வலைப்பதிவில் தேட..

Saturday, November 8, 2008

ஹதீஸ் கலை "அறிவோம்"

இஸ்லாமியப் பிரச்சாரம் தீவிரமடையத் துவங்கிய காலத்திலிருந்து குர்ஆனும், ஹதீஸ்களுமே இஸ்லாத்தின் மூல ஆதாரம் என்று மக்களிடம் வைக்கும் போது நபிமொழிகளில் பலவீனமும் உண்டா? இது என்ன கொள்கை என்று பலர் குரல் எழுப்பியுள்ளனர். பலர் நம்மை கேலியும் கிண்டலும் செய்தனர். எதை கண்டும் துவளாமல் ஏராளமான தூய இஸ்லாமிய சிந்தனைவாதிகள் உருவாகி களத்தில் நிற்கும் வேளையில் அவர்களுக்குப் பயன்படும் நோக்கில் சுருக்கமாக பலவீனமான ஹதீஸ்கள் உருவாவது எப்படி? என்று தெரிந்து கொள்ள இக்கட்டுரை வெளியிடப்படுகிறது.

ஹதீஸ் கலை என்பது ஆழ்ந்த, அகன்ற அறிவுத்திறன் கொண்டதாகும். ஒரு சில பக்கங்களில் முடியக்கூடிய விஷயமல்ல அது. இருப்பினும் புரிந்து கொள்வதற்கு ஏற்ற அடிப்படை விஷயம் இதுதான்.

1. ஒரு ஹதீஸை நபித்தோழர்கள் நேரடியாக அறிவிக்காமல் அதற்கு அடுத்தத் தலைமுறையினர் (தாபிஈ) நேரடியாக அறிவித்தால், அவர்கள் நபி (ஸல்) அவர்களைப் பார்த்துப் பழகும் வாய்ப்பில்லை என்பதால் அத்தகைய ஹதீஸ்கள் பலவீனமாகி விடும்.

2. அறிவிப்பாளர்களுக்கு மத்தியில் தொடர்பின்மை இருந்தால் அவைகளும் பலவீனமாகும்.

3. நபித்தோழர் ஒரு ஹதீஸை அறிவித்து அதன்பிறகு வரும் அறிவிப்பாளர்களிடையே தொடர் விடுபட்டிருந்தால் அதுவும் தொடர் அறுந்த பலவீனமான ஹதீஸாகும்.

4. எனக்கு இவர் இந்த ஹதீஸை அறிவித்தார் என்று ஒரு அறிவிப்பாளர் கூறும் போது அவர்கள் இருவரும் சமகாலத்தில் வாழ்ந்தவராகவும் இருவரும் நேரடியாக சந்திக்கும் வாய்ப்பை பெற்றவராகவும் இருக்க வேண்டும். அதில் ஏதாவது குறை இருந்தால் அதுவும் பலவீனமாகும்.

5. நபித்தோழர்களைத் தவிர்த்து இதர அறிவிப்பாளர்களில் எவராவது பொய்யர் என்று பரவலாக இனங்காட்டப்பட்டால் அதுவும் பலவீனமாகும்.

6. மார்க்கத்திற்கு முரணான பித்அத் போன்ற காரியங்களைச் செய்யக் கூடியவர்கள் அவர்களது செயல்களை நியாயப்படுத்தி ஹதீஸ்கள் அறிவித்தால் அதுவும் பலவீனமாகும்.

7. ஒரு அறிவிப்பாளர் இளமையில் நல்ல ஞாபக சக்தியுடன் இருந்து பிற்காலத்தில் ஞாபக சக்தியில் தடுமாற்றம் ஏற்பட்டால், தடுமாற்றம் ஏற்பட்ட பின்பு அறிவித்தவை பலவீனமாகும். அவருக்கு எப்போது தடுமாற்றம் ஏற்பட்டது என்ற தகவல் தெரியாவிட்டால் அவர் அறிவித்த முழு செய்திகளும் பலவீனமாகும்.

8. ஒரு செய்தியை அறிவிக்கும் போது ஒருமுறை ஒருவர் பெயரையும் அடுத்த முறை அறிவிக்கும் போது பெயரை மாற்றியும் அறிவித்தால் தடுமாற்றத்தின் காரணத்தால் அதுவும் பலவீனமாகும்.

9. மொழி, இனம், பாரம்பரியம,; மார்க்கத்தில் பிரிவினை இவைகளை அனுமதித்து அல்லது புகழ்ந்து அறிவிக்கப்படும் அறிவிப்புகள் மொத்தமாக குர்ஆனுக்கு முரண்படுவதால் அவைகளும் பலவீனமாகும்.

10. ஹதீஸ் கலை வல்லுனர்கள் அனைவர்களிடமும் அறிமுகமில்லாத, தகவல் கிடைக்காத ஆட்கள் மூலம் ஒரு செய்தி வந்தால் அதுவும் பலவீனமாகும்.

11. தந்தை வழியாக மகன் அறிவிக்கும் செய்தியில் மகனுடைய சிறு வயதிலேயே தந்தை இறந்திருந்தால், தந்தையிடமிருந்து செவியுறும் வாய்ப்பை இழந்திருந்தால் அதுவும் பலவீனம்.

12. ஒரு தந்தைக்கு பல மகன்கள் இருந்து மகன்களுடைய பெயர் குறிப்பிடாமல் இன்னாரின் மகன் அறிவித்தார் என்று கூறினால் அதுவும் பலவீனமாகும்.

13. இறைவன் கருணையாளன் என்பதால் எத்தகைய பொய்யும் பேசலாம், தவறில்லை என்ற கொள்கை வாதிகள் அறிவிக்கும் ஹதீஸ்கள் அனைத்தும் பலவீனமாகும்.

இப்படி ஏராளமான மொழிகளில் ஹதீஸ்கள் தரம் பிரிக்கப்படுகின்றன. لاَ تَقْفُ مَا لَيْسَ لَكَ بِهِ عِلْمٌ
சந்தேகமானவற்றை பின்பற்ற வேண்டாம் (அல் குர்ஆன் 17:36). என்ற இறை கட்டளைக்கிணங்க, சந்தேகம் ஏற்படும் எல்லா செய்திகளையும் ஹதீஸ் கலை மேதைகள் ஒதுக்கி தள்ளிவிட்டார்கள்

குறிப்பு 1: இக்கட்டுரை தஹ்தீப், தர்கீப், தல்கீஸ், மீஸூன், தத்ரீப் இன்னும் பல ஹதீஸ் நூல்களைத் தழுவி எழுதப்பட்டது.

குறிப்பு 2: குர்ஆனுடன் எந்த வகையிலும் ஒத்துப் போகாத - முரண்பட்டே நிற்கும் ஹதீஸ்கள் ஏதாவது இருந்தால் அப்போது நாம் குர்ஆனுக்கு முக்கியத்துவம் கொடுத்து ஹதீஸ்கள் விஷயத்தில் மெளனம் காத்து விட வேண்டும்.  ஹதீஸ்கள் முக்கியம் என்று குர்ஆனை அலட்சியப்படுத்தி விடக் கூடாது.

--
ஜி என்

Wednesday, November 5, 2008

வெளியில் செல்லும் பெண்

வெளிநாட்டில் வேலை பார்க்கும் நண்பரின் மனைவி தன்தாய்வீட்டாரோடு சொந்த நாட்டில் வசிக்கிறாள். அவள் வெளியிடங்களுக்கு தன் சகோதரனோடு சென்றாலும் கணவனின் முன்அனுமதியில்லாமல் சென்று வருகிறாள். இதுபற்றி நண்பர் ஏதாவது கேட்டால் சகோதரனுடன்தானே வெளியில் செல்கிறேன் அதனால் முன் அனுமதிபெற்றுதான் செல்லவேண்டும் என்பதில்லை என்று வாதாடுகிறார்;. இதனால் தமக்கிடையே எந்த பிரச்சினையும் வந்துவிடக் கூடாதே என்ற மன அச்சத்தில் நண்பர் இப்போது எதுவுமே கண்டுகொள்வதில்லை.
 
இது சரியா? தவறா? குர் ஆன் மற்றும் ஹதீஸ் ஆதாரத்தோடு பதில் தேடுகிறேன்.
 


அஸ்ஸலாமு அலைக்கும்.
 
ஒரு பெண் தன் தாய் வீட்டில் இருந்தாலும் சரி, கணவனுடன் இருந்தாலும் சரி தனது தேவைகளுக்காக வெளியில் செல்லும் போது கணவனின் அனுமதிப் பெற்றுதான் செல்ல வேண்டும் என்று மார்க்கம் எந்த நிபந்தனைனயும் விதிக்கவில்லை.
 
திருமணம் செய்ய தடை செய்யப்பட்ட ஆண் துணையுடன் வெளியில் செல்ல வேண்டும் என்றே சொல்கின்றது. இதுவும் கூட பொது நிபந்தனையல்ல.
 
‏حدثنا ‏ ‏إسحاق بن إبراهيم الحنظلي ‏ ‏قال قلت ‏ ‏لأبي أسامة ‏ ‏حدثكم ‏ ‏عبيد الله ‏ ‏عن ‏ ‏نافع ‏ ‏عن ‏ ‏ابن عمر ‏ ‏رضي الله عنهما ‏
‏أن النبي ‏ ‏صلى الله عليه وسلم ‏ ‏قال ‏ ‏لا تسافر المرأة ثلاثة أيام إلا مع ذي ‏ ‏محرم

திருமணம் செய்யத்தகாத ஆண் உறவினருடன் தவிர மூன்று நாட்கள் ஒரு பெண் பயணம் மேற்கொள்ளக் கூடாது'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் (புகாரி)
 
 
மூன்று நாள் பயண தொலைவு என்பதை இன்றைய பயணம் என்று நாம் கருதிக் கொள்ளக் கூடாது.  இன்றைய நிலையில் மூன்று நாட்களில் உலகில் எந்த நாட்டுக்கும் சென்று வந்து விடலாம்.  நபி(ஸல்) காலத்தின் பயண தொலைவையே நாம் கருத்தில் கொள்ள வேண்டும்.
 
நீண்ட தூரப்பயணங்களுக்கு அவர்கள் ஒட்டகத்தையே பயன்படுத்தி வந்தார்கள்.  மூன்று நாள் பயண தூரம் என்பது அதிகப்பட்சமாக 70 கிமி முதல் 100 கிமிக்குள் இருக்கலாம். 
 
இந்த அளவு சரி என்றால் 70 கிமீ கடந்து செல்லும் ஒரு பெண் தக்க துணை (அதாவது திருமணம் செய்யஹராமாக்கப்பட்ட துணையுடன்) செல்ல வேண்டும்.   அக்கம் பக்கம் ஊர்களுக்கு செல்வதாக இருந்தால் இந்த நிபந்தனையைக் கூட பொருத்த முடியாது.
 
ஹஜ் செய்வது இதிலிருந்து சிலருக்கு விலக்கு பெறும்.  ஹஜ் என்ற நோக்கத்துக்காக ஒரு பெண் கிளம்பினால் துணையில்லாமல் கூட செல்லலாம்.
 
மார்க்க அடிப்படையில் ஒரு பெண் கணவனிடம் அனுமதிப்பெற்று செல்ல வேண்டும் என்று கட்டளை இல்லையென்றாலும் புரிநதுணர்வு அடிப்படையில் கணவன அவ்வாறு விரும்பும் போது சொல்லி விட்டு செல்லலாம்.
 
هُنَّ لِبَاسٌ لَّكُمْ وَأَنتُمْ لِبَاسٌ لَّهُنَّ
 
(மனைவிகள்) உங்களுக்கு ஆடையாகவும், நீங்கள் அவர்களுக்கு (மனைவிகளுக்கு) ஆடையாகவும் இருக்கிறீர்கள் (அல்குர்ஆன் 2:187) என்று இறைவன் குறிப்பிட்டுள்ளான்.
 
இது கணவன் மனைவிக்கான நட்பின் ஆழத்தை எடுத்துக்காட்டும் தத்துவமாகும்.  புரிந்துணர்வு வெளிபாட்டின் அடையாளமாகும்.  'தன் மனைவி வெளியில் செல்லும் போது தன்னிடம் சொல்லி விட்டு செல்ல வேண்டும்' என்று கணவன் விரும்புவது தவறல்ல.  அதற்கு பல காரணங்கள் கணவனிடம் இருக்கலாம்.
 
சொல்லி விட்டு செல்லும் மனைவியின் மீது கணவனுக்கு அன்பு அதிகரிக்கத்தான் செய்யும்.  இதை மனைவி புரிந்துக் கொள்ள வேண்டும்.  கணவனிடம் சொல்லிவிட்டு செல்வதால் அவர்களுக்கொன்றும் இழப்பு ஏற்பட்டுவிடப் போவதில்லை.  (இது அலைப்பேசிகளின் ஆதிக்கக்காலம் என்பதால் சொல்லிவிட்டு கிளம்புவதற்கு ஒரு நிமிடம் போதும்)

--
ஜி என்

Saturday, November 1, 2008

Re: மதம் மாறினால் கொலை?

குழுமத்தில் விவாதிக்கப்பட்ட தலைப்பு
 
அஸ்ஸலாமு அலைக்கும்.
 
இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட ஒருவர் பிறகு இஸ்லாத்திலிருந்து வெளியேறி மாற்றுமதத்திற்கு சென்று விட்டால் அவரை கொல்ல வேண்டும் என்பது  சட்டமா...?  இது பற்றிய இஸ்லாமிய நிலைப்பாடு என்ன..? என்றக் கேள்வியை ஏற்கனவே சகோதரர் ஹாரூன் கேட்டுள்ளார் எனவே இதுவே முதல் தலைப்பாகும்.  இன்றிலிருந்து 20 நாட்கள் இந்த தலைப்பு குறித்த கருத்தோட்டங்கள் தொடரலாம் இன்ஷா அல்லாஹ்

 
ஒருவர் இஸ்லாத்தை விட்டு வெளியேறி பிற மதத்திற்கு சென்று விட்டால் அவரைக் கொள்ள வேண்டும் என்று அறிஞர்களில் ஒரு சாரார் கூறி வருகிறார்கள்.  ஸலஃபுகள் என்று அறியப்பட்ட முந்தைய அறிஞர்களில் பலரும் இந்த கருத்தைக் கொண்டுள்ளனர்.  அதற்கு ஆதாரமாக,
 
''எவர் தன் மார்க்கத்தை மாற்றிக்கொள்கிறாரோ அவரைக் கொன்று விடுங்கள்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி தமிழ் 3037, 6992.  என்ற நபிமொழியை முன் வைக்கின்றனர்  (இதே கருத்தில் இன்னும் சில நபிமொழிகளும் உள்ளன)
 
இந்த நபிமொழியை படிக்கும் எவரும் இஸ்லாத்தில் மனித உரிமை (இந்த விஷயத்தில்) இல்லை.  ஒருவர் ஒரு மதத்தை தேர்ந்தெடுப்பதும், விரும்பினால் அதை விட்டு விலகுவதும் அவரது சொந்த விருப்பமல்லவா...  கிறிஸ்த்தவத்திலிருந்து எவ்வளவோ நபர்கள் இஸ்லாத்திற்கு வருகிறார்கள்,  ஹிந்து மதத்திலிருந்து இஸ்லாத்தை தழுவுகிறார்கள் அவர்களையெல்லாம் அந்த மதங்கள் கொல்ல சொல்கின்றனவா...  அது மனித உரிமை என்று அந்த மதங்கள் கருதும் போது அது போன்ற ஒரு சகிப்புத் தன்மை ஏன் இஸ்லாத்தில் இல்லை. என்ற முடிவுக்கு வந்து விடுகின்றனர்  இது குறித்து ஆங்காங்கே விவாதங்களும் நடக்கின்றன.   
 
உண்மையில் மதம் மாறியவர்களை இஸ்லாம் கொல்ல சொல்கின்றதா..?  மேற்கண்ட நபிமொழியின் அர்த்தம் என்ன?   இது குறித்து நாம் விளக்கியாக வேண்டும்.    பதிவை துவங்குங்கள்.  தொடர்ச்சியாக எங்கள் கருத்து பதியப்படும்.
.........................................
மதம் மாறினால் மரண தண்டனை பொது சட்டமா..?
 
அஸ்ஸலாமு அலைக்கும்.
 
இஸ்லாத்தை விட்டு வெளியேறிவர்களை கொல்ல வேண்டும் என்பது இஸ்லாத்தின் பொதுவான விதியல்ல. ஹதீஸ்களில் வரும் வாசகங்களை மட்டும் கருத்தில் கொண்டு எந்த சட்டமும் வகுக்க முடியாது.  மேற்கொண்டு கிடைக்கும் ஆதாரங்களையெல்லாம் ஒன்று திரட்டி ஆய்வு செய்த பிறகே ஒரு முடிவுக்கு வர வேண்டும்.
 
இந்த மார்க்கம் மனிதர்களுக்கு முழு சுதந்திரம் அளிக்கக் கூடிய மார்க்கமாகும்.  மார்க்கத்தை எடுத்துச் சொல்வதற்காக அனுப்பப்பட்டவர்களே நபிமார்கள்.  இந்த மார்க்கத்தை ஏற்றவர்களுக்கும், ஏற்காமல் மறுத்தவர்களுக்கும்,  அலட்சியப்படுத்தியவர்களுக்கும் பரிசோ, தண்டனையோ கொடுக்கும் உரிமை இறைவனைச் சார்ந்ததாகும்.  உலக வாழ்வில் முழு சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ள மனிதர்கள் மீது மத சட்டங்களை திணித்து அவர்களை கட்டுப்படுத்தும் படி இஸ்லாம் பணியவில்லை.   இதற்கான ஆதாரங்களை பார்த்து விட்டு தொடர்வோம்.
 
وَقُلِ الْحَقُّ مِن رَّبِّكُمْ فَمَن شَاء فَلْيُؤْمِن وَمَن شَاء فَلْيَكْفُرْ إِنَّا أَعْتَدْنَا لِلظَّالِمِينَ نَارًا
 
(நபியே!) நீர் கூறுவீராக "இந்தச் சத்தியம் உங்கள் இறைவனிடமிருந்து (வந்து)ள்ளது" ஆகவே, விரும்புபவர் அதை ஏற்கட்டும், விரும்புபவர் (அதனை) நிராகரிக்கட்டும். அநியாயக் காரர்களுக்கு (நரக) நெருப்பை நிச்சயமாக நாம் சித்தப்படுத்தியுள்ளோம்;  (அல் குர்ஆன் 18:29)
 
இந்த வசனத்தில் மனிதர்களுக்கு வழங்கப்பட்டுள்ள சுதந்திரத்தை கவனிப்போம். சத்தியம் எடுத்து சொல்லப்படுகின்றது. விருப்பமிருந்தால் ஏற்றுக் கொள்ளுங்கள். விருப்பமில்லை என்றால் விட்டு விட்டுச் செல்லுங்கள். இதன் முடிவு மரணத்திற்கு பிறகே உங்களுக்குத் தெரியும் என்று இறைவன் தெளிவாக அறிவிக்கிறான்..
 
ஏற்பதும் நிராகரிப்பதும் ஒருவருடைய தனிப்பட்ட முடிவைப் பொருத்தது என்று ஆகி விட்ட பிறகு ஏற்று நிரைாகரித்தவர்களை கொல்ல வேண்டும் என்பது எப்படி இஸ்லாமிய சட்டமாக இருக்க முடியும்?
 
إِنَّ الَّذِينَ كَفَرُواْ بَعْدَ إِيمَانِهِمْ ثُمَّ ازْدَادُواْ كُفْرًا لَّن تُقْبَلَ تَوْبَتُهُمْ وَأُوْلَـئِكَ هُمُ الضَّآلُّونَ
 
எவர் ஈமான் கொண்ட பின் நிராகரித்து மேலும் (அந்த) குஃப்ரை அதிகமாக்கிக் கொண்டார்களோ, நிச்சயமாக அவர்களுடைய தவ்பா - மன்னிப்புக்கோரல் - ஒப்புக்கொள்ளப்பட மாட்டாது. அவர்கள் தாம் முற்றிலும் வழி கெட்டவர்கள்.  (3:90)
 
நம்பிக்கைக் கொண்ட பின் நிராகரிப்பவர்கள் பற்றிய எச்சரிக்கையில்,  இஸ்லாத்தை ஏற்ற பின் நீங்கள் நிராகரித்து விலகினால் அதன் பிறகு பவமன்னிப்பு தேடிக் கொண்டிருந்தால் பிரயோஜனமில்லை என்ற அறிவுரையே இறைவன் முன் வைக்கிறானே தவிர அவர்கள் கொல்லப்பட வேண்டும் என்று கூறவில்லை.
 
إِنَّ الَّذِينَ كَفَرُواْ وَمَاتُواْ وَهُمْ كُفَّارٌ فَلَن يُقْبَلَ مِنْ أَحَدِهِم مِّلْءُ الأرْضِ ذَهَبًا وَلَوِ افْتَدَى بِهِ أُوْلَـئِكَ لَهُمْ عَذَابٌ أَلِيمٌ وَمَا لَهُم مِّن نَّاصِرِينَ
 
எவர்கள் நிராகரித்து, நிராகரிக்கும் நிலையிலேயே இறந்தும் விட்டார்களோ, அவர்களில் எவனிடமேனும் பூமிநிறைய தங்கத்தை தன் மீட்சிக்கு ஈடாக கொடுத்தாலும் (அதனை)அவனிடமிருந்து ஒப்புக் கொள்ளப் படமாட்டாது. அத்தகையோருக்கு நோவினை மிக்க வேதனை உண்டு. இன்னும் அவர்களுக்கு உதவி செய்வோர் எவரும் இருக்க மாட்டார்கள்.  (3:91)
 
நம்பிக்கைக் கொண்ட பின் நிராகரிப்பது பற்றி பேசும் தொடரிலேயே இறைவன் இந்த வசனத்தையும் முன் வைத்துள்ளான்.  ஈமான் கொண்டபின் நிராகரிப்பவர்கள் கொல்லப்பட வேண்டும் என்றால் "நிலையிலேயே இறந்தும் விட்டார்களோ.."   என்ற வார்த்தைக்கு அர்த்தமில்லாமல் போய்விடும்.   எனவே இஸ்லாத்தை ஏற்று பிறகு மதம் மாறி போனவர்கள் கொல்லப்பட வேண்டும் என்பது பொதுவான சட்டமல்ல என்பதை விளங்கலாம்.
...................................
மதம் மாறினால் மரண தண்டனை பொது சட்டமா..? - 2
 
இஸ்லாத்தை ஏற்று பின்னர் இஸ்லாத்தை விட்டு வெளியேறியவர்களை கொல்ல வேண்டும் என்ற "ஆழமான ஆய்வற்ற கருத்தால்"  இஸ்லாம் குறித்து பலர் (குறிப்பாக மாற்று மதத்தவர்கள்) தவறான நம்பிக்கையை கொண்டு விடுகிறார்கள்.  சிந்தனை ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் மனிதர்களை வென்றெடுக்க வந்த ஒரு மார்க்கத்தில்,  "இஸ்லாத்தை விட்டு வெளியேறினால கொல்லப்பட வேண்டும்" போன்ற தவறான ஆளுமைச் சட்டங்கள் இருக்க வாய்ப்பே இல்லை.
 
மனிதர்களுக்கு வழங்கப்பட்டுள்ள முழு அளவிலான உரிமைகளில் ஒன்று இஸ்லாத்தில் கடைசி வரை நீடிப்பது சம்பந்தப்பட்டதாகும்.  அறிவார்ந்த முறையில் இஸ்லாத்தை விளங்கி ஏற்பதுதான் இஸ்லாம் மக்களுக்கு முன் வைக்கும் அறிவுரையாகும்.  விளங்கி ஏற்றப்பின் அதிலிருந்து வெளியேறினால் அது இறைவனையும் இறைவனின் மார்க்கத்தையும் கேலி செய்வதாகி விடுவதால் இதன் தண்டனையை மதம் மாறியவர்கள் மரணத்திற்கு பிறகு நிரந்தரமாக சுவைப்பார்கள்.  மாறாக "மதம் மாறியதற்காக" அவர்களுக்கு தண்டனை வழங்கும் படி இஸ்லாம் சொல்லவில்லை.  நாம் முந்தைய பதிவில் எடுத்துக் காட்டியுள்ள வசனங்களை மீண்டும் ஒரு முறை படித்து விட்டு அடுத்த வசனங்களையும் படியுங்கள்.

إِنَّ الَّذِينَ آمَنُواْ ثُمَّ كَفَرُواْ ثُمَّ آمَنُواْ ثُمَّ كَفَرُواْ ثُمَّ ازْدَادُواْ كُفْرًا لَّمْ يَكُنِ اللّهُ لِيَغْفِرَ لَهُمْ وَلاَ لِيَهْدِيَهُمْ سَبِيلاً
 
எவர்கள் ஈமான் கொண்டு, பின்னர் நிராகரித்து, பின்னர் ஈமான் கொண்டு, பின்னர் நிராகரித்து, பின்னர் நிராகரிப்பை அதிகரித்துக் கொண்டனரோ, அவர்களை அல்லாஹ் மன்னிப்பவனாகவும் இல்லை. மேலும் அவர்களுக்கு (நேர்) வழியைக் காட்டுகிறவனாகவும் இல்லை. (அல்குர்ஆன் 4:137)
 
இந்த வசனத்தை ஆழமாக கவனிப்போம்.  ஒருவர் இஸ்லாத்தை ஏற்கிறார் பின்னர் மதம் மாறி விடுகிறார். இப்போது அவர் கொல்லப்பட வேண்டும் என்பது சட்டம் என்றால், அடுத்து அவர் ஈமான் கொள்வதற்கும், அதன் பிறகு அதை மறுப்பதற்கும்......... இப்படி எதற்கும் வழியில்லாமல் போய் விடும். 
 
நம்பிக்கைக் கொள்கிறார்
பிறகு மறுக்கிறார்
மீண்டும் நம்பிக்கைக் கொள்கிறார்
அதையும் மறுத்து வெளியேறுகிறார்
பின்னர் இறை நிராகரிப்பில் நிலைத்து நின்று மரணிக்கிறார் என்று இறைவன் சுட்டிக்காட்டுவதிலிருந்து மனிதர்களுக்கு எத்துனை சுதந்திரமான வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது என்பது மிகத் தெளிவாகின்றது.   'கொல்லப்பட வேண்டும்" என்ற புரிதலை இந்த வசனமும் அடியோடு மறுக்கின்றது.
 
كَيْفَ يَهْدِي اللّهُ قَوْمًا كَفَرُواْ بَعْدَ إِيمَانِهِمْ وَشَهِدُواْ أَنَّ الرَّسُولَ حَقٌّ وَجَاءهُمُ الْبَيِّنَاتُ وَاللّهُ لاَ يَهْدِي الْقَوْمَ الظَّالِمِينَ
 
அவர்களிடம் தெளிவான ஆதாரங்கள் வந்து நிச்சயமாக (இந்தத்) தூதர் உண்மையாளர்தான் என்று சாட்சியங் கூறி ஈமான் கொண்ட பிறகு நிராகரித்து விட்டார்களே, அந்தக் கூட்டத்திற்கு அல்லாஹ் எப்படி நேர்வழி காட்டுவான்! அல்லாஹ் அநியாயக் கார கூட்டத்திற்கு நேர்வழி காட்ட மாட்டான்.  (அல் குர்ஆன் 3:86)
 
இந்த வசனத்தையும் ஊன்றி கவனிப்போம்.   ஈமான் கொண்டு நிராகரிப்பவர்கள் கொல்லப்பட வேண்டும் என்றால் அதை தெளிவாக இறைவன் சொல்ல வேண்டிய இடம் இது.  ஆனால் கொல்லப்படுவதைப் பற்றி சொல்லாமல் அவர்கள் நேர்வழிக்கு அப்பாற்பட்டவர்கள், இறைவன் அவர்களுக்கு வழிகாட்ட மாட்டான் என்று எச்சரிக்கிறான்.  அதாவது இஸ்லாத்தை ஏற்று பிறகு வெளியேறினால்  நீ உயிரோடு இருக்கலாம் உனக்கு வாழ்நாள் அவகாசம் அளிக்கபட்டாலும் அடுத்து நீ நேர்வழிப் பெறும் வாய்ப்பு இல்லை என்பதை இந்த வசனம் கூட்டிக் காட்டுகின்றது.
 
இந்த மார்க்கம் மனிதர்கள் மீது திணிக்கப்படுவதற்காக அருளப்படவில்லை என்பதை புரிந்துக் கொள்ள இன்னும் ஆதாரங்களைப் பார்த்து விட்டு நாம் முன்னர் எடுத்துக் காட்டியுள்ள "கொல்லப்பட வேண்டும்" என்ற ஹதீஸின் விளக்கம் என்னவென்பதை காண்போம்
.................................
மதம் மாறினால் மரண தண்டனை பொது சட்டமா..? - 3
 
இஸ்லாத்தை ஏற்று பின்னர் அதிலிருந்மு விலகியவர்களை கொல்ல வேண்டும் என்பது பொதுவான சட்டமல்ல என்பதை சொல்லி வருகிறோம்.   இதுவரை நாம் எடுத்துக் காட்டிய குர்ஆன் வசனங்கள் அனைத்துமே இஸ்லாத்தை விட்டு வெளியேறியவர்களை கொல்ல வேண்டும் என்ற கருத்தை மறுக்கின்றது.
 
அடுத்த வசனம்.
 
لاَ إِكْرَاهَ فِي الدِّينِ قَد تَّبَيَّنَ الرُّشْدُ مِنَ الْغَيِّ
 
(இஸ்லாமிய) மார்க்கத்தில் (எவ்வகையான) நிர்ப்பந்தமுமில்லை. வழிகேட்டிலிருந்து நேர்வழி முற்றிலும் (பிரிந்து) தெளிவாகிவிட்டது (அல்குர்ஆன் 2:256)
 
மார்க்கத்தின் மிக முக்கிய அடிப்படையை விளக்கும் வசனங்களில் இதுவும் ஒன்று.
 
வழிகேட்டிலிருந்து நேர்வழி பிரித்தறிவிக்கப்பட்டு தெளிவாகி விட்டதால் இந்த மார்க்கத்தில் எந்த நிர்பந்தமுமில்லை என்பது இந்த வசனம் முன் வைக்கும் அறிவார்ந்த வாதம்.
 
இஸ்லாத்திலிருந்து வெளியேற நினைக்கும் ஒருவரை "நீ இஸ்லாத்திலிருந்து வெளியேறினால் கொல்லப்படுவாய்"  என்று மிரட்டுவது அவரை நிர்பந்தப்படுத்தி இஸ்லாத்தில் வைக்கும் காரியமாகும். பிறரது மிரட்டலுக்கு பயந்து,  கொல்லப்பட்டு விடுவோம் என்ற அச்சத்தில் இஸ்லாத்தில் இருப்பவர்களால் இஸ்லாத்தின் கோட்பாடுகளையும், சட்டங்களையும் எப்படிப்பின்பற்ற முடியும்.  
 
உயிருக்கு பயந்து நிர்பந்தமான நிலையில் இஸ்லாத்தின் உள்ளே இருக்கும் ஒருவரிடம் இஸ்லாம் எந்த மாற்றத்தையும் செய்து விடப் போவதில்லை.    நேர்வழியையும், வழிகேட்டையும் பிரித்தறிவித்து விட்டு இஸ்லாத்தில் நிர்பந்தமில்லை என்று இறைவன் குறிப்பிட்டு விட்டதால் அவன் மார்க்கத்தில் இருந்துதான் ஆக வேண்டும் என்று வற்புறுத்தும் உரிமை ஒருவருக்கும் இல்லை.
 
மார்க்கத்தில் நிர்பந்தமில்லை என்ற சட்டமே ஒருவர் வெளியேறினால் வெளியேறிக் கொள்ளலாம் என்ற அனுமதியை முன் வைக்கின்றது. அவரை கொல்லும் உரிமையை இஸ்லாம் யாருக்கும் வழங்கவில்லை.
 
நபி(ஸல்) அவர்கள் காலத்தில் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதாக நடித்துக் கொண்டு இஸ்லாத்திற்கு இடையூறு செய்துக் கொண்டிருந்தவர்கள் இருக்கத்தான் செய்தார்கள் - நயவஞ்சகர்கள் - என்று இஸ்லாம் இவர்களை அடையாளப்படுத்துகின்றது.  இஸ்லாத்தை விட்டு வெளியேறிய ஒருவரைக் கூட நபி(ஸல்) அவர்கள் "கொன்றார்கள்" என்பதற்கு எந்த ஒரு ஆதாரமும் இல்லை.
 
எனவே இஸ்லாத்தை விட்டு வெளியேறியவர்கள் கொல்லப்பட வேண்டும் என்பது பொதுவான சட்டமல்ல என்பதை புரிந்துக் கொள்ள வேண்டும்.
 
அப்படியானால்,
 
இஸ்லாத்தை விட்டு வெளியேறிவர்களைக் கொல்லுங்கள் என்று நாம் ஆரம்பத்தில் எடுத்துக்காட்டிய ஹதீஸின் விளக்கம் தான் என்ன..? அடுத்துப் பார்போம் இறைவன் நாடட்டும்.
............................
மதம் மாறினால் மரணதண்டனை பொது சட்டமா? ஹதீஸ்களின் விளக்கம் என்ன..? - 4
 
இஸ்லாத்தை விட்டு வெளியேறியவர்கள் கொல்லப்பட வேண்டும் என்று போதுவான ஒரு கருத்து முன் வைக்கப்படும் போது "இது ஒரு முரட்டு மார்க்கம்" என்ற பழிசொல்லிலிருந்து இஸ்லாத்தை காப்பாற்ற முடியாமல் போய் விடுகின்றது.
 
உபதேசம், பிரச்சாரம் செய்வதில் கூட நளினத்தை, இலகுவை கடைப்பிடிக்க வேண்டும் என்று சொல்லும் ஒரு மார்க்கத்தில் மனிதனின் சிந்தனை சுதந்திரமும், வாழ்வியல் சுதந்திரமும் வலுக்காட்டாயமாக அகற்றப்பட்டு இருக்குமா என்பதை "கொல்லப்பட வேண்டும்" என்ற கருத்துள்ளவர்கள் சிந்திக்க வேண்டும்.
 
மதம் மாறியவர்கள் கொல்லப்பட வேண்டும் என்பதற்கு குர்ஆனிலிருந்து எந்த ஒரு வசனத்தையும் முன் வைக்க முடியாதவர்கள் - கொல்லப்படுவதை மறுக்கும் வசனங்களையெல்லாம் கண்டுக் கொள்ளாமல் - ஹதீஸ்களின் பக்கம் திரும்பி "ஹதீஸ்களில் ஆதாரம் இருக்கின்றது" என்று தங்கள் வாதத்தை வைக்கத் துவங்கி விடுகின்றார்கள்.
 
 ஹதீஸ்களிலிருந்து ஒரு வாதத்தை நாம் எடுத்து வைக்குமுன் ஒன்றை மிக ஆழமாக நம் மனதில் பதித்துக் கொள்ள வேண்டும்.
 
நபி(ஸல்) அவர்கள், குர்ஆனை விளக்குவதற்கும், குர்ஆனாக வாழ்வதற்கும் தான் அனுப்பப்பட்டார்களே தவிர குர்ஆன் வேறு, தான் வேறு என்று வாழ்ந்துக் காட்டுவதற்காக அல்ல.    நபி(ஸல்) அவர்களின் வாழ்க்கை குர்ஆனாகவே இருந்தது என்று அவர்களின் மனைவி அன்னை ஆயிஷா(ரலி) அவர்களின் அறிவிப்பு "நபி(ஸல்) குர்ஆன் விளக்கவுரையாகவே வாழ்ந்துள்ளார்கள்" என்பதை ஐயத்திற்கிடமின்றி சொல்லி விடுகின்றது. எனவே குர்ஆனுக்கு முரண் பட்டு ஒரு கருத்தை நபி(ஸல்) சொல்லி இருப்பார்கள் என்று நாம் கற்பனைக் கூட செய்யக் கூடாது.
 
இஸ்லாத்தை விட்டு வெளியேறியவர்களைக் கொல்ல வேண்டும் என்பதை நபி(ஸல்) பொதுவான கருத்தாக வைத்திருக்க வாய்ப்பேயில்லை. ஏனெனில் அந்த கருத்தை குர்ஆன் அடியோடு மறுக்கின்றது. 
 
அப்படியானால் கொல்லப்பட வேண்டும் என்ற ஹதீஸின் நிலவரம் என்ன..?
 
பார்போம் இன்ஷா அல்லாஹ்.
.....................................
மதம் மாறினால் மரண தண்டனை பொது சட்டமா..? ஹதீஸ்களின் விளக்கம் என்ன..? - 5
 
இஸ்லாத்தை விட்டு வெளியேறியவர்கள் கொல்லப்பட வேண்டும் என்பது பொது சட்டமல்ல.  இஸ்லாத்தை விட்டு வெளியேறினால், இஸ்லாதத்தை விட்டு வெளியேறியதற்காக எந்த இஸ்லாமிய அரசாங்கமும் மரண தண்டனை விதிக்காது - விதிக்கக் கூடாது.
 
நபி(ஸல்) காலத்தில் இத்தகைய எந்த ஒரு சம்பவமும் நடக்கவில்லை.  அப்படியானால் தங்கள் மதத்தை மாற்றிக் கொண்டவர்களைக் கொல்லுங்கள் என்று ஹதீஸ் வந்துள்ளதே என்ற சந்தேகம் இப்போது மி்ச்சமிருக்கின்றது.
 
‏ابن عباس ‏ ‏فقال لو كنت أنا لم أحرقهم لنهي رسول الله ‏ ‏صلى الله عليه وسلم ‏ ‏لا تعذبوا بعذاب الله ولقتلتهم لقول رسول الله ‏ ‏صلى الله عليه وسلم ‏ ‏من
بدل دينه فاقتلوه
 
ஆன்லைனில் இந்த ஹதீஸை பார்க்க
 
''எவர் தன் மார்க்கத்தை மாற்றிக்கொள்கிறாரோ அவரைக் கொன்று விடுங்கள்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (இப்னு அப்பாஸ் - புகாரி)
........................................
 
‏قال رسول الله ‏ ‏صلى الله عليه وسلم ‏ ‏لا يحل دم امرئ مسلم يشهد أن لا إله إلا الله وأني رسول الله إلا بإحدى ثلاث ‏ ‏الثيب ‏ ‏الزاني والنفس بالنفس والتارك لدينه المفارق للجماعة
 
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
''அல்லாஹ்வைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு இறைவன் இல்லை. நான் அல்லாஹ்வின் தூதராவேன்'' என உறுதிமொழி கூறிய எந்த முஸ்லிமான மனிதரையும் மூன்று காரணங்களைத் தவிர வேறு எதற்காகவும் கொலை செய்ய அனுமதி இல்லை.
1. ஒரு மனிதரைக் கொலை செய்வதற்குப் பதிலாகக் கொலை செய்வது.
2. திருமணமாகியும் விபச்சாரம் செய்தவன்.
3. ஜமாஅத் எனும் சமூக கூட்டமைப்பை விட்டு வெளியேறி தமது மார்க்கத்தை கைவிட்டவன் (அப்தல்லாஹ்  - முஸ்லிம்)
 
(ஆன்லைனில் இந்த ஹதீஸின் மூலம்)  
 
.............................................
 
‏أن رسول الله ‏ ‏صلى الله عليه وسلم ‏ ‏قال ‏ ‏لا يحل دم امرئ مسلم إلا بإحدى ثلاث خصال زان ‏ ‏محصن ‏ ‏يرجم ‏ ‏أو رجل قتل رجلا متعمدا فيقتل أو رجل يخرج من الإسلام يحارب الله عز وجل ورسوله فيقتل أو يصلب أو ‏ ‏ينفى من الأرض
 
''மூன்று காரணங்களில் ஏதேனும் ஒன்றுக்காகவே தவிர, முஸ்லிமான மனிதரைக் கொல்வது ஆகுமானதல்ல. திருமணமாகியும் விபச்சாரம் செய்தவன் கல்லெறிந்து கொல்லப்படுவான். ஒருவரை வேண்டுமென்றேக் கொலை செய்தவன் கொல்லப்படுவான். இஸ்லாத்தை விட்டு வெளியேறி அல்லாஹ்விடத்திலும் அவனது தூதரிடத்திலும் போர் செய்தவன் கொல்லப்படுவான். அல்லது சிலுவையில் ஏற்றப்படுவான். அல்லது நாடு கடத்தப்படுவான். என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (ஆய்ஷா (ரலி) நஸயி)
 
இந்த ஹதீஸின் அரபு மூலம்  
 
...............................................
 
மதம் மாறியவர்களைக் கொல்ல வேண்டும் என்பதற்கு அந்தக் கருத்துள்ளவர்கள் பொதுவாக எடுத்துக் காட்டும் ஆதார்ஙகள் இவைதான். இந்த ஆதாரங்களை நாம் கவனமாக பரிசீலிக்க வேண்டும்.  ஹதீஸ் வாசகங்களைப் பொருத்தவரை ஒன்று இன்னொன்றுக்கு விளக்கவுரையாக அமையும் என்பதால் எல்லாவற்றையும் ஒருங்கிணைத்துதான் நாம் அதன் கருத்தையோ சட்டங்களையோ விளங்க வேண்டும்.
 
புகாரி, முஸ்லிமில் இருந்து நாம் எடுத்துக்காட்டியுள்ள ஹதீஸ் பொதுவாக இருந்தாலும் நஸயியில் வரும் ஹதீஸ் கூடுதல் விபரங்களைக் கொடுக்கின்றது.
 
//இஸ்லாத்தை விட்டு வெளியேறி அல்லாஹ்விடத்திலும் அவனது தூதரிடத்திலும் போர் செய்தவன் கொல்லப்படுவான். அல்லது சிலுவையில் ஏற்றப்படுவான். அல்லது நாடு கடத்தப்படுவான்//.
 
இஸ்லாத்தை விட்டு வெளியேறுவது மட்டும் ஒருவன் கொல்லப்படுவதற்கான விதியல்ல.  வெளியேறிய அவன் முஸ்லிம்களின் கூட்டமைப்புக்கு எதிராக (அதாவது ஆட்சி அதிகாரத்துக்கு எதிராக) செயல்பட்டு, குழப்பங்களை விளைவித்து, ஒருநாட்டின் இறையாண்மைக்கு எதிராக நடக்கும் போது, அப்போது பிடிப்பட்டாலே இந்த தண்டனை அவன் மீது விதிக்கப்படும்.  இதை தெளிவாக்கும் விதமாகவே "அல்லாஹ்விடத்திலும் அவன் தூதரிடத்திலும் போர் செய்பவன்" என்று நபி(ஸல்) குறிப்பிடுகிறார்கள்.
 
நாட்டின் இறையாண்மை காக்கப்பட வேண்டும் என்பது அரசியல் நிர்ணயம். அதற்கு எதிராக குழப்பம் செய்பவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என்பது உலகெங்கும் இருக்கும் நியதி.
 
இஸ்லாத்தை விட்டு வெளியேறுவதுமட்டுமில்லாமல் அங்கு குழப்பம் விளைவிக்க முயல்பவர்கள் குறித்தே மேற்கண்ட கட்டளைகள் வந்துள்ளன. 
 
மதம் மாறியவர்கள் அதற்காக கொல்லப்பட வேண்டும் என்பது சட்டமாக இருந்தால் நாடு கடத்தப்பட வேண்டும் (நஸயி)  என்று நபி(ஸல்) கூறி இருக்க மாட்டார்கள்.  நாடு கடத்தப்பட்டால் அவன் அங்கும் காஃபிராகத்தான் வாழ்வான். 
 
நாடு கடத்தப்படுதல் என்பதே பொதுவாக ஒரு நாட்டில் குழப்பம் விளைவிக்கும் முக்கியஸ்தர்கள் மீது எடுக்கப்படும் நடவடிக்கையாகும்.  "நாடுகடத்தப்பட வேண்டும்" என்று நபி(ஸல்) குறிப்பிட்டதிலிருந்து கொல்லப்பட வேண்டும் என்ற சட்டம் மதம் மாறியதற்காக அல்ல மாறாக மதம் மாறி உள்நாட்டில் குழப்பத்தை ஏற்படுத்துபவர்களுக்கே என்பது தெளிவாகின்றது. 
 
நீங்கள் ஒரு அமீருக்கு (அதிகாரம் உள்ளவருக்கு) கீழ் ஒருங்கிணைந்து கட்டுப்பட்டிருக்கும் போது அதில் குழப்பம் ஏற்படுத்த முனைபவர்களை - பிரிவினையை உருவாக்குபவர்களைக் கொல்லுங்கள் என்றும் பிறிதொரு அமீராக தன்னை அறிவிப்பவர்களில் பிந்தியவரை கொல்லுங்கள் என்றும் நபி(ஸல்) குறிப்பிட்டுள்ளார்கள்.
 
سمعت رسول الله ‏ ‏صلى الله عليه وسلم ‏ ‏يقول ‏ ‏من أتاكم وأمركم جميع على رجل واحد يريد أن ‏ ‏يشق عصاكم ‏ ‏أو يفرق جماعتكم فاقتلو
 
ஆன்லைனில் பார்க்க
 
 
قال رسول الله ‏ ‏صلى الله عليه وسلم ‏ ‏إذا ‏ ‏بويع ‏ ‏لخليفتين فاقتلوا الآخر منهما
 
ஆன்லைனில் பார்க்க 
 
ஹதீஸ்களை கவனமாக ஆராயும் போதும், அனைத்து ஹதீஸ்களையும் ஒருங்கிணைத்து சிந்திக்கும் போதும்  இந்த முடிவுக்கே நம்மால் வர முடிகின்றது.
 
குழப்பம் ஏற்படுத்துதல் என்று ஒன்று நடக்கவில்லை என்றால் அவரும் கொல்லப்பட வேண்டும் என்பதற்கு எந்த ஒரு ஆதாரமும் இல்லை. மாறாக அவர்கள் கொல்லப்படக் கூடாது என்பதற்கான குர்ஆன் வசனங்களை நாம் முந்தைய தொடர்களில் பார்த்தோம்.
 
குழப்பம் கொலையைவிட கொடியது.
 
குழப்பம் கொலையை விட பெரியது என்று குர்ஆன் தெளிவுபடுத்தியுள்ள போது குழப்பம் செய்பவர்கள் கொல்லப்பட வேண்டும் என்பது சாதாரண ஒன்றுதான் என்பதை விளங்கலாம்.
    குழப்பம் ஏற்படுத்தும் தனி மனிதனின் உயிரை விட நாட்டு மக்களின் நிம்மதியும்,  அமைதியும் முக்கியம் என்பதால், இஸ்லாமிய அரசுகள் இதை செயல்படுத்தும்.
 
அல்லாஹ் எல்லாவற்றையும் நுணுககமாக அறிபவன் என்பதை நம்புகிறோம்.
 
(குறிப்பு: இந்த தலைப்பு நிறைவுக்கு வருகின்றது.  இது குறித்த சந்தேகங்கள் மேலதிக விளக்கங்கள் இருந்தால் மட்டும் வாசகர்கள் எழுதுமாறு கேட்டுக் கொள்கிறோம்)

--
ஜி என்

Friday, August 22, 2008

நோன்பு - தலைப்பிறை

அன்பிற்கான சகோதரர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்.
காலம் முழுதும் உலகவாழ்க்கையையே குறிக்கோளாக கொண்டு உழன்றுகொண்டிருக்கும் மனிதர்களுக்கு மறுமை வாழ்க்கையை நினைவூட்டுவதற்காகவும், அங்கு வெற்றிப்பெறுவதற்காகவும் இறைவனால் முன்வைக்கப்பட்ட அமல்களில் ரமளானும் முக்கிய இடத்தை வகிக்கின்றது.
குர்ஆன் இறங்கிய மாதம் என்பதால் அந்த மாதத்தையும் குர்ஆன் இறங்கிய இரவு என்பதால் லைலதுல்கத்ர் இரவையும் இறைவன் மிகப் பெரிய அந்தஸ்த்துகளுடன் சிறப்பித்துள்ளான். அத்தகைய புனிதமாதத்தை நோக்கி நாம் மிக அருகில் சென்றுவிட்டோம்.

ரமளான் வந்து விட்டால் வழக்கம்போல முஸ்லிம்களிடம் பல சர்ச்சைகள் உருவாகி விடும் அதில் முதன்மையானது ரமளானை தீர்மானிக்கும் பிறை.
பிறை பார்த்து நோன்பை அடைவது உலகெங்கும் ஒரே நாளிலா, அந்தந்த நாடுகளுக்கா, அந்தந்தப் பகுதிகளுக்கா, மாநிலங்களுக்கு தனி பிறையா, லோக்களில் டவுன் ஹாஜிகளின் அறிவிப்பிலா, ஜமாஅத்துல் உலமா தீர்மானத்திலா என்று முஸ்லிம்களுக்கு மத்தியில் மாறுபட்ட கருத்துக்கள் எழும். நாம் எப்படி முடிவு செய்வது என்று அவசியம் பரிசீலிக்க வேண்டும். ஏனெனில் சில ஊர்களில் (நம்மூர் உட்பட) பலர் நோன்புடன் இருக்கும் போது பலர் பெருநாளில் இருக்கிறார்கள். பெருநாள் கொண்டாட்டங்களில் நோன்பு அல்லது நோன்பு நாளில் பெருநாள் கொண்டாட்டம். இது முறையா... இன்னும் சில ஊர்களில் மூன்று நாட்கள் பெருநாள் தொழுகை நடக்கின்றது. இது எந்த வகையில் நியாயம்?

வணக்க வழிபாடுகள் அனைத்திலும் ஒரே சீராக இயங்க வழிகாட்டும் இஸ்லாம் நோன்பில் மட்டும் வழிகாட்டவில்லை என்பது போல நாம் அலட்சியமாக இருக்கக் கூடாது. எனவே இது குறித்து ஒரு விவாதகளத்தை துவங்குவோம். ஆதாரங்களை அலசுவோம். எது சரியோ அதை நாமும் பின்பற்றி நம் குடும்பங்ளுக்கும் தெரிவிப்போம் என்ற அடிப்படையில் "ரமளான் பிறை"யை உங்கள் பார்வைக்கு வைக்கிறோம். அவசியம் உங்கள் கருத்துக்களைப் பதியுங்கள்.

فَمَن شَهِدَ مِنكُمُ الشَّهْرَ فَلْيَصُمْهُ

உங்களில் எவர் அந்த மாதத்தை அடைகிறாரோ அவர் நோன்பு வைக்கட்டும் (அல்குர்ஆன் 2:185)

ஒருமாதத்தின துவக்கம் முதல் பிறையில் தான் உள்ளது. பிறை பிறந்து அதை பார்த்து மாதத்தை அடைந்த பிறகும் எங்கள் பகுதியில் - எங்கள் நாட்டில் - தெரியவில்லை அதனால் நாங்கள் ரமளானை அடையவில்லை என்று சொல்ல முடியுமா...? முஸ்லிம்களில் ஒருவர் ரமளான் பிறை பார்த்து உறுதிபடுத்தி விட்டால் போதும் என்பது நபி(ஸல்) நமக்கு கற்றுக் கொடுத்துள்ள பாடம். அப்படி பார்த்து அறிவித்த பிறகும் நாம் மறுக்கிறோம் என்றால் இதை எப்படி எடுத்துக் கொள்வது? எனவே அந்த புனித மாதத்தின் ஒரு நாளையும் நாம் முன் பின் என்று ஆக்கி விடாமல் தேர்ந்தெடுப்பதற்கு பிறை குறித்து தீர்க்கமாக சிந்திக்க உங்களை அழைக்கிறோம். எதிர்கருத்தோ - ஆதரவு கருத்தோ - மேலதிக சந்தேகமோ எதுவாக இருந்தாலும் பதியுங்கள். -------------------------------------------------------------------------------- அஸ்ஸலாமுஅலைக்கும், ஜனாப் அபுதமீம் ஹாபிஸ் கலீமுல்லா உமரி மதனி அவர்கள் ஆய்வு நடத்தி ஒரே நாளில் உலகம் முழுவதும் ஒரே பிறையை ஏற்றுக்கொள்வது இயலாது என விளக்கிவுள்ளார்களே. தங்கள் விளக்கம் என்ன?அன்புடன்அன்சாரி.
--------------------------------------------------------------------------------
வஅலைக்குமுஸ்ஸலாம்.
பல சகோதரர்களும் அறிஞர்களும் அந்த "ஏற்றுக்கொள்ள முடியாது" என்ற கருத்தில் இருப்பதை நாமும் அறிவோம். இது விரிவாக அணுகி அலச வேண்டிய ஒன்றாகும். எதிர்கருத்துள்ளவர்கள் ஆன்லைனில் விவாதிக்க முன் வந்தால் இது குறித்து விளக்கலாம். அல்லது ஏற்றுக்கொள்ள முடியாது என்பதற்கான காரணத்தை நீங்கள் முன் வைத்தால் அதற்கான பதிலை பார்க்கலாம்.

ஒரே நேரத்தில் ஏற்றுக் கொள்ள முடியாது என்பதுதான் உண்மை. ஒரே நாளில் ஏற்றுக் கொள்ள முடியாது என்பது சரியல்ல. அந்தந்தப் பகுதியில் பிறைப் பார்க்க வேண்டும் என்பவர்களிடம் நாமும் கேள்விகளை வைப்போம். அப்போது அதன் சிக்கல், ஆதாரங்களுக்கு மாற்றமான நிலை விளங்கும்.
--------------------------------------------------------------------------------
எனக்கு பிறை சம்பந்தமாக சில சந்தேகங்கள் உண்டு அவைகள்:
1) "பிறை பார்த்து நோன்பு வையுங்கள், பிறை பார்த்து நோன்பை விடுங்கள்" என்பது ஹதீஸாக உள்ளது. டெலிபோன், சட்டேளிட் போன்ற நவீன கால தகவல் தொடர்பு சாதனங்கள் எதுவரை? நாம் நம் கண்களால் பிறை பார்த்து நோன்பு பிடிப்பது தானே சரியாக இருக்கும்?
2) உலகில் பிறை, காலம் முழுவதும் ஒரு குறிப்பிட்ட பகுதியில் தான் உதிக்குமா / உதிக்கிறதா?
3) அவ்வாறு உதிக்கும் பகுதி மாறுபடாது என்பது தெளிவானால் எந்த பகுதியில் முதல் பிறை பிறக்கிறது?
4) அவ்வாறு உதிக்கும் பகுதி மாறுபடும் என்கிற பட்சத்தில் அதனை நாம் எவ்வாறு அறிவது?
5) பிறை பார்த்தாகிவிட்டது என்று உலகில் எங்கு கூறப்பட்டாலும் அதனை நாம் எடுத்துக்கொள்ள வேண்டியது தானா?
அன்புடன் ஹபீப்
--------------------------------------------------------------------------------
அன்புச் சகோதரர் ஹபீப் அவர்களுக்கு வஅலைக்குமுஸ்ஸலாம்.
அல்லாஹ் உங்கள் ஆர்வத்தையும் - மார்க்க அறிவையும் அதிகப்படுத்துவானாக.

நீ்ங்கள் கேட்டுள்ள கேள்விகளுக்குரிய பதிலை வரிசையாகப் பார்ப்போம். முதல் கேள்வி மார்க்க அடிப்படையில் ஆய்வுச் செய்ய வேண்டியவையாகும். அதை விரிவாக பார்த்து விட்டு மற்ற கேள்விகளுக்கு செல்வோம். இன்ஷா அல்லாஹ்.

1) "பிறை பார்த்து நோன்பு வையுங்கள், பிறை பார்த்து நோன்பை விடுங்கள்" என்பது ஹதீஸாக உள்ளது. டெலிபோன், சட்டேளிட் போன்ற நவீன கால தகவல் தொடர்பு சாதனங்கள் எதுவரை? நாம் நம் கண்களால் பிறை பார்த்து நோன்பு பிடிப்பது தானே சரியாக இருக்கும்? ஹபீப்.

ஒரே தலைப்பிறையின் கீழ் முஸ்லிம் உம்மத் ஒன்றுப்பட வேண்டும் என்று நாம் கூறிவருகிறோம். அதற்கு வலுவான ஆதாரமே நீங்கள் குறிப்பிடும் ஹதீஸ்தான். ஆனால் அந்த ஹதீஸை சரியாக புரிந்துக் கொள்ளாதவர்கள் அந்தந்தப் பகுதிக்கு அந்த ஹதீஸை ஆதாரமாக்குகிறார்கள். ஹதீஸின் வாசகத்தைப் பார்த்து விட்டு தொடர்வோம்.

‏حدثنا ‏ ‏آدم ‏ ‏حدثنا ‏ ‏شعبة ‏ ‏حدثنا ‏ ‏الأسود بن قيس ‏ ‏حدثنا ‏ ‏سعيد بن عمرو ‏ ‏أنه سمع ‏ ‏ابن عمر ‏ ‏رضي الله عنهما ‏ ‏عن النبي ‏ ‏صلى الله عليه وسلم ‏ ‏أنه قال ‏ ‏إنا أمة أمية لا نكتب ولا نحسب الشهر هكذا وهكذا ‏ ‏يعني مرة تسعة وعشرين ومرة ثلاثين
http://hadith.al-islam.com/Display/Display.asp?Doc=0&Rec=3006

நாம் உம்மி சமுதாயமாவோம். எழுதுவதை அறிய மாட்டோம்; விண் கலையையும் அறிய மாட்டோம். மாதம் என்பது இப்படியும் அப்படியும் இருக்கும்; அதாவது சில வேளை இருபத்தொன்பது நாள்களாகவும் சில வேளை முப்பது நாள்களாகவும் இருக்கும்!" என்று நபி(ஸல்) குறிப்பிட்டுள்ளார்கள். (புகாரி)இந்த ஹதீஸையும் அடுத்த ஹதீஸையும் கவனத்தில் கொண்டு தொடருங்கள்.

‏حدثنا ‏ ‏آدم ‏ ‏حدثنا ‏ ‏شعبة ‏ ‏حدثنا ‏ ‏محمد بن زياد ‏ ‏قال سمعت ‏ ‏أبا هريرة ‏ ‏رضي الله عنه ‏ ‏يقول ‏ ‏قال النبي ‏ ‏صلى الله عليه وسلم ‏ ‏أو قال قال ‏ ‏أبو القاسم ‏ ‏صلى الله عليه وسلم ‏ ‏صوموا لرؤيته وأفطروا لرؤيته فإن ‏ ‏غبي ‏ ‏عليكم فأكملوا عدة شعبان ثلاثين
http://hadith.al-islam.com/Display/Display.asp?Doc=0&Rec=3000

"பிறையைப் பார்த்து நோன்பு வையுங்கள்; பிறையைப் பார்த்து நோன்பு விடுங்கள்! உங்களுக்கு மேக மூட்டம் தென்பட்டால் ஷஅபான் மாதத்தை முப்பது நாள்களாக முழுமைப் படுத்துங்கள் என்று நபி(ஸல்) கூறியுள்ளார்கள். (புகாரி உட்பட பல நூல்களில் இந்த செய்தி பதியப்பட்டுள்ளது).

முதல் செய்தியில் நபி(ஸல்) முக்கிய தகவலை கொடுத்துள்ளார்கள். அதாவது அவர்களின் சமுதாயம் எழுதப்படிக்கத் தெரியாத - பாமர - சமுதாயம். அந்த சமுதாயத்திற்கு விஞ்ஞானம் பற்றிய தெளிவோ விண்கலையை ஆய்வு செய்யும் திறனோ கிடையாது. அதனால் மாதத்தை இருபத்தி ஒன்பதாகவோ - முப்பதாகவோ முடிவு செய்துக் கொள்ள வேண்டியதுதான்.

ரமளான் பற்றிய பாடத்தில் புகாரி இமாம் இந்த ஹதீஸை பதிவு செய்துள்ளார்கள். 'நமக்கு விண்கலைப் பற்றிய அறிவு கிடையாது" என்று நபி(ஸல்) குறிப்பிட்டுள்ளதிலிருந்து விண்கலைப் பற்றிய அறிவு பெற்றவர்கள் வருவார்கள் அவர்களின் துள்ளியமான ஆய்வை - அறிவை ஏற்கலாம் என்பதை தெளிவுபடுத்தியுள்ளார்கள். இல்லையென்றால் ரமளான் மாதம் பற்றி பேசும் போது விண்கலை அறிவு பற்றி குறிப்பிட வேண்டும் என்கிற அவசியமில்லை. பிறை கண்டு ரமளானை தீர்மானிக்கும் விஷயத்தில் நபி(ஸல்) தகுந்த இடத்தில் விண்கலையைப் பற்றி பேசியுள்ளார்கள் என்பதிலிருந்து அவர்களுக்கு பிறகு வளர்ந்து வரும் விண்ணாய்வுக்கு அவர்கள் வழிகாட்டி சென்றுள்ளார்கள் என்பது தெளிவாக விளங்குகின்றது.

அடுத்து பிறைப் பார்த்து நோன்பு வையுங்கள் பிறைப் பார்த்து நோன்பை விடுங்கள் என்ற எந்த ஒரு ஹதீஸிலும் 'கண்களால் பிறைப் பார்க்க வேண்டும்' என்ற பதம் வரவேயில்லை. பிறைக் கண்டு - பார்த்து நோன்பு வையுங்கள் என்றே நபி(ஸல்) குறிப்பிட்டுள்ளார்கள். அப்போதைய மக்களுக்கு கண்களால் பார்ப்பது மட்டுமே தீர்வாக இருந்தது. வேறு வழியொன்றும் இல்லை. அதனால் அவர்கள் கண்களால் பார்த்து தீர்மானித்தார்கள். கண்களால் பார்க்க முடியாத சந்தர்பங்களில் மாதத்தை முப்பதாக பூர்த்தி செய்துக் கொண்டார்கள். அவ்வளவுதான். கண்களால் பார்க்க வேண்டும் என்ற கட்டளை எதுவுமில்லை. நாம் இப்படி சொன்னவுடன் யாராவது அந்த ஹதீஸில் இடம் பெறும் அரபு வார்த்தையை எடுத்துக் காட்டி 'கண்களால் பார்க்க வேண்டும்' என்று வாதிக்கலாம்.

"ருஃயதஹு" என்ற பதம் சம்பந்தப்பட்ட ஹதீஸ்களில் வருகின்றன. 'அதைப் பார்த்து' " என்பது அதன் பொருள். எனவே பார்க்கத்தான் வேண்டும் என்று வாதிக்கலாம். ருஃயத் என்ற அரபி பதம் விரிந்த பொருட்களை உள்ளடக்கியதாகும். பார்த்தல், ஆய்வு செய்தல், கேட்டறிதல் போன்ற பொருள்கள் இந்த பதத்திற்கும் இதன் துணைப்பதங்களுக்கும் உண்டு. இதைப் புரிந்துக் கொள்வதற்கு மிகப் பெரும் ஆராய்சி எதுவும் தேவையில்லை. எல்லோரும் அறிந்த குர்ஆனின் ஒரு அத்தியாயத்தி்ன் துவக்க வசனத்திலிருந்தே இதை விளக்கி விடலாம்.

யானை அத்தியாயம் என்று பெயர் பெற்ற சூரத்து ஃபீல் என்ற அத்தியாயத்தின் ஆரம்ப வசனத்தை இறைவன் இவ்வாறு ஆரம்பிக்கிறான்.

أَلَمْ تَرَ كَيْفَ فَعَلَ رَبُّكَ بِأَصْحَابِ الْفِيلِ

யானை(ப் படை)க் காரர்களை உம் இறைவன் என்ன செய்தான் என்பதை நீர் பார்க்கவில்லையா? ( அல்குர்ஆன் 105:1)

கஃபாவை அழிக்க வந்த யானை படையினரை அல்லாஹ் அழித்த விபரத்தை இங்கு சுட்டிக்காட்டி (நபியே) நீர் பார்க்கவில்லையா..? என்று கேட்கிறான். "பார்க்கவில்லையா" என்று மொழி பெயர்க்கும் இடத்தில் 'தர' என்ற பதம் வருகின்றது. ருஃயத் பதத்தை சேர்ந்த பதம் தான் இது. இந்த வசனத்திற்கு 'பார்க்கவில்லையா" என்று பொருள் கொள்ளவே முடியாது. ஏனெனில் நபி(ஸல்) பிறப்பதற்கு முன்பே யானைப்படையினர் அழிக்கப்பட்டு விட்டனர். அழிக்கப்பட்டப்பின் பிறந்து, நாற்பது வயதை கடந்த பின் நபி(ஸல்) அவர்களிடம் இறைவன் இப்படி கேட்கிறான் என்றால் 'பார்க்கவில்லையா" என்ற அர்த்தத்தில் கேட்கவில்லை. அறியவில்லையா, செய்தி கிடைக்கவில்லையா என்ற அர்த்தத்தில் தான் அந்த பதத்தை பயன்படுத்துகிறான்.

எனவே நோன்பு பற்றி வரும் அந்த ஹதீஸுக்கு பிறையை பார்த்து - அறிந்து நோன்பு வையுங்கள். பிறையை பார்த்து - அறிந்து நோன்பை விடுங்கள் என்பதே சரியான பொருளாகும். பார்க்கவோ, அறியவோ முடியாத சந்தர்பங்களி்ல் முந்தைய மாதமான ஷஃபானை 30 நாட்கள் என்று கணக்கிட்டுக் கொள்ள வேண்டியதுதான்.

வானவியலைப்பற்றி நபி(ஸல்) அன்றைக்கே குறிப்பிட்டுள்ளதாலும், கண்களால் பார்க்க வேண்டும் என்ற கட்டளை வராததாலும் அந்தந்தப் பகுதியில் பிறைப் பார்க்க வேண்டும் என்ற வாதம் ஆதாரமற்றுப் போய் விடுகின்றது. பிறை செய்தி கிடைத்தால் அதை ஏற்று நோன்பை துவங்கி விட வேண்டும் என்பதே முஸ்லிம்களை ஐக்கியப்படுத்தும் சரியான முடிவாக இருக்க முடியும். (அல்லாஹ் மிக்க அறிந்தவன்)

ஒரு பிறையையே அனைவரும் கடைபிடிக்க வேண்டும் என்பதற்குரிய அழுத்தமான அடுத்த ஆதாரத்தை பார்த்து விட்டு மற்றக் கேள்விகளுக்கு நகர்வோம். இன்ஷா அல்லாஹ்.
--------------------------------------------------------------------------------
ஒவ்வொரு மாதத்திற்கும் தலைப்பிறை ஒன்றுதான்
அன்புச் சகோதரர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்.

ரமளான் பிறையின் கருத்து வேறுபாட்டை களைந்து முஸ்லிம் சமுதாயத்தில் ஏற்பட்டு நீடிக்கும் இரண்டு, மூன்று நாட்கள வித்தியாசத்தில் நோன்பு - நோன்புப் பெருநாள் என்ற நிலை தவறு என்பதை புரிநதுக் கொள்ள வேண்டும் என்பதற்காக அது பற்றி பேசி வருகிறோம். இந்த வருட ரமளானில் முதல் பிறை அறிவிக்கப்பட்டவுடன், "இது நம்மை கட்டுப்படுத்தாது" என்று அலட்சியமாக இருந்து விடாமல் நாம் நம் குடும்பங்களுக்கும் நமக்கு தெரிந்தவர்களுக்கும் பிறை அறிவிப்பை எத்தி வைத்து நோன்பு பிடிக்க சொல்ல வேண்டும். முந்தைய பதிவில் இதற்கான ஆதாரத்தை ஓரளவு கண்டோம். இப்போது தலைப்பிறை ஒன்றுதான் என்பதற்கான அடுத்த வலுவான ஆதாரத்தைக் காண்போம்.

فَمَن شَهِدَ مِنكُمُ الشَّهْرَ فَلْيَصُمْهُ

உங்களில் எவர் அந்த மாதத்தை அடைகிறாரோ அவர் நோன்பு வைக்கட்டும் (அல்குர்ஆன் 2:185)

இந்த வசனத்தில் "மாதத்தை அடைகின்றாரோ" என்று இறைவன் குறிப்பிடுவதிலிருந்து எல்லோராலும் ஒரே நேரத்தில் மாதத்தை அடைய முடியாது என்று விளங்கலாம். உதாரணமாக சவுதியில் இரவு 6 மணிக்கு பிறை தெரிகின்றது என்று வைத்துக் கொள்வோம். இதே நேரத்தில் சவுதி அரேபியாவுக்கு கீழுள்ள கீழ் திசை நாடுகள் இரவின் உள்ளே சென்று விடும். இந்தியா 8.30 அடைந்திருக்கும். அதே போன்று சவுதிக்கு மேல்திசை நாடுகள் பகல் பொழுதிலும் இரவை நெருங்கியும் வந்துக் கொண்டிருக்கும். எனவே சவுதியில் பிறை தெரியும் போது அவர்கள் மட்டும் தான் அந்த நேரத்தில் அந்த மாதத்தை அடைகிறார்கள். இப்போது சவுதிக்கு 2 மணி நேரத்துக்கு முன் இரவை அடைந்த நாம் (இந்தியா) அந்த மாதத்தை அடைந்து விட்டோமா இல்லையா....? இந்தக் கேள்வியை முக்கியமாக கவனத்தில் கொண்டு தொடருங்கள்.

உங்களில் எவர் அந்த மாதத்தை அடைகிறாரோ அவர் நோன்பு வைக்கட்டும். என்ற வசன அடிப்படையில் மாதத்தை அடைந்தவர்கள் இரவில் தான் நோன்பு வைக்கப்பட வேண்டும். அதாவது இரவு 6 மணி முதல் நோன்பை துவங்க வேண்டும். ஆனால் யாரும் அப்படி செய்வதில்லை. 6 மணிக்கு பிறை தெரிந்தாலும் அன்று காலை வரை பொருத்திருந்து 5 மணிக்கு தான் முதல் நோன்பின் உள்ளே செல்கிறோம். இந்த இடைப்பட்ட நீண்ட பொழுதின் அர்த்தம் என்ன? என்பதை சற்று சிந்தித்துக் கொண்டு கீழுள்ள குர்ஆன் வசனத்தை அணுகுங்கள்.

يَسْأَلُونَكَ عَنِ الأهِلَّةِ قُلْ هِيَ مَوَاقِيتُ لِلنَّاسِ وَالْحَجِّ وَلَيْسَ الْبِرُّ بِأَنْ تَأْتُوْاْ الْبُيُوتَ مِن ظُهُورِهَا وَلَـكِنَّ الْبِرَّ مَنِ اتَّقَى وَأْتُواْ الْبُيُوتَ مِنْ أَبْوَابِهَا وَاتَّقُواْ اللّهَ لَعَلَّكُمْ تُفْلِحُونَ
பிறைகளைப் பற்றி (நபியே!) உம்மிடம் கேட்கின்றனர். ''அவை மக்களுக்கு காலம் காட்டுகின்றது, ஹஜ்ஜை அறிவிக்கின்றது'' எனக் கூறுவீராக! வீடுகளுக்குள் அதன், பின் வழியாக வருவது நன்மை அன்று. (இறைவனை) அஞ்சுவதே நன்மை. எனவே வீடுகளுக்கு வாசல்கள் வழியாகவே செல்லுங்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள். இதனால் வெற்றி பெறுவீர்கள். (அல்குர்ஆன் 2:189)

இந்த வசனத்தில் இறைவன் "பிறை மக்களுக்கு காலம் காட்டுகின்றது - ஹஜ்ஜை அறிவிக்கின்றது" என்று இரண்டு கருத்துக்களை தெளிவு படுத்தியுள்ளான். ஹஜ்ஜை அறிவிக்கும் அதே பிறைத்தான் நோன்பையும் அறிவிக்கின்றது. (ஆனால் நாம் ஹஜ்ஜுக்கு ஒரு பிறை - நோன்புக்கு ஒரு பிறை என்று வேறுபடுத்துகிறோம். இதை ஒருபக்கம் வைப்போம்)

இறைவன் பிறைப்பற்றி சுட்டிக்காட்டி விட்டு "வீடுகளுக்கு அதன் முன் வாசல் வழியாக வாருங்கள். பின் வாசல் வழியாக வருவது நன்மையல்ல" என்ற செய்தியையும் சொல்கிறான். (அரபுகளிடம் இருந்த ஒரு மூட பழக்கதை இது சுட்டிக் காட்டினாலும்) அதில் பிரிதொரு முக்கிய சட்டமும் உள்ளது. ரமளானை வீடு என்று உவமையாகக் கொண்டால் அதன் வாசல் என்பது முதல் ஸஹர் தான். வாசல் வழியாக உள்ளே நுழையுங்கள் என்ற கட்டளைப்படி சவுதியில் பிறைத்தெரிந்தாலும் நாம் தான் முதலில் ஸஹர் செய்து ரமளான் உள்ளே செல்ல வேண்டும். சவுதியில் பிறைத் தெரிந்த பிறகு அவர்களுக்கு முற்பகுதியில் உள்ள நாம் நோன்பைத் துவங்காமல் அவர்களை சுற்றி வந்து அடுத்த நாள் நோன்பைத் துவங்குகிறோம் என்றால் வீடுகளுக்கு பின் வழியாக நுழைவதாகின்றது. பின் வழியாக உள்ளே நுழைவது நன்மையில்லை என்ற இறைவனின் வசனத்தை நாம் கணக்கில் எடுத்துக் கொண்டு அஞ்சினால் பிறை செய்தி கிடைத்தவுடன் முதல் ஸஹருக்கு தயாராகி விடலாம்.

இதை இன்னும் வலுபடுத்தும வசனத்தையும் பார்ப்போம்.

رَبُّ الْمَشْرِقَيْنِ وَرَبُّ الْمَغْرِبَيْنِ

இரு கீழ்திசைகளுக்கும் இறைவன் அவனே, இரு மேல்திசைகளுக்கும் இறைவன் அவனே (அல்குர்ஆன் 55:17)

இரு கீழ் திசைகளும் மேல்திசைகளும் பூமியிலிருக்கும் என்ற பேருண்மையை அன்றைக்கு அறிவித்த குர்ஆனில் பிறைத் தெரிந்த பிறகு அதன் கீழ் திசை - மேல் திசை நாடுகள் என்னவென்று பார்க்க வேண்டும் சவுதியில் பிறை கண்டால் - தெரிந்தால் - கணித்தால் அதன் கீழ் திசை நாடுகளில் நாம் வந்து விடுவோம். கீழ்திசை என்று இறைவன் குறிப்பிடுவதிலிருந்து பிறைத் தெரிந்து விடியும் வரை உள்ள இரவு நாடுகள் அனைத்தும் அந்த பிறைக்கு உட்பட்டு விடுகின்றது என்ற முக்கிய செய்தியை இறைவன் சுட்டிக்காட்டியுள்ளான்.

எனவே இதுவரைப் பார்த்த ஆதாரங்களின் அடிப்படையில் தலைப்பிறை உலகிற்கு ஒரே பிறைத்தான் என்பதை விளங்கலாம்.

ரமளானை அறிவிக்க பிறை பிறந்து விட்ட பிறகும் நாம் வகுத்துக் கொண்ட பூமியின் எல்லைக் கோடுகளை காரணம் காட்டி 'இது எங்களுக்குரிய பிறையல்ல" என்று ஒதுங்குவது மார்க்க அடிப்படையில் சரிதானா என்பதை நாம் சிந்திக்க வேண்டும்.

பிறை பிறந்து ரமளான் அறிவிக்ப்பட்டு விட்ட பிறகும், வெட்கப்பட்டு கொண்டு அல்லது ஊரோடு ஒத்துபோவோம் என்ற பலவீனமான எண்ணத்தில் அல்லாஹ் அறிவித்த ரமளானை நாம் அலட்சியப்படுத்தினால் குற்றவாளியாகி விடுவோம். இந்த அலட்சியம் பெருநாள் தினத்தில் நோன்பு வைக்கக் கூடாது என்ற நபி(ஸல்) அவர்களின் எச்சரிக்கையையும் புறக்கணிக்க வைக்கும் என்பதை அஞ்சி தலைப்பிறைக் குறித்து முடிவு செய்யுமாறு உங்கள் அனைவரையும் அன்புடன் கேட்டுக் கொள்கிறோம்.
(இது குறித்து ஐயம் இருந்தால் எழுதுங்கள்)
இனி சகோதரர் ஹபீபின் அடுத்தக் கேள்விக்கு நகர்வோம். இன்ஷா அல்லாஹ்.
--------------------------------------------------------------------------------
சகோதரர் ஹபீப் அவர்களின் அடுத்தக் கேள்விகளை காண்போம்.
2) உலகில் பிறை, காலம் முழுவதும் ஒரு குறிப்பிட்ட பகுதியில் தான் உதிக்குமா / உதிக்கிறதா?
3) அவ்வாறு உதிக்கும் பகுதி மாறுபடாது என்பது தெளிவானால் எந்த பகுதியில் முதல் பிறை பிறக்கிறது?
4) அவ்வாறு உதிக்கும் பகுதி மாறுபடும் என்கிற பட்சத்தில் அதனை நாம் எவ்வாறு அறிவது? "ஹபீப்"

وَالْقَمَرَ قَدَّرْنَاهُ مَنَازِلَ حَتَّى عَادَ كَالْعُرْجُونِ الْقَدِيمِ

சந்திரனுக்கு நாம் பல மன்ஸில்களை (நிலைகளை) ஏற்படுத்தியிருக்கின்றோம். பழைய பேரீத்த மட்டையைப் போலாகின்றது (36:39)

இந்த வசனம் சந்திரனுக்கென்று ஒரு குறிப்பிட்ட (மாறுபட்ட) நிலைகள் உள்ளன என்பதை அறிவிக்கின்றது. வருடத்தில் சந்திர ஆண்டு சூரிய ஆண்டைவிட 11 நாட்கள் குறைவதால் அமவாசைக்கு பிறகுள்ள முதல் பிறை எப்போதும் ஒரே இடத்தில் தோன்றாது. ஒரே இடத்தில் தோன்றும் என்று விஞ்ஞானமும் சொல்லவில்லை.

அது மாறுபட்ட பகுதிகளில் தோன்றும் என்பதால் குறிப்பிட்ட பகுதியை முதல் பிறைக்கான அடையாளமாக்க முடியாது என்பதை விளங்கலாம். அது எங்கு தெரிகின்றது என்பது முக்கியமல்ல. பூமியின் எல்லைகள் என்பது நமது நிர்வாக வசதிக்காக நாம் வகுத்துக் கொண்டதாகும். இந்த எல்லைகள் மனிதனால் பன்னெடுங்காலமாக மாற்றங்களுக்குள்ளாக்கப்பட்டு வருகின்றன. எனவே எல்லைகளை கருத்தில் கொள்வது சந்திரனை தீர்மானிக்கும் அளவுகோலாக்க முடியாது.

அமவாசைக்கு அடுத்து முதல் பிறை பிறந்து விட்டது என்பதே நாட்களை தீர்மானிக்கும் அளவாக எடுக்க வேண்டும்.

உதிக்கும் பகுதி மாறுபடும் என்கிற பட்சத்தில் அதனை நாம் எவ்வாறு அறிவது? "ஹபீப்"

நாம் நேரடியாக அறிவதற்கும் அறிந்தவர்கள் சொல்லும் நம்பகமான தகவல்களை ஏற்பதற்கும் வித்தியாம் ஒன்றுமில்லை. விண்ணியலைப் பொருத்தவரை நாம் (அதாவது ஒவ்வொருவரும்) நேரடியாக அறிந்தே - கண்டபிறகே அமல்களை செய்ய வேண்டும் என்ற எந்த கட்டளையும் இஸ்லாத்தில் இல்லை. நம்பகமானவர்களால் தீர்மானிக்கப்பட்ட விண்ணியல் - புவியியல் கருத்தோட்டங்களை உலகம் ஏற்றுக் கொண்டுள்ளது. நாமும் அந்த நிலையில் தான் இருக்கிறோம். பிறை மாறுபட்ட பகுதிகளில் தோன்றும் என்பது விஞ்ஞான உண்மை. அதைக் காணவும் - தீர்மானிக்கவும் பல நாடுகள் முயல்கின்றன. (கூடுதல் கவனத்தை சவுதி மேற்கொள்கின்றது. - ஹஜ்ஜுக்கு இவர்கள் வழிகாட்ட வேண்டும் என்பதால் இந்த கூடுதல் கவனம்) அவர்கள் அறிவிக்கும் நேரத்தில் முதல் பிறை என்று தீர்மானித்து நம் அமல்களைத் தொடங்கி விட வேண்டியததான்.

பிறை பார்த்தாகிவிட்டது என்று உலகில் எங்கு கூறப்பட்டாலும் அதனை நாம் எடுத்துக்கொள்ள வேண்டியது தானா? ஹபீப்

அமவாசைக்கு அடுத்த பூமியின் எந்தப்பகுதியில் தெரியும் பிறையாக இருந்தாலும் அதுவே அந்த மாதத்திற்கான முதல் பிறையாகும். பூமி அமைப்பில் நேரங்கள் மட்டும் தான் வித்தியாசப்படும். நாள் வித்தியாசப்பட வாய்ப்பே இல்லை என்பதால் தகவல் எங்கிருந்து கிடைத்தாலும் அதை பின்பற்றத்தான் வேண்டும். அதை நாம் புறக்கணித்தால் இதுவரை நாம் எடுத்துக் காட்டியுள்ள (முந்தைய பதிவுகள்) ஆதாரங்களுக்கு மாறுபட்டு நிர்ப்போம்.

அந்ததந்தப் பகுதியில் பிறை தெரியவேண்டும் என்போரின் வாதத்தில் ஏராளமான பலவீனங்கள் கொட்டிக் கிடக்கின்றன. தலைப்பிறைக் குறித்த ஆதாரங்களே போதுமானதாக இருப்பதால் நாம் அந்தப்பகுதிக்கு செல்லவில்லை.

நாம் எடுத்து வைத்துள்ள ஆதாரங்களில் - வாதங்களில் மாற்றுக்கருத்து இருந்தால் எதிர் ஆதாரங்கள் இருந்தால் எழுதுங்கள். இன்னும் கூடுதல் தகவல்களை பரிமாறலாம்
--------------------------------------------------------------------------------
ஆனால் நாட்டுக்கு ஒரு பிறை என்ற முறையில் அவர்கள் எடுத்து வைக்கும் வாதம் தான் என்ன.? இதில் இந்தியாவில் டெல்லி, கேரளா ,தமிழ் நாடு என்று மூன்று மாநிலம் கலம் தனி தனி யாக (நோன்பை ) எடுத்த வரலாறும் உண்டு. ஊருக்கு ஒரு பெருநாள் தொழுகை நடந்த நிகழ்ச்சியும் உண்டு. சில ஊர்களில் மூன்றாம் பிறையை முதல் பிறையாக கணித்து நோன்பு நோற்ற சம்பவங்களும் உண்டு.

இதை அரசியல் / கவர்மெண்டு காக அப்படியே ஏற்கிறார் கலா ? (காரணம் இன்று பெருநாள் என்று காலண்டரில் ஒரு வருடத்திற்கு முன்பே விடுமுறை யை அறிவித்து விடுகிறார்கள். அதை ஏன் மாற்ற வேண்டும் என்று கவர்மெண்டு சொல்லுவதால் அதையே அப்படியே அறிவிப்பு செய்து விடுகிறார்களா ?.) இல்லை என்றால், அவர்கள் ஒவ்வரு நாட்டிலும் பிறை பார்க்கும் போதுதான் , அதை வைத்துதான் நோன்பு நோற்க வேண்டும் என்று சொல்லும் அவர்களின் வாதத்தை தங்களால் விளக்க முடியுமா ? மேலும் சிலோன் நாட்டில் பிறை தென்பட்டால் நோன்பு எடுக்கும் இவர்கள் ( தற்போது கேரளாவில் தெரிந்தால் எடுக்க மாட்டார்கள்). சவுதி அரேபியா வில் தென்பட்டு அறி வித்து விட்ட பிறகும் , நோன்பு வைக்க மறுப்பது ஏன்.? சற்றே விபரமாக விளக்கவும். அவர்களின் வாதத்தையும் அறிய ஆவல்.
செய்யத்
--------------------------------------------------------------------------------
அஸ்ஸலாமு அலைக்கும்.
// உங்களில் எவர் அந்த மாதத்தை அடைகிறாரோ அவர் நோன்பு வைக்கட்டும். என்ற வசன அடிப்படையில் மாதத்தை அடைந்தவர்கள் இரவில் தான் நோன்பு வைக்கப்பட வேண்டும். அதாவது இரவு 6 மணி முதல் நோன்பை துவங்க வேண்டும். ஆனால் யாரும் அப்படி செய்வதில்லை. 6 மணிக்கு பிறை தெரிந்தாலும் அன்று காலை வரை பொருத்திருந்து 5 மணிக்கு தான் முதல் நோன்பின் உள்ளே செல்கிறோம். இந்த இடைப்பட்ட நீண்ட பொழுதின் அர்த்தம் என்ன? என்பதை சற்று சிந்தித்துக் கொண்டு கீழுள்ள குர்ஆன் வசனத்தை அணுகுங்கள் //

6 - 7 மணிக்கு பிறை தெரிந்து அந்த புனிதமிக்க ரமளானை அடைந்தாலும்" ஸஹருடைய நேரத்தை அடைந்து உணவு உண்டு வானம் கருப்பு கோட்டிலிருந்து வெள்ளை கோட்டிற்கு வரும்முன் நோன்பை ஆரம்பிப்பது தானே நபி வழி? அப்படி இருக்க இந்த வாதம் ஏற்புடையதாக இல்லை.
மற்றும்

ஷேய்க் இப்னு உத்தைமீன், ஷேய்க் அல் இஸ்லாம் இப்னு தைமியா போன்ற ஹதீஸ் கலை வல்லுனர்களும் அந்த அந்த நாட்டின் பிறை தெரிவதை வைத்தே நோன்பு நோற்பதும் விடுவதும் ஆகும் என்று கருத்து கூறியுள்ளார்களே ? சகோதரர் தல்பாதர்
http://www.islam-qa.com/en/ref/40720
--------------------------------------------------------------------------------
வஅலைக்குமுஸ்ஸலாம்.
முதலில் சகோதரர் தல்பாதர் அவர்களி்ன் பதிவிற்கான விளக்கத்தைப் பார்த்து விட்டு சகோதரர் செய்யத் முன் வைத்துள்ள கேள்விகளுக்கு வருவோம்.
இரவில் நாம் மாதத்தை அடைந்துவிடுகிறோம். 2:185 வது வசனப்படி மாதத்தை அடைந்தவர் நோன்பு வைக்க வேண்டும். மாதத்தை அடைந்தவர் நோன்பு வைக்கட்டும் என்று சொல்லும் ரப்புல் ஆளமீன் அடுத்த வசனத்தில் ' கருப்பு நூலிலிருந்து வெள்ளை நூல் தெளிவாக தெரியும் வரை உண்ணுங்கள் குடியுங்கள்" என்கிறான்.

இப்போது சிந்திக்க வேண்டிய விஷயம் என்னவென்றால் மாதத்தை அடைந்த பின்பும் உடனடியாக நோன்பைத் துவக்காமல் ஒரு நீண்ட ஏறத்தாழ 10.30 முதல் 11 மணி நேரம் இடைவெளிக்கு பிறகே முதல் நோன்பின் உள்ளே நுழையும் ஏற்பாட்டை இறைவன் செய்துள்ளான். இறைவன் செய்துள்ள இந்த ஏற்பாட்டின் அர்த்தம் என்னவென்பதே நமது கேள்வி.

பிறைத் தெரிந்தவுடன் நோன்பு துவங்குவது கட்டளையாக இருந்தால் 'சவுதியில் பிறை தெரிந்து அவர்கள் நோன்பைத் துவங்கி விட்டார்கள். நாங்கள் பிறைப் பார்க்காமல் கடந்து விட்டதால் எங்களால் நோன்பை துவக்க முடியாது' என்று கீழ் திசை நாட்டுக்காரர்கள் சொல்வதில் ஒரு அர்த்தம் இருக்கும். ஒரு பகுதியில் பிறைத் தெரிந்த பின்பும் அதிலிருந்து 11 மணிநேரம் கழித்து நோன்பின் உள்ளே செல்லும் ஏற்பாட்டை இறைவன் செய்ததிலிருந்து பிறை தெரிநத பகுதியிலிருந்து அதற்கு கீழ் திசை நாட்டவர்கள் அனைவரும் அந்தப் பிறைக்குள்ளே வந்து விடுவார்கள். அவர்கள் ஸஹர் செய்து நோன்பை துவங்கலாம் என்ற ஹிக்மத் அதில் பொதிந்துள்ளதையே நாம் சுட்டிக்காட்டினோம். இந்த வாதத்துடன் நாம் வைத்துள்ள இதர ஆதாரங்களையும் வாதங்களையும் கவனமாக ஆராயுங்கள்.

ஸாலிஹல் உதைமீன் போன்ற நல்லறிஞர்கள் உட்பட இன்னும் பலரும் அந்தந்தப்பகுதியில் பிறை பார்த்து நோன்பு வைக்கலாம் என்ற கருத்தை முன் வைத்துள்ளார்கள் என்பதை நாமும் அறிவோம். யார் எந்த கருத்தை சொல்லியுள்ளார்கள் என்பது முக்கியமல்ல. எந்த ஆதார அடிப்படையில் சொல்கிறார்கள் என்பதுதான் முக்கியம்.

அந்தந்தப்பகுதியில் தான் பிறை பார்க்க வேண்டும் அதுதான் இஸ்லாமிய சட்டம் என்று யாராவது வாதிட்டால் அவர்கள் அதற்கான ஆதாரத்தை முன் வைக்க வேண்டும்.

நாமறிந்தவரை, இது தரப்பு வாதங்களையும் பரிசீலித்த வரை, அந்தந்தப்பகுதியில் பிறைப் பார்க்க வேண்டும் என்பதை விட உலகெங்கும் ஒரே பிறைதான் என்ற வாதமும் அதற்கான ஆதாரங்களுமே தெளிவாகவும், ஏற்புடையதாகவும் உள்ளது. அதையே உங்கள் பார்வைக்கு வைத்து வருகிறோம்.

இனி சகோதரர் செய்யத் அவர்களின் சந்தேகத்தை எடுத்துக் கொள்வோம்.
இந்தியாவில் பிறையை தீர்மானிப்பதில் வருடந்தோரும் ஏற்படும் உள்நாட்டுக் குளறுபடிகளை ஒரு பக்கம் வைத்து விட்டு, அந்தந்தப்பகுதியில் பிறைப் பார்க்க வேண்டும் என்பவர்கள் என்ன வாதங்களை வைக்கிறார்கள் அது ஏற்புடையதாக உள்ளதா.. என்பதை காண்போம்.

அந்தந்தப்பகுதியில் பிறைப்பார்க்க வேண்டும் என்பவர்களின் இரண்டு வாதங்களே முக்கியமானதும் முழுமையானதுமாகும்.

1) உங்களில் எவர் அம்மாதத்தை அடைகிறாரோ அவர் நோன்பு வைக்கட்டும் என்ற வசன அடிப்படையில் எல்லோரும் ஒன்றாக மாதத்தை அடைய முடியாது.
2) பிறை பார்த்து நோன்பு வையுங்கள் - பிறைப்பார்த்து நோன்பை விடுங்கள் என்று நபி(ஸல்) கூறியுள்ளதால் நம் பகுதிகளில் நாம் பிறைப் பார்த்துக் கொள்வதே சரி.

இந்த இரண்டு வாதங்கள் தான் அவர்களுடையது. இதில் மாதத்தை அடைதல் என்பதன் அர்த்தம் என்னவென்பதை நாம் முந்தைய பதிவுகளில் விளக்கியுள்ளோம். எல்லோராலும் ஒரே நேரத்தில் அந்த மாதத்தை அடைய முடியாது - ஆனால் ஒரே நாளில் அடைந்து விட முடியும். முதல பிறை என்பது சிறிது நேரத்தில் மறைந்து விடக் கூடியதாகும். ஆனால் முதல் பிறையின் இரவு நீளமானதாகும். ஆம் முதல் பிறையை அறிந்தவர்கள் கூட அந்த இரவின் நீண்ட பொழுதை கழித்த பிறகுதான் நோன்பின் உள்ளே செல்கின்றாகள். எனவே அந்த வசனத்தை வைத்து 'உனக்கொரு பிறை - எனக்கொரு பிறை" என்று வாதிக்க முடியாது. அந்த வாதம் நிற்காது.

பிறைப் பார்த்து நோன்பு வையுங்கள் என்ற நபி(ஸல்) அவர்களின் ஹதீஸும் ஏற்கனவே விளக்கப்பட்டுள்ளது. கண்களால் பார்க்க வேண்டும் என்றக் கட்டளையோ அந்தந்தப்பகுதியில் பார்க்க வேண்டும் என்றக் கட்டளையோ எந்த நபிமொழியிலும் வரவில்லை. மாதப்பிறப்பை அறிந்துக் கொள்ள பிறை அவ்வளவுதான். பிறையின் துவக்கத்தை எப்படி வேண்டுமானாலும் அறியலாம். நபி(ஸல்) காலத்தில் கண்களால் மட்டுமே பார்க்கும் சூழல் இருந்தது. அவர்கள் அப்படிப் பார்த்தார்கள் அவ்வளவுதான். உண்மையில் அவர்கள் பார்த்த பிறை இரண்டாகவோ மூன்றாகவோ கூட இருக்கலாம். ஆனால் அவர்கள் அதை ஒன்று என்றே தீர்மானித்துக் கொள்வார்கள். அன்றைக்கு வேறு வழியில்லை.

ஆனால் இன்றைக்கு இறைவன் அநேக முன்னேற்பாடுகளை செய்துக் கொடுத்துள்ளான். மனிதன் சந்திரனில் குடியேறினால் கூட பூமித் தகவலில் பிறை பிறந்து விட்டதை அறிய முடியும். (சந்திரனில் குடியேறினால் நம் ஊர்காரர்கள் பரங்கிப்பேட்டையில் பிறைத் தெரிகிறதா என்று கேட்பார்களோ..அங்கு பரங்கிப்பேட்டைக்காரருக்கு பக்கத்தில் சென்னைக் காரர் இருந்தால் உங்கள் ஊர் தகவல் என்னைக் கட்டுப்படுத்தாது எனக்கு சென்னையிலிருந்து தகவல் வர வேண்டு்ம் என்று கூறுவாரோ..)

இறைவனின் பெரும் கொடையாக வளர்ந்து நிற்கும் அறிவியலை, அதன் ஆணித்தரமான நிரூபனங்களை கண்டுக் கொள்ளத் தேவையில்லை என்று சொல்லும் அளவிற்கு இஸ்லாம் பிற்போக்கானது அல்ல.

நாம் மேற்சொன்ன இரண்டு வாதங்களைத் தவிர அந்தந்தப்பகுதியில் பிறைப் பார்க்க வேண்டும் என்பவர்களிடம் வேறெந்த வாதமும் இல்லை.

அந்தந்தப்பகுதியில் தான் பிறைப்பார்க்க வேண்டும் என்போர் ஹஜ் செய்வதாக இருந்தால் மட்டும் வரும் தகவலை ஏற்று (உலகெங்கும் ஒரே பிறை என்ற கோட்பாட்டை) ஒப்புக் கொள்கிறார்கள்.

பெருநாள் - அரஃபா - லைலதுல் கதர் என்று அநேக பிரச்சனைகளை உள்ளடக்கியதாக 'அந்தந்தப்பகுதி பிறை" வாதம் பலவீனப்பட்டுப் போய் உள்ளது.

28 நாட்களில் மாதம் முடியும் தெரியுமா..?

அந்தந்தப்பகுதியில் பிறைப்பார்க்க வேண்டும் என்று முடிவெடுத்தால் சில நேரம் 28 நாட்களில் மாதத்தை முடித்துக் கொள்ளும் நிலையும் வரும்.
எப்படி? (ஒன்று - .இரண்டு - மூன்று நாட்கள் வித்தியாசத்தில் கூட தமிழகத்தில் பிறை எடுக்கப்படுகின்றது என்பதை கவனத்தில் வைத்துக் கொண்டு தொடருங்கள்.)

ஷஃபானை 30 ஆக பூர்த்தி செய்து சென்னை, ரமளானின் முதல் பிறையை அறிவிக்கின்றது என்று வைத்துக் கொள்வோம். கடலூரிலிருப்பவர்கள் 'எங்களுக்கு மேகமூட்டத்தால் பிறை தெரியவில்லை அதனால் நாங்கள் நாளை முப்பதை பூர்த்தி செய்தே பிறையை எடுப்போம்" என்று கூறி சென்னையின் தகவலை புறக்கணித்து விடுகிறார்கள். இப்போது சென்னை முதல் பிறையில் இருக்கும் போது கடலூர் கடைசி நாளான முப்பதிலும், சென்னை இரண்டாம் நோன்பிலிருக்கும் போது கடலூர் முதல் நோன்பிலும் இருக்கிறார்கள்.

இப்படியே நாட்கள் நகர்ந்து அந்த மாதம் 29ல் முடிந்து சென்னையில் பிறைத் தெரிகின்றது. அதே நாள் எவ்வித மேகமூட்டமுமில்லாமல் கடலூரிலும் பிறைத் தெரிகின்றது என்று வையுங்கள். இப்போ கடலூருக்கு கிடைத்த நோன்புகள் எத்தனை. 28 மட்டுமே.

மாதம் என்பது சிலபோது 30ஆகவும் சிலபோது 29ஆகவும் இருக்கும் என்று நபி(ஸல்) கூறியுள்ளார்கள். பிறை மாதங்கள் 28ஆகவோ 31ஆகவோ முடிய வாய்ப்பே இல்லாத நிலையில் வரும் ஆதாரப்பூர்வமான தகவலை புறக்கணித்த கடலூர்வாசிகள் அந்த மாதத்தை 28ல் முடித்து சாதனைப் படைப்பார்கள்.

தனித்தனிப் பிறையில் இத்தகைய முரண்பாடுகள் அநேகம் உள்ளது. (நாம் கூறியுள்ள இந்த உதாரணத்தை ஒன்றுக்கு பலமுறை படியுங்கள். 28ஆக ரமளான் குறைய வாய்ப்புள்ள தனித் தனிப்பிறை பற்றிய சிந்தனை விபரீதமானது என்பது புரியும்.

இதுவரை வந்துள்ள பதிவுகள் அனைத்தையும் வரிசையாக படித்து விட்டு தனிப்பிறையா - ஒரேப் பிறையா என்பதை முடிவு செய்யுங்கள் ( நேர்வழிக்காட்ட அல்லாஹ் போதுமானவன்)

Thursday, August 14, 2008

மனைவியைக் கொல்

பாகம் 1, அத்தியாயம் 8, எண் 423 ஸஹ்ல் இப்னு ஸஅத்(ரலி) அறிவித்தார். \'இறைத்தூதர் அவர்களே! ஒருவர் தம் மனைவியுடன் மற்றோர் ஆடவனைக் காண நேர்ந்தால் அவனைக் கொன்று விடலாமா?\' என்று ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் கேட்டார். (\"அது கூடாது! மாறாக இருவரும் லிஆன் செய்ய வேண்டும்\" என்று நபி(ஸல்) கூறியதும்) அவ்விருவரும் பள்ளியிலேயே லிஆன் செய்தனர். நான் அதைப் பார்த்துக் கொண்டிருந்தேன். \

இது எனக்கு சரியாகப்படவில்லை. ஏன் இப்படியுள்ளது என்பதை விளக்குங்கள்.

Name: abdul azeez
email: azeez1729@...
Location: abudhabi
Subject: kelvi

இறைவன் அனைத்தையும் அறிந்த நுண்ணறிவாளனாக இருக்கிறான். அவன் வகுத்த சட்டங்கள் சில நேரம் நமது சிற்றறிவிற்கு சரியாக படாவிட்டாலும் கூட அவன் வகுத்துள்ள சட்டங்கள் குறைவில்லாததுதான்.

நமது அறிவின் தரம் கூடும் போது அந்த சட்டங்களில் விளக்கங்கள் நமக்கு கிடைக்கும். அதுவரை நமது தேடலை நாம் தொடரத்தான் வேண்டும்.

ஆண் பெண்ணுக்கு மத்தியிலான உறவுமுறையை - பிரிவை தீர்மானிக்கும் எந்த சட்டமாக இருந்தாலும் அதில் பெண்களுக்கு கூடுதல் பாதுகாப்பு இருக்கத்தான் செய்யும். இதை முஸ்லிம்களாகிய நாம் அனைவரும் ஏற்றுள்ளோம்.

லிஆனை சிந்திக்கும் போதும் அதில் பெண்களுக்கு பாதுகாப்பு இருப்பதை உணரலாம்.

ஒரு பெண் விபச்சாரத்தில் ஈடுபட்டுள்ளதை அந்தப் பெண்ணின் கணவன் நேரடியாக பார்த்து விடுகிறான். இப்போது அவனது ரத்தம் கொதிக்கும். கட்டுப்படுத்த முடியாத ஆத்திரத்துக்கு அவன் ஆளாவான். இந்நிலையில் தண்டனைக் கொடுக்கும் சட்டத்தை அவன் கையில் கொடுத்தால் உடனடியாக அந்கு ஒரு அல்லது இரு கொலை நடக்கும். அவன் தரப்பிலும் ரோஷமுள்ளவர்கள் தரப்பிலும் இது நியாயம் தான் என்றாலும், இஸ்லாம் இத்தகைய உணர்வுகளை மட்டும் கருத்தில் கொண்டு சட்டம் வகுக்காது. வகுக்கப்படும் சட்டங்கள் தவறாக பயன்படுத்தக் கூடாது என்பதிலும் இஸ்லாம் அக்கறைக் கொள்ளும்.

விபச்சாரம் செய்யும் மனைவியை கணவன் கொள்ளலாம் என்ற சட்டத்தை இஸ்லாம் கணவன் கரங்களில் கொடுத்திருந்தால் கணவனால் கொல்லப்படும் மனைவிகள் அனைவருமே விபச்சாரிகளாக சித்தரிக்கப்பட்டு விடுவார்கள். ஆம், பல குடும்பங்களில் கணவர்களுக்கும் மனைவிகளுக்கும் மத்தியில் தீராத சண்டைகள் நடப்பதை நாம் பார்க்கிறோம். பெண்கள் வாய் விட்டு கத்தி தீர்த்து விடுவார்கள். ஆண்களால் அப்படி முடியாது. மனைவி கணவனை வாயால் அடித்தால், கணவன் மனைவியை கையால் அடிப்பான்.

போதை - வரதட்சனை - மாமியார் மருமகள்கள் சண்டைப் பிரச்சனை போன்றவற்றால் முரட்டு கணவன்மார்களால் பெண்கள் தாக்குதலுக்குள்ளாக்கப்படுகிறார்கள். பல நேரங்களில் வரதட்சனைப் போன்ற காரணத்துக்காக குடும்பத்தார் சேர்ந்து தன் வீட்டுக்கு வந்த மருமகளை தீர்த்துக் கட்டுகிறார்கள்.

கணவனின் முரட்டு, மடத்தனமான சுபாவத்தை எதிர்கொள்ள முடியாத பெண்கள் தங்கள் உயிரை விடுகிறார்கள். இது பரவலான நடைமுறையாகிவிட்டதை நாம் பார்க்கிறோம். பெண்ணை இழந்தவர்கள் நீதித் தேடி நீதிமன்றங்கள் செல்கிறார்கள்.

கணவனுக்கென்று இருக்கும் உரிமைகளை அவன் மீறும்போது தான் அங்கு நீதி தலையிடும். அவன் உரிமைக்குட்பட்டதை அவன் செய்யும் போது அதை யாரும் தட்டிக் கேட்க முடியாது. இந்த அடிப்படையை மனதில் நிறுத்திக் கொண்டு தொடருங்கள்.

விபச்சாரும் செய்யும் பெண்ணை கொல்லும் உரிமையை கணவன் கையில் கொடுத்தால், வரதட்சனைப் போன்ற பொருளாதாரத்திற்காக கொலைச் செய்யப்படும் மனைவி விபச்சாரத்திற்காகத்தான் கொல்லப்பட்டாள் என்று ஆகிவிடும்.

போதையால் கணவன் மனைவியை கொலை செய்தால் விபச்சாரத்திற்காக கொலை செய்தேன் என்று சொல்லி தப்பிக்க முடியும்.

இன்னப்பிற ஏதோ காரணத்துக்காக சாகடிக்கப்படும் பெண்கள் அனைவரும் கணவனின் வாக்கு மூலத்தால் விபச்சாரிகளாவார்கள். உயிரை விட்டது மட்டுமின்றி சமூகத்தில் இழிபெயரும் நிலைக்கும். நியாயம் கிடைக்க வழியில்லாமல் போகும். இன்னும் நாம் அறியாத பல நுணுக்கங்களுக்காக கூட இறைவன் கணவர்கள் கைகளில் அந்த சட்டத்தை கொடுக்காமல் தடுத்திருக்கலாம்.

பெண்களுக்கு சாதகமா..?

விபச்சாரம் செய்யும் பெண் கணவனால் நேரடியாக பிடிக்கப்பட்ட பிறகும் அவளை தண்டிக்காமலிருப்பது பெண்களுக்கு சாதகமாக - தவற வழி வகுப்பதாக ஆகாதா..? என்ற சிந்தனை எழலாம்.

ஒரு வகையில் சிந்தித்துப் பார்த்தால் மரண தண்டனை கொடுத்து கதையை முடிப்பதை விட தன்னை தானே சபித்துக் கொண்டு சமுதாய மத்தியில் இழி நிலையில் வாழ்வது அதை விட பெரிய தண்டனையாகும். தன் மனைவி விபச்சாரம் செய்துவிட்டால் என்று கணவன் குற்றம் சுமத்துகிறான். அதை நிரூபிக்க அவனிடம் நான்கு சாட்சிகள் இல்லை. சாட்சிகளில்லாத நிலையில் குற்றத்தை நிரூபிக்க முடியாது. உலக நீதிமன்றங்கள் என்றால் சாட்சிகள் இல்லாததால் கணவனை எச்சரித்து அவனோடு மனைவி சேர்ந்து வாழ வேண்டும் என்று உத்திரவு பிறப்பிக்கும். உண்மையில் மனைவி தவறியதை நேரடியாக கண்ட கணவன் நீதிமன்ற உத்திரவால் மீண்டும் அவளோடு சேர்ந்து வாழ முடியுமா...? அது பல்வேறு சிக்கல்களை இருவருக்கும் மத்தியில் ஏற்படுத்தி விடும். அதனால் தான் இஸ்லாம் மாற்று வழியை முன் வைத்துள்ளது.

சாட்சிகள் இல்லாத நிலையில் கணவனால் குற்றம் சுமத்தப்பட்டால் அவ்விருவரும் மக்கள் மன்றத்தில் தன்னைத் தானே சபித்துக் கொண்டு கணவன் - மனைவி உறவைத் துண்டித்துக் கொள்ள வேண்டியதுதான். இது அவர்களிருவரும் மீண்டும் சேர்ந்து வாழ முடியாத அளவிற்குள்ள நிரந்தர பிரிவாகும்.

இதில் யாரொருவர் பொய் சொல்லி இருந்தாலும் அவர்கள் இறைவனிடம் குற்றவாளியாகி நிற்பார்கள். இந்த விபரம் குர்ஆனில் 24வது அத்தியாயத்தின் 5 முதல் 9 வரையுள்ள வசனங்களில் காணலாம்.

இஸ்லாமிய ஆட்சியில்லாத நாடுகளில்,

இஸ்லாமிய ஆட்சியில்லாத நாடுகளில் வாழும் முஸ்லிம்களுக்கும் இந்த சட்டம் பொருந்தும். அவர்களும் ஊரிலுள்ள பொதுஜமாஅத்கள் முன்னிலையில் தன்னை சாபமிட்டுக் கொண்டு பிரியலாம்.

நான்கு முறை 'தாம் உண்மைச் சொல்வதாக சத்தியமும், ஐந்தாம் முறை தம் மீது தாமே சாபமிட்டுக் கொள்வது என்பதும் அத்துனை சுலபமான விஷயமல்ல. ஒரு பெரும் சக்தியை நம்பி அதற்கு கட்டுப்படும் மனநிலையைப் பெற்றவர்கள் இதில் விளையாட மாட்டார்கள் என்பதையும் நாம் புரிந்துக் கொள்ள வேண்டும்.

அஸ்ஸலாமு அலைக்கும்.
எனது வங்கிக்கணக்கில் ஒரு தொகையுள்ளது. அது எனது வங்கிக்கணக்கிற்காக வட்டித்தொகையாகும். நான் அத்தொகையை பொது காரியங்களுக்காக பயன்படுத்தலாமா? (உ.தா., சாலைவிளக்குகள். கழிவரை போன்றவைகள்).
Name: farhan
email: farhan88lk@...
Location:
Subject: Question

வங்கி வட்டி குறித்தும், அந்த தொகையை என்ன செய்யலாம் என்பது குறித்தும் ஏற்கனவே விரிவாக விளக்கியுள்ளோம். கீழுள்ள லிங்கை சொடுக்குங்கள்.
வங்கி வட்டி முஸ்லிம்கள்
இந்த வலைப்பூவிலும் வட்டி குறித்து பதிலளிக்கப்பட்டுள்ளது. பார்வையிடவும்.

பெர்மூடா பிளாக்ஹோல்

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்.
நாஸாவின் வெப்ஸைட்டில் மேய்ந்த போது அன்டார்டிகா கடலில் உள்ள பெர்முடா தீவுக்கருகில் பெர்மூடா பிளாக்ஹோல் என அழைக்கப்படும் ஒரு மர்ம இடம் இருப்பதாகவும் அந்த குறிப்பிட்ட வளையத்துக்குள் நீர்வழி மற்றும் வான்வழி செல்லும் கப்பல் மற்றும் விமானங்கள் மாயமாய் மறைவதாகவும் அதுபற்றிய ஒரு விபரமும் கிடைப்பதில்லை என்றும் விஞ்ஞாணிகளுக்கும் இது புதிராக இருப்பதாக அறிந்தேன். இது உண்மையாக இருக்குமா இது பற்றிய இஸ்லாமிய குறிப்புகள் அடையாளங்கள் உண்டா விளக்கவும்

Name: முஹம்மது இக்பால்
email: mimhouse@...
Location: Sharjah - U.A.E
Subject: Kelvi

மது - சம்பளம்

அஸ்ஸலாமு அலைக்கும்.
நான் இலங்கையைச்சேர்ந்தவன். நான் தங்களது இணையதளத்தை பார்த்துவருகிறேன். இது நமது சமுதாய மக்களுக்கு ஒரு சிறந்த வழிகாட்டும் இடமாக விளங்கிவருகிறது. அல்ஹம்துலில்லாஹ்.

நான் தற்பொழுது கத்தாரில் உள்ள ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் கணக்காளராக (Accountant) பணியாற்றி வருகிறேன். என்னுடைய நிறுவனத்தின் மற்றொரு கிளை மது வகைகளை மேல் நாட்டவருக்கு மட்டும் விற்பனை செய்து வருகிது. நான் எனது நிருவனத்தின் கணக்கு வழக்கு பணிகளை மட்டும் செய்து வருகிறேன். மதுக்களை விற்பனை செய்து வரும் கிளை நிருவனத்தின் கணக்குகளை பார்ப்பது கிடையாது. இருந்த போதும் ஒரு சில பறிமாற்றங்கள் இந்த இரு நிறுவனத்திற்குள் நடந்து வருகின்றது ஒவ்வொரு மாதமும். ஏனெனில் இரண்டு நிருவனத்தினுடைய உரிமையாளர் ஒருவரே. நான் இந்த இரு நிறுவனத்திற்குமான பணியாளர்களது மாத சம்பளம் சம்மந்தமான பணிகளை செய்து வருகிறேன். அனைத்து பணியாளர்களது மாத சம்பளமும் மது விற்பனையின் மூலம் கிடைக்கும் லாபத்திலிருந்தே வழங்கப்படுகின்றது. ரியல் எஸ்டேட் நிருவனம் தான் "பாரில்" பணியாற்றும் பணியாளர்களுக்கு சம்பளம் தர வேண்டும். அதுவே அப்பணியாளர்களுக்கு அவர்களது சம்பளத்தைவிட அதிகமாக பெற கிடைக்கும்.
நான் கத்தார் வந்த பிறகு எனக்கு இவ்வகையான நிருவனங்களில் பணியாற்றுவதற்கு துளிகூட விருப்பமில்லை. நான் ஒரு முஸ்லிமாக, இந்தவகையான நிருவனத்திலிருந்து பெறப்படும் சம்பளம் "கூடுமா (Halaal)" (அ) கூடாதா (Haraam)". நான் தற்பொழுது குழப்பமான சூழலில் இருந்து வருகிறேன். எனக்கு இந்த விஷயத்தில் ஒரு தீர்க்கமான விளக்கம் தேவை. தங்களது பதில் என்னைப்போன்றுள்ள மற்றவர்களுக்கும் பயனளிப்பதாக இருக்கும்.
Name: Ali Akbar
email: aliakbar.ma@....
Location: Qatar
Subject: kelvi

Thursday, July 24, 2008

மூன்று கேள்விகள்

1.ஒருவர் உயிருடன் இருக்கும் போது அவரது சொத்து முழுவதையும் தருமம் செய்யவோ அல்லது தனது பிள்ளைகளுக்கு மத்தியில் பகிர்ந்தளிப்பதற்கோ குர்ஆன் ஹதீசில் அனுமதியுன்டா? பிள்ளைகளுக்கு பகிர்ந்தளிப்பதாயின் சமமாகவா பகிர வேண்டும்.

ஒருவருடைய சொத்துக்கு அவர் மரணிக்கும் வரை அவரே முழுப் பொறுப்புதாரியாகின்றார். சொத்துக்குறித்த விபரங்களை ஜக்காத் சட்டங்கள் தொடரில் விரிவாக விளக்கியுள்ளோம். http://www.idhuthanislam.com/zakaath/zakaathindex.htm

சொத்துக்கு முதலாளியான அவர் தமது சொத்தை தான தர்மம் செய்யவோ பிறருக்கு அன்பளிப்பாக கொடுக்கவோ, யாருக்கும் எதையும் கொடுக்காமல் தனது வாரிசுகளுக்கு விட்டு செல்லவோ உரிமைப்படைத்தவராவார் ஆனாலும் இஸ்லாம் பொருளாதாரத்தின் மீது ஜகாத்தை விதித்துள்ளது. தானதர்மங்களை ஊக்குவித்துள்ளது.

அதிக இறை நம்பிக்கையுள்ள ஒருவர் தமது சொத்து முழுவதையும் இறைவழியில் தானதர்மம் செய்து விட அனுமதியுண்டா என்பதை முதலில் எடுத்துக் கொள்வோம்.

அவர்கள் செலவு செய்தால் வீண் விரையம் செய்யமாட்டார்கள்; (உலோபித்தனமாகக்) குறைக்கவும் மாட்டார்கள் - எனினும், இரண்டுக்கும் மத்திய நிலையாக இருப்பார்கள். (அல்குர்ஆன் 25:67)

ஒருவர் நபி(ஸல்) அவர்களிடம் வந்து, 'இறைத்தூதர் அவர்களே! தருமத்தில் சிறந்தது எது?' என்று கேட்டார். 'நீங்கள் ஆரோக்கியமுள்ளவராகவும், பொருளாசை கொண்டவராகவும் செல்வந்தராக விரும்பிய வண்ணம் வறுமையை அஞ்சியவராகவும் இருக்கும்போது தர்மம் செய்வதே சிறந்த தர்மம் ஆகும். உன் உயிர் தொண்டைக் குழியை அடைந்து விட்டிருக்க, 'இன்னாருக்கு இவ்வளவு கொடுங்கள்; இன்னாருக்கு இவ்வளவு கொடுங்கள்" என்று சொல்லும் (நேரம் வரும்) வரை தருமம் செய்வதைத் தள்ளிப் போடாதே. (உன் மரணம் நெருங்கி விடும்) அந்த நேரத்திலோ அது இன்னாருக்கு (உன் வாரிசுகளுக்கு) உரியதாய் ஆம் விட்டிருக்கும்" என்று நபி(ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். (அபூ ஹுரைரா(ரலி) )பாகம் 3, அத்தியாயம் 55, எண் 2748

ஆரோக்யம் - பொருளாதாரத்தின் மீது ஆசை - அதே சமயம் வறுமைக் குறித்த பயம் இவை ஒன்று சேர இருக்கும் நிலையில் இறைவழியில் செலவு செய்ய வேண்டும் அதுவே மகத்தான் செலவீடாகும் என்பதை இந்த நபிமொழி உணர்த்துகின்றது. எனவே வயதான காலம் வரட்டும் என்று காத்திராமல் ஒருவர் தனது வாலிப பருவத்தில் அவருடைய சொத்தை இறை வழியில் செலவு செய்யலாம் - செய்ய வேண்டும்.

நீங்கள் விரும்புகிறவற்றிலிருந்து (இறைவழியில்) செலவு செய்யாதவரை நீங்கள் நன்மையை அடைந்து கொள்ள முடியாது" (திருக்குர்ஆன் 03:92) என்னும் இறைவசனம் அருளப்பட்டபோது அபூ தல்ஹா(ரலி) நபி(ஸல்) அவர்களிடம் வந்து, 'இறைத்தூதர் அவர்களே! அல்லாஹ் தன் வேதத்தில், 'நீங்கள் விரும்புகிறவற்றிலிருந்து (இறைவழியில்) செலவு செய்யாத வரை நீங்கள் நன்மையை அடைந்து விட முடியாது' என்று கூறுகிறான். என் செல்வங்களிலேயே எனக்கு மிகவும் பிரியமானது 'பைருஹா' (எனும் தோட்டம்) தான். அந்தத் தோட்டத்தில் இறைத்தூதர்(ஸல்) அவர்கள் சென்று நிழலில் ஓய்வெடுத்து அதன் தண்ணிரை அருந்துவது வழக்கம் - எனவே, அதை நான் அல்லாஹ்வுக்காகவும் அவனுடைய தூதருக்காகவும் (அறக் கொடையாகத்) தந்து விடுகிறேன். (மறுமையில்) அதன் நன்மையையும் (மறுமை வாழ்வுக்கான) என் சேமிப்பாக அது இருப்பதையும் விரும்புகிறேன். எனவே, இறைத்தூதர் அவர்களே! தங்களுக்கு அல்லாஹ் காட்டித் தருகிற அறச் செயலில் அதைத் தாங்கள் பயன்படுத்தித் கொள்ளுங்கள்" என்று கூறினார். இதைக் கேட்ட இறைத்தூதர்(ஸல்) அவர்கள், 'மிகவும் நல்லது, அபூ தல்ஹாவே! அது லாபம் தரும் செல்வமாயிற்றே. அதை உங்களிடமிருந்து ஏற்று உங்களிடமே திருப்பித் தருகிறோம். உங்கள் நெருங்கிய உறவினர்களிடையே அதைப் பங்கிட்டு விடுங்கள்" என்று கூறினார்கள். அபூ தல்ஹா(ரலி) அதைத் தம் இரத்த பந்தமுள்ள உறவினர்களுக்கு தர்மம் செய்துவிட்டார்கள். (அனஸ்(ரலி) பாகம் 3, அத்தியாயம் 55, எண் 2758

பெருமதிப்பு மிக்க, நீர் நிலைகள் உள்ள தனது சொத்தை இறைத் திருப்தியைப் பெருவதற்காக தனது இரத்த பந்த உறவினர்களுக்கு (இவர்கள் சொத்தின் வாரிசுதாரர்களல்ல) இறைத்தூதரின் வழிகாட்டுதல் படி அபுதல்ஹா(ரலி) அவர்கள் பகிர்ந்தளிக்கிறார்கள்.

இதுபோன்ற ஏராளமான ஆதாரங்களின் அடிப்படையில் ஒருவர் தனது சொத்தை தன் விருப்படி செலவிடலாம் என்பது விளங்குகின்றது. ஆனாலும் ஒருவர் தனது சொத்துக்கு வாரிசுதாரர் இருக்கும் நிலையில் தனக்கு சொந்தமான முழு சொத்தையும் இறைவழியில் செலவிட நபி(ஸல்) அனுமதிக்கவில்லை.

தனக்கு ஒரேயொரு மகள் உள்ள நிலையில் அவரும் செல்வ செழிப்புடன் உள்ள நிலையில் தனது சொத்தை இறைவழியில் செலவு செய்வது பற்றிய தீர்ப்பைஸஅது பின் அபீவக்காஸ்(ரலி) கேட்கிறார்கள்.

'இறைத்தூதர் அவர்களே! என் செல்வம் முழுவதையும் நான் மரணசாசனம் செய்து விடட்டுமா?' என்று கேட்டேன். அவர்கள், 'வேண்டாம்" என்று கூறினார்கள். நான், 'அப்படியென்றால் (என் செல்வத்தில்) பாதியை மரண சாசனம் செய்து விடட்டுமா?' என்று கேட்டேன். அதற்கும், 'வேண்டாம்" என்றே பதிலளித்தார்கள். நான், 'மூன்றிலொரு பங்கை(யாவது மரண சாசனம் செய்து விடட்டுமா?)" என்று கேட்டேன். அவர்கள், 'மூன்றிலொரு பங்கா? மூன்றிலொரு பங்கே அதிகம் தான். நீங்கள் உங்கள் வாரிசுகளைத் தன்னிறைவுடையவர்களாகவிட்டுச் செல்வது, அவர்களை மக்களிடம் கையேந்தும்படி ஏழைகளாகவிட்டுச் செல்வதை விட நல்லதாகும். நீங்கள் செய்த (நல்ல) செலவு எதுவாயினும் தருமமேயாகும். நீங்கள் உங்கள் மனைவியின் வாயில் இடுகிற ஒரு கவளம் (உணவு) கூட (தருமமேயாகும்.) அன்று அவருக்கு ஒரு மகளைத் தவிர வேறு (நேரடி வாரிசுகள்) யாரும் இருக்கவில்லை. (புகாரி பாகம் 3, அத்தியாயம் 55, எண் 2742 )

பல நூல்களில் இந்த செய்தி பதியப்பட்டுள்ளது. திர்மிதியில வரும் செய்தியில் தம் மகள் செல்வநிலையில் இருக்கிறார் என்ற கூடுதல் விபரம் கூறப்பட்டுள்ளது.

ஒருவன் தன் சொத்தில் தன் வாரிசுக்கு கிடைக்க வேண்டிய பங்கை கிடைக்காமல் செய்து இழப்புக்குள்ளாக்கி விட்டால் அல்லாஹ் தீர்ப்பு நாளில் சுவனத்தில் அவனுக்குரிய பங்கை இழக்க செய்து விடுவான் என்று நபி(ஸல்) எச்சரித்துள்ளார்கள். (அனஸ்(ரலி) அறிவிக்கும் இந்த செய்தி இப்னுமாஜாவில் இடம் பெறுகின்றது.

இந்த ஹதீஸ்களிலிருந்து நமக்கு கிடைக்கும் சட்டங்கள்.

  • ஒருவர் தம் சொத்துக்கு முழு உரிமைப் படைத்தவராவார்
  • தள்ளாத காலம் வரை காத்திராமல் வாலிபக் காலங்களில் இறைவழியில் செலவு செய்ய வேண்டும்.
  • செலவு செய்கிறேன் என்று குடும்பத்தாருக்கு இழப்பு ஏற்படுத்தி விடக் கூடாது. அவர்கள் செல்வ நிலையில் இருந்தாலும் சரியே.
  • மொத்த சொத்தில் மூன்றில் ஒரு பாகத்தையோ அல்லது அதற்கும் குறைவாகவோ தான் வஸியத் செய்யலாம்.
  • செலவு செய்ய முடிவு எடுத்து விட்ட நிலையில் சொத்துக்கு வாரிசுதாரராகாத பிற உறவினர்களுக்கு, சொந்தங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.
  • சொத்து சொர்க்கத்தில் நமது இடத்தை தீர்மானிக்கும் என்பதால் மிகுந்த கவனம் தேவை.

அடுத்து சொத்துதாரி உயிருடன் இருக்கும் போது தன் குழந்தைகளுக்கு பகிர்ந்தளிப்பது குறித்து பார்ப்போம்.

செல்வமும், பிள்ளைகளும் இவ்வுலக வாழ்க்கையின் அலங்காரங்களேயாகும் என்றும் நிலைத்து நிற்கக் கூடிய நற்கருமங்களே உம்முடைய இறைவனிடத்தில் நன்மைப் பலனுடையவையாகவும், (அவனிடத்தில்) நம்பிக்கையுடன் ஆதரவு வைக்கத்தக்கவையாகவும் இருக்கின்றன. (அல்குர்ஆன் 18:46)

அந்நாளில் செல்வமும், பிள்ளைகளும் (யாதொரு) பயனுமளிக்க மாட்டா (26:88)

ஒருவருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் இருக்கும் போது இயற்கையாகவே ஒரு குழந்தை மீது அன்பு அதிகமாக இருக்கத்தான் செய்யும். இதன் காரணத்தால் பிற குழந்தைகளை விட குறிப்பிட்ட குழந்தைக்கு எதையும் அதிகமாக கொடுக்கும் மனநிலை வரும்.

செலவிடுதல்.

குழந்தைகளுக்கு செலவிடுவதில் யாரொருவரும் விதிவிலக்கில்லாமல் வித்தியாசப்படவே செய்வர். பெற்றப்பிள்ளைகளுக்கு செலவிடப்படும் தொகை வித்தியாசமாக இருக்கக் கூடாது என்று யாரும் விளங்கிக் கொள்ளக் கூடாது. அது கட்டாயம் வித்தியாசப்படவே செய்யும். சில குடும்பங்களில் ஆண்குழந்தைகளின் படிப்புக்கும், பிற குடும்பங்களில் பெண் குழந்தைகளின் திருமண வாழ்க்கைக்கும் செலவிடப்படும் தொகையைப் பார்த்தால் பெரும் வித்தியாசம் இருக்கும். இது பிள்ளைகளின் தேவை அறிந்து செய்ய வேண்டிய செலவீனமாகும். இது தந்தை மீதான கடமை. இதில் வித்தியாசம் இருக்கக் கூடாது என்று இஸ்லாம் சொல்லவில்லை. "தேவையே" இங்கு பிரதானமாக பார்க்கப்படுவதால் இந்த வித்தியாசத்தால் சொத்துக்குரியவர் குற்றவாளியாக மாட்டார்.

கொடுத்தல்.

செலவிடுவதை கடந்து குழந்தைகளின் மகிழ்ச்சிக்காக அவர்களுக்காக கொடுக்கப்படும் தொகை, அல்லது சொத்து போன்றவற்றில் அவர்களைக் கலந்துக் கொள்ளாமல் பாராபட்சம் காட்டக் கூடாது. இது குழந்தைகளுக்கு மத்தியில் வீண் மனதாபத்தையும், சண்டை சச்சரவையும் ஏற்படுத்தி விடும். "நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்புதாரியாவீர்கள், உங்கள் பொறுப்பு குறித்து மறுமையில் விசாரிக்கப்படுவீர்கள்" என்ற நபிமொழியை கவனத்தில் கொண்டு தந்தை நடந்துக் கொள்வதே அறிவுடமையாகும்.

நுஃமான் பின் பஷீர் (ரலி) அவர்கள் மேடையின் மீது நின்று கொண்டு, என் தந்தை அன்பளிப்பு ஒன்றை எனக்குக் கொடுத்தார். என் தாயார் அம்ரா பின்த்து ரவாஹா (ரலி) அவர்கள் என் தந்தையிடம், நீங்கள் இதற்கு அல்லாஹ்வின் தூதரை சாட்சியாக ஆக்காதவரை நான் இதை ஒப்புக் கொள்ள மாட்டேன் என்று கூறினார்கள். என் தந்தை அல்லாஹ்வின் தூதரிடம் சென்று, அல்லாஹ்வின் தூதரே* நான் அம்ரா பின்த்து ரவாஹாவின் வாயிலாக, எனக்குப் பிறந்த என் மகனுக்கு அன்பளிப்பு ஒன்றைக் கொடுத்தேன், அவள் (என் மனைவி) தங்களை சாட்சியாக ஆக்கும் படி எனக்குக் கட்டளையிட்டாள் என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், உங்கள் மற்ற பிள்ளைகளுக்கும் இதே போன்று கொடுத்துள்ளீர்களா? என்று கேட்டார்கள். அதற்கு என் தந்தை, இல்லை என்று பதிலளித்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள், அவ்வாறெனில் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். உங்கள் பிள்ளைகளிடையே நீதி செலுத்துங்கள் என்று கூறினார்கள். இதைக் கேட்ட என் தந்தை உடனே திரும்பி வந்து, தனது அன்பளிப்பை ரத்து செய்தார். புகாரி பாகம் 3, அத்தியாயம் 50, எண் 2587

இந்த நபிமொழியிலிருந்து பெறப்படும் உண்மை 'கொடுக்கும் விஷயத்தில் குழந்தைகளுக்கு மத்தியில் நீதியாக நடந்துக் கொள்ள வேண்டும்" என்பதாகும்.
பல குடும்பங்களில் உடன்பிறந்த சகோதர சகோதரிகளுக்கு மத்தியில் பிரச்சனைகள் வெடிப்பதற்கு காரணமே தாய் தந்தையின் பாராபட்ச பொருளாதார அன்பளிப்புகளே.

முஸ்லிம் குடும்ப தலைவர்கள், தலைவிகள் மிகுந்த பொறுப்புணர்வுடன் நடந்துக் கொள்ள வேண்டிய ஒன்று குழந்தைகளுக்கு மத்தியில் பாராபட்சமாக நடக்காமலிருப்பதாகும்.

தந்தை மரணித்தப்பின் வாரிசுரிமை பெறுபவர்கள் என்பதும், அவர் உயிருடன் இருக்கும் போது தனது சொத்தை பகிர்வது என்பதும் வெவ்வேறாகும். வாரிசுரிமையுள்ளவர்களுக்கு சொத்துதாரர் உயிருடன் இருக்கும் போது எதையும் கொடுக்கக் கூடாது என்பதற்கு எந்த ஆதாரமுமில்லை.

2.சொத்து முழுவதையும் ஒருவர் பகிர்ந்து அளித்து விட்டு மரணித்துவிட்டார். இது தெளிவான பிரகு மரணித்தவரின் வாரிசுகள் தமது பங்குகளை குர்ஆன் சட்டப்படி மீளப் பகிர்ந்துகொள்ள வேண்டுமா அல்லது அது அவர்களுக்கு குற்றமில்லையா?

தனது சொத்து முழுவதையும் சொத்துக்கு வாரிசிலலாதவர்களுக்கு பகிர்ந்தளிக்கக் கூடாது. மரண சாசனம் செய்யக் கூடாது என்பதை நாம் முன்னர் கண்டோம்.

சொத்துக்கு வாரிசாக முடியாத பிறருக்கு ஒருவர் தனது சொத்து முழுவதையும் எழுதி விட்டு மரணிக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். இப்போது அந்த சொத்துக்கு வாரிசாகக் கூடியவர்கள் இஸ்லாமிய நீதி மன்றத்தை அணுகலாம். அணுகினால் அவர்களுக்கு வெற்றிக் கிடைக்கும் இதற்கான ஆதாரத்தை கண்டு விட்டு தொடர்வோம்.

ஆறு அடிமைகளைப் பெற்றிருந்த ஒரு நபித்தோழர் அந்த அடிமைகள் தவிர வேறெந்த சொத்தும் இல்லாத நிலையில் மரணிக்கும் போது ஆறு அடிமைகளையும் விடுதலை செய்து விட்டு மரணித்துவிட்டார். இறந்தவரின் வாரிசுதாரர்கள் இதுகுறித்து நபி(ஸல்) அவர்களிடம் முறையிட்ட போது அந்த ஆறு அடிமைகளையும் அழைத்து இருவர் இருவராக மூன்று அணியாக அவர்களைப் பிரித்து சீட்டுக் குலுக்கிப் போட்டார்கள். பெயர் வந்த அணியினரை விடுதலை செய்து நால்வரை வாரிசுதாரர்களுக்கு உடைமையாக்கி விட்டார்கள். (இம்ரான் பின் ஹுசைன் (ரலி) அறிவிக்கும் இச் செய்தி முஸ்லிம், அபுதாவூத் போன்ற நூல்களில் வருகின்றது.

வேறெந்த சொத்தையும் வைத்திருக்காத நிலையில் இருக்கும் சொத்தையும் பிறருக்கு வழங்கி மரணித்த ஒரு நபித்தோழரின் செயலை நபி(ஸல்) சரிகாணவில்லை. மரணித்தவரின் குடும்பத்தார் எதுவுமின்றி நிற்கும் நிலையில் அனைத்தையும் தானம் செய்யக் கூடாது என்பதை இந்த நபிமொழியிலி்ருந்து விளங்கலாம். மூன்றில் ஒருபங்கு அதாவது 33 சதவிகிதத்திற்கு அதிகமாக ஒருவர் பிறருக்கு கொடுத்து விட்டோ அல்லது உயில் எழுதி விட்டோ மரணித்தார் என்றால் அந்த 33 சதவிகிதத்திற்கு அதிகமானவற்றை மீட்க நாம் நடவடிக்கை எடுக்கலாம்.

குர்ஆனின் அறிவைப் பெற்று அதன்படியோ அல்லது குர்ஆனின் அறிவு இல்லாமலோ ஒருவர் தனது பிள்ளைகளுக்கு தான் உயிருடன் இருக்கும் போதே கூடுதல் குறைவாக தனது சொத்தை பிரிந்து அவரவர் பெயரில் எழுதி வைத்து விடுகிறார் என்று வைத்துக்கொள்வோம். அவர் மரணித்த பிறகு அவர் எழுதி வைத்த சொத்துக்களை மீளாய்வு செய்து - ஒன்று திரட்டி மீண்டும் குர்ஆன் சொல்லும்படி பிரித்துக் கொள்ள வேண்டும் என்பதற்கு எந்த ஆதாரத்தையும் நம்மால் பார்க்க முடியவில்லை. அது தவறும் கூட.

வாரிசுரிமை, பாகப்பிரிவினை பற்றி பேசும் குர்ஆன் வசனங்கள் அனைத்தும் ஒரு சட்டத்தை நமக்கு தெளிவாக சுட்டிக் காட்டுகின்றது. மரணித்தவர் விட்டு சென்ற சொத்தில் அவரது கடன், மரண சாசனம் (உயில்) போக மீதியுள்ளவற்றில் தான் பிறருக்கு உரிமையுள்ளது என்று.

என்றைக்கு தனது வாரிசுகள் பெயரில் சொத்து மாற்றப்படுகின்றதோ அன்று முதல் அந்த சொத்துக்குரியவர் அந்த வாரிசுதானே தவிர மாற்றி கொடுத்தவருக்கும் அந்த சொத்துக்கும் எந்த உரிமையுமில்லை. மாற்றிக் கொடுத்தவருக்கே உரிமையில்லை எனும் போது பிறர் அந்த சொத்து குறித்து நடவடிக்கை எடுப்பது என்பது இயலாத காரியமாகும்.

நான்கு அல்லது மூன்று அல்லது இரண்டு குழந்தைகளை பெற்றுள்ள ஒருவர் தான் உயிருடன் இருக்கும் போது அந்த குழந்தைகளுக்கு மத்தியில் வித்தியாசத்தில் தனது சொத்தை பிரிக்கிறார். மகன்களுக்கு அதிகமாகவும், பெண்பிள்ளைகளுக்கு குறைவாகவும், அல்லது பெண் பிள்ளைகளுக்கு அதிகமாகவும், ஆண்பிள்ளைகளுக்கு குறைவாகவும் பிரித்து அவர்கள் பெயரில் சொத்தை மாற்றி எழுதி பதிவு செய்து விடுகின்றார். அவரது மரணத்திற்கு பின் குழந்தைகள் இதை பாராபட்சமாக கருதுகின்றது. இப்போது அந்த பிள்ளைகளாக வேண்டுமானால் ஒன்று சேர்ந்து பேசி தனது சொத்துக்களை விரும்பியவாறு பிரித்துக் கொள்ளலாமே தவிர தந்தை எழுதி வைத்தது செல்லாது அதை மாற்றி அமைக்க வேண்டும் என்று சொல்லும் உரிமை யாருக்கும் இல்லை.

ஒருவேளை பிள்ளைகளுக்கு அதில் உடன்பாடு இல்லையென்றால், தன் தந்தை மூலம் தமக்கு கிடைத்த சொத்தை மீண்டும் பகிர்ந்தளிப்பதற்கு நான் உடன்பட மாட்டேன் என்று கூறினால் அவ்வாறு கூறுபவர் குற்றவாளியுமல்ல. அவருக்கு எதிராக வழக்கு தொடுக்கவும் முடியாது.

3.சூரதுன் நிசாவில் வாரிசுரிமைச் சட்டங்கள் சொல்லிவிட்டு 14 ஆவது வசனத்தில் இதை மீருபவர்கள் நிரந்தர நரக வாதிகள் என்று கொல்கிறது இதனை நாம் எப்படி தெளிவாக விளங்குவது.

Name: Inam Ul Haq

email: inam. mail2me@....

Location: Sri Lanka

Subject: Kelvi

பாகப்பிரிவினை பற்றிப் பேசும் அனைத்து வசனங்களும் மரணித்தவருக்கு பிறகு அந்த சொத்தை பிரிப்பவர்கள் பற்றியே பேசுகின்றது. அவ்வாறு பிரிப்பவர்கள் கவனிக்க வேண்டிய முக்கிய கடமை 1) மரணித்தவரின் கடன், 2) அவர் எழுதி வைத்துள்ள மரண சாசனம் (உயில்) இவை இரண்டும் போகவே பிற சொத்தில் பாகபிரிவினை. இது இறைவனின் வரம்பாகும். இதை மீறுபவர்கள்தான் தண்டிக்கப்படுவார்கள் என்கிறான் இறைவன். ஏற்கனவே பிரித்து எழுதப்பட்ட சொத்திற்கும், இறைவனின் இந்த எச்சரிக்கைக்கும் எந்த சம்மந்தமுமில்லை.

அல்லாஹ் மிக்க அறிந்தவன்.

குளிக்கும் போது

கடைமையான குளிப்பை குளிக்கும் போது பெண்கள் கடைபிடிக்க வேண்டிய முறைகள் என்ன?

Name: vaheeda
email: vaheedama@.....
Location:
Subject: Kelvi

மாதவிடாய், கணவனுடன் இல்லறத்தில் சேருதல், தூக்கத்தில் உச்சத்தை அடைதல் போன்ற காரணங்களால் பெண்களுக்கு குளிப்பு கடமையாகின்றது. கடமையான குளிப்பை நிறைவேற்றும் பெண்களுக்கு,

ஒளு.

குளிக்கத்துவங்குமுன் ஒளு செய்துக் கொள்ள வேண்டும்.

'நபி(ஸல்) அவர்கள் கடமையான குளிப்பை நிறைவேற்றும்போது முதலாவதாகத் தங்களின் இரண்டு முன்கைகளையும் கழுவுவார்கள். பின்னர் தொழுகைக்கு உளூச் செய்வது போல் உளூச் செய்வார்கள். பின்னர் விரல்களைத் தண்ணீரில் மூழ்கச் செய்து அதைக் கொண்டு தலை முடியின் அடிப்பாகத்தைக் கோதுவார்கள். பின்னர் அவர்கள் தலையின் மீது மூன்று முறை கையினால் தண்ணீரைக் கோரி ஊற்றுவார்கள். பின்னர் தங்களின் உடல் முழுவதும் தண்ணீரை ஊற்றுவார்கள்" என ஆயிஷா(ரலி) அறிவிக்கிறார்கள். (புகாரி பாகம் 1, அத்தியாயம் 5, எண் 248 )

'நபி(ஸல்) அவர்கள் கால்களைவிட்டுவிட்டு தொழுகைக்கு உளூச் செய்வது போன்று உளூச் செய்வார்கள். மேலும் தங்கள் மர்மஸ்தலத்தையும் உடலில் பட்ட அசுத்தங்களையும் கழுவுவார்கள். பின்னர் தங்களின் மீது தண்ணீரை ஊற்றுவார்கள். பின்னர் சிறிது நகர்ந்து நின்று தங்களின் இரண்டு கால்களையும் கழுவுவார்கள். இதுதான் நபி(ஸல்) அவர்களின் கடமையான குளிப்பாக இருந்தது" என மைமூனா(ரலி) அறிவிக்கிறார்கள். (புகாரி பாகம் 1, அத்தியாயம் 5, எண் 249 )

ஆரம்பமாக கைகளில் தண்ணீர் ஊற்றி கைகளை கழுவி பிறகு ஒளு செய்து, அதன் பின் தலையின் அடிப்பாகம் - அதாவது முடியின் வேர்களும் தோல் பகுதியும் - நனையும் விதத்தில் தண்ணீர் செலுத்தி விட்டு பிறகு உடம்பி்ன் மீது தண்ணீர் ஊற்றிக் கொள்ள வேண்டும்.

தலைமுடியை அவிழ்க்க தேவையில்லை.

பொதுவாகவே பெண்களுக்கு தலையில் முடி அதிகமாக இருக்கும். பல பெண்கள் தலைமுடியில் கூடுதல் கவனம் செலுத்தி அதை அடர்த்தியாகவும் நீளமாகவும் வளர்த்து பாதுகாப்பார்கள். இத்தகைய பெண்கள் கடமையான குளிப்பு குளிக்கும் போது சிரமத்துக்கு ஆளாவார்கள். ஏனெனில் தலைமுடியை அவிழ்த்து அதை முழுவதும் கழுவி குளித்து காயவைப்பதற்குள் போதும் போதுமென்று ஆகிவிடும். உண்மையில் முஸ்லிம் பெண்கள் கடமையான குளிப்பை குளிக்கும் போது தலை முடி முழுவதையும் நனைக்க வேண்டுமா...? என்று பார்த்தால் இஸ்லாம் இலகுவான மார்க்கம் பெண்களுக்கு அத்தகைய கட்டளையை இடவில்லை. கீழ் வரும் ஹதீஸை பாருங்கள்.

அல்லாஹ்வின் தூதரே! நான் என் தலைமுடியை சடைப் போட்டு பிண்ணிக் கொள்கிறேன். கடமையான குளிப்பிற்காக அதை அவிழ்த்து விட்டு குளிக்க வேண்டுமா என்று நான் நபி(ஸல்) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் 'வேண்டாம்' தண்ணீரை உன் தலையில் மூன்று முறை ஊற்றிக் கொள்வதே போதுமானதாகும். பின்னர் உன் உடல் நனையும் படி தண்ணீரை ஊற்றிக் கொள் இவ்வாறு செய்து விட்டால் நீ சுத்தமாகி விடுவாய் என்றார்கள். (கேட்டறிந்த உம்முஸலாமா என்ற நபித்தோழியரின் இந்த அறிவிப்பு பல நூல்களில் வருகின்றது. திர்மிதி 98)

http://hadith.al-islam.com/Display/Display.asp?Doc=16&ID=19590&SearchText=اشد%20ضفر%20رأسى%20&SearchType=root&Scope=all&Offset=0&SearchLevel=QBE (இப்னுமாஜா)

http://hadith.al-islam.com/Display/Display.asp?Doc=14&ID=14134&SearchText=اشد%20ضفر%20رأسى%20&SearchType=root&Scope=all&Offset=0&SearchLevel=QBE (அபூதாவூத்)

கடமையான குளிப்பு விஷயத்தில் பெண்கள் மிகுந்த சிரத்தைக்குள்ளாக வேண்டியதில்லை. நாம் ஆரம்பத்தில் புகாரியிலிருந்து எடுத்துக் காட்டிய ஹதீஸில் "நபி(ஸல்) தண்ணீரில் கைகளை நனைத்து அதை தலையின் அடிபாகத்திற்கு செலுத்துவார்கள்" என்று வந்துள்ளது. முடிகாம்புகளும் தலையின் தோல்பகுதியும் நனையும் விதத்தில் இவ்வாறு செய்துள்ளார்கள். அதுதான் முக்கியமே தவிர முடி முழுதும் நனைய வேண்டும் என்பது சட்டமல்ல என்பதை பெண்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.

தீட்டு இல்லை.

குளிப்பு கடமையான பெண்கள் முடி முழுவதையும் நனைத்து - கழுவியாக வேண்டும் என்று பலர் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். மார்க்கம் பேசுபவர்களில் பலரும் இப்படி கூறிக் கொண்டிருப்பதை பார்க்கிறோம். குளிப்பு கடமைப்பற்றி சட்டம் கேட்கும் போதும், பெண்களே பெண்களுக்கு இது பற்றி கூறும் போதும் முடி முழுவதையும் கழுவ வேண்டும் என்று கூறுகிறார்கள். நபி(ஸல்) அவ்வாறுதான் கட்டளையிட்டுள்ளார்கள் என்பது இவர்களின் வாதம்.

இதற்காக எடுத்துக்காட்டப்படும் ஹதீஸ்.

ஒவ்வொரு முடியிலும் தொடக்கு உண்டு. அதனால் முடிகளைக் கழுவி உடம்பை சுத்தம் செய்யுங்கள் என்று நபி(ஸல்) கூறினார்கள்.

http://hadith.al-islam.com/Display/Display.asp?Doc=16&ID=20016&SearchText=كل%20شعرة%20جنابة&SearchType=root&Scope=all&Offset=0&SearchLevel=QBE (இப்னுமாஜா - 589)

http://hadith.al-islam.com/Display/Display.asp?Doc=14&ID=13146&SearchText=كل%20شعرة%20جنابة&SearchType=root&Scope=all&Offset=20&SearchLevel=QBE (அபூதாவூத் - 216)

http://hadith.al-islam.com/Display/Display.asp?Doc=2&ID=2566&SearchText=كل%20شعرة%20جنابة&SearchType=root&Scope=all&Offset=20&SearchLevel=QBE (திர்மிதி - 99)

திர்மிதி - அபூதாவூத் - இப்னுமாஜா ஆகிய மூன்று நூட்களிலும் இன்னும் பல வழிகளிலும் அறிவிக்கப்பட்டுள்ள இந்த செய்தி ஆதாரப்பூர்வமானதல்ல. ஏனெனில் இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடரில் 'ஹாரிஸ் இப்னு வஜீஹ்' என்பவர் வருகிறார். அவர் பலவீனமானவர், இவரது ஹதீஸ்கள் ஏற்கத்தக்கதல்ல என்று புகாரி இமாம் உட்பட பலர் கூறியுள்ளார்கள். முடியில் தொடக்கு உண்டு என்று வரும் அனைத்து செய்திகளும் பலவீனமானவை. எனவே முடி முழுவதும் நனையும் விதத்தில் குளிக்க வேண்டும் என்று எந்த கட்டாயமுமில்லை.

தலைப்பகுதி, முடிகாம்பு நனையும விதத்தில் குளித்தாலே போதும்.

அல்லாஹ் மிக்க அறிந்தவன்.

இகாமத் உண்டா?

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் ஆண்கள் தனியாக தொழும்போது பாங்கும் இகாமத்தும் சொல்லி தொழவேன்டும் என்ற ஹதீஸ் அறிவேன். இது பெண்களுக்கும் பொருந்துமா..?

Name: முஹம்மது இக்பால்
email: mimhouse@...
Location: Sharjah - U.A.E

பெண்கள் பாங்கு இகாமத் சொல்லக் கூடாது என்று எந்த ஒரு தடையையும் நம்மால் பார்க்க முடியவில்லை. நன்மையைப் பெற்றுக் கொடுக்கும் எந்தக் காரியத்தையும் ஆண் பெண் இருபாலாரும் செய்யலாம்.

பாங்கு சொல்லப்படுவதை நீங்கள் செவியுற்றால் முஅத்தின் சொல்வது போல் நீங்களும் சொல்லுங்கள் என்று நபி(ஸல்) கூறிய செய்தி அபுஸயீத் அல்குத்ரி என்ற நபித்தோழர் வழியாக பல நூல்களில் இடம் பெறுகின்றது. பாங்கு சொல்பவர்களின் அதே வாசகத்தை பெண்களும் திரும்ப சொல்லலாம் என்ற அனுமதியே அவர்கள் தங்கள் தொழுகையில் பாங்கு சொல்லிக் கொள்ளலாம் என்பதை விளக்குகின்றது.

இப்னு உமர் போன்ற நபித்தோழர்கள் பெண்கள் பாங்கு இகாமத் சொல்லிக் கொள்வதை தடுக்க முடியாது என்று கூறியுள்ளார்கள். எனவே பெண்கள் தங்கள் தொழுகையில் அவர்களுக்குள் பாங்கு இகாமத் சொல்லிக் கொள்ளலாம்.

பெண்களுக்கு பாங்கு இகாமத் கிடையாது என்போர் எடுத்துக் கொடுக்கும் ஆதாரம் சரியானதாக இல்லை. பலவீனமான செய்தியாக உள்ளது. எனவே அதை வைத்து ஒரு நல்லமலை தடுக்க முடியாது.

நகை அணிந்து இல்லறம்

என்னுடைய கேள்வி : பெண்கள் அணியும் கழுத்துச் செயினுக்கான டாலர் மற்றும் கை விரல்களின் மோதிரம் பிரேஸ்லெட் போன்ற தங்க நகைகளில் 'அல்லாஹ்' 'லாயிலாஹ இல்லல்லாஹ்' போன்ற வாசகங்களைப் பொறித்துக்கொள்கிறார்கள். இந்த வாக்கியங்களோடு கழிவறைக்குச் செல்வது - தாம்பத்திய உறவில் ஈடுபடுவது கூடுமா..?

Name: Syed Gnaniyar
email: syed.isc@.....
Location: jeddah
Subject: Kelvi

பொதுவாக நகைகளில் அல்லாஹ் முஹம்மத் போன்ற வாசகங்களைப் பொரித்துக் கொள்வதற்கு எந்த தடையுமில்லை. ஏனெனில் நபி(ஸல்) அவர்கள் தங்கள் மோதிரத்தில் அல்லாஹ் - முஹம்மத் - ரஸுல் ஆகிய வாசகங்களைப் பதித்திருந்தார்கள்.

அது அவர்களின் முத்திரை மோதிரமாக (பிற நாட்டு மன்னர்களுக்கு இஸ்லாமிய அழைப்பை வைத்து கடிதம் எழுதும் போது அந்த மோதிரத்தின் முத்திரையே கடிதத்தில் வைக்கப்படும்).

நபி(ஸல்) மோதிரம் அணியும் வழக்கமுள்ளவர்களாக இருந்தார்கள். ஆனால் அந்த மோதிரத்தை தம் தேவையை நிறைவேற்ற செல்லும் போது (கழிவறை போன்ற இடங்களுக்கு செல்லும் போது) கழற்றி விட்டு செல்வார்கள் என்று ஹதீஸ்கள் கிடைக்கின்றன.

‏حدثنا ‏ ‏نصر بن علي ‏ ‏عن ‏ ‏أبي علي الحنفي ‏ ‏عن ‏ ‏همام ‏ ‏عن ‏ ‏ابن جريج ‏ ‏عن ‏ ‏الزهري ‏ ‏عن ‏ ‏أنس ‏ ‏قال ‏

‏كان النبي ‏ ‏صلى الله عليه وسلم ‏ ‏إذا دخل الخلاء ‏ ‏وضع ‏ ‏خاتمه

இந்த செய்தி பற்றிய விபரங்களுக்கு கிளிக் செய்யுங்கள்

திர்மிதி - நஸயி - அபூதாவூத் - இப்னுமாஜா - ஹாக்கிம் உட்பட இந்த செய்தி இடம் பெறுகின்றது. (அனஸ் ரலி அறிவிக்கும் இந்த செய்தியை திர்மிதி அவர்கள் சரியானது என்று கூறினாலும் பிற அனைத்து ஹதீஸ் பதிவாளர்கள், ஹதீஸ் ஆய்வாளர்களும் அந்த செய்தியை பலவீனம் என்று கூறியுள்ளார்கள். (திர்மிதி இமாமின் ஆய்வில் தவறு நிகழ்ந்துள்ளது என்று புரிந்துக் கொள்ளலாம்.)

இது ஆதாரப்பூர்வமான செய்தியாக இருந்திருந்தால் இதை அடிப்படையாகக் கொண்டு மலஜலம் கழிக்கும் போது - இல்லறத்தில் ஈடுபடும் போது நீங்கள் குறிப்பிட்டுள்ள அந்த வாசகங்கள் பதிந்துள்ளவற்றை கழற்றி விட வேண்டும் என்று முடிவு செய்யலாம். செய்தி பலவீனமாக உள்ளதால் இதை வைத்து சட்டம் எடுக்க முடியவில்லை.

ஆனாலும் அதனால் மன ஊச்சலாட்டம் ஏற்படும் என்றால் கழற்றிக் கொள்ள வேண்டியதுதான். மன ஊச்சலாட்டங்களை விட்டு இஸ்லாம் பாதுகாப்பு தேட சொல்லியுள்ளது. நீங்கள் குறிப்பிட்டுள்ளது மன ஊச்சலாட்டத்தை ஏற்படுத்துவது என்பதால் அதை கழற்றி வைப்பதே பாதுகாப்புக்கு சமம் என்பதால் கழற்றி விடலாம். (அல்லாஹ் மிக்க அறிந்தவன்)

Friday, July 18, 2008

சிகப்பு ஆடை

ஆண்கள் சிகப்பு நிற ஆடை உடுத்த இஸ்லாத்தில் தடையுள்ளதா...?

Name: Fathima
email: fkathija@....
Location: Srilanka

ஆண்களுக்கும் பெண்களுக்கும் சரி உடையின் கலர்களைப் பொருத்தவரை உஸ்புர் (சாயம் ஏற்றப்பட்ட வெளிர் மஞ்சல் - காவிக் கலர்) என்பது மட்டும் தான் 'உடுத்த வேண்டாம்" என்று தடை செய்யப்பட்டுள்ளது. (திர்மிதி)

ஹஜ் - உம்ராவிற்காக இஹ்ராமில் இருக்கும் ஆண்களுக்கு பச்சை சாயம் ஏற்றப்பட்ட, குங்குமப்பூ சாயம் ஏற்றப்பட்ட, வர்ஸ் எனும் செடியின் சாயம் ஏற்றப்பட்ட உடைகளை உடுத்த தடை வந்துள்ளது. (இந்த செய்தியை புகாரியில் பல இடங்களில் பார்க்கலாம்)

இது தவிர கலரைப் பொருத்தவரை வேறெந்த தடையுமில்லை. ஆண்கள் சிகப்பு நிறந்தில் ஆடை அணியலாம் ஏனெனில் நபி(ஸல்) சிகப்பு ஆடை உடுத்தியுள்ளார்கள்.

பராஉ இப்னு ஆஸிப்(ரலி) அறிவித்தார்
நபி(ஸல்) அவர்கள் நடுத்தர உயரமுடையவர்களாகவும் (மேல் முதுகும் மார்பும் விசாலமான நிலையில்) இரண்டு புஜங்களுக்கிடையே அதிக இடைவெளி உள்ளவர்களாகவும் இருந்தார்கள். அவர்களின் தலைமுடி அவர்களின் காதுகளின் சோணையை எட்டும் அளவிற்கு இருந்தது. அவர்களை நான் சிவப்பு நிற அங்கி ஒன்றில் பார்த்திருக்கிறேன். அதை விட அழகான ஆடையை நான் கண்டதேயில்லை. (புகாரி)

முடிவெட்டும் தொழில்

இஸ்லாத்தில் முடிவெட்டும் தொழில் செய்பவர்களை மதிப்பதில்லையே ஏன்? அவர்கள் மோசமானவர்களா..? இவர்களைப் பற்றி இஸ்லாம் என்ன சொல்லியுள்ளது?

Name: b.sulaiman
email: sukasafa9@.....
Location: brunei தாருஸ்ஸலாம்

மனிதர்களுக்கு வாழ்வாதாரத்தை கொடுக்கும் ஆயிரக்கணக்கான தொழி்ல்களில் முடிவெட்டும் தொழிலும் ஒன்று. இது அனுமதிக்கப்பட்டத் தொழிலாகும்.

இந்தத் தொழில் செய்பவர்கள் உண்மையில் பிறரை விட ஆண்களுக்கு அதிக நன்மைச் செய்கிறார்கள். ஆம், மனிதனின் அழகைத் தீர்மானிப்பதில் முக்கியப்பங்கு வகிப்பது சிகையலங்காரமாகும். பரட்டைத் தலையுடன் அல்லது காடுபோன்ற வளர்ந்த தலைமுடியுடன் உலவும் எவரும் அவர் நல்ல உடை உடுத்தி இருந்தாலும் பிறர் முகத்தை சுளித்துதான் பார்ப்பார்கள். முடிவெட்டி தலையை ஒழுங்காக வைத்திருப்பவர்கள் அடுத்தவர் பார்வைக்கு சிறந்தவராகவே தெரிவார்.

மனிதனின் சமூக மதிப்பீட்டை உயர்த்தும் தொழிலான முடிவெட்டும் தொழிலை குறைத்து பார்ப்பது, அந்தத் தொழிலில் ஈடுபடுபவர்களை மதிக்காமல் இருப்பது அறிவீனத்தின் அடையாளமாகும்.

தினமும் நூறு முறை கண்ணாடி பார்த்து தலையை அலங்கரித்துக் கொள்பவர்கள் இரண்டு மூன்று மாதங்களுக்கு பார்பர்ஷாப் பக்கம் போகாமல் இருந்து விட்டு பிறகு கண்ணாடி பார்த்து தனது அழகை ரசிக்கட்டும் பிறகு தெரியும் அந்த தொழிலின் அருமையும் அந்த தொழிலாளியின் அருமையும்.

பொருளாதாரமே மதிப்பீடுகளை தீர்மானிக்கும் போக்கு வளர்ந்து விட்டதால் தான் முடிவெட்டும் தொழில், சலவைத்தொழில், செருப்பு தைக்கும் தொழில், - இதன் தொழிலாளிகள் பிறரால் மதிப்புடன் பார்க்கப்படுவதில்லை. காரணம் இவர்களின் தொழிலில் வருமானம் மிக மிக குறைவு. தொழிலின் பயன்பாட்டை வைத்து தொழிலாளிகள் மதிக்கப்பட்டால் மேற்குறிப்பிட்டவர்கள் முன்னணியில் நிற்பார்கள்.

இறைவன் அழகானவன் அவன் அழகை விரும்புகிறான் என்பது நபிமொழி (முஸ்லிம்) இந்த ஹதீஸ்படி பார்த்தால் அழகியலு்க்காக பாடுபடும் அனைவரும் இறைவனிடம் உயரந்தவர்கள் தான்.

மனிதன் உண்ணும் உணவிலேயே சிறந்தது அவன் கைகளால் உழைத்து உண்ணும் உணவாகும் என்று நபி(ஸல்) குறிப்பிட்டுள்ளார்கள் (புகாரி)
மோசடிப்பண்ணத் தெரியாத, நன்கொடை என்றப் பெயரில் லஞ்சம் பெறத் தெரியாத, பெரும் கூலிக்கு ஏற்ற தகுந்த பணியாற்றும் இவர்கள் சமுதாயத்தில் சிறந்தவர்கள். நிச்சயம் நாம் அவர்களை மதிக்க வேண்டும்.

நன்மையுண்டா இதுக்கு?

அஸ்ஸலாமு அலைக்கும்.
மாற்று மததத்தவர்களுக்கு தானதர்மம் செய்யலாமா.. அதனால் நமக்கு நன்மையுண்டா..? மாற்றுமதத்தவர்கள் தானதர்மம் செய்தால் அதனால் அவர்களுக்கு நன்மை கிடைக்குமா..? இறைவனை ஏற்காதவர்கள் நிரந்தர நரகில் இருப்பார்கள் என்று குர்ஆனில் சொல்லி இருக்கானே... எனக்கு பதில் தேவை!
Name: haja

email: haja.faisa@....
Location: kuwait

முஸ்லிம்கள் மனிதாபிமானத்திலும், பிறர் நலன் நாடுவதிலும் எப்போதும் முன்னணியில் இருக்க வேண்டும். பசித்தவர்களுக்கு உணவளிப்பது, ஏழைகளின் தேவைகளை நிறைவேற்றுவது போன்றவை முஸ்லிம்கள் முஸ்லிம்களுக்கு மட்டும் செய்ய வேண்டியவையல்ல.

பொருளாதாரத்தை பொருத்தவரை முஸ்லிம் முஸ்லிமுக்கு மட்டுமே செலவிட வேண்டும் என்ற எந்தக் கட்டளையையும் அல்லாஹ்வோ அல்லாஹ்வின் தூதரோ நமக்கு இடவில்லை.

ஜகாத்தை எடுத்துக் கொள்வோம். 8 கூட்டத்தாருக்கு அவை பயன்பட வேண்டும்.

ஜகாத் என்னும்) தானங்கள் தரித்திரர்களுக்கும், ஏழைகளுக்கும், தானத்தை வசூல் செய்யும் ஊழியர்களுக்கும், இஸ்லாத்தின் பால் அவர்கள் உள்ளங்கள் ஈர்க்கப்படுவதற்காகவும், அடிமைகளை விடுதலை செய்வதற்காகவும், கடன் பட்டிருப்பவர்களுக்கும், அல்லாஹ்வின் பாதையில் (போர் புரிவோருக்கும்) வழிப்போக்கர்களுக்குமே உரியவை. (இது) அல்லாஹ் விதித்த கடமையாகும் - அல்லாஹ் (யாவும்) அறிபவன், மிக்க ஞானமுடையோன். (அல் குர்ஆன் 9:60)

இந்த எட்டுக் கூட்டத்தாரில் "அல்லாஹ்வின் பாதையில் போர் புரியும் ராணுவவீரர்" தவிர மற்ற ஏழு கூட்டத்தார்கள் பொதுவானவர்கள். அவர்கள் முஸ்லிம்களாகவும் இருக்கலாம், பிறராகவும் இருக்கலாம். தேவையை பார்த்து அவர்களுக்கு ஜகாத் தொகையை வழங்குவதில் தவறில்லை.

கஷ்டத்திலிருப்பவர்களுக்கு பொருளாதர உதவி செய்து அவர்களை அதிலிருந்து மீட்டால் அவர்கள் இஸ்லாத்தை புரிந்து அவர்கள் இஸ்லாத்தை ஏற்கும் நிலையும் ஏற்படலாம் என்பதை ஒரு பகுதியாகவே இறைவன் ஜகாத் திட்டத்தில் வைத்துள்ளான்.

எனவே முஸ்லிமல்லாதவர்களுக்கு நமது பொருளாதாரத்தை செலவிடக் கூடாது என்று எந்தத் தடையுமில்லை.

நாம் செய்யும் எந்த நல்லமலையும் இறைவன் வீணாக்கி விடமாட்டான் என்று குர்ஆனில் இறைவன் குறிப்பிட்டு காட்டுவதால் பகட்டுக்காக இல்லாமல் இறை திருப்தியை நாடி நாம் முஸ்லிமல்லாதவர்களுக்கு நமது பொருளாதாரத்தை செலவழிக்கலாம்.

தேவையிருந்தும் செலவு செய்யதவர்களுக்குரிய எச்சரிக்கையும் குர்ஆனில் உள்ளது.

وَأَنْفِقُوا مِنْ مَا رَزَقْنَاكُمْ مِنْ قَبْلِ أَنْ يَأْتِيَ أَحَدَكُمُ الْمَوْتُ فَيَقُولَ رَبِّ لَوْلَا أَخَّرْتَنِي إِلَى أَجَلٍ قَرِيبٍ فَأَصَّدَّقَ وَأَكُنْ مِنَ الصَّالِحِينَ

உங்களில் ஒருவருக்கு மரணம் வருமுன்னரே, நாம் உங்களுக்கு அளித்த பொருளிலிருந்து, தான தர்மம் செய்து கொள்ளுங்கள், (அவ்வாறு செய்யாது மரணிக்கும் சமயம்); "என் இறைவனே! என் தவணையை எனக்கு சிறிது பிற்படுத்தக் கூடாதா? அப்படியாயின் நானும் தான தர்மம் செய்து ஸாலிஹான (நல்ல)வர்களில் ஒருவனாக ஆகிவிடுவேனே" என்று கூறுவான். (அல்குர்ஆன் 63:10)

தேவை இருந்தும் தான தர்மம் செய்யாமல் கைகளை இறுக்கிக் கொள்பவர்களின் மரணத் தருவாயின் புலம்பலை இறைவன் முன் கூட்டியே சுட்டிக் காட்டுகிறான். ஆனால் அந்த புலம்பலால் எந்தப் பலனும் இல்லை.
பிற மதத்தவர்கள் தான தர்மம் செய்கின்றார்கள் அதற்கு பலனுண்டா என்று கேட்டுள்ளீர்கள்.

இஸ்லாத்தைப் பொருத்தவரை ஓரிறைக் கொள்கையைத் தழுவிதான் மற்ற அனைத்து நற்பணிகளும் தீர்மானிக்கப்பட்டுளளன. ஓரிரைக் கொள்கையை ஏற்காத நிலையில் செய்யப்படும் நற்பணிகளுக்கு இஸ்லாத்தில் மதிப்பில்லை.

பிறராக முன் வந்து இஸ்லாமிய நற்பணிகளுக்கு உதவினால் அந்த உதவியை புறக்கணிக்க வேண்டும் என்றும் இஸ்லாம் சொல்லவில்லை. அது அவர்களின் விருப்பத்தை சார்ந்ததாகும்.