வலைப்பதிவில் தேட..

Sunday, April 26, 2009

கஸ்ருத் தொழுகை - தூரம், காலம்


அஸ்ஸலாமு அலைக்கும்

நான் குடும்பத்துடன் இப்போது (UNHCR இல் பதிந்து மூன்று மாதங்கள்) துர்கியில் நான்கு மாதங்கள் அகதியாக இங்கிலாந்து போவதற்காக வந்துள்ளேன் நான் இது வரையிலும் சுருக்கி தொழுது வருகிறேன் இங்கு இன்னும் எவ்வளவு காலம் இருக்க வேண்டும் என்பதை அல்லாஹ் தான் அறிவான் எனது வினா எங்களுக்கு சுருக்கி தொழுவதற்குரிய கால எல்லை உண்டா? அல்லது தொடர்ந்தும் தொழலாமா( UK) போகும் வரை. குர்ஆன் ஹதீஸ் லிருந்து பதில் தரவும்.
 
Nasoordeen Seyed
.............................
 
ஜம்வு - கஸ்ர் விஷயத்தில் சற்று தடுமாற்றமான நிலையே நம் மக்களிடம் நீடிப்பதால் இது குறித்து கொஞ்சம் விரிவாகவே நாம் தெளிவுப் பெற வேண்டியுள்ளது.
 
முதலில் எவ்வளவு சென்றால் சுருக்கித் தொழலாம் என்பதை எடுத்துக் கொள்வோம்.
 
இதற்கு பரவலான மாறுபட்ட அபிப்ராயங்கள் நிலவுகின்றன. சிலர் 48 கி-மி, சிலர் 25 கி-மீ, வேறு சிலர் 8 கி-மீ என்று கருத்தை முன் வைக்கிறார்கள்.
 
அதிகப்படியான தொலைவை காரணமாக்கக் கூடியவர்கள் எடுத்துக் காட்டும் ஆதாரம் என்ன?
 
இப்னு உமர்(ரலி), இப்னு அப்பாஸ்(ரலி) ஆகியோர் நாற்பத்தெட்டு மைல் தொலைவிற்குப் பயணம் செய்யும்போது கஸ்ருச் செய்பவர்களாகவும் நோன்பை விடுபவர்களாகவும் இருந்தனர். (புகாரி)
 
இந்த செய்தி நபித்தோழர்களின் சொந்த முடிவாகத்தான் அறிவிக்கப்பட்டுள்ளதே தவிர இதற்கு நபிவழியிலிருந்து எந்த ஆதாரத்தையும் எடுத்துக் காட்டவில்லை என்பதை நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
 
25 கிமீ - 8 கிமீ எது சரி?
 
இருபத்தி ஐந்து கிலோ மீட்டர் என்று முடிவு செய்பவர்களும் - எட்டு கிலோ மீட்டர் என்று முடிவு செய்பவர்களும் ஒரு ஹதீஸையே தங்களுக்கு ஆதாரமாகக் கொள்கிறார்கள்.
 
'நபி(ஸல்) பிரயாணத்தில் கஸ்ர் செய்து தொழுதார்கள்' என்ற ஒரு செய்தி முஸ்லிமில் ஆதாரப்பூர்வமாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த செய்தியை நபித்தோழரிடமிருந்து கேட்டு அறிவிக்கும் அறிவிப்பாளர் நபி(ஸல்) மூன்று பர்ஸக்கில் கஸ்ர் செய்தார்களா.. ஒரு பர்ஸக்கில் கஸ்ர் செய்தார்களா.. என்பதை நான் மறந்து விட்டேன் என்று கூறியுள்ளார்.
 
 إن رسول الله صلى الله عليه وسلم إذا خرج ثلاثة أميال أو ثلاثة فراسخ صلى ركعتين
 
எவ்வளவு தூரம் என்பதில் சந்தேகம் வந்து விட்டதால் கருத்து வேறுபாடு தவிர்க்க முடியாமல் போய் விட்டது. நவவி இமாம் போன்றவர்கள் பேணுதல் அடிப்படையில் அதிகப்படியான தூரத்தையே எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற கருத்தை முன் வைத்துள்ளார்கள். 1 பர்ஸக் என்பது சுமார் 8 கிலோமீட்டர் அளவைக் கொண்டதாகும். 3 பர்ஸக் 24 கிமீயை உள்ளடக்குவதால் அந்த அளவிற்கு பயணம் செல்பவர்கள் கஸ்ர் செய்யலாம் என்பது அவர்களின் அபிப்ராயம்.
 
அந்த செய்தியில் ஒரு பர்ஸக் என்ற தூர அளவும் முன் வைக்கப்பட்டுள்ளதால் இஸ்லாம் இலகுவானது என்ற அடிப்படையில் அதை எடுத்துக் கொள்ளலாம் என்பது சிலரது அபிப்ராயம்.
 
இதில் இரண்டாவது அபிப்ராயமே (அதாவது 1 பர்ஸகில் கஸ்ர் செய்யலாம் ) நமக்கு சரியாகத் தெரிகிறது. இதற்கு காரணம் உண்டு.
 
குறைவான தூர அளவை எடுத்துக் கொள்ளலாம் என்பதற்கு கிடைக்கக் கூடிய கூடுதல் ஆதாரங்கள்.
 
நாம் நபி(ஸல்) அவர்களுடன் லுஹர்த் தொழுகையை மதீனாவில் நான்கு ரக்அத்களாகத் தொழுதோம். பின்னர் துல்ஹுலைஃபாவில் அஸர் தொழுகையை இரண்டு ரக்அத்களாகத் தொழுதோம். (அனஸ்(ரலி) புகாரி - முஸ்லிம் - திர்மிதி).
 
மதீனா வழியாக மக்காவிற்கு உம்ரா - ஹஜ் செய்ய செல்பவர்களுக்கு உள்ள (மீக்காத்) இஹ்ராம் எல்லை துல்ஹூலைபாதான். இது மதீனாவிலிருந்து ஏறத்தாழ எட்டு கிமீ தூரத்தில் உள்ளது.
 
ஒரு பர்ஸகில் கஸ்ர் செய்யத் துவங்கலாம் என்பதற்கு இந்த செய்தி வலுவான ஆதாரமாக உள்ளது.
 
தொழுகை ஆரம்பத்தில் இரண்டு ரக்அத்களாகத்தான் கடமையாக்கப்பட்டது. பயணத் தொழுகை அவ்வாறே நீடித்தது. (சொந்த) ஊரில் தொழும் தொழுகை (நான்கு ரக்அத்களாக) முழுமைப் படுத்தப்பட்டது. (ஆய்ஷா (ரலி) புகாரி - முஸ்லிம் - திர்மிதி)
 
உள்ளுரில் நான்கு ரக்அத் பிரயாணத்தில் இரண்டு ரக்அத் என்று தெளிவாக இந்த செய்தி அறிவிக்கின்றது. இதில் உள்ளுர் - பிரயாணம் என்று தெளிவாக குறிப்பிடப் பட்டுள்ளதால் பிரயாணம் கிளம்பி சொந்த ஊர் எல்லையை கடந்தவுடன் கஸ்ர் செய்யலாம் என்பதை சாதாரணமாக விளங்கலாம்.
இதற்கு கூடுதல் வலு சேர்ப்பதற்காக ' அல்லாஹ் உங்களுக்கு இலகுவையே நாடுகிறான்' என்ற குர்ஆன் வசனத்தையும் (2:183),
 
அலீ(ரலி) (வெளியூர்) புறப்பட்டுச் செல்லும்போது (உள்ளூரிலுள்ள) வீடுகள் கண்களுக்குத் தெரியும் போதே கஸ்ருச் செய்தார்கள். திரும்பி வந்தபோது 'இதோ கூஃபா வந்துவிட்டது' என்று அவர்களிடம் கூறப்பட்டது. அப்போது அவர்கள் 'இல்லை! நாம் ஊருக்குள் நுழையும் வரை (கஸ்ருச் செய்வோம்) என்று குறிப்பிட்டார்கள். (புகாரி) என்ற அலீ (ரலி) அவர்களின் செய்தியையும் யாராவது பொருத்திப் பார்த்தால் அவை இன்னும் கூடுதல் ஆதாரமாகும்.
 
3 பர்ஸக் கடந்த பிறகே நபி(ஸல்) கஸ்ர் செய்தார்கள் என்பதற்கு நாம் அறிந்த வரை எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை. அப்படியே கிடைத்தாலும் அது நமது ஒரு பர்ஸக் என்ற அளவை இல்லாமலாக்கி விடாது. ஏனெனில் ஒரு பர்ஸக் என்பதற்குரிய ஆதாரங்களும் உள்ளன.
 
இனி கஸ்ர் தொழுகைக்கான கால அளவு என்ன என்பதைப் பார்ப்போம்.
 
இங்கும் பல கருத்தோட்டங்கள் இருக்கத்தான் செய்கின்றன.
 
இப்னு அப்பாஸ், அலி போன்ற நபித்தோழர்கள் மாறுபட்ட கருத்தில் இருக்கிறார்கள். இப்னு அப்பாஸ்(ரலி) பத்தொன்பது நாட்கள் என்ற கருத்திலும், அலி(ரலி) பத்து நாட்கள் என்ற கருத்திலும், இப்னு உமர்(ரலி) பதினைந்து நாட்கள் என்ற கருத்திலும் உள்ளார்கள். திர்மிதியின் பயணத் தொழுகைப் பாடத்தில் இந்த விபரங்களைப் பார்க்கலாம்.
 
இதில் பத்தொன்பது நாட்கள் என்ற முடிவிலிருக்கும் இப்னு அப்பாஸ் அவர்கள் அந்த முடிவுக்கு ஆதாரமாக ஒரு ஹதீஸையும் எடுத்துக்காட்டுகிறார்கள்.
 
மக்கா வெற்றியின் போது நபி(ஸல்) பத்தொன்பது நாட்கள் தங்கினார்கள். அப்போதெல்லாம் கஸ்ர் செய்தார்கள். (இதனால்) நாங்கள் பத்தொன்பது நாட்கள் கஸ்ர் செய்வோம் அதை விட அதிகமாக தங்கினால்  முழுமையாகத் தொழுவோம். (புகாரி - திர்மிதி - நஸயி).
 
ஆனாலும் இந்தச் செய்தியை வைத்து கஸ்ருக்குரிய நாட்கள் பத்தொன்பது தான் என்று முடிவு செய்ய முடியாது. ஏனெனில் நபி(ஸல்) மக்காவில் தங்கியது மொத்தம் பத்தொன்பது நாட்கள் தான். வெளியில் தங்கிய நாட்கள் முழுவதும் கஸ்ரு செய்துள்ளார்கள். இதிலிருந்து வெளியில் தங்கும் நாட்கள் (காலங்கள்) முழுதும் கஸ்ரு செய்யலாம் என்று தான் விளங்க முடியும்.
 
நபி(ஸல்) இருபது நாட்கள் தங்கி அதில் பத்தொன்பது நாட்கள் மட்டும் கஸ்ரு செய்திருந்தால் கஸ்ருக்குரிய கால அளவு பத்தொன்பது நாட்கள் தான் என்று முடிவு செய்வதில் மாற்று கருத்து எதுவுமிருக்காது. ஆனால் அப்படி நடக்கவில்லை. தங்கியதே மொத்தம் பத்தொன்பது நாட்கள் தான். தங்கிய காலம் முழுதும் கஸ்ரு செய்துள்ளார்கள்.
 
நபி(ஸல்) தபூக் போரின் போது அங்கு இருபது நாட்கள் தங்கினார்கள். தங்கிய காலம் முழுதும் கஸ்ரு செய்தார்கள் என்ற விபரம் 'நஸயி'ல் பதிவாகியுள்ளது.
 
பத்தொன்பது நாட்கள் என்ற முடிவை இந்த செய்தி மறுத்து விடுகிறது. இருபது நாட்கள் கஸ்ரு செய்த விபரம் கிடைத்தாலும் கஸ்ருக்குரிய காலம் இருபது நாட்கள் என்றும் முடிவு செய்ய முடியாது. இங்கும் தங்கிய காலம் முழுதும் கஸ்ரு செய்துள்ளதால் நாமும் அப்படித்தான் விளங்க வேண்டும்.
 
'அஜர்பைஜான்' என்ற சந்தைக் கூடும் பகுதிகளில் சில நபித்தோழர்கள் நான்கு மாதங்கள் கஸ்ரு செய்து தொழுதுள்ளார்கள் என்ற விபரம் 'பைஹகி' என்ற நூலில் கிடைக்கின்றது.  இது எல்லாவற்றையும் ஒருங்கிணைத்துப் பார்க்கும் போது 'இத்துனை நாட்கள் தான் கஸ்ரு செய்ய வேண்டும் என்று நபி(ஸல்) வரையறுத்து சொல்லாததாலும் அவர்கள் வெளியில் தங்கிய காலம் முழுதும் கஸ்ரு செய்து தொழுதுள்ளதாலும், உள்ளுர் - பிரயாணம் என்று ஆய்ஷா(ரலி) அறிவிக்கும் செய்தி பிரித்துக் கூறுவதாலும் பிரயாணத்தில் ஒருவர் எவ்வளவு காலம் தங்கினாலும் (அவர் விரும்பினால்) கஸ்ரு செய்து தொழுதுக் கொள்ளலாம் என்ற முடிவே சரியாகத் தெரிகிறது.
 
இதற்கு மாற்றமாக நாட்களை தீர்மானித்து வெளியிடப்பட்டுள்ள கருத்துக்கள் அனைத்திலும் ஆதாரங்களுக்கு மாற்றமாக அனுமானங்களே மிகைத்து நிற்கின்றன என்பதையும் சுட்டிக் காட்ட விரும்புகிறோம்.
 
கேள்விக் கேட்ட சகோதரர் வெளிநாட்டில் இருப்பதாலும், அதிலும் நிலையில்லாத தொடர் பயணமாக அது இருப்பதாலும் அவர் காலம் முழுவதும் தொழுகையை சுருக்கி - கஸ்ரு செய்து தொழுதுக் கொள்ளலாம்.
 
சென்னையிலிருந்து செங்கல்பட்டு செல்பவர் தினமும் பிரயாணி என்ற அந்தஸ்தில் இருப்பதால் அவர் (செங்கல்பட்டு சென்ற பிறகு அல்லது வழியில்) சுருக்கித் தொழுதுக் கொள்ளலாம். வெளிநாடுகளிலிருந்து  வருபவர்களுக்கும் இதுதான் பொருந்தும். (அல்லாஹ் மிக்க அறிந்தவன்.)

.நிஜாமுத்தீன் (ஜி என்)

http://tamilmuslimgroup.blogspot.com  

தமிழ் யுனிகோட் டவுன்லோட்

No comments: