வலைப்பதிவில் தேட..

Monday, December 22, 2008

"ஸல்" "அலைஹி" உங்களுக்கும் தான்.

ஸலாமுன் அலைக்கும்.
 
பொதுவாக முஸ்லிம்கள் இஸ்லாமிய கட்டுரைகள் எழுதும் போது இறைத்தூதர்களையோ முஸ்லிம் பெரியார்களையோ குறிப்பிடும் போது பெயருக்கு பக்கத்தில் சுருக்கமாக சில எழுத்துக்களை எழுதுவார்கள். பலருக்கு இது குறித்து சந்தேகம் மற்ற சிலர் விரும்பியவாரு விளக்கங்கள் என்ற நிலையில் இருக்கிறார்கள். எனவே அது குறித்த விளக்கத்தை தமிழ் முஸ்லிம் சமூகத்திற்கு வைக்கிறோம்.

முஹம்மத் என்ற பெயரையோ அல்லது நபி என்பதையோ எழுதும் போது பக்கத்தில் ஸல் என்ற வார்த்தையைப் பயன்படுத்துவார்கள். ஸல் என்பது ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்பதன் சுருக்கம். அல்லாஹ் அவருக்கு அருளும் ஈடேற்றமும் அளிப்பானாக என்பது இதன் பொருள்.

பிற நபிமார்களின் பெயர்களை எழுதும் போது அலை என்ற வார்த்தையைப் பயன்படுத்துவார்கள். அலை என்பது அலைஹிஸ் ஸலாம் அல்லது அலைஹிஸ்ஸலாது வஸ்ஸலாம் என்பதன் சுருக்கம் இவருக்கு அருளும் சாந்தியும் ஏற்படட்டுமாக என்பது இதன் பொருள்.

நபித்தோழர்களைப் பற்றி எழுதும் போது ரலி என்று வரும். ரலி என்பது ரலியல்லாஹு அன்ஹு (ஆண்பால்) அல்லது ரலியல்லாஹு அன்ஹா (பெண்பால்) என்பதன் சுருக்கம். இவரை அல்லாஹ் பொருந்திக் கொள்வானாக என்பது இதன் பொருள்.

ரஹ் என்பது ரஹ்மத்துல்லாஹி அலைஹி என்பதன் சுருக்கம். அல்லாஹ்வின் அருள் இவருக்கு ஏற்படட்டுமாக என்பது இதன் பொருள்.

சுருக்கமாக இப்படி எழுதுவது சரியல்ல என்றாலும் எழுதுபவர்கள் அதே பழக்கத்திற்கு ஆட்பட்டு விட்டார்கள். ஆனாலும் ஒன்றை கவனத்தில் கொள்ள வேண்டும்

எழுதும் போது சுருக்கத்திற்காக இப்படி எழுதினாலும் வாசிக்கும் போது முழுமையாக வாசிக்க வேண்டும்.

குறிப்பிட்ட இந்த நான்கு வகையான சொற்களையும் குறிப்பிட்ட சிலருக்குதான் பயன்படுத்த வேண்டும் என்ற எந்த சட்டமும் இல்லை. பொதுவாக அனைத்து முஸ்லிம்களுக்கும் இந்த வார்த்தைகளைப் பயன்படுத்தலாம்.

(ஸல்)

இறைத்தூதர் முஹம்மத் அவர்களுக்கு ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்ற வார்த்தையைப் பயன்படுத்துவது மாதிரியே இதர நபிமார்களுக்கும் இதர முஸ்லிம்களுக்கும் கூட இந்த வார்த்தையைப் பயன்படுத்தலாம். வார்த்தைகளின் அர்த்தத்தைப் பார்த்தாலே இது புரியும் என்றாலும் பிறர் தப்புப்பிரச்சாரம் செய்யக் கூடாது என்பதால் கூடுதலாக விளக்குவோம்.

ஸலவாத் எனும் அருளை இறைத்தூதர் (ஸல்) அவர்களுக்காக கேட்க வேண்டும் என்று 33:56 வசனம் கூறுகின்றது.
 

إِنَّ اللَّهَ وَمَلَائِكَتَهُ يُصَلُّونَ عَلَى النَّبِيِّ يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا صَلُّوا عَلَيْهِ وَسَلِّمُوا تَسْلِيمًا

அல்லாஹ் இந்த நபிக்கு அருள் புரிகிறான். வானவர்கள் அவருக்காக அவனது அருளை வேண்டுகின்றனர். நம்பிக்கை கொண்டோரே! நீங்களும் அவருக்காக (இறை) அருளை வேண்டுங்கள்! ஸலாமும் கூறுங்கள் (அல்குர்ஆன் 33:56)

இந்த வசனம் பற்றி பஷீர் இப்னு ஸஃது (ரலி) இறைத்தூதரிடம் கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதரே! இறைவன் உங்களுக்காக ஸலவாத் சொல்லுமாறு கூறுகின்றானே நாங்கள் எவ்வாறு ஸலவாத் கூறுவது என்று கேட்டார்கள் அதற்கு அல்லாஹ்வின் தூதர் 'அல்லாஹும்ம ஸல்லி..... என்ற ஸலவாத்தைக் கற்றுக் கொடுத்த விட்டு உங்களுக்குக் கற்றுக் கொடுக்கப்பட்டது போன்று ஸலாம் கூறுங்கள் என்றார்கள். (அபூ மஸ்வூத் (ரலி) முஸ்லிம்)

நபிக்காக ஸலவாத் கூற வேண்டும் என்று இறைவன் கூறினாலும் நபி(ஸல்) கற்றுக் கொடுத்த ஸலவாத் தொழகையின் இருப்பிற்குரிய ஸலவாத் என்றே நபித்தோழர்கள் எடுத்துக் கொண்டார்கள். ஏனெனில் நபி(ஸல்) தொழுகை இருப்பில் ஓதுமாறு இதைக் கற்றுக் கொடுத்ததாகவும் அறிவிப்புகள் உள்ளன.

உங்களில் ஒருவர் தொழுதால் இறைவனை மகிமைப்படுத்தி போற்றி புகழ்ந்து பின்னர் நபிக்காக ஸலவாத் கூறி பின்னர் தன் தேவைகளைக் கேட்கட்டும் என்று நபி(ஸல்) கூறியுள்ளார்கள். (ஃபளாலா இப்னு உபைத்(ரலி) நஸயி திர்மிதி)

என்னைப் பற்றி நினைவுக் கூறும்போது ஸலவாத் கூறுங்கள். ஸலவாத் கூறாதவன் கஞ்சன் என்றெல்லாம் அறிவிப்புகள் வருகின்றன (இப்னுமாஜா)

இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டு நபித்தோழர்கள் நபியவர்களைப் பற்றிக் குறிப்பிடும் போதெல்லாம் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்பதை சேர்த்தே பயன்படுத்தி வந்தார்கள்.

எனவே நபியைப் பற்றிக் குறிப்பிடும் போது இறையருளைப் பெற்றுக் கொடுக்கும் வார்த்தைகளைப் பயன்படுத்தலாம் அலைஹிஸ்ஸலாத்து வஸ்ஸலாம் என்ற வார்த்தையும் பொருத்தமானதுதான் என்றாலும் காலாகாலமாக ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்ற வார்த்தை நிலைப் பெற்று விட்டது.

நபிக்காக ஸலவாத் கூறுவது இறைவன் இட்ட கட்டளை என்பதால் முஸ்லிம்கள் மீது அது கடமையாகும். ஆனாலும் இந்த விஷயத்தில் முஸ்லிம்கள் அலட்சியமாக இருந்து விடுகிறார்கள். இறைவன் நபிக்காக அருள் புரிகிறான். வானவர்கள் அருளை வேண்டுகிறார்கள். இறைநம்பிக்கையார்களே நீங்களும் இந்த தூதருக்கு ஸலாம் சொல்லி அவருக்காக ஸலவாத் கூறுங்கள் என்ற வசனம் ஜும்ஆ மேடைகளில் தவறாமல் நினைவுக் கூறப்படும். அந்த வசனத்தின் அர்த்தம் புரியாதவர்களும் அர்த்தம் புரிந்தவர்களும் கூட அதை பெரிதாக எடுத்துக் கொள்வதாகத் தெரியவில்லை. இறைவனே நேரடியாக இந்தக் கட்டளையை இடுவதால் நாம் அலட்சியமாக இருக்கக் கூடாது.

(அலை)

இதர நபிமார்கள் அனைவரையும் குறிப்பிடும் போது அலைஹிஸ்ஸலாத்து வஸ்ஸலாம் என்று கூறும் மரபு நீண்ட நெடுங்காலமாக நீடித்து வருகின்றது. முஹம்மத் (ஸல்) அவர்களைத் தவிர்த்து பிற நபிமார்களுக்கு எந்த அடைமொழியும் (வாழ்த்தும்) சேர்ந்து வர வேண்டும் என்ற எந்தக் கட்டளையும் குர்ஆனில் இல்லை.

இறை நம்பிக்கையாளர்களே இந்த நபிக்காக பிரார்த்தித்து ஸலாமும் கூறுங்கள் என்ற இறைக் கட்டளையை நாம் அறிந்தோம். இதர நபிமார்களுக்கு இத்தகைய கட்டளையை இறைவன் இடவில்லை. இதர நபிமார்களைப் பற்றி நபி(ஸல்) அவர்கள் குறிப்பிடும் போது அந்தந்த நபிமார்களின் பெயர்களை மட்டும் தான் குறிப்பிட்டுள்ளார்களேத் தவிர அவர்களின் பெயர்களோடு அலைஹிஸ்ஸலாத்து வஸ்ஸலாம் என்ற அடைமொழியை குறிப்பிட்டதில்லை.

நல்லப் பண்பின் அடையாளமாக இத்தகைய அடைமொழிகள் இந்த உம்மத்தில் நீடித்து நிற்கின்றது.

ஆனாலும் இந்த அடைமொழிகளை நபிமார்களுக்கு மட்டும் தான் பயன்படுத்த வேண்டும் என்ற விதியும் இல்லை. இறை நம்பிக்கையாளர்கள் அனைவருக்கும் இத்தகைய அடைமொழியை பயன்படுத்தினாலும் அதை தவறென்று சொல்லி தடுக்கும் எந்த ஆதாரமும் இல்லை.

அனுமதிக்கும் ஆதாரத்தைப் பார்ப்போம்.

هُوَ الَّذِي يُصَلِّي عَلَيْكُمْ وَمَلَائِكَتُهُ لِيُخْرِجَكُم مِّنَ الظُّلُمَاتِ إِلَى النُّورِ وَكَانَ بِالْمُؤْمِنِينَ رَحِيمًا

(இறை நம்பிக்கையாளர்களே) இறைவன் உங்களுக்காக (ஸலவாத்) அருள்புரிகிறான். அவனுடைய வானவர்களும் (உங்களுக்காக) பிரார்த்திக்கிறார்கள் (அல்குர்ஆன் 33:43)

நபி(ஸல்) அவர்களுக்கு பயன்படுத்தப்பட்டுள்ள அதே வார்த்தைகள் இங்கும் பிற முஃமின்களுக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளது. இறை நம்பிக்கையாளர்களுக்கு இறைவன் அருள் புரிகிறான் வானவர்களும் அருளை வேண்டுகிறார்கள் என்று.

ஸல்லல்லாஹு அலைஹி என்றால் அல்லாஹ் அவருக்கு ஸலவாத் அருள் புரிகிறான் என்பது பொருள். அனைவருக்குமே அல்லாஹ்வின் ஸலவாத் உண்டு என்பதால் ஸல்லல்லாஹு அலைஹி என்பதை அனைவருக்குமே பயன்படுத்தலாம். வஸல்லம் (அல்லாஹ் அவருக்கு (சாந்தி) வழங்கட்டும்) என்பதையும் அனைவருக்கும் பயன்படுத்தலாம். அல்லாஹ்வின் ஸலாம் அனைவருக்கும் இருப்பதாலேயே ஒருவருக்கொருவர் ஸலாம் கூறுகிறோம். கூறவேண்டுமெனறு முஹம்மத் (ஸல்) அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

அல்லாஹ் அவருக்கு ஸலவாத்தும், ஸலாமும் வழங்கட்டும்'' என்பது ஸல்... என்பதன் பொருள். இவருக்கு ஸலவாத்தும் ஸலாமும் ஏற்படட்டும் என்பது அலை என்பதன் பொருள். அல்லாஹ் என்பது இங்கே கூறப்படவில்லை என்பதைத் தவிர இரண்டும் ஒரே கருத்தைக் கூறும் இரண்டு வார்த்தைகள் தாம்.

இதிலிருந்து பிரார்த்திக்கும் எண்ணத்தில் பிற நம்பிக்கையாளர்களுக்கு இத்தகைய அடைமொழியை இட்டால் அதை தடுக்க முடியாது.

ஆனாலும் ஒரு விஷயத்தை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்

நபிமார்களுக்கென்று அடைமொழியாகி விட்ட ஒரு வார்த்தையை பிறருக்கு பயன்படுத்தும் போது போலி நபி போன்ற குழப்ப நிலையும் வீண்மனக் கஷ்டங்களும் தோன்றும். சர்ச்சைகளும் அவதூறுகளும் கிளம்பும் என்பதால் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்

(ரலி)

நபித்தோழர்களைக் குறிப்பிடும் போதெல்லாம் ரலியல்லாஹு அன்ஹு என்பதை நாம் பயன்படுத்துகிறோம். இதற்கு காரணம் இறைவனின் இந்த வசனங்கள் தான்.
 

وَالسَّابِقُونَ الأَوَّلُونَ مِنَ الْمُهَاجِرِينَ وَالأَنصَارِ وَالَّذِينَ اتَّبَعُوهُم بِإِحْسَانٍ رَّضِيَ اللّهُ عَنْهُمْ وَرَضُواْ عَنْهُ وَأَعَدَّ لَهُمْ جَنَّاتٍ تَجْرِي تَحْتَهَا الأَنْهَارُ خَالِدِينَ فِيهَا أَبَدًا ذَلِكَ الْفَوْزُ الْعَظِيمُ

ஹிஜ்ரத் செய்தோரிலும், அன்ஸார்களிலும் முந்திச் சென்ற முதலாமவர்களையும், நல்ல விஷயத்தில் அவர்களைப் பின்தொடர்ந்தவர்களையும் அல்லாஹ் பொருந்திக் கொண்டான். அவர்களும் அல்லாஹ்வைப் பொருந்திக் கொண்டனர். (அல்குர்ஆன் 9:100) 

لَقَدْ رَضِيَ اللَّهُ عَنِ الْمُؤْمِنِينَ إِذْ يُبَايِعُونَكَ تَحْتَ الشَّجَرَةِ فَعَلِمَ مَا فِي قُلُوبِهِمْ فَأَنزَلَ السَّكِينَةَ عَلَيْهِمْ وَأَثَابَهُمْ فَتْحًا قَرِيبًا

அந்த மரத்தினடியில் உம்மிடம் உறுதி மொழி எடுத்த போது நம்பிக்கையாளர்களை அல்லாஹ் பொருந்திக் கொண்டான். (அல் குர்ஆன் 48:18)

முதல் வசனத்தில் ரளியல்லாஹு அன்ஹும் (அல்லாஹ் அவர்களைப் பொருந்திக் கொண்டான்) ரளு அன்ஹு (அவனை அவர்கள் பொருந்திக் கொண்டார்கள்)

இரண்டாவது வசனத்தில் ரளியல்லாஹு அனில் முஃமினீன் (முஃமின்களை அல்லாஹ் பொருந்திக் கொண்டான்) என்று கூறப்பட்டுள்ளது. முஃமின்கள் என்று இங்கு (இந்த இடத்தில்) கூறப்பட்டுள்ளது நபித்தோழர்களைத் தான் ஏனெனில் அவர்கள் தான் நபியுடன் மரத்தடியில் இருந்தவர்கள்.

சரி, நபித்தோழர்களல்லாத பிறருக்கு இந்த வார்த்தையைப் பயன்படுத்தக் கூடாதா.. அடுத்து வரும் வசனங்களைப் பார்ப்போம்.

لَا تَجِدُ قَوْمًا يُؤْمِنُونَ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ يُوَادُّونَ مَنْ حَادَّ اللَّهَ وَرَسُولَهُ وَلَوْ كَانُوا آبَاءهُمْ أَوْ أَبْنَاءهُمْ أَوْ إِخْوَانَهُمْ أَوْ عَشِيرَتَهُمْ أُوْلَئِكَ كَتَبَ فِي قُلُوبِهِمُ الْإِيمَانَ وَأَيَّدَهُم بِرُوحٍ مِّنْهُ وَيُدْخِلُهُمْ جَنَّاتٍ تَجْرِي مِن تَحْتِهَا الْأَنْهَارُ خَالِدِينَ فِيهَا رَضِيَ اللَّهُ عَنْهُمْ وَرَضُوا عَنْهُ أُوْلَئِكَ حِزْبُ اللَّهِ أَلَا إِنَّ حِزْبَ اللَّهِ هُمُ الْمُفْلِحُونَ

அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பும் சமூகத்தினர், அல்லாஹ்வையும் அவனது தூதரையும் பகைத்துக் கொண்டவர்களை நேசிப்பவர்களாக (நபியே!) நீர் காணமாட்டீர். அவர்கள் தங்கள் பெற்றோராயினும் தங்கள் புதல்வர்களாயினும் தங்கள் சகோதரர்களாயினும் தங்கள் குடும்பத்தினராயினும் சரியே, (ஏனெனில்) அத்தகையவர்களின் இதயங்களில், (அல்லாஹ்) ஈமானை எழுதி(ப் பதித்து) விட்டான், மேலும் அவன் தன்னிடமிருந்து (அருள் என்னும்) ஆன்மாவைக் கொண்டு பலப்டுத்தியிருக்கிறான். சுவர்க்கச் சோலைகளில் என்றென்றும் இருக்கும்படி அவர்களைப் பிரவேசிக்கச் செய்வான், அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டு இருக்கும். அல்லாஹ் அவர்களைப் பொருந்திக் கொண்டான், அவர்களும் அவனைப் பொருந்திக் கொண்டார்கள். அவர்கள்தாம் அல்லாஹ்வின் கூட்டத்தினர், அறிந்துகொள்க: நிச்சயமாக அல்லாஹ்வின் கூட்டத்தினர்தாம் வெற்றி பெறுவார்கள். (அல்குர்ஆன் 58:22)
 

قُلْ أَؤُنَبِّئُكُم بِخَيْرٍ مِّن ذَلِكُمْ لِلَّذِينَ اتَّقَوْا عِندَ رَبِّهِمْ جَنَّاتٌ تَجْرِي مِن تَحْتِهَا الأَنْهَارُ خَالِدِينَ فِيهَا وَأَزْوَاجٌ مُّطَهَّرَةٌ وَرِضْوَانٌ مِّنَ اللّهِ وَاللّهُ بَصِيرٌ بِالْعِبَادِ

நபியே!) நீர் கூறும்; "அவற்றை விட மேலானவை பற்றிய செய்தியை நான் உங்களுக்குச் சொல்லட்டுமா? தக்வா - பயபக்தி - உடையவர்களுக்கு, அவர்களுடைய இறைவனிடத்தில் சுவனபதிகள் உண்டு. அவற்றின் கீழ் நீரோடைகள் ஓடிக்கொண்டிருக்கின்றன. அவர்கள் அங்கு என்றென்றும் தங்குவார்கள்; (அங்கு அவர்களுக்குத்) தூய துணைகள் உண்டு. இன்னும் அல்லாஹ்வின் திருப் பொருத்தமும் உண்டு அல்லாஹ் தன் அடியார்களை உற்று நோக்குகிறவனாக இருக்கின்றான்.(அல் குர்ஆன் 3:15)
 

جَزَاؤُهُمْ عِندَ رَبِّهِمْ جَنَّاتُ عَدْنٍ تَجْرِي مِن تَحْتِهَا الْأَنْهَارُ خَالِدِينَ فِيهَا أَبَدًا رَّضِيَ اللَّهُ عَنْهُمْ وَرَضُوا عَنْهُ ذَلِكَ لِمَنْ خَشِيَ رَبَّهُ

அவர்களுடைய நற்கூலி, அவர்களுடைய இறைவனிடத்திலுள்ள அத்னு என்னும் சுவர்க்கச் சோலைகளாகும். அவற்றின் கீழே ஆறுகள் ஓடிக்கொண்டு இருக்கும்; அவற்றில் அவர்கள் என்றென்றும் தங்கியிருப்பார்கள்; அல்லாஹ்வும் அவர்களைப் பற்றி, திருப்தி அடைவான், அவர்களும் அவனைப்பற்றி திருப்தி அடைவார்கள்; தன் இறைவனுக்குப் பயப்படுகிறாரே அத்தகையவருக்கே இந்த மேலான நிலை உண்டாகும். (அல்குர்ஆன் 98:8)

மற்ற நல்லடியார்கள் அனைவருக்கும் ரலி என்பதையும் அதிலிருந்து பிறந்த ரில்வான் என்பதையும் இவ்வசனங்களில் இறைவன் பயன்படுத்தியுள்ளான். இதை நபிமார்களுக்கும் நபித்தோழர்களுக்கும், மற்ற முஸ்லிம்களுக்கும் பயன்படுத்தலாம். மார்க்க அடிப்படையில் இதைத் தடுக்க முடியாது. ஆனாலும் நாம் மேற் கூறிய அதே அடிப்படையில் பிறருக்கு ரளி என்பதை பயன்படுத்தும் போது அப்படி ஒரு நபித்தோழர் இருந்தாரோ... என்ற சந்தேகம் வரலாம். இத்தகைய சந்தேகங்களுக்கு இடம் கொடுக்காமல் இருப்பது நல்லது.

ரஹ்மதுல்லாஹி அலைஹி

அல்லாஹ் அவருக்கு ரஹ்மத் செய்யட்டும் என்பது இதன் பொருள். அல்லாஹ்வின் ரஹ்மத்தை யாருக்காகவும் கேட்கலாம். கேட்க வேண்டும். காலம் சென்ற மகான்கள் என்று நம்பப்படுபவர்களுக்குத் தான் இதைப் பயன்படுத்த வேண்டும் என்ற கட்டாயம் ஏதுமில்லை. அல்லாஹ்வின் ரஹ்மத் அனைவருக்கும் பொதுவானதாக என்பதற்கு நூற்றுக்கணக்கான வசனங்கள் சான்றுகளாக உள்ளன. அது ஒரு பிரார்த்தனை என்பதாலும், இதை பயன்படுத்துவதில் எத்தகைய குழப்பமும் ஏற்படவாய்ப்பில்லை என்பதாலும் இதை பயன்படுத்தலாம்

மேற்கொண்டு விளக்கம் தேவைப்படுவோர் எழுதவும்.

--
ஜி.நிஜாமுத்தீன் (ஜி என்)

No comments: