுங்கள் அவர்களுக்கிடையில் நீதமாக நடக்க முடியாது என்று பயந்தால் ஒரு பெண்ணையே போதுமாக்கிக் கொள்ளுங்கள்....' (அல் குர்ஆன் 4:3)

அரபுகள் உட்பட முஸ்லிம்களில் வசதிவாய்ப்புள்ளோர் ஒன்றுக்கு மேற்பட்ட திருமணங்கள் செய்வதற்கு இந்த வசனம்தான் காரணமாகும்.

இந்த வசனம் நபி(ஸல்) அவர்களின் 52ம் வயதின் இறுதிப் பகுதியில் இறங்கியது என்று விளங்க முடிகிறது. இந்த வசனம் இறங்கும் போது இறைத் தூதர் அவர்களுக்கு மூன்று திருமணங்களே முடிந்திருந்தன. அதில் முதல் மனைவி இறந்துப் போக இரண்டு மனைவிகளே உயிரோடு இருந்தனர். இறைத்தூதர் பத்துக்கும் மேற்பட்ட திருமணங்களை செய்ததால் தான் முஸ்லிம்கள் பலதாரமணம் செய்கிறார்கள் என்று அந்த கிறித்துவ சகோதரர் விளங்கி இருப்பது தவறு என்பதை இப்போது புரிந்திருப்பீர்கள். இறைத்தூதர் இரண்டு மனைவிகளோடு இருந்தபோதே முஸ்லிம்கள் அதிகப்பட்சமாக நான்கு திருமணம் செய்துக் கொள்ளலாம் என்ற அனுமதி இறைவன் புறத்திலிருந்து கிடைத்து விட்டது.

நான்கு திருமணங்கள் செய்பவர்கள் பெண்களுக்கு அநீதி இழைக்கிறார்கள் என்ற வாதமும் தவறு. ஒரு மனைவியோடு வாழ்பவர்கள் தங்கள் மனைவிகளுக்கு அநீதியே இழைப்பதில்லை என்று யாராவது சான்றிதழ் கொடுக்க முடியுமா... அநீதி இழைத்தல் என்பது  ஆண்களின் மன நிலையைப் பொருத்ததாகும். ஒன்றுக்கு மேற்பட்ட திருமணங்கள் செய்து பல மனைவியரோடு அவர்களுக்கு மத்தியில் பேதம் பாராட்டாமல் - பாராபட்சம் காட்டாமல் -  சமமாக நடக்கும் ஆண்களும் இருக்கிறார்கள். சமூகத்திற்கோ - சட்டத்திற்கோ பயந்து ஒரு திருமணம் செய்து மனைவி வீட்டில் இருக்கும் போது அன்னிய பெண்கள் மீது கையை வைக்கும் கெடுமதியாளர்களும் ஆண்களில் இருக்கத்தான் செய்கிறார்கள். (பலதாமணம் பெண்களுக்கு அநீதி இழைக்கக் கூடியதா... என்ற விவாதத்திற்கு உள்ளே நாம் செல்லவில்லை காரணம் கேள்வி அதுபற்றியதல்ல)

பலதாரமணத்தில் மட்டும் அநீதி இருக்கிறது என்று கூறுவது ஆண்களின் மனநிலையைப் புரிந்துக் கொள்ளாதவர்களின் வாதமாகத்தான் இருக்க முடியும்.

இறைத்தூதர் தம்மை விட வயது முதிர்ந்தப் பெண்களைத் திருமணம் செய்ததற்குரிய காரணங்களை விளங்க வேண்டுமானால் அந்த திருமணங்களின் பின்னணியை நாம் விளங்க வேண்டும். அது விரிவாக விளக்கப்பட வேண்டிய வரலாறாகும்.

சுருக்கமாக புரிந்துக் கொள்ள வேண்டுமானால்,

முதிர்ந்த வயது என்பது சமூகத்தில் பிறரால் புறக்கணிக்கப்பட்டு அவலங்களை சந்திக்கக் கூடிய - பிறரது அன்பையும், ஆதரவையும், அரவணைப்பையும் மனம் விரும்பக் கூடிய ஒரு வயதாகும். இறைத் தூதர் வயது முதிர்ந்தப் பெண்களை திருமணம் செய்ய முன் வந்ததும் அந்தப் பெண்கள் மறுக்காமல் திருமணத்திற்கு சம்மதம் தெரிவித்ததும் இந்த பின்னணியைக் கொண்டதாகும் இது முதல் காரணம். ஆதரவற்றவர்களுக்கு ஆதரவளிப்பது ஆட்சியாளரின் கடமையாகும் என்பதை மிக அழுத்தமாக உலகில் உரைத்து அதை செயலாக்கப்படுத்திக் காட்டியவர்கள் முஹம்மத்(ஸல்) அவர்கள். அன்னியப் பெண்ணாக வைத்து ஆதரவு அளிப்பதை விட சொந்த மனைவியாக்கிக் கொண்டு ஆதரவளித்தால் அந்தப் பெண்களால் கூடுதல் பலன் பெற முடியும் என்பதால் மனைவி என்ற அந்தஸ்து வழங்கப்பட்டது.

இதர ஆட்சியாளர்கள் இதே வழியைப் பின்பற்றலாமா என்றால் அனுமதிக்க முடியாது. ஏனெனில் முஹம்மத்(ஸல்) அவர்கள் வெறும் ஆட்சியாளராக இருந்து மட்டும் இந்த திருமணங்களை செய்யவில்லை. இறைவனின் தூதராக இருந்தும் செய்தார்கள். தம் செயல்களுக்கு நாளை இறைவனிடம் பதில் சொல்ல வேண்டும் என்ற அவர்களின் உள்ளச்சத்தை உலகில் எந்த ஆட்சியாளரின் உள்ளச்சத்தோடும் ஒப்பிட்டுப் பார்க்கவே முடியாது. இந்த அளவுகோள் தான் இத்துனை மனைவிகளுக்கு மத்தியிலும் அவர்களை நீதமாக நடக்கச் செய்தது.

எல்லா வீடுகளிலும் நடக்கும் சக்களத்தி சண்டை இறைத் தூதரின் வீட்டிலும் நடந்ததுதான். அதற்கு கூட 'உன்னை விட நான்தான் அவர்களை அதிகமாக கவனிப்பேன்... உன்னை விட நான் தான் அவர்களை அதிகமாக கவனிப்பேன்... என்ற உபசரிப்பு போட்டி மனப் பான்மையில் நடந்ததாகும். அந்த மனைவிகளின் வீட்டில் பல சந்தர்பங்களில் வறுமை கவ்வி கிடந்த போதும் கூட அவர்கள் தங்கள் கணவரை போட்டிப் போட்டுக் கொண்டு நேசித்ததற்கு நீதி வழுவா அவர்களுடைய வாழ்க்கை முறையே காரணமாகும்.

அந்த இறைத்தூதருக்கு பிறகு வந்த எந்த ஆட்சியாளருக்கும் (அவர்களுடைய அன்புத் தோழர்கள் உட்பட) அவர்களுடைய பண்பு இருக்கவில்லை - இருக்க முடியாது என்பதால் அவர்களைப் போன்று மனைவிகளின் எண்ணிக்கையை - ஆதரவு அளிக்க வேண்டிய சூழ்நிலை வந்தாலும் - கொடுக்க முடியாது.

அவர்கள் பல திருமணங்கள் செய்ய வேண்டியதற்கு இன்னொரு முக்கியமான - அவசியமான காரணமும் இருந்தது.

அவர்கள் இறைவன் புறத்திலிருந்து வந்த இறுதி தூதராக இருந்ததால் அவர்களின் மொத்த வாழ்க்கையையும் ஒளிவு மறைவு இல்லாமல் மொத்த உலகுக்கும் சொல்ல வேண்டிய நிலை உருவானது. வெளி உலக வாழ்க்கையை அறிவிப்பதற்கு ஆயிரக்கணக்கான தோழர்கள் (தோழிகளும் அடங்குவர்) இருந்தனர். சரிபாதி வாழ்க்கையை வெளி உலகில் கழிக்கும் மனிதன் மீதி பாதி வாழ்க்கையை வீட்டில் தான் கழிக்க வேண்டும். இறைத் தூதரின் நிலையும் இதுதான்.

வெளி உலகத்தில் அவர்கள் வாழ்ந்த பாதி வாழ்க்கையை அறிவிக்க ஆயிரக்கணக்கான மக்கள் இருந்த போது மறுபாதி வாழ்க்கையை அறிவிப்பதற்கு ஒருவரோ - இருவரோ போதியவர்களாக இருக்க முடியாது. இதை ஈடு செய்வதற்காகவும் இவர்கள் நான்குக்கு மேற்பட்ட திருமணங்கள் செய்ய வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டது.

காலையில் எழுந்தது தொடங்கி இரவில் இல்லறத்தில் ஈடுபட்டு ஓய்வெடுக்கும் வரையிலான அனைத்து வழிமுறையையும் அவர்களின் மனைவிகள் மூலமே இவ்வுலகிற்கு கிடைத்துள்ளது. வெளி உலக வாழ்க்கையின் அறிவிப்பாளர்களுடன் ஒப்பிடும் போது இந்த மனைவிகளின் எண்ணிக்கை மிக மிக சொற்பமே... இன்னும் கூட அவர்களுக்கு மனைவிகள் தேவைப்பட்டிருக்கும் என்று நம் மனங்கள் நியாயம் கற்பித்தாலும் 'இதற்கு மேல் வேறு திருமணங்கள் செய்யக் கூடாது' என்று இறைவன் தடுத்து விட்டான். (பார்க்க அல் குர்ஆன் 33:52)
 

لَا يَحِلُّ لَكَ النِّسَاء مِن بَعْدُ وَلَا أَن تَبَدَّلَ بِهِنَّ مِنْ أَزْوَاجٍ وَلَوْ أَعْجَبَكَ حُسْنُهُنَّ إِلَّا مَا مَلَكَتْ يَمِينُكَ وَكَانَ اللَّهُ عَلَى كُلِّ شَيْءٍ رَّقِيبًا

வயது முதிர்ந்தவர்கள் உட்பட நபி(ஸல்) பல திருமணங்கள் செய்ததற்கு இது போன்ற நியாயமான காரணங்கள் இருந்தன.

--
ஜி என்

Saturday, November 8, 2008

ஹதீஸ் கலை "அறிவோம்"

இஸ்லாமியப் பிரச்சாரம் தீவிரமடையத் துவங்கிய காலத்திலிருந்து குர்ஆனும், ஹதீஸ்களுமே இஸ்லாத்தின் மூல ஆதாரம் என்று மக்களிடம் வைக்கும் போது நபிமொழிகளில் பலவீனமும் உண்டா? இது என்ன கொள்கை என்று பலர் குரல் எழுப்பியுள்ளனர். பலர் நம்மை கேலியும் கிண்டலும் செய்தனர். எதை கண்டும் துவளாமல் ஏராளமான தூய இஸ்லாமிய சிந்தனைவாதிகள் உருவாகி களத்தில் நிற்கும் வேளையில் அவர்களுக்குப் பயன்படும் நோக்கில் சுருக்கமாக பலவீனமான ஹதீஸ்கள் உருவாவது எப்படி? என்று தெரிந்து கொள்ள இக்கட்டுரை வெளியிடப்படுகிறது.

ஹதீஸ் கலை என்பது ஆழ்ந்த, அகன்ற அறிவுத்திறன் கொண்டதாகும். ஒரு சில பக்கங்களில் முடியக்கூடிய விஷயமல்ல அது. இருப்பினும் புரிந்து கொள்வதற்கு ஏற்ற அடிப்படை விஷயம் இதுதான்.

1. ஒரு ஹதீஸை நபித்தோழர்கள் நேரடியாக அறிவிக்காமல் அதற்கு அடுத்தத் தலைமுறையினர் (தாபிஈ) நேரடியாக அறிவித்தால், அவர்கள் நபி (ஸல்) அவர்களைப் பார்த்துப் பழகும் வாய்ப்பில்லை என்பதால் அத்தகைய ஹதீஸ்கள் பலவீனமாகி விடும்.

2. அறிவிப்பாளர்களுக்கு மத்தியில் தொடர்பின்மை இருந்தால் அவைகளும் பலவீனமாகும்.

3. நபித்தோழர் ஒரு ஹதீஸை அறிவித்து அதன்பிறகு வரும் அறிவிப்பாளர்களிடையே தொடர் விடுபட்டிருந்தால் அதுவும் தொடர் அறுந்த பலவீனமான ஹதீஸாகும்.

4. எனக்கு இவர் இந்த ஹதீஸை அறிவித்தார் என்று ஒரு அறிவிப்பாளர் கூறும் போது அவர்கள் இருவரும் சமகாலத்தில் வாழ்ந்தவராகவும் இருவரும் நேரடியாக சந்திக்கும் வாய்ப்பை பெற்றவராகவும் இருக்க வேண்டும். அதில் ஏதாவது குறை இருந்தால் அதுவும் பலவீனமாகும்.

5. நபித்தோழர்களைத் தவிர்த்து இதர அறிவிப்பாளர்களில் எவராவது பொய்யர் என்று பரவலாக இனங்காட்டப்பட்டால் அதுவும் பலவீனமாகும்.

6. மார்க்கத்திற்கு முரணான பித்அத் போன்ற காரியங்களைச் செய்யக் கூடியவர்கள் அவர்களது செயல்களை நியாயப்படுத்தி ஹதீஸ்கள் அறிவித்தால் அதுவும் பலவீனமாகும்.

7. ஒரு அறிவிப்பாளர் இளமையில் நல்ல ஞாபக சக்தியுடன் இருந்து பிற்காலத்தில் ஞாபக சக்தியில் தடுமாற்றம் ஏற்பட்டால், தடுமாற்றம் ஏற்பட்ட பின்பு அறிவித்தவை பலவீனமாகும். அவருக்கு எப்போது தடுமாற்றம் ஏற்பட்டது என்ற தகவல் தெரியாவிட்டால் அவர் அறிவித்த முழு செய்திகளும் பலவீனமாகும்.

8. ஒரு செய்தியை அறிவிக்கும் போது ஒருமுறை ஒருவர் பெயரையும் அடுத்த முறை அறிவிக்கும் போது பெயரை மாற்றியும் அறிவித்தால் தடுமாற்றத்தின் காரணத்தால் அதுவும் பலவீனமாகும்.

9. மொழி, இனம், பாரம்பரியம,; மார்க்கத்தில் பிரிவினை இவைகளை அனுமதித்து அல்லது புகழ்ந்து அறிவிக்கப்படும் அறிவிப்புகள் மொத்தமாக குர்ஆனுக்கு முரண்படுவதால் அவைகளும் பலவீனமாகும்.

10. ஹதீஸ் கலை வல்லுனர்கள் அனைவர்களிடமும் அறிமுகமில்லாத, தகவல் கிடைக்காத ஆட்கள் மூலம் ஒரு செய்தி வந்தால் அதுவும் பலவீனமாகும்.

11. தந்தை வழியாக மகன் அறிவிக்கும் செய்தியில் மகனுடைய சிறு வயதிலேயே தந்தை இறந்திருந்தால், தந்தையிடமிருந்து செவியுறும் வாய்ப்பை இழந்திருந்தால் அதுவும் பலவீனம்.

12. ஒரு தந்தைக்கு பல மகன்கள் இருந்து மகன்களுடைய பெயர் குறிப்பிடாமல் இன்னாரின் மகன் அறிவித்தார் என்று கூறினால் அதுவும் பலவீனமாகும்.

13. இறைவன் கருணையாளன் என்பதால் எத்தகைய பொய்யும் பேசலாம், தவறில்லை என்ற கொள்கை வாதிகள் அறிவிக்கும் ஹதீஸ்கள் அனைத்தும் பலவீனமாகும்.

இப்படி ஏராளமான மொழிகளில் ஹதீஸ்கள் தரம் பிரிக்கப்படுகின்றன. لاَ تَقْفُ مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ
சந்தேகமானவற்றை பின்பற்ற வேண்டாம் (அல் குர்ஆன் 17:36). என்ற இறை கட்டளைக்கிணங்க, சந்தேகம் ஏற்படும் எல்லா செய்திகளையும் ஹதீஸ் கலை மேதைகள் ஒதுக்கி தள்ளிவிட்டார்கள்

குறிப்பு 1: இக்கட்டுரை தஹ்தீப், தர்கீப், தல்கீஸ், மீஸூன், தத்ரீப் இன்னும் பல ஹதீஸ் நூல்களைத் தழுவி எழுதப்பட்டது.

குறிப்பு 2: குர்ஆனுடன் எந்த வகையிலும் ஒத்துப் போகாத - முரண்பட்டே நிற்கும் ஹதீஸ்கள் ஏதாவது இருந்தால் அப்போது நாம் குர்ஆனுக்கு முக்கியத்துவம் கொடுத்து ஹதீஸ்கள் விஷயத்தில் மெளனம் காத்து விட வேண்டும்.  ஹதீஸ்கள் முக்கியம் என்று குர்ஆனை அலட்சியப்படுத்தி விடக் கூடாது.

--
ஜி என்

Wednesday, November 5, 2008

வெளியில் செல்லும் பெண்

வெளிநாட்டில் வேலை பார்க்கும் நண்பரின் மனைவி தன்தாய்வீட்டாரோடு சொந்த நாட்டில் வசிக்கிறாள். அவள் வெளியிடங்களுக்கு தன் சகோதரனோடு சென்றாலும் கணவனின் முன்அனுமதியில்லாமல் சென்று வருகிறாள். இதுபற்றி நண்பர் ஏதாவது கேட்டால் சகோதரனுடன்தானே வெளியில் செல்கிறேன் அதனால் முன் அனுமதிபெற்றுதான் செல்லவேண்டும் என்பதில்லை என்று வாதாடுகிறார்;. இதனால் தமக்கிடையே எந்த பிரச்சினையும் வந்துவிடக் கூடாதே என்ற மன அச்சத்தில் நண்பர் இப்போது எதுவுமே கண்டுகொள்வதில்லை.
 
இது சரியா? தவறா? குர் ஆன் மற்றும் ஹதீஸ் ஆதாரத்தோடு பதில் தேடுகிறேன்.
 


அஸ்ஸலாமு அலைக்கும்.
 
ஒரு பெண் தன் தாய் வீட்டில் இருந்தாலும் சரி, கணவனுடன் இருந்தாலும் சரி தனது தேவைகளுக்காக வெளியில் செல்லும் போது கணவனின் அனுமதிப் பெற்றுதான் செல்ல வேண்டும் என்று மார்க்கம் எந்த நிபந்தனைனயும் விதிக்கவில்லை.
 
திருமணம் செய்ய தடை செய்யப்பட்ட ஆண் துணையுடன் வெளியில் செல்ல வேண்டும் என்றே சொல்கின்றது. இதுவும் கூட பொது நிபந்தனையல்ல.
 
‏حدثنا ‏ ‏إسحاق بن إبراهيم الحنظلي ‏ ‏قال قلت ‏ ‏لأبي أسامة ‏ ‏حدثكم ‏ ‏عبيد الله ‏ ‏عن ‏ ‏نافع ‏ ‏عن ‏ ‏ابن عمر ‏ ‏رضي الله عنهما ‏
‏أن النبي ‏ ‏صلى الله عليه وسلم ‏ ‏قال ‏ ‏لا تسافر المرأة ثلاثة أيام إلا مع ذي ‏ ‏محرم

திருமணம் செய்யத்தகாத ஆண் உறவினருடன் தவிர மூன்று நாட்கள் ஒரு பெண் பயணம் மேற்கொள்ளக் கூடாது'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் (புகாரி)
 
 
மூன்று நாள் பயண தொலைவு என்பதை இன்றைய பயணம் என்று நாம் கருதிக் கொள்ளக் கூடாது.  இன்றைய நிலையில் மூன்று நாட்களில் உலகில் எந்த நாட்டுக்கும் சென்று வந்து விடலாம்.  நபி(ஸல்) காலத்தின் பயண தொலைவையே நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.
 
நீண்ட தூரப்பயணங்களுக்கு அவர்கள் ஒட்டகத்தையே பயன்படுத்தி வந்தார்கள்.  மூன்று நாள் பயண தூரம் என்பது அதிகப்பட்சமாக 70 கிமி முதல் 100 கிமிக்குள் இருக்கலாம். 
 
இந்த அளவு சரி என்றால் 70 கிமீ கடந்து செல்லும் ஒரு பெண் தக்க துணை (அதாவது திருமணம் செய்யஹராமாக்கப்பட்ட துணையுடன்) செல்ல வேண்டும்.   அக்கம் பக்கம் ஊர்களுக்கு செல்வதாக இருந்தால் இந்த நிபந்தனையைக் கூட பொருத்த முடியாது.
 
ஹஜ் செய்வது இதிலிருந்து சிலருக்கு விலக்கு பெறும்.  ஹஜ் என்ற நோக்கத்துக்காக ஒரு பெண் கிளம்பினால் துணையில்லாமல் கூட செல்லலாம்.
 
மார்க்க அடிப்படையில் ஒரு பெண் கணவனிடம் அனுமதிப்பெற்று செல்ல வேண்டும் என்று கட்டளை இல்லையென்றாலும் புரிநதுணர்வு அடிப்படையில் கணவன அவ்வாறு விரும்பும் போது சொல்லி விட்டு செல்லலாம்.
 
هُنَّ لِبَاسٌ لَّكُمْ وَأَنتُمْ لِبَاسٌ لَّهُنَّ
 
(மனைவிகள்) உங்களுக்கு ஆடையாகவும், நீங்கள் அவர்களுக்கு (மனைவிகளுக்கு) ஆடையாகவும் இருக்கிறீர்கள் (அல்குர்ஆன் 2:187) என்று இறைவன் குறிப்பிட்டுள்ளான்.
 
இது கணவன் மனைவிக்கான நட்பின் ஆழத்தை எடுத்துக்காட்டும் தத்துவமாகும்.  புரிந்துணர்வு வெளிபாட்டின் அடையாளமாகும்.  'தன் மனைவி வெளியில் செல்லும் போது தன்னிடம் சொல்லி விட்டு செல்ல வேண்டும்' என்று கணவன் விரும்புவது தவறல்ல.  அதற்கு பல காரணங்கள் கணவனிடம் இருக்கலாம்.
 
சொல்லி விட்டு செல்லும் மனைவியின் மீது கணவனுக்கு அன்பு அதிகரிக்கத்தான் செய்யும்.  இதை மனைவி புரிந்துக் கொள்ள வேண்டும்.  கணவனிடம் சொல்லிவிட்டு செல்வதால் அவர்களுக்கொன்றும் இழப்பு ஏற்பட்டுவிடப் போவதில்லை.  (இது அலைப்பேசிகளின் ஆதிக்கக்காலம் என்பதால் சொல்லிவிட்டு கிளம்புவதற்கு ஒரு நிமிடம் போதும்)

--
ஜி என்

Saturday, November 1, 2008

Re: மதம் மாறினால் கொலை?

குழுமத்தில் விவாதிக்கப்பட்ட தலைப்பு
 
அஸ்ஸலாமு அலைக்கும்.
 
இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட ஒருவர் பிறகு இஸ்லாத்திலிருந்து வெளியேறி மாற்றுமதத்திற்கு சென்று விட்டால் அவரை கொல்ல வேண்டும் என்பது  சட்டமா...?  இது பற்றிய இஸ்லாமிய நிலைப்பாடு என்ன..? என்றக் கேள்வியை ஏற்கனவே சகோதரர் ஹாரூன் கேட்டுள்ளார் எனவே இதுவே முதல் தலைப்பாகும்.  இன்றிலிருந்து 20 நாட்கள் இந்த தலைப்பு குறித்த கருத்தோட்டங்கள் தொடரலாம் இன்ஷா அல்லாஹ்

 
ஒருவர் இஸ்லாத்தை விட்டு வெளியேறி பிற மதத்திற்கு சென்று விட்டால் அவரைக் கொள்ள வேண்டும் என்று அறிஞர்களில் ஒரு சாரார் கூறி வருகிறார்கள்.  ஸலஃபுகள் என்று அறியப்பட்ட முந்தைய அறிஞர்களில் பலரும் இந்த கருத்தைக் கொண்டுள்ளனர்.  அதற்கு ஆதாரமாக,
 
''எவர் தன் மார்க்கத்தை மாற்றிக்கொள்கிறாரோ அவரைக் கொன்று விடுங்கள்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி தமிழ் 3037, 6992.  என்ற நபிமொழியை முன் வைக்கின்றனர்  (இதே கருத்தில் இன்னும் சில நபிமொழிகளும் உள்ளன)
 
இந்த நபிமொழியை படிக்கும் எவரும் இஸ்லாத்தில் மனித உரிமை (இந்த விஷயத்தில்) இல்லை.  ஒருவர் ஒரு மதத்தை தேர்ந்தெடுப்பதும், விரும்பினால் அதை விட்டு விலகுவதும் அவரது சொந்த விருப்பமல்லவா...  கிறிஸ்த்தவத்திலிருந்து எவ்வளவோ நபர்கள் இஸ்லாத்திற்கு வருகிறார்கள்,  ஹிந்து மதத்திலிருந்து இஸ்லாத்தை தழுவுகிறார்கள் அவர்களையெல்லாம் அந்த மதங்கள் கொல்ல சொல்கின்றனவா...  அது மனித உரிமை என்று அந்த மதங்கள் கருதும் போது அது போன்ற ஒரு சகிப்புத் தன்மை ஏன் இஸ்லாத்தில் இல்லை. என்ற முடிவுக்கு வந்து விடுகின்றனர்  இது குறித்து ஆங்காங்கே விவாதங்களும் நடக்கின்றன.   
 
உண்மையில் மதம் மாறியவர்களை இஸ்லாம் கொல்ல சொல்கின்றதா..?  மேற்கண்ட நபிமொழியின் அர்த்தம் என்ன?   இது குறித்து நாம் விளக்கியாக வேண்டும்.    பதிவை துவங்குங்கள்.  தொடர்ச்சியாக எங்கள் கருத்து பதியப்படும்.
.........................................
மதம் மாறினால் மரண தண்டனை பொது சட்டமா..?
 
அஸ்ஸலாமு அலைக்கும்.
 
இஸ்லாத்தை விட்டு வெளியேறிவர்களை கொல்ல வேண்டும் என்பது இஸ்லாத்தின் பொதுவான விதியல்ல. ஹதீஸ்களில் வரும் வாசகங்களை மட்டும் கருத்தில் கொண்டு எந்த சட்டமும் வகுக்க முடியாது.  மேற்கொண்டு கிடைக்கும் ஆதாரங்களையெல்லாம் ஒன்று திரட்டி ஆய்வு செய்த பிறகே ஒரு முடிவுக்கு வர வேண்டும்.
 
இந்த மார்க்கம் மனிதர்களுக்கு முழு சுதந்திரம் அளிக்கக் கூடிய மார்க்கமாகும்.  மார்க்கத்தை எடுத்துச் சொல்வதற்காக அனுப்பப்பட்டவர்களே நபிமார்கள்.  இந்த மார்க்கத்தை ஏற்றவர்களுக்கும், ஏற்காமல் மறுத்தவர்களுக்கும்,  அலட்சியப்படுத்தியவர்களுக்கும் பரிசோ, தண்டனையோ கொடுக்கும் உரிமை இறைவனைச் சார்ந்ததாகும்.  உலக வாழ்வில் முழு சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ள மனிதர்கள் மீது மத சட்டங்களை திணித்து அவர்களை கட்டுப்படுத்தும் படி இஸ்லாம் பணியவில்லை.   இதற்கான ஆதாரங்களை பார்த்து விட்டு தொடர்வோம்.
 
وَقُلِ الْحَقُّ مِن رَّبِّكُمْ فَمَن شَاء فَلْيُؤْمِن وَمَن شَاء فَلْيَكْفُرْ إِنَّا أَعْتَدْنَا لِلظَّالِمِينَ نَارًا
 
(நபியே!) நீர் கூறுவீராக "இந்தச் சத்தியம் உங்கள் இறைவனிடமிருந்து (வந்து)ள்ளது" ஆகவே, விரும்புபவர் அதை ஏற்கட்டும், விரும்புபவர் (அதனை) நிராகரிக்கட்டும். அநியாயக் காரர்களுக்கு (நரக) நெருப்பை நிச்சயமாக நாம் சித்தப்படுத்தியுள்ளோம்;  (அல் குர்ஆன் 18:29)
 
இந்த வசனத்தில் மனிதர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சுதந்திரத்தை கவனிப்போம். சத்தியம் எடுத்து சொல்லப்படுகின்றது. விருப்பமிருந்தால் ஏற்றுக் கொள்ளுங்கள். விருப்பமில்லை என்றால் விட்டு விட்டுச் செல்லுங்கள். இதன் முடிவு மரணத்திற்கு பிறகே உங்களுக்குத் தெரியும் என்று இறைவன் தெளிவாக அறிவிக்கிறான்..
 
ஏற்பதும் நிராகரிப்பதும் ஒருவருடைய தனிப்பட்ட முடிவைப் பொருத்தது என்று ஆகி விட்ட பிறகு ஏற்று நிரைாகரித்தவர்களை கொல்ல வேண்டும் என்பது எப்படி இஸ்லாமிய சட்டமாக இருக்க முடியும்?
 
إِنَّ الَّذِينَ كَفَرُواْ بَعْدَ إِيمَانِهِمْ ثُمَّ ازْدَادُواْ كُفْرًا لَّن تُقْبَلَ تَوْبَتُهُمْ وَأُوْلَـئِكَ هُمُ الضَّآلُّونَ
 
எவர் ஈமான் கொண்ட பின் நிராகரித்து மேலும் (அந்த) குஃப்ரை அதிகமாக்கிக் கொண்டார்களோ, நிச்சயமாக அவர்களுடைய தவ்பா - மன்னிப்புக்கோரல் - ஒப்புக்கொள்ளப்பட மாட்டாது. அவர்கள் தாம் முற்றிலும் வழி கெட்டவர்கள்.  (3:90)
 
நம்பிக்கைக் கொண்ட பின் நிராகரிப்பவர்கள் பற்றிய எச்சரிக்கையில்,  இஸ்லாத்தை ஏற்ற பின் நீங்கள் நிராகரித்து விலகினால் அதன் பிறகு பவமன்னிப்பு தேடிக் கொண்டிருந்தால் பிரயோஜனமில்லை என்ற அறிவுரையே இறைவன் முன் வைக்கிறானே தவிர அவர்கள் கொல்லப்பட வேண்டும் என்று கூறவில்லை.
 
إِنَّ الَّذِينَ كَفَرُواْ وَمَاتُواْ وَهُمْ كُفَّارٌ فَلَن يُقْبَلَ مِنْ أَحَدِهِم مِّلْءُ الأرْضِ ذَهَبًا وَلَوِ افْتَدَى بِهِ أُوْلَـئِكَ لَهُمْ عَذَابٌ أَلِيمٌ وَمَا لَهُم مِّن نَّاصِرِينَ
 
எவர்கள் நிராகரித்து, நிராகரிக்கும் நிலையிலேயே இறந்தும் விட்டார்களோ, அவர்களில் எவனிடமேனும் பூமிநிறைய தங்கத்தை தன் மீட்சிக்கு ஈடாக கொடுத்தாலும் (அதனை)அவனிடமிருந்து ஒப்புக் கொள்ளப் படமாட்டாது. அத்தகையோருக்கு நோவினை மிக்க வேதனை உண்டு. இன்னும் அவர்களுக்கு உதவி செய்வோர் எவரும் இருக்க மாட்டார்கள்.  (3:91)
 
நம்பிக்கைக் கொண்ட பின் நிராகரிப்பது பற்றி பேசும் தொடரிலேயே இறைவன் இந்த வசனத்தையும் முன் வைத்துள்ளான்.  ஈமான் கொண்டபின் நிராகரிப்பவர்கள் கொல்லப்பட வேண்டும் என்றால் "நிலையிலேயே இறந்தும் விட்டார்களோ.."   என்ற வார்த்தைக்கு அர்த்தமில்லாமல் போய்விடும்.   எனவே இஸ்லாத்தை ஏற்று பிறகு மதம் மாறி போனவர்கள் கொல்லப்பட வேண்டும் என்பது பொதுவான சட்டமல்ல என்பதை விளங்கலாம்.
...................................
மதம் மாறினால் மரண தண்டனை பொது சட்டமா..? - 2
 
இஸ்லாத்தை ஏற்று பின்னர் இஸ்லாத்தை விட்டு வெளியேறியவர்களை கொல்ல வேண்டும் என்ற "ஆழமான ஆய்வற்ற கருத்தால்"  இஸ்லாம் குறித்து பலர் (குறிப்பாக மாற்று மதத்தவர்கள்) தவறான நம்பிக்கையை கொண்டு விடுகிறார்கள்.  சிந்தனை ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் மனிதர்களை வென்றெடுக்க வந்த ஒரு மார்க்கத்தில்,  "இஸ்லாத்தை விட்டு வெளியேறினால கொல்லப்பட வேண்டும்" போன்ற தவறான ஆளுமைச் சட்டங்கள் இருக்க வாய்ப்பே இல்லை.
 
மனிதர்களுக்கு வழங்கப்பட்டுள்ள முழு அளவிலான உரிமைகளில் ஒன்று இஸ்லாத்தில் கடைசி வரை நீடிப்பது சம்பந்தப்பட்டதாகும்.  அறிவார்ந்த முறையில் இஸ்லாத்தை விளங்கி ஏற்பதுதான் இஸ்லாம் மக்களுக்கு முன் வைக்கும் அறிவுரையாகும்.  விளங்கி ஏற்றப்பின் அதிலிருந்து வெளியேறினால் அது இறைவனையும் இறைவனின் மார்க்கத்தையும் கேலி செய்வதாகி விடுவதால் இதன் தண்டனையை மதம் மாறியவர்கள் மரணத்திற்கு பிறகு நிரந்தரமாக சுவைப்பார்கள்.  மாறாக "மதம் மாறியதற்காக" அவர்களுக்கு தண்டனை வழங்கும் படி இஸ்லாம் சொல்லவில்லை.  நாம் முந்தைய பதிவில் எடுத்துக் காட்டியுள்ள வசனங்களை மீண்டும் ஒரு முறை படித்து விட்டு அடுத்த வசனங்களையும் படியுங்கள்.

إِنَّ الَّذِينَ آمَنُواْ ثُمَّ كَفَرُواْ ثُمَّ آمَنُواْ ثُمَّ كَفَرُواْ ثُمَّ ازْدَادُواْ كُفْرًا لَّمْ يَكُنِ اللّهُ لِيَغْفِرَ لَهُمْ وَلاَ لِيَهْدِيَهُمْ سَبِيلاً
 
எவர்கள் ஈமான் கொண்டு, பின்னர் நிராகரித்து, பின்னர் ஈமான் கொண்டு, பின்னர் நிராகரித்து, பின்னர் நிராகரிப்பை அதிகரித்துக் கொண்டனரோ, அவர்களை அல்லாஹ் மன்னிப்பவனாகவும் இல்லை. மேலும் அவர்களுக்கு (நேர்) வழியைக் காட்டுகிறவனாகவும் இல்லை. (அல்குர்ஆன் 4:137)
 
இந்த வசனத்தை ஆழமாக கவனிப்போம்.  ஒருவர் இஸ்லாத்தை ஏற்கிறார் பின்னர் மதம் மாறி விடுகிறார். இப்போது அவர் கொல்லப்பட வேண்டும் என்பது சட்டம் என்றால், அடுத்து அவர் ஈமான் கொள்வதற்கும், அதன் பிறகு அதை மறுப்பதற்கும்......... இப்படி எதற்கும் வழியில்லாமல் போய் விடும். 
 
நம்பிக்கைக் கொள்கிறார்
பிறகு மறுக்கிறார்
மீண்டும் நம்பிக்கைக் கொள்கிறார்
அதையும் மறுத்து வெளியேறுகிறார்
பின்னர் இறை நிராகரிப்பில் நிலைத்து நின்று மரணிக்கிறார் என்று இறைவன் சுட்டிக்காட்டுவதிலிருந்து மனிதர்களுக்கு எத்துனை சுதந்திரமான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்பது மிகத் தெளிவாகின்றது.   'கொல்லப்பட வேண்டும்" என்ற புரிதலை இந்த வசனமும் அடியோடு மறுக்கின்றது.
 
كَيْفَ يَهْدِي اللّهُ قَوْمًا كَفَرُواْ بَعْدَ إِيمَانِهِمْ وَشَهِدُواْ أَنَّ الرَّسُولَ حَقٌّ وَجَاءهُمُ الْبَيِّنَاتُ وَاللّهُ لاَ يَهْدِي الْقَوْمَ الظَّالِمِينَ
 
அவர்களிடம் தெளிவான ஆதாரங்கள் வந்து நிச்சயமாக (இந்தத்) தூதர் உண்மையாளர்தான் என்று சாட்சியங் கூறி ஈமான் கொண்ட பிறகு நிராகரித்து விட்டார்களே, அந்தக் கூட்டத்திற்கு அல்லாஹ் எப்படி நேர்வழி காட்டுவான்! அல்லாஹ் அநியாயக் கார கூட்டத்திற்கு நேர்வழி காட்ட மாட்டான்.  (அல் குர்ஆன் 3:86)
 
இந்த வசனத்தையும் ஊன்றி கவனிப்போம்.   ஈமான் கொண்டு நிராகரிப்பவர்கள் கொல்லப்பட வேண்டும் என்றால் அதை தெளிவாக இறைவன் சொல்ல வேண்டிய இடம் இது.  ஆனால் கொல்லப்படுவதைப் பற்றி சொல்லாமல் அவர்கள் நேர்வழிக்கு அப்பாற்பட்டவர்கள், இறைவன் அவர்களுக்கு வழிகாட்ட மாட்டான் என்று எச்சரிக்கிறான்.  அதாவது இஸ்லாத்தை ஏற்று பிறகு வெளியேறினால்  நீ உயிரோடு இருக்கலாம் உனக்கு வாழ்நாள் அவகாசம் அளிக்கபட்டாலும் அடுத்து நீ நேர்வழிப் பெறும் வாய்ப்பு இல்லை என்பதை இந்த வசனம் கூட்டிக் காட்டுகின்றது.
 
இந்த மார்க்கம் மனிதர்கள் மீது திணிக்கப்படுவதற்காக அருளப்படவில்லை என்பதை புரிந்துக் கொள்ள இன்னும் ஆதாரங்களைப் பார்த்து விட்டு நாம் முன்னர் எடுத்துக் காட்டியுள்ள "கொல்லப்பட வேண்டும்" என்ற ஹதீஸின் விளக்கம் என்னவென்பதை காண்போம்
.................................
மதம் மாறினால் மரண தண்டனை பொது சட்டமா..? - 3
 
இஸ்லாத்தை ஏற்று பின்னர் அதிலிருந்மு விலகியவர்களை கொல்ல வேண்டும் என்பது பொதுவான சட்டமல்ல என்பதை சொல்லி வருகிறோம்.   இதுவரை நாம் எடுத்துக் காட்டிய குர்ஆன் வசனங்கள் அனைத்துமே இஸ்லாத்தை விட்டு வெளியேறியவர்களை கொல்ல வேண்டும் என்ற கருத்தை மறுக்கின்றது.
 
அடுத்த வசனம்.
 
لاَ إِكْرَاهَ فِي الدِّينِ قَد تَّبَيَّنَ الرُّشْدُ مِنَ الْغَيِّ
 
(இஸ்லாமிய) மார்க்கத்தில் (எவ்வகையான) நிர்ப்பந்தமுமில்லை. வழிகேட்டிலிருந்து நேர்வழி முற்றிலும் (பிரிந்து) தெளிவாகிவிட்டது (அல்குர்ஆன் 2:256)
 
மார்க்கத்தின் மிக முக்கிய அடிப்படையை விளக்கும் வசனங்களில் இதுவும் ஒன்று.
 
வழிகேட்டிலிருந்து நேர்வழி பிரித்தறிவிக்கப்பட்டு தெளிவாகி விட்டதால் இந்த மார்க்கத்தில் எந்த நிர்பந்தமுமில்லை என்பது இந்த வசனம் முன் வைக்கும் அறிவார்ந்த வாதம்.
 
இஸ்லாத்திலிருந்து வெளியேற நினைக்கும் ஒருவரை "நீ இஸ்லாத்திலிருந்து வெளியேறினால் கொல்லப்படுவாய்"  என்று மிரட்டுவது அவரை நிர்பந்தப்படுத்தி இஸ்லாத்தில் வைக்கும் காரியமாகும். பிறரது மிரட்டலுக்கு பயந்து,  கொல்லப்பட்டு விடுவோம் என்ற அச்சத்தில் இஸ்லாத்தில் இருப்பவர்களால் இஸ்லாத்தின் கோட்பாடுகளையும், சட்டங்களையும் எப்படிப்பின்பற்ற முடியும்.  
 
உயிருக்கு பயந்து நிர்பந்தமான நிலையில் இஸ்லாத்தின் உள்ளே இருக்கும் ஒருவரிடம் இஸ்லாம் எந்த மாற்றத்தையும் செய்து விடப் போவதில்லை.    நேர்வழியையும், வழிகேட்டையும் பிரித்தறிவித்து விட்டு இஸ்லாத்தில் நிர்பந்தமில்லை என்று இறைவன் குறிப்பிட்டு விட்டதால் அவன் மார்க்கத்தில் இருந்துதான் ஆக வேண்டும் என்று வற்புறுத்தும் உரிமை ஒருவருக்கும் இல்லை.
 
மார்க்கத்தில் நிர்பந்தமில்லை என்ற சட்டமே ஒருவர் வெளியேறினால் வெளியேறிக் கொள்ளலாம் என்ற அனுமதியை முன் வைக்கின்றது. அவரை கொல்லும் உரிமையை இஸ்லாம் யாருக்கும் வழங்கவில்லை.
 
நபி(ஸல்) அவர்கள் காலத்தில் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதாக நடித்துக் கொண்டு இஸ்லாத்திற்கு இடையூறு செய்துக் கொண்டிருந்தவர்கள் இருக்கத்தான் செய்தார்கள் - நயவஞ்சகர்கள் - என்று இஸ்லாம் இவர்களை அடையாளப்படுத்துகின்றது.  இஸ்லாத்தை விட்டு வெளியேறிய ஒருவரைக் கூட நபி(ஸல்) அவர்கள் "கொன்றார்கள்" என்பதற்கு எந்த ஒரு ஆதாரமும் இல்லை.
 
எனவே இஸ்லாத்தை விட்டு வெளியேறியவர்கள் கொல்லப்பட வேண்டும் என்பது பொதுவான சட்டமல்ல என்பதை புரிந்துக் கொள்ள வேண்டும்.
 
அப்படியானால்,
 
இஸ்லாத்தை விட்டு வெளியேறிவர்களைக் கொல்லுங்கள் என்று நாம் ஆரம்பத்தில் எடுத்துக்காட்டிய ஹதீஸின் விளக்கம் தான் என்ன..? அடுத்துப் பார்போம் இறைவன் நாடட்டும்.
............................
மதம் மாறினால் மரணதண்டனை பொது சட்டமா? ஹதீஸ்களின் விளக்கம் என்ன..? - 4
 
இஸ்லாத்தை விட்டு வெளியேறியவர்கள் கொல்லப்பட வேண்டும் என்று போதுவான ஒரு கருத்து முன் வைக்கப்படும் போது "இது ஒரு முரட்டு மார்க்கம்" என்ற பழிசொல்லிலிருந்து இஸ்லாத்தை காப்பாற்ற முடியாமல் போய் விடுகின்றது.
 
உபதேசம், பிரச்சாரம் செய்வதில் கூட நளினத்தை, இலகுவை கடைப்பிடிக்க வேண்டும் என்று சொல்லும் ஒரு மார்க்கத்தில் மனிதனின் சிந்தனை சுதந்திரமும், வாழ்வியல் சுதந்திரமும் வலுக்காட்டாயமாக அகற்றப்பட்டு இருக்குமா என்பதை "கொல்லப்பட வேண்டும்" என்ற கருத்துள்ளவர்கள் சிந்திக்க வேண்டும்.
 
மதம் மாறியவர்கள் கொல்லப்பட வேண்டும் என்பதற்கு குர்ஆனிலிருந்து எந்த ஒரு வசனத்தையும் முன் வைக்க முடியாதவர்கள் - கொல்லப்படுவதை மறுக்கும் வசனங்களையெல்லாம் கண்டுக் கொள்ளாமல் - ஹதீஸ்களின் பக்கம் திரும்பி "ஹதீஸ்களில் ஆதாரம் இருக்கின்றது" என்று தங்கள் வாதத்தை வைக்கத் துவங்கி விடுகின்றார்கள்.
 
 ஹதீஸ்களிலிருந்து ஒரு வாதத்தை நாம் எடுத்து வைக்குமுன் ஒன்றை மிக ஆழமாக நம் மனதில் பதித்துக் கொள்ள வேண்டும்.
 
நபி(ஸல்) அவர்கள், குர்ஆனை விளக்குவதற்கும், குர்ஆனாக வாழ்வதற்கும் தான் அனுப்பப்பட்டார்களே தவிர குர்ஆன் வேறு, தான் வேறு என்று வாழ்ந்துக் காட்டுவதற்காக அல்ல.    நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கை குர்ஆனாகவே இருந்தது என்று அவர்களின் மனைவி அன்னை ஆயிஷா(ரலி) அவர்களின் அறிவிப்பு "நபி(ஸல்) குர்ஆன் விளக்கவுரையாகவே வாழ்ந்துள்ளார்கள்" என்பதை ஐயத்திற்கிடமின்றி சொல்லி விடுகின்றது. எனவே குர்ஆனுக்கு முரண் பட்டு ஒரு கருத்தை நபி(ஸல்) சொல்லி இருப்பார்கள் என்று நாம் கற்பனைக் கூட செய்யக் கூடாது.
 
இஸ்லாத்தை விட்டு வெளியேறியவர்களைக் கொல்ல வேண்டும் என்பதை நபி(ஸல்) பொதுவான கருத்தாக வைத்திருக்க வாய்ப்பேயில்லை. ஏனெனில் அந்த கருத்தை குர்ஆன் அடியோடு மறுக்கின்றது. 
 
அப்படியானால் கொல்லப்பட வேண்டும் என்ற ஹதீஸின் நிலவரம் என்ன..?
 
பார்போம் இன்ஷா அல்லாஹ்.
.....................................
மதம் மாறினால் மரண தண்டனை பொது சட்டமா..? ஹதீஸ்களின் விளக்கம் என்ன..? - 5
 
இஸ்லாத்தை விட்டு வெளியேறியவர்கள் கொல்லப்பட வேண்டும் என்பது பொது சட்டமல்ல.  இஸ்லாத்தை விட்டு வெளியேறினால், இஸ்லாதத்தை விட்டு வெளியேறியதற்காக எந்த இஸ்லாமிய அரசாங்கமும் மரண தண்டனை விதிக்காது - விதிக்கக் கூடாது.
 
நபி(ஸல்) காலத்தில் இத்தகைய எந்த ஒரு சம்பவமும் நடக்கவில்லை.  அப்படியானால் தங்கள் மதத்தை மாற்றிக் கொண்டவர்களைக் கொல்லுங்கள் என்று ஹதீஸ் வந்துள்ளதே என்ற சந்தேகம் இப்போது மி்ச்சமிருக்கின்றது.
 
‏ابن عباس ‏ ‏فقال لو كنت أنا لم أحرقهم لنهي رسول الله ‏ ‏صلى الله عليه وسلم ‏ ‏لا تعذبوا بعذاب الله ولقتلتهم لقول رسول الله ‏ ‏صلى الله عليه وسلم ‏ ‏من
بدل دينه فاقتلوه
 
ஆன்லைனில் இந்த ஹதீஸை பார்க்க
 
''எவர் தன் மார்க்கத்தை மாற்றிக்கொள்கிறாரோ அவரைக் கொன்று விடுங்கள்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (இப்னு அப்பாஸ் - புகாரி)
........................................
 
‏قال رسول الله ‏ ‏صلى الله عليه وسلم ‏ ‏لا يحل دم امرئ مسلم يشهد أن لا إله إلا الله وأني رسول الله إلا بإحدى ثلاث ‏ ‏الثيب ‏ ‏الزاني والنفس بالنفس والتارك لدينه المفارق للجماعة
 
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
''அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு இறைவன் இல்லை. நான் அல்லாஹ்வின் தூதராவேன்'' என உறுதிமொழி கூறிய எந்த முஸ்லிமான மனிதரையும் மூன்று காரணங்களைத் தவிர வேறு எதற்காகவும் கொலை செய்ய அனுமதி இல்லை.
1. ஒரு மனிதரைக் கொலை செய்வதற்குப் பதிலாகக் கொலை செய்வது.
2. திருமணமாகியும் விபச்சாரம் செய்தவன்.
3. ஜமாஅத் எனும் சமூக கூட்டமைப்பை விட்டு வெளியேறி தமது மார்க்கத்தை கைவிட்டவன் (அப்தல்லாஹ்  - முஸ்லிம்)
 
(ஆன்லைனில் இந்த ஹதீஸின் மூலம்)  
 
.............................................
 
‏أن رسول الله ‏ ‏صلى الله عليه وسلم ‏ ‏قال ‏ ‏لا يحل دم امرئ مسلم إلا بإحدى ثلاث خصال زان ‏ ‏محصن ‏ ‏يرجم ‏ ‏أو رجل قتل رجلا متعمدا فيقتل أو رجل يخرج من الإسلام يحارب الله عز وجل ورسوله فيقتل أو يصلب أو ‏ ‏ينفى من الأرض
 
''மூன்று காரணங்களில் ஏதேனும் ஒன்றுக்காகவே தவிர, முஸ்லிமான மனிதரைக் கொல்வது ஆகுமானதல்ல. திருமணமாகியும் விபச்சாரம் செய்தவன் கல்லெறிந்து கொல்லப்படுவான். ஒருவரை வேண்டுமென்றேக் கொலை செய்தவன் கொல்லப்படுவான். இஸ்லாத்தை விட்டு வெளியேறி அல்லாஹ்விடத்திலும் அவனது தூதரிடத்திலும் போர் செய்தவன் கொல்லப்படுவான். அல்லது சிலுவையில் ஏற்றப்படுவான். அல்லது நாடு கடத்தப்படுவான். என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆய்ஷா (ரலி) நஸயி)
 
இந்த ஹதீஸின் அரபு மூலம்  
 
...............................................
 
மதம் மாறியவர்களைக் கொல்ல வேண்டும் என்பதற்கு அந்தக் கருத்துள்ளவர்கள் பொதுவாக எடுத்துக் காட்டும் ஆதார்ஙகள் இவைதான். இந்த ஆதாரங்களை நாம் கவனமாக பரிசீலிக்க வேண்டும்.  ஹதீஸ் வாசகங்களைப் பொருத்தவரை ஒன்று இன்னொன்றுக்கு விளக்கவுரையாக அமையும் என்பதால் எல்லாவற்றையும் ஒருங்கிணைத்துதான் நாம் அதன் கருத்தையோ சட்டங்களையோ விளங்க வேண்டும்.
 
புகாரி, முஸ்லிமில் இருந்து நாம் எடுத்துக்காட்டியுள்ள ஹதீஸ் பொதுவாக இருந்தாலும் நஸயியில் வரும் ஹதீஸ் கூடுதல் விபரங்களைக் கொடுக்கின்றது.
 
//இஸ்லாத்தை விட்டு வெளியேறி அல்லாஹ்விடத்திலும் அவனது தூதரிடத்திலும் போர் செய்தவன் கொல்லப்படுவான். அல்லது சிலுவையில் ஏற்றப்படுவான். அல்லது நாடு கடத்தப்படுவான்//.
 
இஸ்லாத்தை விட்டு வெளியேறுவது மட்டும் ஒருவன் கொல்லப்படுவதற்கான விதியல்ல.  வெளியேறிய அவன் முஸ்லிம்களின் கூட்டமைப்புக்கு எதிராக (அதாவது ஆட்சி அதிகாரத்துக்கு எதிராக) செயல்பட்டு, குழப்பங்களை விளைவித்து, ஒருநாட்டின் இறையாண்மைக்கு எதிராக நடக்கும் போது, அப்போது பிடிப்பட்டாலே இந்த தண்டனை அவன் மீது விதிக்கப்படும்.  இதை தெளிவாக்கும் விதமாகவே "அல்லாஹ்விடத்திலும் அவன் தூதரிடத்திலும் போர் செய்பவன்" என்று நபி(ஸல்) குறிப்பிடுகிறார்கள்.
 
நாட்டின் இறையாண்மை காக்கப்பட வேண்டும் என்பது அரசியல் நிர்ணயம். அதற்கு எதிராக குழப்பம் செய்பவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பது உலகெங்கும் இருக்கும் நியதி.
 
இஸ்லாத்தை விட்டு வெளியேறுவதுமட்டுமில்லாமல் அங்கு குழப்பம் விளைவிக்க முயல்பவர்கள் குறித்தே மேற்கண்ட கட்டளைகள் வந்துள்ளன. 
 
மதம் மாறியவர்கள் அதற்காக கொல்லப்பட வேண்டும் என்பது சட்டமாக இருந்தால் நாடு கடத்தப்பட வேண்டும் (நஸயி)  என்று நபி(ஸல்) கூறி இருக்க மாட்டார்கள்.  நாடு கடத்தப்பட்டால் அவன் அங்கும் காஃபிராகத்தான் வாழ்வான். 
 
நாடு கடத்தப்படுதல் என்பதே பொதுவாக ஒரு நாட்டில் குழப்பம் விளைவிக்கும் முக்கியஸ்தர்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கையாகும்.  "நாடுகடத்தப்பட வேண்டும்" என்று நபி(ஸல்) குறிப்பிட்டதிலிருந்து கொல்லப்பட வேண்டும் என்ற சட்டம் மதம் மாறியதற்காக அல்ல மாறாக மதம் மாறி உள்நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்துபவர்களுக்கே என்பது தெளிவாகின்றது. 
 
நீங்கள் ஒரு அமீருக்கு (அதிகாரம் உள்ளவருக்கு) கீழ் ஒருங்கிணைந்து கட்டுப்பட்டிருக்கும் போது அதில் குழப்பம் ஏற்படுத்த முனைபவர்களை - பிரிவினையை உருவாக்குபவர்களைக் கொல்லுங்கள் என்றும் பிறிதொரு அமீராக தன்னை அறிவிப்பவர்களில் பிந்தியவரை கொல்லுங்கள் என்றும் நபி(ஸல்) குறிப்பிட்டுள்ளார்கள்.
 
سمعت رسول الله ‏ ‏صلى الله عليه وسلم ‏ ‏يقول ‏ ‏من أتاكم وأمركم جميع على رجل واحد يريد أن ‏ ‏يشق عصاكم ‏ ‏أو يفرق جماعتكم فاقتلو
 
ஆன்லைனில் பார்க்க
 
 
قال رسول الله ‏ ‏صلى الله عليه وسلم ‏ ‏إذا ‏ ‏بويع ‏ ‏لخليفتين فاقتلوا الآخر منهما
 
ஆன்லைனில் பார்க்க 
 
ஹதீஸ்களை கவனமாக ஆராயும் போதும், அனைத்து ஹதீஸ்களையும் ஒருங்கிணைத்து சிந்திக்கும் போதும்  இந்த முடிவுக்கே நம்மால் வர முடிகின்றது.
 
குழப்பம் ஏற்படுத்துதல் என்று ஒன்று நடக்கவில்லை என்றால் அவரும் கொல்லப்பட வேண்டும் என்பதற்கு எந்த ஒரு ஆதாரமும் இல்லை. மாறாக அவர்கள் கொல்லப்படக் கூடாது என்பதற்கான குர்ஆன் வசனங்களை நாம் முந்தைய தொடர்களில் பார்த்தோம்.
 
குழப்பம் கொலையைவிட கொடியது.
 
குழப்பம் கொலையை விட பெரியது என்று குர்ஆன் தெளிவுபடுத்தியுள்ள போது குழப்பம் செய்பவர்கள் கொல்லப்பட வேண்டும் என்பது சாதாரண ஒன்றுதான் என்பதை விளங்கலாம்.
    குழப்பம் ஏற்படுத்தும் தனி மனிதனின் உயிரை விட நாட்டு மக்களின் நிம்மதியும்,  அமைதியும் முக்கியம் என்பதால், இஸ்லாமிய அரசுகள் இதை செயல்படுத்தும்.
 
அல்லாஹ் எல்லாவற்றையும் நுணுககமாக அறிபவன் என்பதை நம்புகிறோம்.
 
(குறிப்பு: இந்த தலைப்பு நிறைவுக்கு வருகின்றது.  இது குறித்த சந்தேகங்கள் மேலதிக விளக்கங்கள் இருந்தால் மட்டும் வாசகர்கள் எழுதுமாறு கேட்டுக் கொள்கிறோம்)

--
ஜி என்